சில தலைவர்களைச் சோவானவர் ஏன் தாக்கி எழுதுகிறார் என்பதை துக்ளக் விழாவில் அவர் பேசிய பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. பத்திரிகையாளர்கள் பற்றிய அவரது பேச்சு சுயவிமர்சனமே!
பத்திரிகை ஆசிரியர்களைக் காலை சிற்றுண்டிக்கு அழைக்க வேண்டும். இட்லி, சாம்பாருக்காக அவர்கள் மயங்கிவிடப் போவதில்லை. ஆனால், ‘முதலமைச்சர் என்னை அழைத்திருந்தார். நான் போய்ச் சந்தித்துப் பேசினேன்’ என்றால் அவர்களுக்கு ஒரு திருப்தி. ‘பா.ஜ.க. தலைவர், மற்றும் முன்னாள் பிரதமர் என்னை அழைத்திருந்தார். நான் கூட ‘முடியாது’ என்று சொன்னேன். ‘இல்லை, இல்லை வர வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார்கள். நான் போனேன்’ என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் சொல்லிக் கொண்டால், அவருக்கு ஒரு சந்தோஷம். இவையெல்லாம் ஒரு மனிதனின் ஈகோவைத் தூண்டுகிறது.
அடுத்தநாள் எழுதும் போது கொஞ்சம் தயங்குவார்கள். என்ன இது? இவ்வளவு தூரம் தாக்கி எழுத வேண்டுமா? என்ன நினைத்துக் கொள்வார்? நேற்றுதானே அவர் கூட அமர்ந்து இட்லி சாப்பிட்டிருக்கிறோம்’ என்று நினைத்து, எழுதுவதில் தாக்குதல் இருந்தால் அதைக் குறைப்பார்கள். தாக்குதலே இருக்காது என்று சொல்ல முடியாது. அந்த மாதிரி தத்தளிப்பில் பத்திரிகை ஆசிரியர்களை விட வேண்டும். அரசியல்வாதிகளை எவ்வளவு தான் கடுமையாக விமர்சனம் செய்தாலும், பத்திரிகையாளர்களுக்கு அவர்களுடைய நட்பு தேவை. அவர்கள் தங்களை மதிக்க வேண்டும். என்ற ஆசை இல்லாத பத்திரிகையாளர் யாரும் கிடையாது. அது ஒரு அங்கீகாரம் மாதிரி.
ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால், போன் செய்து எந்தப் பத்திரிகையாளரிடமும் பேச மாட்டார். அதே கருணாநிதியை எடுத்துக் கொண்டால், உடனே போன் செய்வார். ‘எழுதியிருந்தீர்கள். பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது’ என்பார். அதில் ஒரு இரண்டு வரியாவது நிச்சயமாகப் படித்திருப்பார். அந்த இரண்டு வரியைச் சொல்லி விடுவார். இந்தப் பத்திரிகையாளர், தனது கட்டுரையை அவர் முழுவதுமாகப் படித்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வார். ‘பார் நாம் எழுதியதை அவர் எவ்வளவு தூரம் படித்திருக்கிறார்’ என்று நினைத்து, அடுத்த முறை அவர் படிக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவார். இந்த மாதிரி கொஞ்சம் பத்திரிகை உறவை, பா.ஜ.க. கூடச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் ஒரு காரணம்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், பா.ஜ.க. தலைவர் அத்வானியும் ஒரு பத்திரிகை ஆசிரியரைச் சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர் ‘போக மாட்டேன்’ - என்றா சொல்லப் போகிறார்? போவார். போய் விட்டு வந்த பிறகு, அவர்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் வரும். ஏனென்றால் அந்த மாதிரி அழைத்துப் பேசும்போது, யாருமே நல்லபடியாகத் தானே நடந்து கொள்வார்கள்? அந்த தனிப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, மதச் சார்பு இல்லாமல் பேசி, ‘இதைப் பற்றி எழுத வேண்டாம். இதை ‘ஆஃப் தி ரெக்கார்டாக’ச் சொல்கிறோம். ஹிந்துத்துவாவை எல்லாம் நாங்கள் முழுவதுமாக நம்பி விடவில்லை.
ஆர்.எஸ்.எஸ்.தான் நம்புகிறது. அதுவும் இல்லாமல் கூட்டணி அரசைத்தான் நடத்தப் போகிறோம். நாங்கள் என்ன செய்துவிடப் போகிறோம்? ஆகையால் நீங்கள் கொஞ்சம் பார்த்து எழுதுங்கள்’ என்று சொன்னால், அடுத்த நாளிலிருந்து அந்தப் பத்திரிகையில் ஒரு சிறிய மாற்றம் வரும். இதையெல்லாம் யாரும் செய்வது கிடையாது. ‘அவர்கள் விமர்சனம் செய்து எழுதுகிறார்களா? அவர்கள் வேண்டாதவர்கள்’ - என்று புறக்கணித்து விடுகிறார்கள். அவர்களைத்தான் முதலில் அழைக்க வேண்டும். ‘சோ’ மாதிரி ஆதரிக்கும் பைத்தியக்காரர்கள் ஆதரித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இந்த மாதிரி ஆட்களை அழைத்து அரை இட்லி கொடுத்தால்கூட அது வேஸ்ட். அதே சமயத்தில் கடுமையாக எதிர்ப்பவர்களை அழைத்து, ஒரு டீ கொடுத்தால், அதனுடைய பலன் மிகப் பெரிதாக இருக்கும். இதை பா.ஜ.க. சரியாகச் செய்யவில்லை என்பது என்னுடைய அபிப்பிராயம். பா.ஜ.க. மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்குக் கூட இந்த பலவீனம் உண்டு. ‘ஆ... அவன் எழுதினால் எழுதி விட்டுப் போகட்டும்’ என்று நினைப்பார்.
ஆனால் எழுதிய பிறகு, அதைப் பார்த்துக் கோபம் வரும். இதற்கு என்ன பெரிய செலவு? ‘ஒரு டெலிஃபோன் கால். ஒரு கப் டீ’ அவ்வளவுதான். இதில் ஒரு பத்திரிகையின் ஆதரவே கிடைக்கிறது என்கிறபோது, இதைச் செய்ய வேண்டியது தானே? இதில் என்ன குடி முழுகிவிடும்? கொஞ்சம் வளைந்து கொடுத்தால் போதும்.
பத்திரிகையாளர்களைத் தங்கள் பக்கம் கொண்டு வந்துவிடலாம். பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், பத்திரிகை அதிபர்கள் எல்லோருமே மனிதர்கள் தான். அவரவர்களுக்கு ‘தான்’ என்ற எண்ணம் உண்டு. அதை அவ்வப்போது திருப்திப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
- இளவேனில்
(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)