குழுச்சின்னமும் - சமூகக் கட்டுகளும்

சர்.ஜே: இதற்கிடையில் மனிதனின் வீட்டு மிருகங்களின் மீதிருந்த சார்புநிலையும், காட்டுவிலங்குகளின் மீதிருந்த அச்சமும் மதத்தில் மூன்றாவது மூல தத்துவத்தை உண்டாக்கியது. அதுதான் குலமரபுச் சின்ன முறை, குலமரபுச் சின்னம் என்பது குறி அல்லது அடையாளத்தைக் குறிக்கும். அது இனத்தைப் பாதுகாக்கும் ஆவி வாழ்வதாக நம்பப்படுகிற மிருகம் அல்லது தாவரத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகிற சின்னமாக வட அமெரிக்க இந்தியர்களால் பயன்படுத்தப்பட்டது. புனிதமான மிருகங்களையும், தாவரங்களையும் வழிபடும் தன்மையுள்ள குலமரபுச் சின்ன முறைமை என்பது பெரும்பாலும் மக்கள் வேட்டையாடி வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த காலத்தோடு தொடர்புடையதாய் இருந்தது. ஆனால் அவற்றில் பெரும் பகுதி விவசாயம் செய்து வந்த காலத்திலும் தொடர்ந்து வந்தது. எனவே, புனிதத் தன்மை வாய்ந்த புறா, ஆடு, மீன் போன்றவற்றை வழிபடுதல் என்பது யூதமதம், கிறித்துவமதம் ஆகியவற்றிலும் இடம்பெற்றது.

க்ளா: நாம் அனைவரும் குலமரபுச் சின்னக் குழுவினர் போன்ற விலங்கு வழி பாட்டினரே. நம்மில் சிலர் குல மரபுச் சின்னமாகக் காட்டுமானையும், சிலர் கடமான் வகையையும் (வட அமெரிக்க மானியல் விலங்கு வகை) கொண்டிருக்கிறோம். நம்மில் சிலர் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கிறோம். மற்றவர்கள் மிகச் சரியான ஜனநாயகச் சின்னமான கழுதைக்கு வாக்களிக்கிறார்கள். நம்மில் சிலர் சிங்கச் சின்னத்திற்காகப் போர் தொடுக்கிறோம். மற்றவர்கள் கழுகுச் சின்னத்திற்காகப் போர் புரிகிறார்கள். எல்லா நிலைகளிலும் நம்முடைய மேன்மையான ஈடுபாட்டைக் காட்டுவதற்கு நமக்கு மிருகங்கள் தேவைப்படுகின்றன.

பிலிப்: 1927 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கம் நரிகளையும், பாம்புகளையும், மற்ற தெய்வங்களையும் வணங்குவதற்காகக் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான சிறு கோயில்களை இடித்துத் தள்ள ஆணையிட வேண்டி வந்தது.

வில்லி: ஒருவேளை ‘எகோவா’ வினதும் மற்றும் அதன் சம காலத்திய தெய்வங்களினதுமான இரக்க மற்ற கொடுஞ்செயல்களின் சித்திரிப்புகள் கொடிய விலங்குகளின் வழிபாட்டிற்கான அடையாளங்களாக இருக்குமோ? அவைகள் மாறிக்கொண்டு வந்த காலத்தில் கடவுள் மனிதனின் முகமும், மிருகத்தின் உடலும் கொண்ட உருவமாக அல்லது மிருகத்தின் முகமும் மனிதனின் உடலுமாக வடிவமைக்கப் பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ஸ்பிங்சைச் கூறலாம் (எகிப்திய கல்லறைக் கோபுரங்களுக்கு அருகிலுள்ள சிறகுடைய பெண்ணின் முகமும் சிங்கத்தின் உடலும் கொண்ட சூரரிமாச் சிலை) மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையில் நடந்த சண்டைக்குப் பதிலாக, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் சண்டை நடப்பது தொடங்கிய பிறகு கடவுள் விலங்குகளுக்குப் பதிலாக மனிதப் போர்த்தளபதியாகச் சித்திரிக்கப்பட்டான். என்றாலும் தொடர்ந்து அச்ச மூட்டுகிறவனாகக் கருதப்பட்டு வந்தான். அதிக கொடுமைக் குணம் வாய்ந்த கடவுள்கள் மிகப்பெரிய மேலாளர்களைப் போல அதிகமாகப் பூசிக்கத் தகுந்தனவாகக் கருதப்பட்டன என்று டாட்டே குறிப்பிடுகிறார்.

Indian Godsஏரி: நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள், வியப்பாக இருக்கிறது. காப்பு நிலையத்திலும் அழகு நிலையத்திலும் காலங்கழிக்கும் பெண்களாகிய நாங்கள் உங்கள் அளவிற்கு விவரம் தெரிந்துகொள்ள நேரமெங்கே இருக்கிறது? சரி! சர் ஜேம்ஸ்! இப்பொழுது நீங்கள் மதத்தின் தோற்றத்திற்கான மூன்று முக்கிய மூலக் கூறுகளை வரிசைப்படுத்திக் காட்டினீர்கள். ஆவி வழி பாடான ஆன்மீகம்; மாயமந்திரம்; குழுச்சின்னம். இன்னும் ஏதேனும் உண்டா?

சர்.ஜே: இன்னும் இரண்டு இருக்கின்றன. புனிதப் பொருளும், முன்னோர்கள் வழிபாடும் ஆகும். டோபோ (Tobbo) என்பது பாலினீசியச் சொல். இதற்குப் பொருள் `தடைசெய்யப் பட்டது’ என்பது. கிறித்துவை முழுதும் நம்பினால் பாவிகள் மீட்புற்று வாழ்வர் என்ற உறுதியளிக்கும் அருள் உடன்படிக்கை வைக்கப்பட்டுள்ள பேழை ஒரு புனிதப் பொருள். இதைச் சிறப்புரிமை பெற்ற பாதிரி குடும்பத்தவர் தவிர மற்றவர்கள் தொடக்கூடாது. தாவீது அப்பேழையை ஜெருசலேம் நகருக்குக் கொண்டு செல்ல விரும்பி அதை ஒரு வண்டியில் வைத்து எடுத்துச் சென்றார். அப்போது வண்டியின் அச்சு இடறித் தரையில் விழ இருந்த பேழையை ஒரு குறிப்பிட்ட `டஜ்ஜர்’ இனத்தவர் உந்தித்தள்ள பாய்ந்து அதைப் பிடித்தார். உடனே, அப்புனிதப் பொருளின் தன்மையைக் கெடுத்து விட்ட தாய்க் கடவுள் அவரைச் சாகடித்தார். பெரும்பாலான சமூகத் தடைகள் ஒழுக்க விதிகளாகக் கருதப்பட்டன. அவைகள் அந்த இனத்திற்கு உரிய உயிர்நிலையாகவும் இருந்தன. அச்சத்தோடும் மதிப்போடும் அவர்களை நடத்துவதற்கு மதத்தின் ஆதரவும், தெய்வத்தன்மையின் அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. மோசேயினால் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகள் இதற்குச் சான்றாகும். அதே போன்று பார்சிகள் சொல்வார்கள்- ஒருநாள் சொராஸ்டர் உயர்ந்த மலைச் சிகரத்தின் மீது நின்று பிரார்த்தனை செய்தபோது கடவுள் இடியிலும், மின்னலிலும் தோன்றி அவருக்குக் காட்சியளித்துக் கூறியது தான் சட்டநூல் என்று: க்ரிடான் புராணக் கதையில் மைனாஸ் அரசன் டிக்டா மலையில் கடவுளிடமிருந்து சட்டங்களைப் பெற்றான் என்று கூறப்படுகிறது. கிரேக்க புராணக் கதையில் `டையோனி சஸ்’ (Dionysus) சட்டம் கொடுப்பவர் என்று அழைக்கப்படுகிறார். இரண்டு கல் வெட்டுக்களை உருவமைத்து அதில் அந்தச் சட்டங்களைச் செதுக்கி வைத்திருப்பதாக அப்புராணத்தில் கூறப்படுகிறது. குழுத்தலைவர்களின் மத்தியில் இது போற்றுதற்குரிய குழுஉக்குறியாக இருந்தது. அரசர்களின் தெய்வீக உரிமைக்கு ஒரு வேளை இவற்றை மூலமாக நாம் கொள்ளலாம்.

க்ளா: இச்செய்தி பெருமளவிற்கு வழக்கற்றுப் போனதாக இல்லாமல் செயற்பாட்டுக்குரியதாகவே இன்னமும் உள்ளது. எனக்குக் கிடைத்த தகவலின்படி பதினெட்டாவது சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தவர் கடவுளே என்று உண்மையான சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

முன்னோர் வழிபாடு

ஏரி: ஆனால் சர் ஜேம்ஸ் கடவுளைத் தொடாமலேயே நீங்கள் மதத்தின் வரலாற்றில் இவ்வளவு தூரம் சென்றது எனக்குச் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது.

சர்.ஜே: அது நம்முடைய கடைசி அத்தியாயம். கடவுளை யார் உண்டாக்கியது? நிலமாய், வனமாய், வானமாய் இருந்த இந்தக் கடலளவு கடவுள்கள் எப்படிப் பிற்கால மதங்களில் மனிதக் கடவுள்களாயின? யார் உண்டாக்கினார்கள் என்றெல்லாம் ஒரு குழந்தையைப் போல் அறிய ஆர்வம் கொள்கிறீர்கள். உங்களுக்கு நினைவிருக்கலாம் - பழைய புராணக்கதைகளில் கடவுள்கள் மிருகங்களாகவும் மனிதர்களாகவும் அவதாரம் எடுப்பார்கள். உண்மை அதற்கு நேர் எதிரானது. தானியக் கடவுளும், மிருகக் கடவுளும் பாதி மனிதக் கடவுளாக உருப்பெற்றது. கிரேக்க பெருந்தெய்வமான ஜீயஸ் (zeus) அன்னமாக மாறியக் கதையைக் கேட்ட போதும், `அத்தீன்’ (Athene) என்ற கிரேக்கப் பெண் தெய்வம் ஆந்தைக் கண் பெற்றதையும் `ஹீரா’ (Hera) என்ற தெய்வம் கன்று போடா இளம் பசுவின் கண்களைப் பெற்ற கதையையும் கேட்கும் பொழுது கிரேக்கர்கள் தங்களின் குலமரபுச் சின்னக் காலத்தில் மிருகங்களை வழிபட்ட முறையிலிருந்து எடுக்கப்பட்டச் செயல்களுக்குப் புதியவடிவம் கொண்ட தெய்வத்தன்மை கொடுத்து அவற்றோடு கலந்துவிட்டனர் என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். வில்லியம் மிருகத்தின் தலையும் மனித உடலுமாக உருமாற்றம் பெற்ற தெய்வத்திற்குச் சான்றாக `ஸ்பின்ஸ்’ (Sphinx) என்ற தெய்வத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அவ்வளவு தூரம் அவர் போயிருக்க வேண்டியதில்லை. உங்களின் மிகச்சிறந்த காட்சிச் சாலைகளில் முழுவதுமாக ஒரு காலத்தில் மிகப்புனிதமாகக் கருதப்பட்ட பாதி மனிதனும் பாதி விலங்கு மான சிலைகளே நிறைந்திருந்தன. மினோடார்ஸ் (Minotaurs), சென்டார்ஸ் (centaurs), சிரேன்ஸ் (Sirens), சேட்டிர்ஸ் (Satyrs), மெர் மெய்ட்ஸ் (Mermaids), ஃபான்ஸ் (Fauns) ஆகியவை மிருகங்களிலிருந்து மனித உருவிற்குத் தெய்வங்கள் மாற்றப்பட்டமையின் சான்றுகளே: முன்னோர் வழிபாடு இந்த மாற்றத்தை முழுமையாக்கியது.

இறந்தவர்கள் கனவில் தோன்றியபொழுது முன்னோர்கள் வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இறந்தவர்களின் உருவத் தோற்றங்களைக் கண்டு பயந்து நடுங்கி அதிலிருந்து ஒரு படி முன்னேறி அவர்களை வழிபடத் தொடங்கினார்கள், வாழும்பொழுது அதிக பலசாலிகளாக வாழ்ந்தவர்கள் இறந்தபிறகும் அச்சத்திற்குரியவர்களாகக் கருதப்பட்டார்கள். உண்மையில் இந்த அச்சம்தான் பண்டைய மதத்தில் ஒரு செல்வாக்கு பெற்ற சக்தியாக ஆகியது. ஆவி வழிபாடான ஆன்மீகம் மாயவித்தையைத் தோற்றுவித்தது. முன்னோர் வழிபாடு நாம் `மதம்’ என்று அழைப்பதைத் தோற்று வித்திருக்கிறது. பண்டை மக்கள் சிலரின் அகராதியில் கடவுள் என்பதைக் குறிக்கும் வார்த்தைக்கு `இறந்த மனிதன்’ என்பதே பொருளாக இருந்திருக்கின்றது, `எகோவா’ என்பதற்குப் `பலம் வாய்ந்த மனிதன்’ என்று பொருள். அவன் பலம் வாய்ந்த குழுத் தலைவனாகவும் இருந்தான். எகிப்து, ரோம், மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளில் அரசன் இறப்பதற்கு முன்பே கடவுளாக வழிபடப் பட்டான். அலெக்சாண்டரால் வெல்லப்பட்ட மக்கள் தெய்வீக அரசர்களுக்குப் பழக்கப் பட்டிருந்ததனால் அவனும் தன்னை அவர்கள் தெய்வமாகக் கருதச்செய்தான். இத்தகைய நிலைமாற்றம் இல்லை யென்றால் மக்கள் அவனைத் தங்களுடைய ஆட்சியாளனாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள், இப்பொழுது அத்தகைய வல்லமைமிக்க மனிதர்களின் ஆவிகள் திருப்திப் படுத்தப்பட வேண்டி இருந்தன. அவர்களின் நினைவாக நற்பெயருக்காக நற் பணிக்காகச் செய்யப்பட்ட ஈமச் சடங்குகளின் முதல் வடிவமாக ஆயின. கைகூப்புதல், தலைவணங்குதல், மண்டியிடுதல் போன்ற கடவுள் அருளைப் பெறச் செய்யப்படும் முறைகள் அனைத்துமே குலத் தலைவனுக்கு அடிபணிவதிலிருந்தே தோன்றின. இன்று வரை கத்தோலிக்க மத வழிபாடுகள் இறந்து பட்ட துறவிகளை, மகத்தான முன்னோர்களை நினைவு கூராமல் முடிவு பெறுவதில்லை. இவ்வகையில் முன்னோர் வழிபாடு சீனாவிலும் ஜப்பானிலும் மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் பரவியது.

Godகிறித்துவர்கள் தாங்கள் துறவிகளைப் போற்றுவதைப் போலக் கிரேக்கர்களும், பல பண்டைய இனத்தவர்களும் இறந்தவர்களைப் போற்றினார்கள். இறந்தவர்களின் சமூகம் உண்மையாக இருக்கிறது என்று நம்பி, பல பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு மிகப்பெரும் செலவில் செய்திகளை அனுப்பி வந்தார்கள்.

ஒரு தலைவன் ஓர் அடிமையை அழைத்து அவனிடம் செய்தியைச் சொல்லி அதன்பிறகு அவன் தலையை வெட்டிவிடுவான். தலைவன் அவனிடத்தில் ஏதேனும் ஒரு செய்தியைச் சொல்ல மறந்து விட்டால் பிற்சேர்க்கையாக இன்னுமொரு அடிமையின் தலையை வெட்டி செய்தியை அனுப்புவான். இறந்தவர்களின் ஆவிகள் `மனா’ (Mana) போன்ற சக்திமிக்க தெய்வங்களாக ஆகிவிடுவதாக நம்பப்பட்டன.

இதுவே பிந்திய கடவுள்களுக்கு அடிப்படையாக இருந்தன. எனவேதான், இறந்தவனைத் திருப்திப்படுத்த மிகக் கவனமாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன, ரிலிஜியோ (Religare) என்பது ஒன்று சேர்த்தல் என்று பொருள்படும். ரெலி கேர் (negligare) என்ற சொல்லிலிருந்து வராமல் பொருட்படுத்துதல் கவனம் செலுத்துதல் ஆகிய பொருள்களைத் தரும். அதாவது, உதாசீனப் படுத்துதல் என்ற பொருள் தரும் நெக்லிஜர் (negligare) என்ற விலங்குகள் தெய்வங்களாகவும், முடிவில் முன்னோர்களும், அரசர்களும் தெய்வத்தன்மை ஏற்றப்பட்டு மனிதக்கடவுள்களாகக் கருதப்பட்டனர்.

நீங்களே அறிந்துள்ளபடி அனைத்து மதங்களும் முன்னோர் வழிபாடாகச் சாரத்தில் கருதப்படலாம் என்று எண்ணினார் ஸ்பென்சர். இக்கோட்பாடு கி.மு. 300 இல் வாழ்ந்த யூமெறமரஸ் (Euhemerus) காலஅளவிற்குப் பழமையானது. இது எவ்வாறு இருப்பினும், முன்னோர் வழிபாடு என்பது வழிபாட்டு வகைத் தோற்றத்தில் பிந்தியதே அன்றி முந்தியதல்ல.

இதற்கு முன்னமே பன்னெடுங் காலமாய் மனிதவடி விலானக் கடவுள்கள் வழிபடப்படாத நிலை இருந்தன, ஆனால் முன்னோர் வழிபாடு நடைமுறைக்கு வந்ததும் அது மதத்தில் மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. சரியாகச் சொல்வதானால் அது மதத்தை மனிதாபிமான மயமாக ஆக்கியது. முதலில் பலமான மனிதர்களையும், பிறகு சிறந்த மனிதர்களையும் கடவுளாகப் பாவிக்க அது அனுமதித்தது. இது தான் யூத, கிரேக்க, ரோமானிய மனித தெய்வ மதங்களுக்கு வழிவகுத்தது. இனி இதை வேறு யாரேனும் தொடரலாம்.

-வாசுகி பெரியார்தாசன்

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)

Pin It