இந்தியாவில் பார்ப்பன எதிர்ப்பு மரபின் தளப் பிரதேசமாக விளங்கும் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற ஒரு இடம் கிடைக்காதா என ஒரு அகதியைப் போல ஏக்கத்தோடு காத்துக் கிடக்கின்றது பார்ப்பனியம். ஆனால் காலூன்ற எந்த வாய்ப்புகளுமே அற்று, உயிர் பிழைத்திருப்பதே இனி மிக சிரமம் என்ற நிலையில்தான் அது தமிழகத்தில் போராடிக் கொண்டு இருக்கின்றது. வரலாறு முழுவதும் அது தமிழ் மண்ணில் பிழைத்துக் கிடக்க என்ன தந்திரத்தைக் கடைபிடித்ததோ, அதே தந்திரத்தைத்தான் தற்போதும் கடைபிடித்து வருகின்றது. வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் தமிழ்நாட்டையும் தமிழ் இனத்தையும் கூட்டிக் கொடுக்கவும், காட்டிக்கொடுக்கவும் தயாராக இருக்கும் கம்பன்களும், ஆழ்வார்களும், இயற்பகை நாயனார்களும் இருந்தே வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எந்தக் கூச்சமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் கம்பன்களாக, ஆழ்வார்களாக இருப்பதைவிடவும் பதவியையும் பணத்தையும் காப்பாற்றிக்கொள்ள இயற்பகை நாயனராகவே மாற பெரிதும் விரும்புகின்றார்கள். இப்படி ஒரு மானங்கெட்ட, சுயமரியாதை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டை அவமானகரமான முறையில் ஆட்சி செய்தது என்று வரலாறு நிச்சயம் பதிவு செய்துகொள்ளும். உண்மையில் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்பது இந்த இயற்பகை நாயனார்களின் ஆட்சி காலமாகவே இருக்கும்.

இந்த அடிமைகளின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் தங்களுக்கான ஒரு இடத்தை உறுதி செய்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் முயன்று வருகின்றது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் நிச்சயம் அவர் திரும்பி உயிரோடு வரப் போவதில்லை என்பதை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டுதான், கோவையில் இந்தக் கும்பல் பட்டப்பகலில் பிரியாணி அண்டாவை திருடித் தின்ன கலவரம் செய்தது. திருப்பூரில் மோடியின் திருவுருவப் படத்திற்குச் செருப்பு மாலை போட்டு, கலவரத்தைத் தூண்டப் பார்த்தது. அதே போல இராமநாதபுரத்தில் பாஜக நகரச் செயலாளார் அஸ்வின்குமார் என்ற பொறுக்கி அவனது உறவுக்காரர்களாலேயே தாக்கப்பட்டதை மறைத்து, அவரை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் தான் தாக்கிவிட்டதாக எச்சிகலைராஜா கலவரத்தை தூண்ட முயன்றான்.

பன்னீர்செல்வம் சென்னையில் ஜனவரி 30 அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி தனக்கு அடுத்த அம்மா மோடிதான் என்பதை நிரூபித்தார். இன்னும் ஒரு படி மேலே போய் மே 13 ஆம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மகாசேவா என்ற நிகழ்ச்சியை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். மோடியின் காலை நேரடியாக நக்கும் பெரும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் முதலில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரத்தின் காலை நக்கி, தனது விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பிரம்ம சூத்திரத்தை நன்றாக அடிமைகள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

இனி தமிழ்நாட்டில் எது நடந்தாலும் அது மோடியாலும் கடவுளாலுமே நடந்தது என்று சொல்லும் நிலையை அடிமைகள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். மழை கூட மோடியின் அருளாலும், திருப்பதி வெங்கடாஜலபதியின் ஆசியாலும் தான் தற்போது பெய்துகொண்டு இருக்கின்றது. மோடியை ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கடிக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் கமலாலய மடத்தில் இருந்து தெரிந்துகொண்டு ஒரு நல்ல தேர்ந்த தொழில்முறை விபச்சாரிகள் போல நடந்து வருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக மதுரையில் வரும் 8 ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பெரியாரிய இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்குப் பணிந்த காவல்துறை தற்போது அந்த அனுமதியை ரத்துசெய்து இருக்கின்றது. எனினும் வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நீதிமன்றத்தின் கருத்தைப் பொருத்தே நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுமா அல்லது ரெளடி கும்பலின் பேரணிக்குத் தடை விதிக்கப்படுமா என்பது தெரியவரும். எப்படி இருந்தாலும் இது ஒரு மாபெரும் வெற்றியே. பிஜேபியின் பினாமி ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு துணிந்து காவல்துறை அனுமதி மறுத்ததென்பது தீரமிக்க பாராட்டக்கூடிய செயலாகும்.

இந்தப் பேரணியைத் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இத்தனை நாட்கள் அதைப் பற்றி வாயே திறக்காமல் இருந்த செல்லூர் ராஜூ அவர்கள் தற்போது தான் அதில் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்து இருக்கின்றார். பெரியாரிய இயக்கங்கள் கொடுத்த கடுமையான நெருக்கடியே அமைச்சரை பின்வாங்க வைத்திருக்கின்றது. மற்றபடி அமைச்சர் எடுத்த இந்த முடிவால் அவர் ஏதோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு எதிரானவர் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. அவர் பேட்டியிலே கூட “அத்தினத்தில் தன்னுடைய அலுவல்களை பரிசோதித்த பிறகே கூறமுடியும்” என்று சொன்னதாகத்தான் குறிப்பிட்டு இருக்கின்றாரே ஒழிய, 'வரமுடியாது நீங்கள் ஒரு தீவிரவாத அமைப்பு, குறிப்பாக பிரியாணியை அண்டாவோடு திருடித் தின்பதற்காகவே கலவரம் செய்யும் குற்றக்கும்பல்' என்று நாலு நல்ல வார்த்தை எல்லாம் சொல்லி மறுக்கவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

முழுசாக நனைந்த பின்னால் முக்காடு தேவைப்படுவதில்லை என்றாலும் ஏமாற்றுப்பேர்வழிகளுக்கும் மோசடி பேர்வழிகளுக்கும் தொடர்ச்சியாக ஊரை நம்ப வைக்க முக்காடு தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. தமிழ்நாடே டெங்குவால் அழிந்துகொண்டு இருக்கின்றது. இதுவரை ஏறக்குறைய 400 க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் இறந்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொல்கின்றார். ஆனால் மானங்கெட்ட அரசு 15 பேர் மட்டுமே டெங்குவால் இறந்ததாக மதுரை உயர்நீதி மன்றத்தில் பொய் சொல்லுகின்றது. மோடியுடன் சேரும் அனைவருமே அவரைப் போலவே பாசிஸ்ட்டுகளாக, சாமார்த்தியமாக குற்றத்தை மறைப்பவர்களாக மாறுவார்கள் என்பது இயற்கையான ஒன்றுதான். தமிழ்நாட்டில் இப்படி ஒரு மனிதப்பேரவலம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் போது இந்தக் குற்றக்கும்பல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவை நடத்தி கொட்டமடித்துக் கொண்டு இருக்கின்றது. இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பேரணி நடத்த நிபந்தனையின்றி அனுமதியும் வழங்கிக் கொண்டு இருக்கின்றது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும், ஆர்.எஸ்.எஸ் பேரணியிலும் கலந்துகொள்ளும் நபர்கள் எல்லாம் இனிவரும் காலங்களில் ஒரே கூட்டத்தைச் சேந்தவர்களாகத்தான் இருக்கப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய,நடத்தும் விழாக்களுக்கு இனி சூத்திர பழனிசாமி அரசு மனுநீதிபடி காவல்காக்கும் பணியை சிறப்பாக செய்யும் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.

ஆனால் என்னதான் இந்தச் சூத்திர கும்பல் இயற்பகை நாயனாரின் வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ்க்குத் தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுக்க முயன்றாலும் பார்ப்பன எதிர்ப்பு மரபில் ஊறிப்போன பெரியாரிய மண்ணில் அந்தக் களம் அடியோடு ஒழித்துக் கட்டப்படும். இந்த அடிமைகள் இந்த மண்ணில் பிறப்பதற்கு முன்பிருந்தே இது பார்ப்பன பாசிச எதிர்ப்பு மண்தான். இனியும் அது அப்படித்தான் இருக்கும். எந்த மானங்கெட்ட சுயமரியாதை அற்ற உலுத்தர்களும் அதை மாற்ற முடியாது. திருச்சியில் நீட் தேர்வை ஆதரித்துப் பிஜேபி ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடந்திய மாநாடே இதற்குப் பெரிய சாட்சி. எங்கெல்லாம் முற்போக்கு அமைப்புகள் மிக வலிமையாக உள்ளனவோ அங்கெல்லாம் பாசிசமும், அடிமைத்தனமும் காலூன்றவே முடியாது என்பதுதான் வரலாறு.

சுயமரியாதையும் தன்மானமும் உள்ள மனிதர்கள் இந்த மண்ணில் இருக்கும் வரை இயற்பகை நாயனார்களால் இந்த மண்ணை பார்ப்பன பாசிசத்துக்கு ஒருபோதும் தாரைவார்க்க முடியாது. தமிழக மக்கள் இந்த மானங்கெட்ட கோமாளி அரசை வீழ்த்துவதற்கு என்ன வழி இருக்கின்றது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு இருக்கின்றார்கள். மக்கள் மீது கிஞ்சித்தும் அக்கறையற்ற, மோடியின் ஆசி இருக்க நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்ற அதிகார மமதையில் ஒரு ரெளடிக்கும்பல் போல் இந்த அரசு நடந்து கொண்டிருக்கின்றது. மக்களின் கோபத்தைத் தூண்டிவிட்டு இந்த அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி விரட்டியடிக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் பார்ப்பனியத்துக்குக் காவடி தூக்குவதில் நீ பெரியவனா இல்லை நான் பெரியவனா என்று போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றன.

அதனால் தேர்தல்பாதையில் நிற்காத முற்போக்கு அமைப்புகள்தான் தற்போது பார்ப்பனிய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் முன்னிலையில் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் எல்லாம் ஒருபோதும் முழு ஈடுபாட்டோடு பார்ப்பன பாசிச எதிர்ப்பைச் செய்யப் போவதில்லை. அவர்களுக்கு டெல்லியை அண்டி பிழைக்க வேண்டிய நிர்பந்தம் எப்போதுமே இருக்கின்றது. மடியில் கனம் இருப்பவன் வலியப் போய் பார்ப்பனியத்தை நக்கித்தான் ஆகவேண்டும். அதனால் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்கள் தங்கள் போராட்டத்தை முன்னிலும் இன்னும் தீவிரமாக முன் எடுத்துச் செல்ல வேண்டும். பார்ப்பனியத்தை ஆதரிக்கும் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.

- செ.கார்கி

Pin It