கம்பத்தில் 01/06/2017ம் தேதி இரவு பெரிய கலவரம் என்ற செய்தி சமூக வலைத்தளங்கள் முழுக்க பரவியதை அடுத்து கம்பத்திற்கு சென்று நேரடியாக சேகரித்த தகவலின் அடிப்படையில்..
கம்பம் காட்டுபள்ளிவாசல் தெருவில் உள்ளது அஜீசியா பள்ளிவாசல். இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது. பள்ளிவாசல் ஆரம்பித்த தொடக்கத்திலிருந்தே அந்த பகுதியில் பிரச்சனை இருந்து வருகிறது.
கம்பம் பகுதியில் உள்ள ஓவாரு காவக்குறிச்சிக்கு சொந்தமான இடம் காட்டுபள்ளிவாசல் தெருவில் இருந்திருக்கிறது. அவர்கள் இந்த பகுதியை பள்ளிவாசல் கட்டுவதற்காக இலவசமாக வழங்கினார்கள். ஆனால் காட்டுப்பள்ளிவாசல் தெரு பகுதி மக்கள் செண்ட் 30,000 ரூபாய்க்கு இப்பகுதியினை வாங்கியிருக்கிறார்கள்.
இந்த பகுதியில் பள்ளி கட்ட துவங்கும் போதே அப்பகுதியில் உள்ள இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பள்ளிவாசல் கட்டிட வேலை முடிந்து காம்பவுண்ட் கட்டும் வேலை முடிந்ததும் காம்பவுண்ட் சுவரை இடித்துள்ளார்கள். இதே போல் இருமுறை பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரை இடித்துள்ளர்கள். பிறகு பள்ளிவாசல் நிர்வாகிகள் அந்த பகுதியில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இணக்கமாய் இருந்துள்ள முக்குலத்தோர் சங்கத் தலைவர் குமரேசன் அவர்களிடம் முறையிட்டார்கள்.
குமரேசன், பள்ளிவாசல் கட்டும் வரை ஒரு ஆளை பணிக்கு அமர்த்தி பாதுகாப்பு தந்திருக்கிறார்.
பள்ளிவாசல் வந்தவுடன் அப்பகுதியில் முஸ்லிம் குடியிருப்புகளும் வர ஆரம்பித்தன.
அதற்கு பிறகு, பள்ளிவாசலில் ஒளு செய்வதற்காக இருக்கும் தண்ணீர் தொட்டியில்(அவுஸ்), அப்பகுதியில் உள்ள இந்து முன்னணி கும்பல் சிறிநீர் கழித்து அசுத்தம் செய்துள்ளனர். இந்த விடயம் நிர்வாகத்திற்கு தெரிய வந்து பின்னால் அவுஸை முழுவதும் கிளீன் செய்து உபயோகப்படுத்த ஆரம்பித்ததும். ஒரு பாலிதின் பையில் மலத்தை அடைத்து அதனை ஒளு செய்யும் தண்ணீர் தொட்டியில் போட்டு சென்றுள்ளனர்.
பின்பு நிர்வாகம் குமரேசன் அவர்களை முறையிட இதுமாதிரியான பிரச்சனைகள் குறைய ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில் கம்பம் அருகிலுள்ள பாளையத்தை சார்ந்த மைதீன் என்ற காய்கறி வியாபாரி ஒருவர் அஜீசியா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு வீட்டை கட்டியுள்ளார். ரமலான் மாதம் நெருங்கி விட்டதால் அஜீசியா பள்ளியின் இமாம் அவர்களிடம் எனது வீட்டில் இரவு பெண்கள், இரவு தொழுகையை தொழுது கொள்ளட்டும் என கூறி அதை பள்ளிவாசல் நிர்வாகமும் ரமலான் மாதம் முழுவதும் இந்த வீட்டில் பெண்களுக்கான இரவு தொழுகை நடத்தப்படும் என அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.
ரமலானின் முதல் நாள் இரவு தொழுகையில் இந்த வீட்டிற்கு முஸ்லிம் பெண்கள் தொழுக வருவதை தெரிந்து கொண்ட இந்து முண்ணனியினர் அடுத்த நாள் பெண்கள் வரும் போது அந்த வீட்டிற்கு எதிராக உள்ள காலி பகுதியில் அமர்ந்து அவர்களை கேலி செய்துள்ளனர். தொழுகை நடக்கும் போது வெளியில் இருந்து சப்மிட்டு தொழுகையை தொந்தரவு செய்துள்ளார்கள்.
மூன்றாம் நாள் இரவு தொழுகைக்கு வரும் போது அதே போல் கும்பலொன்று வீட்டிற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு தொழுகை ஆரம்பித்ததும் பலமாக கைகளை தட்டி தொழுக விடாமல் தொந்தரவு செய்துள்ளார்கள். இதற்கு பிறகு பெண்கள் ஜமாத்தினரிடம் முறையிடவும் சரி பார்த்துக் கொள்ளலாம் பெரிது படுத்த வேண்டாம் என நினைத்துள்ளார்கள் நிர்வாகிகள்.
அதற்கு அடுத்த நாள் வீட்டுக்காரர் மைதீன் இரவு வீட்டிற்கு வரும் போது வீட்டிற்கு உள்ளே ஒருவன் நுழைந்து கட்டியிருக்கும் ஷ்பீக்கரை கழட்டியிருக்கிறான். மைதீன் அவரை மிரட்டி விரட்டியிருக்கிறார். அடுத்த நாள் புதன் இரவு அன்றும் கும்பல் ஒன்று பெண்கள் தொழுமிடத்திற்கு வெளியே நின்று தொழக விடாமலும் கேலி செய்தும் உள்ளனர். அன்று இரவு 11.30 மணிக்கு வீட்டுக்காரர் மைதீன் வீட்டிற்கு வரும் போது ஒருவன் போதையேறிய நிலையில் குடித்துவிட்டு வீட்டினுள் நுழைந்து 'ஏண்டா இங்க தொழுகிறீங்களா இனி அதெல்லாம் செய்ய கூடாது' என்று மிக கேவலமாக பேசியுள்ளார்.
இந்த கும்பலின் நடவடிக்கை எல்லைமீறவும் பள்ளி நிர்வாகிகள் இணைந்து குமரேசன் அவர்களிடம் தகவல் சொல்லியுள்ளார்கள். குமரேசன் அவர்களும் நாம் மேற்கொண்டு ஒரு கம்ப்ளைண்ட் காவல்துறையினரிடம் கொடுத்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.
அதனடிப்படையில் 01/06/17 வியாழன் அன்று நிர்வாகிகள் இணைந்து காவல்துறையினரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளனர். சென்ற நேரத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை அதே சமயம் அங்கு DSP அண்ணாமலை வந்துள்ளார். அவரிடம் புகாரை கொடுத்து விடயத்தை சொல்லவும் அவர் SI இத்ரீஸ் கான் அவர்களுக்கு போன் செய்து உடனடியாக கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
Si இத்ரீஸ் கான் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து விட்டு இந்த இடத்தில் ரமலான் மாதம் முழுவதும் ஒரு போலீஸ் பைக் PATROL வண்டி பாதுகாப்பாக நிற்கும் என அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு போகிறார். அதே போல் வண்டியும் நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் வியாழன் அன்று அந்த கும்பலை சார்ந்தவர்களின் நடமாட்டம் இல்லாததால் முஸ்லிம்களும் கவலை கொள்ளவில்லை.
அஜீசியா பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள மணிக்கட்டி ஆலமரம் ரோட்டில் இந்து முண்ணனியினர் நின்று k.k. பட்டி, பாளையம், குழப்பம் பட்டி, சுருளிப்பட்டி போன்ற ஊர்களில் இருந்து ஆட்களை திரட்டி ஒரு 200 பேர் அளவிற்கு கூட்டம் சேர்த்துள்ளனர். முஸ்லிம் பகுதிக்கு சம்பந்தம் இல்லாத ரோடு என்பதால் அவர்களின் இந்த முயற்சி பற்றி முஸ்லிம்களுக்கு சுத்தமாக தெரியவில்லை.
சாதாரணமாக அந்த வீட்டில் தொழுக்கைக்கு தினமும் 20-25 பெண்கள் தொழுக்கைக்கு வருவார்கள். ஆனால் அன்றைய தினம் போலீஸ் கம்ப்ளைன்ட் பிரச்சனை என இருந்ததால் 15 பெண்கள் தான் தொழுக்கைக்கு வந்திருக்கிறார்கள்.
பெண்கள் தொழுகை ஆரம்பித்த சில நிமிடங்களில் வீட்டிற்கு எதிர்புறம் உள்ள தெருவிலிருந்து கும்பலாக வந்து தொழுகை நடக்கும் வீட்டு முன்னர் கல்லெறிய ஆரம்பித்துள்ளனர்.
கல்லெறிதலில் முதலில் அப்பகுதியை சார்ந்த ஜலீல் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அதே போல் அங்கே பாதுகாப்பாக நின்றிருந்த போலீஸ் மீதும் கல்லெறி விழுந்து காயம் ஏற்பட பிரச்சனை பெரிதானது.
அஜீசியா பள்ளிவாசல் சுற்றி சிறு சிறு தொலைவில் பள்ளிவாசல்கள் என்பதனால் இரவு தொழுகைக்கு வந்த முஸ்லிம் இளைஞர்களும் திரண்டிருக்கின்றனர்.
கண்ணாடி பாட்டில்களையும் அந்த பயங்கரவாத கும்பல் எறிய தொடங்கியதும் எதிர்வினையாக இளைஞர்களும் திருப்பி தாக்க தொடங்கியிருக்கிறார்கள். இரு கும்பலுக்கும் பெரிய கைகலப்பு உருவாகி பின்னால் நிற்க முடியாமல் ஓடியிருக்கிறது அந்த 200 பேர் சேர்த்த இந்து முண்ணனி கும்பல்.
அதற்கு பிறகு காவல்துறையினர் வந்து நிலையை சீர்படுத்த தொடங்கி நிலைமை கொஞ்சம் சீராக இரவு 12.00 ஆகியிருக்கிறது. பிறகு பெண்களை பாதுகாப்பாக வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
கம்பம் பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக இருக்கும் லுக்மான் அவர்கள் கூறும் போது, இந்த பகுதியில் எல்லா மக்களுடனும் நாம் இணக்கமாக தான் வாழ்ந்து வருகிறோம். இந்த இந்து முன்னணி கும்பல் தான் ஆரம்பத்திலிருந்தே பிரச்சனையை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் தண்ணி, கஞ்சா அடித்து விட்டு பேசும் சொற்களையெல்லாம் காதால் கேட்க முடியாது. அவ்வளவு கொச்சையாக சபதம் போட்டு பேசுவார்கள் என்றார். ( நாம் அங்கு சென்ற நேரத்திலும் ஒருவர் நல்ல குடிபோதையில் 'டேய் மீசை தாடி வச்சவனுகளா இப்ப வாங்கடா பொட்ட பசங்களா!. முஸ்லிம் பெண்களை பற்றியும் மிக கேவலமாக பேசிக்கொண்டிருந்தார். பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் இதனை கேட்கவில்லை. நமது தூண்டுதலின் பேரில் சென்று பிறகு காவல்துறை மிரட்டினார்கள். ஆனாலும் அமைதி திரும்பவில்லை)
அந்த பகுதியின் பால்காரர், இந்து மதத்தை சேர்ந்தவர் அவரிடம் கேட்கும் போது, இவனுகளுக்கு வேற வேலை இல்ல எவ்ளோ கேவலமா நடந்திருக்கானுக பள்ளிவாசல எவ்ளோ கேவலப்படுத்திருக்காங்கனு பாருங்க என்று ஆதங்கமும் பட்டார்.
அப்பகுதியில் உள்ள சல்மா என்ற முஸ்லிம் பெண்மணி கூறும் போது, என் வீடு அந்த தெரு முனைல இருக்குது தம்பி, என் வீட்டு கண்ணாடியெல்லாம் உடைச்சுட்டானுக. நேத்து நைட் வெளில நின்னு எவ்ளோ கேவலமா பேசினானுக தெரியுமா! சகிக்கவே முடியல. பாருங்க இப்பவே போலீஸ்காரங்க இருக்கும் போதே எப்படிலாம் கேவலமா பேசுறானுக(தண்ணி போட்டு கத்தி கொண்டிருந்த அந்த நபரை பார்த்து) இந்த பகுதில மட்டும் அவனுக அட்டகாசம் பண்ணல சுத்தி இருக்கிற முஸ்லிம்கள் வீட்டயும் பாத்து கல்லெறிஞ்சு கேவலமா பேசியிருக்கானுக. என் வீட்டு வயசு புள்ளைங்க நேத்து இங்க தொழுகைக்கு வந்துச்சுக இன்னைக்கும் வருவாங்க என்ன பண்ணுவானுக பாக்கலாம் என்று தைரியமாக பேசினார்.
அங்கு மையஸ்தகராக இருக்கும் குமரேசன் அவர்களை போனில் தொடர்பு கொண்டு; முதலில் இவ்வளவு நாள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக உடன் இருந்து தோள் கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்து விட்டு சம்பவத்தை பற்றி கேட்கையில், தம்பி ஏதோ சின்ன பயலுக கொஞ்சம் அதிகமா ஆடுறானுக இந்த பக்கமும் பிரச்சனை பண்றாங்க. இந்த பிரச்சனைய சமாதானமா முடிச்சு வச்சுருவோம். கம்பம் பொறுத்தவரை இங்க மதம், சாதி அடிப்படையில் எந்த பிரச்சனையும் வராது. முஸ்லிம்களுக்கும் நமக்கும் இருக்கிற உறவுமுறை அப்படி! என்றார்.
காவல்துறையின் திருப்பம்
சமபவத்தன்று யார் தாக்குதல் நடத்தியது, திட்டமிட்டு கலவர சூழலை உருவாக்கியது என காவல்துறையினருக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் சம்பவம் நடக்கும் போது முதல் தாக்குதலே காவல்துறை அதிகாரி மீது தான் நடந்திருக்கிறது. அப்படியிருக்கையில் முஸ்லிம்களில் 19 பேர் மீதும் எதிர்தரப்பில் உள்ள கும்பலில் 16 பேர் மீது மட்டும் வழக்கு பதிந்துள்ளனர்.
இதை பற்றி SI இத்ரீஸ் கான் அவர்களிடம் முஸ்லிம்களில் ஒருவராக வழக்கு பதியப்பட்ட நபர் பேசும் போது, 'சார், நீங்களும் அங்க தான் இருந்தீங்க நாங்க எதுவுமே பண்ணல ஆரம்பத்துல இருந்து அவனுக தான் வந்தானுக இப்ப எங்க மேல வழக்கு போட்ருக்கிங்களே? ஏன் என கேட்கும் போது! அவரும் இந்த பிரச்சனையில் தேவையில்லாத இடையூறு இருப்பதாக ஆதங்கப்பட்டு பேசியுள்ளார்.
அமைப்புகள் சார்பாக போராட்டம் நடத்தியும் முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடியவில்லை என்பதையே காவல்துறையினரின் போக்கு உணரச் செய்கிறது.
கம்பம் பிரச்சனை சொல்வது என்ன?..
கடந்த மாதம் நிகழ்ந்த புத்தானந்தம் தாக்குதலும், இப்போது நடந்திருக்கிற கம்பம் தாக்குதலின் மூலமும் ஒன்றை மட்டும் அறிய முடிகிறது. இந்துத்துவ அமைப்புகள் எளிதாக ஒரு பெரும் கூட்டத்தை எளிதாக திரட்ட முடிகிறது. அதை வைத்து கலவரத்தை வித்திட எல்லா வகைகளிலும் முயற்சியை மேற்கொள்கிறது.
இந்த இரண்டு தாக்குதல்களிலும் இன்னொரு முக்கியமான அம்சமும் உள்ளது. புத்தானந்தம் தாக்குதலில் காவல்துறையை முழுதும் நம்பினார்கள் அதனால் அடியும் வாங்கினார்கள் எதிர்தரப்பின் மீது எந்த பெரிய வழக்கும் இல்லை. ஆனால் கம்பத்தை பொறுத்தவரை முஸ்லிம்கள் தங்கள் ஒற்றுமையை நிலை நிறுத்தி திருப்பி தாக்கினார்கள். பாதுகாப்பையும் பெற்றார்கள் எதிரிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தினார்கள். காவல்துறை வரட்டும் அதுவரை வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்திருந்தால் ரோட்டில் நின்று முஸ்லிம்களை கேவலமாக மிக கொச்சையாக பேசிய கும்பல் வீட்டிற்குள் நுழைந்திருக்கும்.