அன்று பகல் நான் சோற்றில் குழம்பை ஊற்றிப் பிசைந்து கொண்டிருந்தநேரத்தில் திடீரெனத் தொலைக்காட்சியில் ஓடியது அந்தச் செய்தி - “பிரதமர் அலுவலகத்தின் முன்னால் தமிழ்நாட்டு உழவர்கள் முழு அம்மணப் போராட்டம்” என்று.

அப்படியே உறைந்து போய்விட்டேன்! இதற்கு மேலும் ஒரு போராட்டம் நடத்த முடியுமா? மானத்தை உயிரினும் மேலாய்ப் போற்றுபவர்கள் தமிழர்கள். ஆனால், இதோ எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றுவதற்காக அந்த மானத்தையும் இழந்தாகி விட்டது! இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது தமிழர்களிடம்?... இதற்கு மேலும் என்ன செய்தால் நியாயம் கிடைக்கும் நம் உழவர்களுக்கு?...

tami nadu farmers jantar mantar

ஆனால், இவ்வளவும் நடந்த பிறகும், இன்றளவும், போராடுகிற வேளாண் பெருமக்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் நல்லவர்கள் சிலர்.

தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் போராட்டம் சரியா தவறா?

“உழவர்கள் போராட வேண்டியது மாநில அரசிடம்தான். நடுவணரசிடம் இல்லை” எனப் பெரிய அரசியல் அறிஞர் போல் பேசுகிறார்கள் சிலர். அவர்களிடம் போய், “ஐயா! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதையும் உழவர்கள் தங்கள் கோரிக்கைகளில் ஒன்றாக வைத்திருக்கிறார்களே! அதை எப்படி மாநில அரசிடம் கேட்பது?” எனக் கேட்டால் அதற்கு மட்டும் பதிலைக் காணோம்.

“தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திராவிடக் கட்சிகள்தாம் உழவுத் தொழிலின் இன்றைய நிலைமைக்குக் காரணம். எனவே, மாநில அரசுதான் இதில் பொறுப்பேற்க வேண்டும்” எனக் கூவுகிறார்கள் வேறு சிலர்.

உண்மைதான். ஆனால், உழவர்கள் இன்று போராடுவது தீர்வு வேண்டி. இன்றைய நிலைமைக்கு யார் காரணம் எனப் பார்த்துத் தண்டிக்கக் கோரி இல்லை. வாழ்வின் இறுதி விளிம்பில் நின்று தங்களைக் காப்பாற்றச் சொல்லி வேண்டுபவர்களுக்குக் கை கொடுக்காமல், மாறாக அவர்களுடைய அந்த நிலைமைக்குக் காரணம் யார் என அவர்களிடம் போய் வெற்று நியாயம் பேசிக் கொண்டிருப்பது நெஞ்சில் ஈரம் என்பதே இல்லாதவர்களின் செயல்!

கங்கை அமரன் கேட்கிறார், “பிரதமர் வந்து உங்களைப் பார்க்க வேண்டுமா?” என்று. அதாவது, ‘பிரதமர் என்பவர் எப்பேர்ப்பட்டவர்! அவர் வந்து போயும் போயும் இந்த ஏழை உழவர்களைச் சந்தித்துக் கொண்டிருப்பாரா?’ என்பது அவர் கேள்வி. அவரைச் சொல்லிக் குற்றமில்லை; சேர்ந்திருக்கும் இடம் அப்படி. பிரதமர் என்றால் ஏதோ பெரிய கடவுள் என நினைத்துக் கொண்டிருக்கிறார் அமரனார். அவர் கனடியப் பிரதமர்ஜசுடின் டுரூடோவின் பெயரையாவது கேள்விப்பட்டிருப்பாரா எனத் தெரியவில்லை!

உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு யார் யாரோ எழுப்பும் கேள்விகளைக் கூட மதித்துக் கோரா இணையத்தளத்தில் விடை அளித்துக் கொண்டிருக்கிறார் கனடாவின் 23-ஆவது. பிரதமர் ஜசுடின் டுரூடோ. அதிலும் ஒருவர், “இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்களேதாம் நேரிடையாக விடை அளிக்கிறீர்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக ஒளிப்படம் ஒன்றை இணைக்க முடியுமா?” என்று கேட்டதும் அதையும் அனுப்பி வைத்திருக்கிறார். இவரெல்லாம் பிரதமர் இல்லையா? (பார்க்க: சொடுக்குக)

“உழவர்கள் நடத்திய அம்மணப் போராட்டம் தமிழ்நாட்டுக்குத் தலைக்குனிவு” என்றிருக்கிறார் ‘இந்தியாவின் ஒரே நாட்டுப்பற்றாளரான’ எச்.ராஜா.

எச்.ராஜா மட்டுமில்லை, இந்த நேரத்தில் நாட்டிலுள்ள அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மைஎன்னவெனில் - இந்தியாவுக்கு ஆடையில்லாப் போராட்டம் புதிதில்லை!ஆம்! இதற்கு முன்பும் சிலமுறை நடந்திருக்கிறது.

இந்திய வரலாற்றில் அம்மணப் போராட்டங்கள் (Nude Protests in India)

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஆயுத அடக்குமுறைச் சட்டத்தைப் பயன்படுத்தி இந்தியப் படையினர் அங்குள்ள பெண்களைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வருவது நாம் அறிந்தும் அறியாதது போல் காட்டிக் கொள்ளும் பல உண்மைகளுள் ஒன்று! அப்படி ஒருமுறை, 2004-ஆம் ஆண்டு, மணிப்பூரில் தஞ்சம் மனோரமா என்ற பெண் இந்தியப் படையினரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். கேட்டதற்கு, அந்தப் பெண் தீவிரவாதி என முத்திரை குத்தினார்கள், வழக்கம் போல். அந்தக் கொடுமையைத் தாள முடியாத மணிப்பூர் தாய்மார்கள் 30 பேர், மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள அசாம் ரைபிள் எனும் இந்தியத் துணைப்படைப் பிரிவின் தலைமை அலுவலகத்தின் முன்பு முழு அம்மணமாகப் போராடினார்கள்!

“இந்தியப் படையினரே! நாங்கள் எல்லாரும் மனோரமாவின் அன்னைகள். எங்களையும் வன்புணர்ந்து (Rape) கொள்ளுங்கள்!” என்கிற முழக்கத்தோடு அவர்கள் நடத்திய அந்தப் போராட்டம், காவல் தெய்வங்களாகப் போற்றப்படும் இந்தியப் படையினருடைய உண்மை முகத்தைத் தோலுரிக்கும் முதன்மையான இந்திய வரலாற்றுப் பதிவு!

எச்.ராஜா போன்றோர் இதற்கு என்ன சொல்வார்கள்? அந்தப் போராட்டமும் மணிப்பூருக்கு நேர்ந்த தலைக்குனிவு; இந்தியப் படையினருக்கோ நாட்டுக்கோ இல்லை என்பார்களா?

இதே போல் 2014-இல், அடையாளம் தெரியாத கணவனும் மனைவியுமான இருவர், இந்தியாவும் பாகித்தானும் ஏன் பிரிந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு முன்னர் ஆடையின்றிப் போராட்டம் நடத்தியதும் உண்டு.

இவற்றையெல்லாம் பார்க்கையில், இந்து சமயத்துக்கு எதிராக எழுந்த சமண சமயம் ஆடை துறப்புச் சமயமாக உருவெடுத்தது கூட ஒரு வகையில் எதிர்ப்புணர்வின் குறியீடுதானோ எனத் தோன்றுகிறது. தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற எல்லாரையும் கீழ்ப் பார்வையிலேயே அணுகும் ஆரியத் திமிர்ப் போக்குக்கு எதிராக மணிப்பூர் தாய்மார்கள் முதல் தமிழ் உழவர்கள் வரை ஆடை துறந்தது போல வேதக்கால ஆரிய இந்து சமயத்தின் மேட்டிமைத்தனத்துக்கு எதிரான ஆடை துறப்புதான் சமண சமயமோ என்கிற எண்ணம் மேலிடுகிறது.

அதே நேரம், ஆடையில்லாப் போராட்டம் என்பது இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்கெனவே எத்தனையோ முறை நடந்ததுதான், நடப்பதும்தான்.

ஆடையில்லாப் போராட்டங்கள் வரலாறு (Nude Protests in the History)

2005 மே 16 அன்று, ‘400 பேர் இயக்கம்’ (400 People Movement) எனும் அமைப்பைச் சேர்ந்த பெண்கள், தங்கள் நிலத்தை அரசுப் பிரதிநிதிகள் கையகப்படுத்துவதை எதிர்த்து, மெக்சிகோவில் உள்ள அந்நாட்டுக் குடியரசுத்தலைவர் மாளிகை முன்பாக முழு அம்மணப் போராட்டம் நடத்தினார்கள்.

2007-ஆம் ஆண்டு, உலகப் புகழ் வாய்ந்த சுற்றுச்சூழல் இயக்கமான கிரீன்பீசு அமைப்பின் உறுப்பினர்கள் 600 பேர் உலக வெப்பமயமாதல் தொடர்பான விழிப்புணர்வுக்காக ஆல்ப்சு மலையின் கொடும் குளிரில் சிறிதும் ஆடையில்லாமல் நின்று உலகவெப்பமயமாதலுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தினர்.

2009-ஆம் ஆண்டில், பிரேசிலில் உள்ள யூனிபான் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த கெய்சி அருடா என்கிற பெண், குட்டைப் பாவாடை அணிந்து வந்ததற்காகப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதைக் கண்டித்து அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் 250 பேர் ஆடையில்லாமலும் மிகக் குறைந்த ஆடையுடனும் வகுப்புக்கு வந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர்.

2012-இல், உகாண்டா நாட்டின் அமுரு மாகாணத்தைச் சேர்ந்த பெண்கள், தமிழ்நாட்டு உழவர்களைப் போலவே உழவுத்தொழில் உரிமைக்காக அந்நாட்டு அரசை எதிர்த்து ஆடையில்லாமல் போராடினார்கள். தங்கள் வேளாண் நிலங்களைக் கைப்பற்றிச் சர்க்கரை ஆலைகளுக்குத் தாரை வார்க்க முயலும் அரசை எதிர்த்து அவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் 2015 ஏப்ரலில் மறுபடியும் ஒருமுறை நடத்தப்பட்டது.

இப்படி ஏராளமான நிகழ்வுகள் வரலாறு நெடுகிலும் பதிவாகியுள்ளன. மட்டுமல்லாமல், ஆடையில்லா ஆர்ப்பாட்டத்தையே தங்கள் போராட்ட வடிவமாகக் கொண்டு இயங்கும் பல இயக்கங்களே வெளிநாடுகளில் உண்டு. பெமன், அர்பனியூதிசுதா, ஆப்னல் எனப்பல.

எதற்காக இவற்றையெல்லாம் சொல்கிறேன் என்றால், அம்மணம் என்பது போராட்ட ஆயுதங்களில் ஒன்றாகப் பல ஆண்டுகளாகவே உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்றுதான் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான். பொது இடத்தில், பலர் பார்க்க ஆடையின்றி நிற்பது என்பது மானக்கேடான செயல்தான். ஆனால், எந்த ஒன்றுக்கும் இடம் - பொருள் - ஏவல் என்பவை உண்டு. அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் எல்லாவற்றையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது முதிர்ச்சியற்ற மனநிலை.

கொலை செய்வது குற்றம் என்பது பொதுவான உண்மை. ஆனால், அதையே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகச் செய்தால் தவறில்லை என்பது சட்டம். அது போலத்தான், காதலியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவிழ்த்துப் போட்டுவிட்டு ஓடுவதற்கும், நியாயத்தைப் பெறுவதற்காக ஆடை துறந்து போராடுவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு! இதைத்தான் இடம் - பொருள் - ஏவல் என்பது.

அம்மணமாகப் போராடியவர்கள் என்னவோ தமிழர்கள்தாம். ஆனால், அவர்கள் தாங்களாக விரும்பியோ அல்லது தவறான எண்ணத்திலோ அம்மணப்படுத்திக் கொள்ளவில்லை. தங்கள் நாடு தங்களை எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பதை உலகிற்குக் காட்ட அவர்கள் அப்படி ஓர் எல்லைக்குச் சென்றிருக்கிறார்கள். இந்தச் செய்தி உலகெங்கும் பரவும்பொழுது, “இப்படி ஒரு போராட்டம் நடத்துகிற அளவுக்கா இந்தியா தன் மக்களை வைத்திருக்கிறது? இந்த அளவுக்குப் போராட்டம் நடத்தினால்தான் அந்த நாட்டு ஆட்சியாளர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க முடியுமா?” என்று உலக மக்கள்நம் நாட்டையும் ஆட்சியாளர்களைத்தாம் தவறாகப் பேசுவார்களே ஒழிய, போராட்டம் நடத்துபவர்களை இல்லை. மாறாக, போராளிகள் மீது இரக்கப்படத்தான் செய்வார்கள். ஈகை, இரக்கம் போன்ற குணங்களைக் கொண்ட இயல்பான மனிதர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள்!

ஆடையிலாப் போராட்டங்களைப் பார்த்துப் பழகிப் போன நாடுகள் கூட, “இந்தியாவிலேயே இப்படிப்பட்ட போராட்டங்கள் நடக்கத் தொடங்கி விட்டனவா? மனித உடல் தொடர்பாக மிகவும் கட்டுப்பாடான மனப்பான்மை கொண்ட இந்தியர்களே இப்படி ஒரு போராட்டத்தை நடத்துகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்?” என்பதாகத்தான் இதைப் பற்றி நினைப்பார்கள்.

ஆக, எப்படிப் பார்த்தாலும், உழவர்களின் இந்த ஆடையில்லாப் போராட்டம் நாட்டுக்கும் ஆட்சியாளர்களுக்கும்தான் தலைக்குனிவே தவிர போராளிகளுக்கோ தமிழ்நாட்டுக்கோ தமிழர்களுக்கோ கிடையாது!

இவை மட்டுமல்லாமல் வேறு ஒரு வகைக் குற்றச்சாட்டும் இந்த வேளாண் போராளிகள் மீது தொடக்கம் முதலே சுமத்தப்பட்டு வருகிறது.

தலைநகரில் தமிழ் உழவர்கள் - பொதுநலப் போராட்டமா, தன்னல ஆர்ப்பாட்டமா?

“பணக்கார உழவர்கள் கூட வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யச் சொல்லிக் கேட்பது நியாயமா?” என ஒருபுறம் கங்கை அமரன் நீதி கேட்கிறார். இன்னொரு புறம் “இந்த உழவர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் அய்யாக்கண்ணு ஆடி மகிழுந்து (Audi Car) வைத்திருக்கிறார்” என்கிறார் எச்.ராஜா. “வெறும் வேளாண் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்யச் சொல்லாமல் நதிநீர் இணைப்பையும் கோரிப் போராடினால் இவர்கள் ஒழுங்கானவர்கள் என நம்பலாம்” என்கிறது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அறிவு கெட்ட பிறவி ஒன்று.

இப்படி பா.ஜ.க., வகையறாவினர் தொடங்கி இந்தப் போராட்டம் பற்றி அனா ஆவன்னா கூடத் தெரியாமல் கருத்துச் சொல்ல மட்டும் கிளம்பி வந்து விடுகிற சமூக வலைத்தள வெண்ணெய்யர்கள் வரை அனைவருமே, “வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யச் சொல்லித்தான் இந்தப் போராட்டமே நடத்தப்படுகிறது” என்பது போலத் திரும்பத் திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு பொய்யை உண்மையாக்கத் தலைகீழாய் நின்று தவிடு தின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை வேறு! இதோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உழவர் பெருமக்கள் வெளியிட்ட அறிக்கையைக் கீழே இணைத்துள்ளேன், பாருங்கள்!

farmers hunger strike

பார்த்தீர்களா? தமிழ்நாடு பாலைக்காடாகாமல் தடுக்க வேண்டும், காவிரி வறள்வதைத் தடுக்க வேண்டும், எல்லா நதிகளையும் நீர்வழிச் சாலைகள் மூலம் இணைக்க வேண்டும், வேளாண் பொருட்களுக்கு ஆதாயகரமான விலை கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவெல்லாம் பட்டியலிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ‘வேளாண் கடன் தள்ளுபடி’ எங்கே இருக்கிறது என்று கவனித்தீர்களா? அச்சுப் பட்டியலிலேயே அஃது இல்லை! ஆம்! அறிக்கை அச்சடிக்கக் கொடுத்தபொழுது அதை மறந்து விட்டார்களோ என்னவோ! பின்னர், இரப்பர் முத்திரை மூலம் பட்டியலின் தொடக்கத்தில் தனியாக அச்சிட்டிருக்கிறார்கள்!

இதிலிருந்தே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உயர்ந்த நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். வேளாண் கடன் தள்ளுபடிதான் அவர்கள் போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கை என்பது உண்மையானால் அது பட்டியலிலிருந்து விடுபட்டிருக்க வாய்ப்பில்லை. மாறாக, உழவுத்தொழிலை மீட்பதும் குடிநீர், உணவு போன்ற அடிப்படைத் தேவைகளின் எதிர்காலத்தை உறுதி செய்வதுமே அவர்களின் உள்ளத்தில் முதலிடம் பிடித்திருந்ததால்தான் தங்களுடைய முதன்மைக் கோரிக்கையையே அவர்கள் மறந்து போய்விட்டிருக்கிறார்கள்.

இப்படி, தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலும் மொத்த சமூகத்துக்காகவும் நாட்டுக்காகவும் சிந்திக்கும் இவர்களைப் போய்த் தன்னலக்காரர்கள், நாட்டுக்கு எதிரானவர்கள் எனச் சொன்னால் அப்படிச் சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்பதை இதைப் படிக்கும் பொதுமக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!

தகவல்கள்: நன்றி ஆங்கில தமிழ் விக்கிப்பீடியா, விகடன், கோரா, நியூசு எக்சு, தி அஃபிங்டன் போசுடு, கிரீன்பீசு, ஆல்டர்நெட்டு.

படம்: நன்றி ‘பேலியோ பிரம்மா’ நியாண்டர் செல்வன்.

இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It