donald trump

 அமெரிக்க தனது புதிய அதிபராக டிரம்பை தேர்வு செய்துள்ளது. இது நடக்கக்கூடாது என்றே உலகில் பெரும்பாலான நாடுகளில் இருக்கும் ஜனநாயக சக்திகள் விரும்பினார்கள். ஏன் கணிசமான அமெரிக்கர்கள் கூட விரும்பினார்கள். ஆனால் டிரம்ப் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி, அப்படி நினைத்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றார். தான் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்பது டிரம்ப்பிற்கு நன்றாகத் தெரியும். காரணம் மிக எளிதானது மக்களிடம் ஜனநாயகவாதி போன்றும், சோசலிசவாதி போன்றும் பேசி கவர்வதைவிட வலதுசாரி பாசிச தன்மையுடன் பேசி, கவர்வது மிக எளிதானது. அமெரிக்காவில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி நிச்சயம் அதுபோன்ற பாசிச தன்மையை ஆதரிக்கும் என்பது டிரம்பின் கணிப்பாகும். அந்தக் கணிப்புப் பலிக்கவும் செய்திருக்கின்றது.

 டிரம்பின் வெற்றியை ஒரு பக்கம் இடதுசாரி சித்தாந்தவாதிகள் வெறுத்தாலும், பெரும்பாலான நாடுகளில் உள்ள தீவிர வலதுசாரி சார்புகொண்டவர்கள் அதை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஐரோப்பிய யூனியனில் உள்ள பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கங்கள், இனவாதக் குழுக்கள் போன்றவை டிரம்பின் வெற்றியை தங்களுடைய வெற்றியாகப் பாவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன. உலகில் ஒரு நாட்டில் பாசிசம் வெற்றி பெறும்போது, அது மற்ற நாடுகளில் உள்ள அதுபோன்ற சக்திகளை உற்சாகப்படுத்துகின்றது. தங்களது கருத்துக்களுக்கான ஒரு நடைமுறை வெற்றியாக அதை அவை பயன்படுத்திக் கொள்கின்றன. எப்படி இத்தாலியில் முசோலினியின் வெற்றி, ஜெர்மனியில் ஹிட்லருக்கு ஒரு ஆதர்சமாக இருந்ததோ அதே போல டிரம்பின் வெற்றி பல இனவாத, மதவாத சக்திகளுக்கு ஆதர்சமாக இருக்கின்றது.

 ஹிலாரி கிளிண்டன் மீது என்னதான் ஜனநாயக முத்திரையை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குத்தினாலும், அது இந்தத் தேர்தலில் பெரிய அளவில் எடுபடவில்லை. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்பின் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டிரம்ப் பெண்களை மிக இழிவாகப் பேசக்கூடியவர், பெண்களை பாலியல் ரீதியாக ஈர்க்க முயன்றவர், முஸ்லீம்களுக்கு எதிரானவர், இனவாதி போன்றவை. ஆனால் டிரம்ப் இதை மறுக்கவில்லை. மாறாக தொடர்ந்து அதுபோன்றே பேசியும், செயலாற்றியும் வந்தார். தான் ஆட்சிக்கு வந்தால் மெக்சிகோ மற்றும் அமெரிக்க எல்லைக்கு இடையே தடுப்புச்சுவர் ஒன்றை எழுப்பப் போவதாக கூறினார். மேலும் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் 11 மில்லியன் மெக்சிகோ குடியேறிகளை நாடு கடத்தப் போவதாக அறிவித்தார். பெண்கள் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படும் என்றார். இதன் மூலம் தன்னை ஒரு தீவிர பிற்போக்குவாதியாக காட்டிக்கொண்டார். அது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் உள்ள மசூதிகள் கண்கானிக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் பேசினார். இதெல்லாம் உலகளவில் ஒரு பக்கம் கடுமையான கண்டனங்களை டிரம்ப்பிற்கு பெற்றுத் தந்தாலும், தன் சொந்த நாட்டில் பெரும்பான்மை மக்களால் வரவேற்கப்பட்டது என்பதுதான் உண்மை.

 அமெரிக்க மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் இந்த நெருக்கடிக்குக் காரணம் அமெரிக்காவில் குடியேறிய வேற்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று உறுதியாக நம்புகின்றார்கள். இஸ்லாமிய வெறுப்பு என்பது பெரும்பாலான வெள்ளையின அமெரிக்கர்களின் ரத்தத்தில் இயல்பாகவே கலந்த ஒன்று. இதைத்தான் டிரம்ப் தனக்குச் சார்பாக பயன்படுத்திக் கொண்டார். டிரம்பிற்கு இந்தத் தேர்தலில் 53 சதவீத ஆண்களும், 42 சதவீதப் பெண்களும் வாக்களித்து இருக்கின்றார்கள். அதே போல வெள்ளையின அமெரிக்கர்கள் 58 சதவீதம் பேரும், கறுப்பினத்தவர்கள் 8 சதவீத பேரும் டிரம்ப்பிற்கு வாக்களித்து இருக்கின்றார்கள். இது ஒரு தெளிவான சித்திரத்தைக் காட்டுகின்றது. அது என்னவென்றால் அமெரிக்காவில் வாழும் கறுப்பினத்தவர்கள் டிரம்ப்பை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதும் வெள்ளையினத்தவர்கள் டிரம்ப்பை மிகவும் விரும்புகின்றார்கள் என்பதும். கறுப்பினத்தவர்கள் டிரம்ப்பை ஒரு இனவெறியனாகப் பார்ப்பதால் வாக்களிக்கவில்லை. வெள்ளையினத்தவர்கள் அதிலும் குறிப்பாக ஆண்கள் கடுமையான வேலையிழப்பை ஒபாமாவின் ஆட்சியில் சந்தித்ததால் அதில் இருந்து டிரம்ப் தங்களை மீட்டெடுபார் என்று எண்ணி வாக்களித்தனர்.

 ஒபாமாவின் ஆட்சியில் இவர்களது வருமானம் ஏறக்குறைய 14 சதவீதம் குறைந்துள்ளது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். ‘நம்பிக்கை மற்றும் மாற்றம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஒபாமா அதை ஒருபோதும் செய்யவில்லை. ஒபாமா எப்போதும் பெருநிறுவனங்களின் கைக்கூலியாகவே செயல்பட்டார். பல தொழிலாளர் விரோத நடவடிக்கையும் மேற்கொண்டார். இதனால் பெரும்பாலான இளைஞர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதுவே ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலாரியை தேர்தலில் தோற்கடித்தது. அதுமட்டும் அல்லாமல் ஹிலாரி தன்னுடைய அரசு சார்ந்த மின்னஞ்சல்களை அனுப்ப தனியார் சர்வர்களைப் பயன்படுத்தியது, அவரது கணவர் கிளிண்டன் மீதான பாலியல் புகார்கள் போன்றவை அவருக்கு எதிரான பிரச்சாரமாக டிரம்ப்பால் முன்னெடுக்கப்பட்டது. எது எப்படியோ அமெரிக்க மக்கள் தங்களுக்கான விடுதலையை டிரம்ப்பால் கொடுக்க முடியும் என நம்பிக்கை வைத்து அவரை தேர்ந்தெடுத்துவிட்டனர். ஆனால் எப்படி புஷ்சால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ஒபாமாவால் தீர்க்க முடியும் என நம்பி வாக்களித்து ஏமார்ந்தார்களோ, அதே போலத்தான் இப்போது ஒபாமா ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடியை டிரம்ப்பை தேர்ந்தெடுத்ததன் மூலம் அமெரிக்க மக்கள் தீர்த்துக்கொள்ள நினைக்கின்றார்கள். ஆனால் ஒரு போதும் நடக்காதது.

 அமெரிக்க யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அதனால் ஒரு போதும் தன்னுடைய நெருக்கடியில் இருந்து மீளவே முடியாது. காரணம் அதன் வல்லரசுக் கோட்டை மற்ற நாடுகளை சுரண்டுவதில் இருந்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனநாயகம் என்பது பெரும்தலாளிகளின் ஜனநாயகம், பகாசுர நிறுவனங்களின் ஜனநாயகம். அது எப்போதும் அமெரிக்க சாமானிய மக்களின் ஜனநாயகமாக இருந்தது கிடையாது. அதனால் வளைகுடா நாடுகளுக்கு எதிரான போரையோ, அதற்காக அமெரிக்க மக்களின் லட்சக்கணக்கான கோடி டாலர் பணத்தை செலவு செய்வதையோ நிறுத்த முடியாது. அப்படி அது நிறுத்தும் பட்சத்தில் அது தனது வல்லரசு தகுதியையே இழக்க வேண்டியிருக்கும். எனவே அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி என்பது பேராசை பிடித்த முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத விளைவு.

 ஆனால் மக்கள் தன்னுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள அதி தீவிரமான வலதுசாரிகளை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு உலகம் பூராவும் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதையும் நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். இடதுசாரிகள் தங்களுடைய பிழைப்புவாதத்தால் உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு மக்களால் வெறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் அந்த இடைவெளியை வலதுசாரிகள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். டிரம்ப்பின் வெற்றியைத் தவிர்க்க இயலாமல் நாம் அப்படித்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It