நாம் ஏற்கெனவே பல கட்டுரைகளில் தமிழ்த் தேசியம் பேசும் பல பேர் அடிப்படையில் பார்ப்பன அடிவருடிகளாக இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கின்றோம். அப்போது பல பேர் அதை ஏற்றுக்கொள்ளும் மனதிடம் இல்லாமல், வண்டி வைத்துக் கொண்டு வந்து திட்டிவிட்டுச் சென்றார்கள். இப்போது அவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்? கடந்த மாதம் 23/09/ 2016 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணாவிரதத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போதெல்லாம் அதற்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தை எதிர்த்து ஒரு சிறு போராட்டத்தைக் கூட நடத்தத் துப்பில்லாத இந்தப் பார்ப்பன அடிவருடிக் கும்பல், இலங்கையில் பெளத்தமயமாக்கலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்று சொல்வது அப்பட்டமான அயோக்கியத்தனமாகும். அது போன்றவர்களுடன் மேடை ஏறியதன் மூலம் பழ. நெடுமாறன் ‘தான் யார்?’ என்ற உண்மையைப் பகிரங்கப்படுத்தி இருக்கின்றார்.

 தமிழ் நாட்டிலே சீண்டுவார் யாருமின்றி இருக்கும் இவர்கள் எதையாவது செய்து தங்களுடைய பெயரை விளம்பரப்படுத்த முடியாதா என்று பார்க்கின்றார்கள். தமிழ்நாட்டிலே பல சாதிக் கலவரங்கள் நடந்துள்ளன. பல சாதி ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. அப்போதெல்லாம் “என்னடா ஒரு இந்துவ இன்னொரு இந்து கொல்லுறீங்க, ஏன்டா அவனை கீழ்சாதினு சொல்லி கோயில்ல விட மாட்டேனு சொல்றீங்க” என கேட்கத் துப்பில்லாத இந்தப் பார்ப்பன அடிவருடிக் கும்பல், இங்கே கிழித்தது போதாது என்று இப்போது இலங்கையில் கிழிக்கப் போயுள்ளது. தமிழ்நாட்டில் இருந்த பல ஈழத் துரோகிகளின் பேச்சைக் கேட்டு, சரணடைந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்த அந்த மக்கள் இன்னும் தங்களுக்கான வாழ்வாதாரத்தையே உருவாக்கிக் கொள்ளவில்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அவர்களை இன்னும் கூட இரண்டாம் தர குடிமக்களை விட மோசமாகவே நடத்திக்கொண்டு இருக்கின்றது.

 இன்னும் அந்த மக்கள் தங்களது சொந்த குடியிருப்புகளில் குடியமர்த்தப்படவில்லை. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவமும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மக்கள் தங்களுக்கான விடுதலையின் தன்மை எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்யும் முக்கியமான கட்டத்தில் உள்ளனர். தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதா, இல்லை தமிழ் மக்களின் விடுதலையை உண்மையில் விரும்பும் சிங்கள ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து ஒரு புரட்சிகர போராட்டத்தை முன்னெடுப்பதா என்று. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அது இந்திய மேலாதிக்கத்தையும், இந்தப் போரை முன்னின்று நடத்திய இந்திய ஆளும்வர்க்கத்தின் வர்க்க நலன்களையும் பாதிக்கும் என்பதால் அவர்களை நக்கிப் பிழைக்கும் இந்த இந்து மக்கள் கட்சி அங்கே மேல்மட்டத்தில் சில சிங்கள வெறியர்களால் திணிக்கப்படும் சில அடாவடி செயல்களை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அங்கே நிரந்தரமாக ஒரு இன பிளவை அதாவது தமிழ்மக்களையும், சிங்கள மக்களையும் பிரிக்கும் சதி வேலையில் இறங்கியிருக்கின்றது. இதற்குப் பின்னால் ஏற்கனவே தமிழ் மக்களை கொல்ல ரகசியமாக சதித் திட்டம் தீட்டி அவர்களை பூண்டோடு ஒழிக்க பார்ப்பன பி.ஜே.பி யுடன் கள்ளக்கூட்டை ஏற்படுத்திக்கொண்டு பி.ஜே.பிக்கு ஒட்டு போடச் சொன்ன கழிசடை கும்பல்களின் சதி உள்ளது.

 விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் இப்போது இலங்கைக்கு இந்தியாவில் இருந்து காவிபயங்கரவாதிகள் படையெடுப்பது நடந்து வருகின்றது. மும்பையில் தமிழர்களுக்கு எதிராக மராட்டிய வெறியை ஏற்படுத்தி, அவர்களை குறிவைத்துத் தாக்கிய சிவசேனா இலங்கையில் தன்னுடைய கடையை இப்போது திறந்திருக்கின்றது. அங்கே தமிழ்த் தேசியவாதியாக அறியப்பட்ட மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் திரிகோணமலையில் அதன் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் வை.யோகேஸ்வரன் வவுனியாவில் சிவசேனாவின் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மறவன்புலவு சச்சிதானந்தம் இந்துக்களை பாதுகாக்கவே சிவசேனா அமைப்பைத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். தமிழ்த் தேசியம் எப்போதுமே மதவெறியர்களுடன் மிக எளிதாக கைகோர்த்துக் கொள்கின்றது. காரணம் அதன் மேட்டுக்குடி சாதிவெறியாகும்.

 தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் எப்படி ஆதிக்க சாதி இந்துக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் வகையறாக்களாக இருக்கின்றார்களோ, அதே போல இலங்கையில் உள்ள தமிழ்த்தேசியவாதிகள் வெள்ளாள சாதியை மட்டுமே பிரநிதித்துவம் செய்யக்கூடியவர்கள். அவர்கள் தான் தமிழ்த் தேசியம் பேசக்கூடியவர்கள். தமிழ்நாட்டில் உள்ள தமிழ்த் தேசியவாதிகள் முன்னிறுத்தும் ஆதிக்க சாதிகள் எப்படி இங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் போன்றவர்களை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொள்வது கிடையாதோ, அவர்கள் மீது ஆதிக்க சாதிகள் தாக்குதல் தொடுக்கும் போது கண்டிக்கத் திராணியற்று சாதிவெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றார்களோ, அதே போல அங்குள்ள வெள்ளாள சாதி வெறியர்கள் அங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் போதும் கண்டுகொள்வது கிடையாது. ஏனென்றால் தமிழ்த் தேசியம் என்பது எப்போதுமே பார்ப்பனியத்திற்கு ஆதரவாக ஆதிக்க சாதிகளின் முகமாக செயல்படக்கூடியது. பார்ப்பனியம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தைதான் தமிழ்த் தேசியம். இந்த ஆதிக்க சாதிகளை நக்கிப் பிழைக்கும் போக்குதான் அவர்களை மிக எளிதாக இந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்க வைக்கின்றது. தமிழ்த்தேசியமும், இந்துத்துவாவும் அடிப்படையில் ஒன்றுதான். இரண்டுமே சாமானிய தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு எதிரானது. அதனால் தான் அவர்களால் மிக எளிதாக கைகுலுக்கிக் கொள்ள முடிகின்றது.

 இது ஒரு பக்கம் என்றால் கடந்த மாதம் தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்த ‘எழுக தமிழ் 2016’ என்ற நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த இராம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழர் தாயகத்தில் இலங்கையில் சிங்கள பெளத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், தமிழ்த்தேசம் தனித்துவமான இறையாண்மை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்திர அரசியல் தீர்வை வலியுறுத்தியும், யுத்தக் குற்றங்களுக்கும் இனப்படு கொலைக்குமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் செப்டம்பர் 24, 2016 அன்று யாழ்ப்பாணம் நகரில் கூடும் ‘எழுக தமிழ்’ பேரணியில் தாயகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் ஏனைய சகோதரத்துவ மதத்தவர்களும் ஓரணியில் திரண்டு இலங்கை அரசின் பெளத்த மயமாக்களுக்கு எதிராக குரல் கொடுக்குமாறும் உங்கள் அனைவரையும் இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்” என்று கூறப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டிலே சீண்டுவார் யாருமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் இந்த இழிபிறவி, இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றானாம், மானங்கெட்டவன். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் இந்தக் கேடி, காஷ்மீரில் இந்திய அரசு கொன்று குவித்த ஆயிரக்கணக்கான முஸ்லின் மக்களுக்காக சர்வதேச விசாரணையைக் கேட்பானா? இல்லை காஷ்மீர் உட்பட வடகிழக்கு மாநில மக்கள் கேட்கும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பானா?. நிச்சயமாக கிடையாது. இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது - அது இலங்கை இன்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் தமிழ் மக்கள் மட்டுமின்றி சிங்கள மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒரு வர்க்க அணிச்சேர்க்கை அங்கே உருவாகிக் கொண்டு இருக்கின்றது. இது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கின்றது. எனவே தான் இந்திய அரசின் கைக்கூலிகளாக அங்கே இந்து மதவெறி இயக்கங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. எந்த வகையிலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதுதான் இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் குறிக்கோளாக இருக்கின்றது. இதனால்தான் திட்டமிட்ட முறையில் தமிழர் பகுதில் உள்ள இந்துக் கோவில்கள் இடிக்கப்படுகின்றன. இதன் மூலம் தமிழன், சிங்களவன் என்ற முரண்பாடு வெள்ளாள சாதிவெறியர்களின் துணையுடன் பெளத்த- இந்து முரண்பாடாக மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கு வெள்ளாள சாதிவெறியர்களை முன்னிலைப்படுத்தும் தமிழ்த்தேசியம் பேசும் அமைப்புகள் துணையாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிகளை முன்னிலைப்படுத்தும் தமிழ்த் தேசியக் கும்பல் இயற்கையாகவே அதன் கூட்டாளியாக மாறியிருக்கின்றது.

 மலையகத் தமிழர்களையும், இலங்கை மக்கள் தொகையில் 10 சதவீதம் இருக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியத் தமிழர்களையும் புறக்கணித்துவிட்டு இலங்கைத் தமிழர் என்று சொல்லப்படும் பெரும்பான்மையான வெள்ளாள சாதிமக்களால் இந்த ‘எழுக தமிழ் 2016’ நிகழ்வு நடத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தான் அதற்கு இந்து மக்கள் கட்சி போன்ற பொறுக்கி கும்பல் ஆதரவை வழங்கி இருக்கின்றது. பழ.நெடுமாறன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் பி.ஜே.பிக்கு ஓட்டுபோட்டால் தமிழீழம் மலரும் எனக் கேட்டது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல. அவர்கள் எப்போதுமே இந்துத்துவ பயங்கரவாதிகளுடன் ஒத்திசைவாகவே பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த ஒத்திசைவுதான் தமிழகத்தில் பழ.நெடுமாறன் வகையறாக்களை இந்துமக்கள் கட்சியுடன் இணைத்திருப்பதும் இலங்கையில் உள்ள தமிழ்த் தேசியவாதிகளை சிவசேனாவுடன் இணைத்திருப்பதும்.

 தமிழ்நாட்டில் இருந்தோ, இல்லை இந்தியாவில் இருந்தோ யாரும் இலங்கைக்கு புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது. அதை அந்த மக்களே முடிவு செய்துகொள்வார்கள் - தாங்கள் தனித்து நின்று தமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமா, இல்லை சிங்கள ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து தமக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமா என்று. அப்படியொரு நிலை தெளிவாக அங்கு தெரியும் வரை அதைச் சீர்குலைக்க தமிழ்த் தேசியவாதிகளும் அவர்களை பெற்றெடுத்த பார்ப்பன சக்திகளும் செய்யும் சதியை நாம் அம்பலப்படுத்திக் கொண்டே இருப்போம். அதுதான் அந்த மக்களுக்கு நம்மால் செய்ய முடிந்த மிகப் பெரிய உதவி.

- செ.கார்கி

Pin It