இந்திய நவீனயுகம் காலனிய ஆட்சிக்காலத்தின் தாக்கத்திலிருந்து தொடங்குகிறது. காலனியகாலம் தனக்கு வழங்கிய பெரும்பான்மை வெளிகளையும் கலாச்சாரத் தளங்களையும் தனதாக்கிக்கொண்டு இங்குப் புதிய செயல்பாட்டு வடிவங்கள் தொடக்கம் பெறுகின்றன. மேல்நிலையில் நடைபெற்ற முன்னிலைப்படுத்தும் சமயத்தையும் மதத்தையும் வேறு தன்மையில் மீட்டுருவாக்கம் செய்தன. கலாச்சார வடிவங்களில் தேசியம் என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதனையடுத்த பின்னணியில் மொழி, இனம், சாதி, வட்டாரம் என்ற பல நிலைகளில் அடையாள இயக்கங்கள் தோற்றம் பெறுகின்றன. இங்கு விடுதலை என்ற சொல்லாக்கம் சமூக விடுதலையினை மையப்படுத்திய அரசியல், பொருளாதாரம், கல்வி, மருத்துவம், சொத்துடைமை என்ற அனைத்து நிலைகளையும் உள்ளடக்கியது ஆகும்.

    periyar 306அடையாள வடிவங்கள் வரலாற்றைத் தமக்கேதுவான பார்வையில் கட்டமைத்துக் கொள்கின்றன. பாரம்பரியம், தொன்மை, இலக்கியம் போன்றவற்றை வரலாற்றின் பார்வையில் இருந்து மீள்வடிவம் செய்துகொள்கின்றன. இத்தகைய பாங்கில் தமிழ் என்ற பாரம்பரியம், இலக்கியச் செழுமையைத் திராவிடக் கட்சிகள் தனக்கானதாக மாற்றியமைத்துக்கொண்டன என்பது இங்குக் கவனிக்கத்தக்கது. தமிழ் என்ற மொழிக்கான கால வெளியை மட்டும் பயன்படுத்திக் கொண்ட தமிழகத்துக்கான அரசியல் கட்சி வடிவம் அதில் காணப்படுகின்ற இன்றைய சமூக விழிப்புக்கான எழுச்சிக்கான விடுதலை உணர்வுகளையும் சமூக வடிவங்களையும் அடையாளப்படுத்தாமல் இருந்துவிட்டன. சமஸ்கிருத மொழி பரப்பில் இருந்து தமிழைத் தொன்மை என்ற அடையாள வடிவத்துக்குள் முன்னிலைப்படுத்த இத்தகைய கருத்துநிலை மட்டுமே போதுமானதாக இருந்ததது.

    மூன்றாம் நாடுகளுக்கான அரசியல் வடிவங்கள் பெரும்பாலும் காலனியத்தாக்கத்தில் பின்னாலான அடையாள அரசியலாகவே காணப்படுகிறது. இங்கு எழுச்சி பெற்ற தேசியம் என்ற கருத்தாக்கம் பெரியாரால் விமர்சனம் செய்யப்பட்டதுபோல் முதலாளி கருத்துருவம் கொண்டதாக இருந்ததையாலும் இவ்வடிவம் அனைத்து மக்களையும் குறிப்பாக அடித்தட்டு விளிம்புநிலை மக்களை உள்வாங்காத தன்மையாலும் தேசியம் என்ற நிலைப்பாட்டுக்குப் பின்னால் எழுந்த அரசியல் வடிவங்கள் விடுதலைக்கான முன்னேற்ற வழியாக அமையாமல் இருந்துவிட்டன.

    இந்துத்துவக் கலாச்சார வடிவங்களில் இந்து வைதீகம் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு பல தளங்களிலும் அடையாள இயக்கங்களைச் செயல்படுத்துவதற்கான ஊக்கியாக இருந்தன. அடித்தட்டு மக்களும் தனக்கான உரிமைகளைக்கோர வேண்டிய தேவையில் தனக்கான அடையாள முன்படுத்தலோடு களத்தில் இறங்கியது.

அடையாள அரசியலின் தன்மைகள்

    ஒவ்வொரு இன விடுதலையும் அடையாளத்துடன் முன்னெடுக்கும் பொழுது அது மற்றோர் இனத்துக்கான எதிரியாகப் பாவிக்கப்படுகிறது. அது தன்னளவில் தனக்கான விடுதலையாக மட்டும் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் வகுத்துக்கொள்கிறது. இலங்கைத் தமிழர் தனக்கான இன விடுதலைப் போராட்டத்தில் மட்டக்களப்பு தமிழர்களைக் கணக்கில் கொள்வதில்லை. இருவரும் இலங்கை மலைவாழ் தமிழர்களைக் கண்டுகொள்வதில்லை. ஒட்டுமொத்தமான இலங்கை தமிழரின் இன விடுதலையில் அங்கு இருக்கின்ற முஸ்லீம்களுக்கான விடுதலையில் நாட்டம் செலுத்துவதில்லை. மொழி, இனம், சாதி, வட்டாரம், பண்பாட்டு வடிவம் என்ற வடிவங்கள் தனக்கான கோரிக்கைகளையும் உரிமைகளையும் முன்மொழிகின்றபோது இன்னொரு அடையாள வடிவத்திற்கு எதிரியாக அமைகிறது.

    இத்தகைய அடையாள அரசியல் வடிவங்களில் இடதுசாரிகள் எதிர்பார்க்கின்ற வர்க்க ஒன்றிணைவு என்பது நடக்காமலே போகிறது. முதலாளித்துவம் தலைத்தூக்குகின்றபோது தொழிலாளர்கள் வர்க்கமாக ஒன்றிணைந்து தனக்கான விடுதலை பாதையை அமைத்துக்கொள்வார்கள் என்ற இந்திய இடதுசாரிகளின் போதனை இங்குப் பொய்த்துப்போகின்றது. காரணம் இங்கு ஒரு தொழிலாளி தன்னைத் தொழிலாளியாகப் பாவனை செய்துகொள்ளும் முன்பே இன/சாதி அடையாளத்தில் முன்னிறுத்தப்படுகின்றான். இத்தகைய நிலைப்பாடுகள் இங்கு முதலாளிகள் தனது செயல்பாடுகளைத் தொடர்வதற்கான ஆக்கச் சக்தியாகச் செயல்படுவதுடன் அடையாள இயக்கங்களின் முரண்பாடுகள் முதலாளிகளின் ஆதிக்க மனோபாவங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடுகிறது.

    அடையாள அரசியலுக்கான ஒரே மாற்றுவடிவமாக இடதுசாரிகளின் கொள்கைகள் இந்தியச் சமூகங்களில் முன்நிறுத்தப்படுகின்றன. எனினும் இங்கு அறியப்படுகின்ற கொள்கை வடிவம் பொருளாதார நிலைப்பாடுகள் சீர்படுத்தப்படும்பொழுது இங்குக் காணப்படுகின்ற பண்பாட்டு வடிவங்களான சாதி, மதம், பெண் அடக்கமுறை போன்றவை தன்னளவில் சுயம் இழந்து போய்விடும் என்றதாக அமைகிறது. பொருள்முதல் தத்துவம் மார்க்சியத்தின் அடிப்படை என்ற கருதப்படுவதற்கான காரணம் அதன் வலிமை என்றாலும் அது மட்டுமே மார்க்சியக் கொள்கையின் முழுமைத்துவம் ஆகாது என்பதனை இங்கு இருக்கின்ற கொள்கைவாதிகளும், இடதுசாரி கொள்கை பரப்பாளர்களும் புரிந்துகொள்வதில்லை. காலனியச் சூழலுக்குப் பின்னால் உருவாகின்ற அல்தூசர், அந்தோனியாகிராம்சி போன்றோர் பண்பாட்டு வடிவங்களுக்கான வலிமையினை எடுத்துக்கூறியுள்ளனர். ஆசிய உற்பத்தி முறை மற்றும் காலனிய மீள்ச்சமூகங்களில் காணப்படுகின்ற அரசியல் வடிவங்களில் பெரும்பான்மை பண்பாட்டுக் கட்டமைப்புகள் பங்கு வகிக்கின்றன. அத்தகைய சமூகங்களுக்கான விடுதலை முன்னெடுப்புகள் பண்பாட்டு அரசியல், பண்பாட்டு அடையாளம் என்பதனை நோக்கியதாக இருக்க வேண்டும். இதனை இடதுசாரி இயக்கங்கள் பெரும்பான்மையும் புறந்தள்ளிப் பொருளாதாரம் என்பதன் முதன்மையை மட்டும் முன்னிலைப்படுத்திச் சாதி, சமயம் என்பதனைப் பற்றிய விசாரணையில் காலந்தோறும் பங்கு வகிக்காமலே இருந்துவிட்டனர். இத்தகைய விசாரணையின் வடிவங்களாகவே தமிழகத்தில் பெரியாரியம் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

பண்பாட்டு அடையாளங்கள்

    இலக்கியம் அது எழுந்த  கால நடைமுறை வாழ்வியலையும் கலாச்சாரங்களையும் பதிவுசெய்து இன்னொரு கால வரலாற்றுக்கும் அடிப்படையாகவும் வடிகாலாகவும் அமைகிறது என்பதனைப் பல ஆய்வாளர்களால் இங்குப் பறைசாற்றப்பட்டது. ஆனால் அரசியல் முன்னெடுப்பின் தேவையாகவும் விடுதலை எழுச்சிக்கான தேவையாகவும் சங்க இலக்கியம் இங்குக் கருத்தில் கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் பண்பாட்டு அரசியல், பண்பாட்டு அடையாளம் என்பது பொருள்முதலை மையப்படுத்திய பொதுமைச் சமூக வடிவத்தினைச் சங்க இலக்கியம் வாயிலாக இச்சமூகத்தின் விடுதலை நோக்கிய பயணத்திற்கான அடிப்படையாகக் கருத்துருவாக்கம் செய்ய இயலும். கருத்து முதலின் ஆதிக்கத்துக்கு முன்னால் இருந்த தமிழ்ச்சமூகம் நாத்திகத்துடன் தோற்றம் பெற்று இயற்கைப் பரிமாணங்களையும் அவற்றுடனான வாழ்வியல் கூறுகளையும், வளமைசார்ந்த வழிபாட்டுச் செயல்பாடுகளையும் தனிச்சொத்துடைமை இல்லாத பொதுமைச் சமூகத்தையும் கைக்கொண்டிருந்தது. நாட்டார் வழக்காறுகள் சார்ந்த பண்பாட்டுக் கூறுகள் பழைய சமூக வழிபாடு மற்றும் வாழ்வியலுடன் ஒத்துப்போகின்றன. தமிழின் தொன்மை பாரம்பரியம் என்பதனைத் தமிழ் இனத்துக்கான விடுதலை சார்ந்த முன்னெடுப்பாகவும் மொழி அரசியலில் சமஸ்கிருதத்துக்கு மாற்றான அடையாளமாகவும் தன்னை வளப்படுத்திக்கொள்ள முடிந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் பொதுமைத் தன்மைகள், நாத்திக வடிவங்கள் இன்றைய விடுதலைக்கான வடிவங்களாக முன்னெடுக்கப்படாமல் இருக்கின்றன.

    கலாச்சார அரசியல் காலந்தோறும் நாத்திகர்களின் கருத்துருக்களை மாற்றுவதும், சமயம், பண்பாடு சார்ந்த மாற்று வழிகளில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு ஒருசார்பு வர்க்கத்தின் ஆதிக்கப் பொருளாதாரத்தையும், முதன்மையையும் காப்பாற்றி வருகிறது. இதனைத்தான் தற்போது மத்தியில் ஆட்சியமைத்திருக்கின்ற அரசாங்கத்தாலும் செயல்படுத்தப்படுகின்றன.

    இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத வாரம், குரு பூஜை போன்றவற்றால் கலாச்சார வடிவத்துடன் இங்கு இந்துத்துவம் செழுமைப்படுத்தப்படுவதுடன் லவ்ஜிகாத் போன்ற வெற்றுச் செயல்பாடுகளால் இஸ்லாம் மதத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இங்குக் கலாச்சார அரசியல் அடித்தட்டு வெகுசன மக்களுக்கான பாதுகாப்பு உறுதியை அளிப்பதில்லை என்பதுடன் இந்துத்துவம் சார்ந்த பண்பாடுகளைப் பரப்புவதன் மூலம் அந்தந்த மண் சார்ந்த பண்பாட்டு அடையாளங்கள் தனித்தன்மைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய அடையாள முன்னெடுப்புகளின் தீர்வாக இன்றளவில் அம்பேத்கர், பெரியார் என்ற ஆளுமைகள் கவனிக்கப்பட வேண்டியுள்ளனர்.

    தமிழ்ச் சமூகத்தில் வெகுசன தன்மைக்கொண்டு பகுத்தறிவு சார்ந்த அறிவு மையத்திலும், சமூக விடுதலை சார்ந்த விழிப்புணர்வு மையத்திலும் மிகுந்த வலிமை பெற்றவராக அறியப்பட்டவர் பெரியார். இலக்கியம், பழமையான பொதுமைச்சமூகம், பண்பாட்டு அடையாளம், பண்பாட்டு அரசியல் என இதுவரை காணப்படவேண்டிய அனைத்துக் கவனத்தையும் பெரியாரில் காணக்கூடியவை. இத்தகைய அரசியல் முன்னெடுப்புகளில் இவை அனைத்தையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையைக் கொண்டுள்ளன. வரலாறு, இலக்கியம் என்பவை இன விடுதலையினை எதிர்நோக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவை இதனுடன் சமகால எதிர்ப்புச் சக்தியான பெரியாரின் கருத்தியலை இணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

- செ.சௌந்தரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11

Pin It