பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 6 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த 06/03/2016 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ‘இந்து’ என். ராம், டெக்கான் கிரானிக்கிள் நிர்வாக ஆசிரியர் ஆர். பகவான் சிங் , பத்திரிக்கையாளர் மாலன் போன்றோர் கலந்து கொண்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விழா திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிற்போக்குச் சாதிவெறிக் கட்சியென அம்பலமான பா.ம.க தேர்தல் சமயத்தில் தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்ட கட்சியென ஒரு பிம்பத்தை உருவாக்கவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

anbumani 293தனது மகன் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள ராமதாஸ், அதனை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேச முடியும் என அறிவித்தார். ஆனால் நேற்று கட்சி ஆரம்பித்த பச்சை குழந்தைகள் கூட அந்தக் கொடுமையை ஏற்றுக் கொள்ளாததால் தனித்தே களம் காண முடிவு செய்து, தனது மகன் அன்புமணியை வைத்து சினிமா பாணியிலான பல நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றார். என்னதான் அன்புமணி தன்னை அறிவாளியாகவும், நேர்மையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் போன்று பேசினாலும் தமிழக மக்கள் மத்தியில் அது எடுபடாது என்பதுதான் உண்மை.

ராமாதாசும், அவரது மகன் அன்புமணியும் அப்பட்டமான வன்னிய சாதி வெறியர்கள் என்பது தமிழ்நாட்டில் நேற்று காதலிக்கத் தொடங்கிய இளசுகளுக்குக் கூடத் தெரியும். இந்தப் பாவிகளுக்குப் பயந்தே பல பேர் இப்போதெல்லாம் ஜீன்ஸ் பேண்டும், கூலிங்கிளாசும் போட்டுக் கொள்வதில்லை. இந்தப் பாவம் இவர்களை எத்தனை தேர்தல் வந்தாலும் சும்மா விடாது!. அப்படிப்பட்ட சாதிவெறியர்களை தமிழக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக நற்சான்றிதழ் வழங்கி சிறப்புரை ஆற்றியிருக்கின்றார்கள் ‘இந்து’ என்.ராம் போன்ற ஊடக மனுவாதிகள்.

இந்த நிகழ்ச்சியில் என்.ராம் “ மத்தியில் மோடி வந்த பிறகு ஒரு மோசமான போக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை இந்து நாடு என்கின்றனர். அரசியல் சட்டத்திற்கு எதிராகkகூட பேசியுள்ளனர். இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் இந்தியா மதச்சார்பற்ற நாடு. இந்தப் பிரச்சினைகளை எல்லாம் தேர்தலுக்குப் பிறகு ராமதாஸ் கையில் எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். ‘இந்து’ என்.ராம் போன்றவர்களின் நேர்மையை இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது மத்தியில் இருக்கும் பாசிச கிரிமினல் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்து அது ஆட்சியில் அமர்வதற்காக தமிழகம் முழுவதும் ராமதாசும் அன்புமணியும் ஓட்டு கேட்டார்கள் என்பதும், தலித் மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்த ஆதிக்க சாதி சங்கங்களையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்துதலை ஏற்படுத்தினார்கள் என்பதும் ‘இந்து’ என்.ராமின் பார்பன மூளையில் இருந்து எப்படி அழிந்தது என்று தெரியவில்லை.

சாதிவெறி பிடித்த ராமதாசிடம் இருந்தும், அன்புமணியிடம் இருந்தும் இந்தத் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவது என அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கும் போது ‘இந்து’ என்.ராம் மோடியின் பாசிச ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை தேர்தலுக்குப் பின் ராமதாசு கையில் எடுக்க வேண்டும் என கூறுவது கபடத்தனமான பேச்சாகும்.

அன்புமணி, பாட்டாளிமக்கள் கட்சியை சாதிக் கட்சி என சிலர் திட்டமிட்டே சொல்வதாக ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தவறாமல் சொல்கின்றார். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் அல்ல, தானும் ஒரு அப்பட்டமான சாதிவெறியன் என ராமதாசே பேசியுள்ளார். உளுந்தூர் பேட்டை தாலுகா திருநாவலூரில் நடந்த ஒரு வன்னிய சாதி திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய ராமதாசு “நான் டாக்டருக்குப் படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னிய சங்க காலத்தில் இருந்து பா.ம.க தொடங்கிய பின்னர் வரை நான் சாதிவெறியன் தான்” என்று பேசினார்.

அத்தோடு நிற்காமல் வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்குத் தெரு வீட்டுக்கு வீடு அக்னிச்சட்டி மஞ்சள் கொடி பறக்க வேண்டும் எனவும் பேசினார். இது போதாதா பாட்டாளிமக்கள் கட்சி ஒரு சாதிவெறி பிடித்த கட்சி என சொல்வதற்கு. 2012 ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு விழாவில் “வன்னிய சாதிப் பெண்களை கலப்பு மணம் செய்பவர்களை வெட்டுங்கடா…… வன்னிய சங்கத் தலைவர் நான் சொல்கின்றேன்" என்று வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பேசினாரே அதற்கு என்ன அர்த்தம்? தர்மபுரியும், மரக்காணமும், சேசசமுத்திரமும் அவ்வளவு எளிதில் தமிழ மக்களால் மறக்கப்பட்டுவிடுமா? மேலும் ராமதாசும் அன்புமணியும் சாதிவெறியோடு பேசிய பல வீடியோக்கள் யுடியூபில் உள்ளன. நம்பிக்கையில்லாதவர்கள் அதைப் பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

அது சரி, அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து விட்டார்கள். அவரும் தன்னை ஒரு முதலமைச்சாரகவே நினைத்துப் பதவிப்பிரமாணம் எல்லாம் எடுத்துவிட்டார். ஆனால் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 117 சீட்டுகளாவது வெற்றி பெற வேண்டுமே! அதற்கு என்ன செய்வது? தமிழ்நாட்டில் கணிசமான அளவு வன்னியர்கள் உள்ளனர். பல தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் அவர்கள் உள்ளனர். எனவே நிச்சயம் அன்புமணி முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக நீங்கள் நினைக்கலாம். அன்புமணியும், ராமதாசும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறாக உள்ளது. 1991ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க 1 தொகுதியில் வெற்றிபெற்றது. 1996 இல் 4 தொகுதிகளிலும், 2001 இல் 20 தொகுதிகளிலும் 2006 இல் 18 தொகுதிகளிலும், 2011 இல் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக கூட்டினால் கூட 46 தொகுதிகள் தான் வருகின்றது. அப்படியென்றால் 117 தொகுதிகள் வருவதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளோ அல்லது அறுபது ஆண்டுகளோ ஆகலாம். ஆனால் வெற்றிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் 117 தொகுதிகள் ஜெயிக்க வேண்டுமே! வன்னிய சாதி மக்களிடம் ராமதாசுக்கும் அன்புமணிக்கும் உள்ள செல்வாக்கு என்பது இவ்வளவுதான்.

ராமதாசுக்கும் அன்புமணிக்கும் உண்மையிலேயே தைரியம் அதிகம். இல்லை என்றால் தோற்றுப் போவோம் என்று தெரிந்தே தேர்தலில் நிற்பார்களா? உண்மையைச் சொல்லப் போனால் பாட்டாளி மக்கள் கட்சியை டூபாக்கூர் பா.ஜ.க தவிர மற்ற கட்சிகள் சீண்டி கூட பார்க்கவில்லை என்பதே உண்மை. இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனநிலை பிறழ்ந்து இது போன்ற ஒரு துயரமான முடிவை ராமதாசும், அன்புமணியும் எடுத்துள்ளனர்.

புத்தக வெளியீட்டு விழாவில் 'என்னை விமர்சனம் செய்யுங்கள்; அது எனக்கு பிடிக்கும்' என்று ராமதாசு கூறினார். அதனால் தான் சொல்கின்றேன் - பழைய போலி கம்யூனிஸ்டுகள் எழுதிக் கொடுத்த கட்சி அறிக்கையை வைத்துக்கொண்டு தமிழக மக்களை குறிப்பாக தன் சொந்த சாதி மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் நீங்கள் வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமோகமாக டெபாசிட் இழந்து, உங்கள் கட்சியே தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போக எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

- செ.கார்கி

Pin It