1) கெயில் என்பது ஆண்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கும் வணிக நிறுவனம். ஒரு வணிக நிறுவனத்தின் லாபத்திற்காக விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறிப்பது அநீதி இல்லையா?

2) சிங்ரூர், நந்திகிராமில் டாடாவின் கார் தொழில் செய்ய நிலத்தைப் பறித்த சிபி எம் கட்சி தோற்கடிக்கப்பட்டது.

3) கார்பரேட் முதலாளிகளுக்கு எரிவாயு கொண்டு செல்ல எங்கள் நிலத்தைப் பறிப்பதை ஆதரிக்கும் கனதனவான்களே! அந்த கார்பரேட் கம்பெனியில் பங்கும், வேலையும் வாங்கிக் கொடுக்க முன் வருவீர்களா?

4) உழவர்களுக்கு கல்வியும், மருத்துவமும், குடிநீரும் உங்கள் முதலாளிகள் விலைக்குத்தான் தருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

5) ஹைடெக் மருத்துவமனைக்கு சென்ற எம் மக்கள் பலர் நிலத்தை விற்று பில் கட்டியது உங்களுக்குத் தெரியுமா? மருத்துவம் செய்ய பணம் இல்லாமல் நோய்களால் நொந்து தினம் சாகிறோம்.

6) அறிவு தரும் கல்வியையும் உங்கள் முதலாளிகள் எங்களுக்கு பணம் கொடுத்தால் தான் தருகிறாரகள் என்பதை அறிவீர்களா?

7) குடிநீர் கூட ஒரு லிட்டர் ரூ25 க்கு உங்கள் முதலாளிகள் விற்று கொள்ளை அடிக்கிறார்கள். மாநில அரசு ரூ10 க்கும், மத்திய அரசு ரயிலில் ரூ 15க்கும்தான் உழவர்களாகிய எங்களுக்கு விற்கின்றனர்.

8) நாங்கள் எங்கள் நிலத்தில் போடப்பட்ட சாலையில் சென்றால் சுங்கவரி பிடுங்குவது உங்களுக்குத் தெரியுமா?

எங்களின் சமூகத் தேவைகள் அனைத்தையும் பணம் கொடுத்து வாங்கச் சொல்லும் முதலாளிகளுக்கு நாங்கள் எதற்கு நிலம் கொடுக்க வேண்டும்?

உணவளிக்கும் உழவர்களுக்கு இந்த சேவைகளை முதலாளிகள் பணம் வாங்காமல் செய்யுங்கள் என்று நீங்கள் ஏன் உபதேசம் செய்யவில்லை?

செய்யமாட்டீர்கள்! நாங்கள் ஏழைகள், உழைப்பவர்கள்.

தமிழக அரசு விளை நிலங்களில் எரிவாயுக் குழாய் போட்டால் விவசாயிகளின் வாழ்வும், வாழ்வாதரமும் அழியும் என டெல்லி அரசிற்கு முதல்வரின் 08-02-2016ம் தேதிய கடிதம் மூலம் தெரிவித்து விட்டது.

எனவே எங்கள் நிலத்தில் உள்ள குழாய்களை கெயில் நிறுவனம் எடுத்து நிலத்தை உழுது பயிரிட உதவ வேண்டும்

நான்கு ஆண்டுகளாக வேளாண்மை முடங்கியுள்ளது. எங்கள் நிலத்தில் பயிர்செய்து வாழ்வது எங்கள் உரிமை. இதை கெயில் நிறுவனம் தடுக்கிறது.

உழுது பயிர்வளர்த்து உணவளிக்கும் உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அனைத்து பிரிவு மக்களும் குரல் கொடுங்கள். எங்கள் போராட்டத்திற்கு எல்லாவகையிலும் ஆதரவு கொடுங்கள்.

- தற்சார்பு விவசாயிகள் சங்கம்

Pin It