ஜனநாயகத்தை மறுதலித்து ஆயுதம் ஏந்தும் பயங்கரவாதிகள் ஒரு நாளும் தங்களுடைய தவறுகளுக்காக கண்ணீர் விடுவது கிடையாது. அவர்களைப் பொருத்தவரை தாம் செய்வது தவறு என்று உலகத்திற்குத் தெரிந்திருந்தாலும். தங்கள் கொள்கைகளை அவர்கள் மாற்றிக்கொள்வது கிடையாது. பயங்கரவாதிகளிடம் இருக்கும் அந்த குறைந்தபட்ச நேர்மையைக் கூட, ஜனநாயகத்தை உலகத்திற்கே கற்றுக் கொடுக்க கடவுளால் படைக்கப்பட்ட தேசமான அமெரிக்கா கடைபிடிப்பது இல்லை. உலகம் பூராவும் தனக்கு அடிமைப்பட்டு கிடக்க வேண்டும். அனைத்து நாட்டு பிரதமர்களும், அதிபர்களும் தங்களின் காலில் விழுந்து வணங்க வேண்டும். இந்த உலகில் உள்ள அனைத்து வளங்களும் தனக்கே சொந்தம். தான் தின்றது போக மிச்சம்தான் மற்ற நாட்டு மக்களுக்கு எனக் கருதிவந்த அமெரிக்கா இன்று தனது சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார, கலாச்சார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றது.
கடந்த செவ்வாய்கிழமை அன்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் துப்பாக்கி வன்முறையைக் குறைப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலியான குழந்தைகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார். இந்த செய்தியை நாளிதழ்களில் படித்த பொழுது கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. உலகையே ஆட்டிப் படைக்கும் ஒரு நாட்டின் அதிபர் பொது மேடையில் கண்ணீர்விட்டு அழுகின்றார் என்றால் அதிர்ச்சி ஏற்படாமலா இருக்கும்? தமிழ் சினிமாவில் நாய்கள் அழுவதையும், யானைகள் அழுவதையும் பார்த்தபோதெல்லாம் ஏற்படாத அதிர்ச்சி ஒபாமா அழுதபொழுது ஏற்பட்டது.
இன்று உலகில் பல நாடுகளில் மக்கள் வறுமையில் சாவதற்கும், உள்நாட்டுக் கலவரத்தால் தீப்பற்றி எரிவதற்கும், பல நாடுகளின் அதிபர்கள் படுகொலை செய்யப்பட்டு அந்த நாடுகளில் தனது அடிமைகளை அதிபர்களாக அமர்த்தியதற்கும் காரணமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டை ஆளும் ஒரு அதிபர் அழுகின்றார் என்றால் அது எவ்வளவு பெரிய செய்தி! துப்பாகிச் சூட்டில் பலியான 20 குழந்தைகளுக்காக மனம் வெதும்பி ஒபாமா அழுகின்றார் என்றால், அவர் எவ்வளவு நல்ல மனிதாபிமானம் உள்ள அதிபர். இவரைப் பொய்யாக உலகம் அயோக்கியன், மொள்ளமாரி என்றெல்லாம் சொல்கின்றது!.
ஜார்ஜ் புஷ் என்ற முட்டாளுக்கு அடுத்து பதவியேற்ற ஒபாமா அமெரிக்காவின் மேலாதிக்கம் வெறி பிடித்த முகத்தை நிச்சயம் மாற்றியமைக்கப் போகின்றார் என்று சில முற்போக்கு அறிவுஜீவிகள் சோதிடம் சொன்னார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஒரு அழுவாச்சி அரசியல்வாதி ஓபாமாவைப் பற்றி புத்தகமெல்லாம் எழுதினார். ஆனால் அமெரிக்கா தன்னை ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கும் யாரும் எந்தக் காலத்திலும் யோக்கியன்களாக இருந்தது இல்லை என்பதை ஒபாமா உடனே நிரூபித்தார். அமெரிக்க செவ்வியந்தியர்களின் ரத்தத்திலும், ஆப்பிரிக்க கருப்பு இனத்தவர்களின் ரத்தத்திலும் உருவாக்கப்பட்ட அமெரிக்கா என்ற தேசம் தன்னை எப்போதும் மனித முகத்துடன் வெளிக்காட்டிக் கொண்டது கிடையாது. செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பின் தீவிரவாதத்தை ஒழிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லி ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மீது படையெடுத்து ஏறக்குறைய 2 லட்சத்து 25 ஆயிரம் பேரை கொன்று போட்டிருக்கின்றது. 200 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை அழித்திருக்கின்றது.
பதவியேற்ற உடன் 30000 ராணுவ வீரர்களை ஆப்கானுக்கு அனுப்பி இதுதான்டா அமெரிக்கா என்று காட்டினார் ஒபாமா. அத்தோடு நிற்கவில்லை ஒபாமா என்ற கருப்பின கோமாளியின் கோமாளிதனங்கள் ஈராக்கிலும், சிரியாவிலும் ISIS க்கு எதிராக போர் தொடுக்கப் போகின்றோம் என்ற பெயரில் மீண்டும் மனித வேட்டையைத் தொடங்கியுள்ளார். ஜார்ஜ் புஷ்க்கு ஈராக்கின் மீது படையெடுக்க பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய் தேவைப்பட்டது. அதுவே ஒபாமாவிற்கு ISIS அவ்வளவுதான். உலக எண்ணை வளத்தை தனது பிடிக்குள் வைத்திருக்க இன்னும் எத்தனை லட்சம் மனித உயிர்களை பலியிட்டாலும் அந்த அமெரிக்க கொடிய மிருகத்தின் பசி அடங்குவது கிடையாது.
உலகம்பூராவும் தான் கொள்ளையிட்ட பணத்தில் ஒரு பகுதியை தனது நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்குச் சம்பளமாகக் கொடுத்து அவர்களை மேட்டுக்குடி வர்க்கமாக சுகபோகத்தில் செழுமையாக வாழ வைக்கின்றது ஏகாதிபத்தியத்தியங்கள். அதனால் அந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் இயல்பாகவே ஏகாதிபத்திய ஆதரவு மனநிலையில் இருப்பார்கள். அவர்கள் தான் ஏகாதிபத்தியத்தின் சீரழிவு கலாச்சாரத்தின் பிரதிநிதிகளாகவும் இருப்பார்கள். அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் நுகர்வு வெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் இருப்பதற்கு இதுவே காரணம். அவர்கள் எப்படி கணக்கு வழக்கில்லாமல் நுகர்வது தங்களுடைய உரிமை என்று நினைக்கின்றார்களோ அதேபோல துப்பாக்கிகள் வைத்துக் கொள்வதையும் தங்களுடைய உரிமை என்றே நினைக்கின்றார்கள். எப்படி அமெரிக்கா அரசு தனது தேவைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அடுத்த நாட்டு மக்களை கொல்வது தவறில்லை என்று நினைக்கின்றார்களோ, அதே போல தனது சொந்த நாட்டு மக்களையும் கொல்வது தவறல்ல என்று அமெரிக்கர்கள் நினைக்கின்றார்கள். ஆளும்வர்க்கத்தின் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அந்த நாடுகளில் உள்ள மக்களும் கடைபிடிப்பார்கள் என்பதுதான் உண்மை.ஏனென்றால் தன்னைப்போலவே தனது மக்களை மாற்றாத ஆளும்வர்க்கம் மிக விரைவில் வீழ்ச்சியடையும்.
அமெரிக்காவில் உள்ள 89சதவீதம் மக்கள் துப்பாக்கிகளை வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். அங்கே சிறுவர்கள் துப்பாக்கிகள் வைத்திருக்கக்கூடாது என்ற எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்பதால் அவர்களால் மிக எளிதாக துப்பாக்கிகளை வாங்க முடிகின்றது. அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக நிறைய பயிற்சி நிலையங்கள் அமெரிக்க முழுவதும் உள்ளன. தொடர்ச்சியாக திரைப்படங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவற்றின் மூலம் வன்முறையாளர்களாக வளர்க்கப்படும் அமெரிக்க குழந்தைகள், தான் பார்க்கும் திரைப்படங்களிலும், வீடியோ கேம்ஸ்களிலும் சர்வசாதாரனமாக ரத்தம் தெறிக்கக் கொல்லப்படும் எதிரிகளைப்போலவே தனக்கும் தன்னுடைய எதிரிகளை கொல்வதற்கு உரிமை உண்டு என்று நினைக்கின்றன. விளைவு அவர்களது எதிரிகள் துப்பாக்கிகளுக்கு பலியாகின்றனர்.
எந்த ஒரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண எப்படி அமெரிக்க ஆளும் வர்க்கம் விரும்புவது இல்லையோ அதே போன்ற ஏகாதிபத்திய மனநிலையையே அமெரிக்க குடிமக்களிடமும் இருக்கின்றது. சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக்கூட துப்பாகியைத் தூக்கும் போக்கு அங்கே பெருமளவிற்கு வளர்ந்துவிட்டது. பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தளங்கள் என அனைத்து இடங்களிலும் இந்த வன்முறை அரங்கேற்றப்படுகின்றது. உலகில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அமெரிக்காவில் தான் துப்பாக்கிச் சுட்டிற்கு இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். அமெரிக்காவில் ஒவ்வொரு நாளும் 88 பேர் துப்பாக்கிச் சுட்டிற்குப் பலியாகின்றனர் என்பதில் இருந்தே அதன் தீவிரத்தை நாம் உணரலாம்.
உலகம் பூராவும் தனக்கு வேண்டாத நாடுகளில் உள்நாட்டு கலவரங்களைத் தனது சி.ஐ.ஏ மூலம் தூண்டிவிட்டு அங்கு இருக்கும் அடிமைகளுக்குத் தனது ஆயுதங்களை கொடுத்து தனது சொந்த நாட்டு மக்களைக் கொன்று போடுவதற்கு உதவும் அமெரிக்கா இன்று தன் சொந்த நாட்டு மக்களின் ஆயுதக் கலாச்சாரத்தால் அலங்கோலமாகிக் கிடக்கின்றது. உலகின் ஆயுத விற்பனையில் 20 சதவீத பங்கை தன் பிடிக்குள் அமெரிக்க வைத்திருக்கின்றது. உலகின் 10 முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் அமெரிக்காவில்தான் உள்ளன. உலகில் பல நாடுகளின் மக்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தன்னுடைய துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டு சாவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த அமெரிக்க ஆளும்வர்க்கம் இன்று தன்னுடைய சொந்த நாட்டு மக்களே சுட்டுக்கொண்டு சாகும்போது துடிக்கின்றது.
ஏகாதிபத்தியம் என்பது தான் அடிமைப்படுத்தும் நாடுகளை மட்டும் நாசம் செய்வது கிடையாது. அது தனது சொந்த நாட்டு மக்களையே நாசம் செய்கின்றது என்பதற்கு அமெரிக்காவே சிறந்த உதாரணம். ஆனால் இதில் ஒபாமா போன்ற பாசிஸ்ட்டுகள் கண்ணீர் விடுவதற்கு என்ன இருக்கின்றது என்றுதான் தெரியவில்லை. ஒரு வேளை பாசிஸ்ட்டுகளின் கண்ணீருக்கு வேறு ஏதேனும் அர்த்தம் இருக்குமோ!.
- செ.கார்கி