இப்படி ஒரு அரிய நிகழ்வைத் தமிழக மக்கள் வருடத்திற்கு ஒருமுறை தான் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இதைத் தவற விட்டுவிட்டால் மீண்டும் அடுத்த பொங்கல் வரை காத்திருக்க வேண்டும். திராவிட இயக்கங்களைத் தமிழ்த்தேசிய இயக்கங்களும், ஆரிய பா.ஜ.க-வும் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்க்கின்றன. அதேபோல திராவிட இயக்கங்கள் தமிழ்த்தேசிய இயக்கங்களையும், பா.ஜ.க வையும் ஓட ஓட விரட்டி அடிக்கின்றன. இவர்கள் அனைவரும் தங்களுக்குள் எப்போதும் ‘டூ’ விட்டுக் கொண்டாலும் வருடத்தின் ஒரு முறை அனைவரும் ‘பழம்’ விட்டுக் கொள்வார்கள். அந்த நாள் தான் பொங்கல். அன்றுதான் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். அது தமிழர்களின் வீர விளையாட்டு என்று சொல்லப்படுவதால் நிச்சயம் அதை ஒவ்வொரு தமிழனும் ஆதரிக்க வேண்டும், இல்லை என்றால் அவ்வளவுதான்!.
ஒரு படத்தில் வடிவேலு “யார் யார் பொண்டாட்டி பத்தினியோ அவர்கள் கண்ணுக்குத்தான் கடவுள் தெரிவார்” என்பார். உடனே அனைவரும் எங்கே கடவுள் தெரியவில்லை என்று சொன்னால் தங்கள் பொண்டாட்டியைத் தவறாக நினைத்து விடுவார்களோ என்று பயந்து, அனைவரும் கடவுள் தமக்கும் தெரிவதாக கையெடுத்துக் கும்பிடுவார்கள். இதே காமெடிதான் இந்த ஜல்லிக்கட்டை ஆதரிப்பதிலும் நடக்கின்றது. எங்கே ஜல்லிக்கட்டை ஆதரிக்கவில்லை என்றால் தம்மைத் தமிழனே கிடையாது என்று சொல்லி விடுவார்களோ, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதிக்கசாதி ஓட்டுகள் கிடைக்காதோ, எனப் பயந்து அனைவரும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றனர்.
தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பது எப்போதுமே ஆதிக்க சாதிகளுடன் தொடர்புடையது என்பதும், அந்த ஜல்லிக்கட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் காளையை அடக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் ஊரறிந்த உண்மை. அங்கே தலித்துகளுக்கு என்ன வேலை என்றால் வழக்கம் போல பறையடிக்கும் வேலைதான். எப்படி கோவில் திருவிழாக்களிலும், இழவு வீடுகளிலும் தலித்துகள் பறையடிக்க அனுமதிக்கப்படுகின்றார்களோ அதே போலத்தான் ஜல்லிக்கட்டிலும் அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆதிக்கசாதி ஆண்கள் குடித்துவிட்டு ஆட்டம் போடுவதற்கு கோவில் திருவிழாவிலும், இழவு வீடுகளிலும் பறை தேவைப்படுவதைப்போல, வாடிவாசலில் இருந்து காளைகளை மிரட்டி வெளியேற்ற இந்தப் பறை அடிக்கப்படுகின்றது. இதற்காக அவர்களுக்கு ஒரு துண்டு தரப்படும். இப்படியொரு முதல் மரியாதையை எதிர்பார்த்துதான் அவர்கள் பறையடிக்கின்றார்கள். மற்றபடி தலித்துகளுக்கு அங்கே தரப்படும் மரியாதை என்பது தமிழகம் முழுவதும் ஆதிக்கசாதிகள் தரும் அதே மரியாதைதான்.
தென்மாவட்டங்களில் நடைபெறும் பல சாதிக் கலவரங்களுக்கு இந்த ஜல்லிக்கட்டும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது. தங்கள் சாதிக்காரன் வளர்த்த காளையை வேற்றுசாதி ஆண்கள் அடக்கிவிட்டால் அவ்வளவுதான், அன்று நிச்சயம் சாதிக் கலவரம் ஏற்படாமல் இருக்காது. ஜல்லிகட்டு முழுக்க முழுக்க தென்மாவட்டங்களில் புரையோடிப்போய் இருக்கும் சாதிய மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நடைபெறுகின்றது. ஜல்லிக்கட்டில் பங்கெடுக்கும் காளைகளின் உடல்வாகைப் பார்த்தாலே தெரியும், அதை வளர்ப்பதற்கு ஆகும் பொருளாதார செலவை. இப்படி பெரும் பொருட்செலவில் காளைகளை வளர்க்கும் சக்தி நிச்சயம் சாமானிய மக்களிடம் கிடையாது என்பதுதான் உண்மை.
காளைகளை வளர்த்து அதைக் களத்தில் இறக்கி அடுத்தவனின் வீரத்திற்குச் சவால் விடுவது என்பது ஒரு ஆதிக்கசாதி மனோபாவம். நிலப் பிரபுத்துவத்தின் கொடூர சாதிய மேலாண்மையின் எச்சம் ஆகும்.”சிரம் அறுத்தல் வேந்தருக்கு பொழுது போக்கும் இனிய கலை, ஆனால் நமக்கோ அதெல்லாம் உயிரின் வாதை” என்பார் பாரதிதாசன். அதே போல ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள காளைகளை அனுப்பும் பண்ணையார்கள், மிட்டாமிராசுகள் என யாரும் நேரடியாக களத்தில் இறங்கி காளைகளை அடக்குவது இல்லை. இந்தப் பணக்காரக் கோழைகள் எல்லாம் மேடையில் நின்றுகொண்டு அடுத்தவன் குத்துபட்டு குடல்சரிந்து சாவதை குரூர மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்து ரசிக்க மட்டுமே செய்வார்கள். ஆனால் சாமானிய உழைக்கும் மக்கள் வெற்று வீர உணர்வில் ஏறுதழுவப் போய் கொடூரமாக மரணத்தைத் தழுவுகின்றனர்.
இதில் என்ன வீரம் இருக்கின்றது. பண்பாடு என்ற பெயரில் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் தேவதாசி முறையையும், குலக்கல்வி முறையையும் ஏற்றுக்கொள்ள நமக்குச் சம்மதமா? பிற்போக்குத் தனங்களுக்கு முற்போக்காக அறிவியல் விளக்கம் தந்து சாமானிய மக்களை மூடநம்பிக்கையிலும், மதநம்பிக்கையிலும், சாதிய நம்பிக்கையிலும் மூழ்கடிக்கும் பார்ப்பனக் கூட்டத்திற்கும், சுயமரியாதை பாரம்பரியத்தில் வந்த நமக்கும் என்ன வித்தியாசம்?
இன்றி ஜல்லிக்காட்டுக்கு அனுமதி கொடுக்காவிட்டால் அலங்காநல்லுரிலேயே போய் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லும் மு.க. ஸ்டாலின் தன்னுடைய மகனை அதில் கலந்துகொள்ள அனுப்புவாரா? ஜல்லிக்கட்டை நடத்தாமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு கொலை வெறியோடு அலையும் சீமான் உட்பட தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும் உண்மையில் வீரர்களாய் இருந்தால் வாடிவாசலில் இருந்து சீறிவரும் காளைகளை அடக்க நாளை களத்தில் நிற்பேன் என்று உறுதி கொடுப்பார்களா? இன்று இதற்காக குரல்கொடுக்கும் ஒருவரைக்கூட நாளை (ஒருவேளை அனுமதி கிடைக்கும் பட்சத்தில்) வாடிவாசல் பக்கம் நிச்சயம் உங்களால் பார்க்க முடியாது. யாரவது முறைத்துப் பார்த்தாலே குலை நடுங்கிப்போகும் இவர்கள் தான் அடுத்தவனைத் தூண்டிவிட்டு அவன் வீட்டில் இழவு விழுவதற்கு வழிசெய்கின்றார்கள்.
நாடே பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், படித்து முடித்து, கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தெருத்தெருவாய் சுற்றிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் உங்களின் கோபமும், வீரமும் உண்மையில் எங்கு காட்டப்பட வேண்டுமோ அங்கு காட்டப்பட வேண்டும். உங்களது மரணம் என்பது ஒரு பகத்சிங்கைப்போல ,ஒரு திப்பு சுல்தானைப்போல மதிப்புமிக்கதாக இருக்க வேண்டும். ஒரு அறிவற்ற மிருகத்தை அடக்கப் போய் குடல் சரிந்து அவமானகரமான முறையில் சாவதாக இருக்கக் கூடாது.
‘இல்லை.. என்னால் வீரத்தை உடனே வெளிக் காட்டாமல் இருக்கமுடியாது’ என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கின்றது. மதுரையையே அழித்து, கிரானைட் கொள்ளை அடித்தானே பி.ஆர்.பி, அவனிடம் பணம் வாங்கிக்கொண்டு அவனை இத்தனை ஆண்டுகாலம் கொள்ளை அடிக்க அனுமதி கொடுத்தார்களே தி.மு.க மற்றும் அ.தி.மு.க அவர்களை ஒழித்துக்கட்ட உங்களது வீரத்தைக் காட்டுங்கள். கார்பைட் மண்ணை வரைமுறையின்றி தோண்டி எடுத்து கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட வைகுண்டராஜன், அவனுக்கு ஒத்தூதும் சீமான் ஆகியோரிடம் உங்களது வீரத்தைக் காட்டுங்கள். உங்களுக்கு எல்லாம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றேன் என்று சொல்லி பிரதமராக வந்துவிட்டு இன்று இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக் கொண்டு இந்தியாவையே பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டு இருக்கின்றாரே மோடி, அவரிடம் சென்று உங்களின் வீரத்தைக் காட்டுங்கள். அதை விட்டுவிட்டு கொலை வெறிபிடித்த, வக்கிரமான ரசனைகொண்ட பணக்கார சாதிவெறியர்களுக்காக உங்களது மதிப்புமிக்க உயிரை ஏன் பணயம் வைக்கின்றீர்கள்? யோசித்துப் பாருங்கள் தோழர்களே!
- செ.கார்கி