1) கூடன்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில், 2,27,000 மக்கள் மீது போடப்பட்ட 380 வழக்குகளில், 248 வழக்கை மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு இதுவரை திரும்பப் பெற்று உள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் 132 வழக்குகளில் ஒரு லட்சம்(1,00,000) மக்கள் மீது வழக்கு உள்ளது.

இப்போது தமிழக அரசு திரும்பப் பெறாமல் உள்ள 132 வழக்கில், போராட்டக் குழுத் தலைவர்களான எங்கள் மீது கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளும் உள்ளது.

132 வழக்குகளும்....

- தேச துரோகம் (இதச பிரிவு-124-ஏ)

- அரசுக்கு எதிரான யுத்தம்((இதச பிரிவு-121)

- வெடிகுண்டு வீசிய வழக்கு

- பொது சொத்துகளுக்கு சேதாரம்

- கொலைமுயற்சி

- இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது

என்ற மிக மிக கடுமையான பிரிவுகளில் உள்ளது.

இதை உடனே திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும்…

2) போராட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கூட ஒரு வழக்கிற்கு கூட இதுவரை குற்றப்பத்திரிக்கை கொடுத்து, தமிழக அரசு வழக்கை நடத்தவில்லை. போராட்டத்தை முன் நின்று நடத்திய எங்களைப் போன்ற போராட்டத் தலைவர்கள் யாருக்கும் சம்மன் கொடுக்காமல், மக்களுக்கு மட்டும் ஒருவருக்கு 10 வழக்கு வரை சம்மன் என 2000 பேருக்கு சம்மன் தயாரித்து, அதில் 400 பேருக்கு மட்டும் சம்மன் கொடுத்து, மக்களை நீதிமன்றத்தில் வாய்தா, வாய்தா என தமிழக அரசு மக்களை கடந்த 5 மாதமாக அலைய வைத்து வருகிறது. இப்படி செய்வதை தமிழக அரசு உடனே கைவிடக் கோரியும்…

3). கூடன்குளத்தில் முதல் அணு உலையில் இருந்து கடந்த மாதம் அணுக்கழிவு வெளியே எடுக்கப்பட்டு உள்ளது. கடுமையான கதிர்வீச்சுத் தன்மையுள்ள 48,000 ஆண்டுகள் வைத்து அரசு மிக கவனமாக பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவு, இங்கு கூடங்குளம் அணுஉலை வளாகத்திலேயே தற்போது வைக்கப்பட்டு உள்ளது.

அணுக்கழிவின் கடும் பாதிப்புக்கு அஞ்சியே கர்நாடக அரசும், பாஜக-காங்கிரசு-அஇஅதிமுக-சிபிஎம் போன்ற அரசியல் கட்சிகளும், கர்நாடக மக்களும் கோலார் தங்கவயல் உட்பட கர்நாடகத்தில் எங்கேயும் இதை வைக்க விட மாட்டோம் என ஒன்றுபட்டு போராடி, கர்நாடகத்தில் இருந்து இரண்டே நாளில் இதை விரட்டி அடித்தனர்.

ஆனால் தமிழகத்தில் ஆளும் அஇஅதிமுக, ஆண்ட திமுக உட்பட யாரும் கூடன்குளம் அணுக்கழிவு இங்கு வைத்துள்ளதைப் பற்றி இதுவரை வாய் திறந்து கூட எதுவும் பேசவில்லை. கூடன்குளம் அணு உலையில் வெளி வந்துள்ள அணுக்கழிவை, கூடன்குளம் உட்பட தமிழகத்தில் எங்கும் வைக்காதே என அரசை வலியுறுத்தியும்…

4). கூடன்குளத்தில் அணு உலையை சுற்றியுள்ள பகுதியில், குறிப்பாக இடிந்தகரை– கூடன்குளம் – பஞ்சல் – கூத்தன்குழி – பெருமணல் – கூட்டப்புளி கடற்கரைப் பகுதியில், தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதாவின் பங்குதாரர் என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வைகுண்டராசன் அவர்களின் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு, தாதுமணல் அள்ள 30 ஆண்டுகளுக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் (AERB) சட்டத்திற்கு விரோதமாக, சுமார் 300 ஹெக்டேர் (சுமார் 756 ஏக்கர்) நிலத்தை 12-08-2011 அன்று வழங்கிய தமிழக அரசின் அனுமதியை உடனே ரத்து செய்யக் கோரியும்…

5). அணு உலை அமைப்பதில் இந்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களிலேயே மேலும் அணு உலைகளை அமைப்பது என இந்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி கூடன்குளத்தில் 3,4,5,6 எனத் தொடர்ந்து இந்திய அரசு அணு உலைப் பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளதை கைவிடக் கோரி தமிழக அரசு அழுத்தம் கொடுக்க கோரியும்…

அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவனாக 2011 முதல் தொடர்ந்து செயல்பட்டு வரும் நான், தேச துரோகம் (IPC124-A), அரசுக்கு எதிரான யுத்தம் (IPC121), வெடிகுண்டு வீசுதல், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுதல் என எங்கள் மீது தமிழக அரசால் போடப்பட்டு, இதுவரை கைது செய்யாமல் உள்ள பொய் வழக்குகளுக்காக (ஏற்கனவே 6 தேசத் துரோக வழக்குகளில் நான் 2012-இல் கைது செய்யப்பட்டேன்) திருச்சி நீதிமன்றத்தில் நாளை (23-12-2015) புதன்கிழமை அன்று முகிலனாகிய நான் சரணடைய இருக்கிறேன்.

போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் சிறைக்கு செல்வதன் மூலம் மட்டுமே மக்களுக்கு தற்போது வந்துள்ள நெருக்கடியை ஓரளவாவது குறைக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இப்போது நான் சரணடைவதின் மூலம் தமிழக அரசின் பொய்வழக்கு பற்றியும், கூடன்குளம் அணு உலையில் வெளி வந்துள்ள அணுக்கழிவை பற்றியும் நாடெங்கும் மக்களிடம்- அரசியல் இயக்கங்களிடம் இதை ஒரு விவாதப் பொருளாக மாற்ற முடியும். 2016-ஏப்ரல் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக இதை எதிர்கொள்வது மட்டுமே (சட்ட ரீதியாக அல்ல) சரியானதாக இருக்க முடியும் என்பது எனது தீர்மானகரமான கருத்து ஆகும்.

இந்த முடிவின் அடிப்படையிலேயே நான் மட்டும் 132 வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் சரணடைய இருக்கிறேன்.

இது ஒரு நீண்ட சிறைவாசமாக இருப்பதும், இல்லாது இருப்பதும் தமிழக அரசின் கையில்தான் அதன் நடவடிக்கையில் உள்ளது...

நமது தாய்மண்ணையும் - கடலையும்- நாட்டையும் காக்கப் போரடிய ஒரு லட்சம் மக்கள் மீது உள்ள கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் போடப்பட்டு உள்ள 132 வழக்கையும் தமிழக அரசு திரும்ப பெறும் வரை நமது நீதிக்கான போராட்டம் ஒயாது, தொடரும்.

- முகிலன், போராட்டக் குழு, கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு

Pin It