காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், இறுதி தீர்ப்பையும் மதித்து செயல்பட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகும் சட்டப்பூர்வமாக அரசு ஏற்பை அறிவிக்க, அரசிதழில் அதை வெளியிடுவதற்கும் கர்நாடக அரசு எதிர்த்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அரசிதழில் பதிவானது. இதற்குப் பிறகு தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் ஆட்சி யானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் பொறுப்பைத் தட்டிக் கழித்தே வருகின்றன. இதனால் ஒவ்வொரு முறையும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்திடம் முறையிட வேண்டி யிருக்கிறது.

இப்போது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 5ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. கன்னடர்கள் கலவரத்தில் இறங்கினார்கள், கர்நாடக அரசு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. உச்சநீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில் அடங்கிய வாசகங்கள் உச்சநீதிமன்றத்தை மிரட்டுவதாகவே இருந்தன.

கன்னடர்கள் பெரும் இரகளையில் ஈடுபடுவார்கள் என்று கருநாடக அரசே மனுவில் கூறியிருந்ததை உச்சநீதிமன்றம் விரும்ப வில்லை. கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீரை செப்டம்பர் 20ஆம் தேதி வரை திறந்துவிட உத்தரவிட்டது. வன்முறை சம்பவங்களை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்பாகக் கூறி விட்டது.

முகநூலில் தனது கருத்துகளைப் பதிவிட்ட ஒரு தமிழ் இளைஞரைப் பிடித்து வந்து கன்னடர்கள் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங் களில் வெளி வந்தன. உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது உத்தரவுக்குப் பிறகு, தமிழகத்தின் பதிவு பெற்ற 90க்கும் மேற்பட்ட வாகனங்களை எரித்து கன்னடர்கள் காலித்தனத்தில் இறங்கியுள்ளனர். இதற்கு தமிழ் நாட்டிலும் எதிர்வினைகள் நடக்கின்றன.

இந்தப் பிரச்சினையை ‘உணர்வுகளின் வடிகாலுக்கு வழி தேடுதல்’ என்பதையும் தாண்டி அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவதே சரியான பாதையாக இருக்க முடியும். பல்வேறு நாடு களுக்கிடையே ஓடும் நதிகளின் நீர் பங்கீட்டுப் பிரச்சினைகளை நாடுகள் சுமூகமாக தீர்த்துக் கொண்டிருக்கின்றன. தனித்தனி நாடுகளே நதிநீர் பங்கீட்டில் சுமூகமாக உடன்பாடு காணும் நிலையில் ஒரே இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலங்களுக்குள் மட்டும் இது முரண்பாடாக வெடிப்பது ஏன்? ஒன்றுபட்ட இந்தியாவை ஆட்சி செய்ய முன் வரும் இந்திய தேசிய ஆட்சிகளால் ஏன் இதைத் தீர்த்து வைக்க முடியவில்லை? இதுதான் அடிப்படையான கேள்வி.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் அவர்களுக்கான தனித்தன்மை உரிமைகளோடு இயங்கும் நிலை வந்து விட்டால் இந்த முரண்பாடுகளை சரி செய்ய முடியும். எனவே தேசங்களுக்கான தன்னாட்சி முறை பற்றி பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது சர்வதேச நதி நீர் ஒப்பந்தங்களுக்கே எதிரானதாகும். ஒரு நதி எங்கே உற்பத்தியாகிறது என்பதைவிட அந்த நதி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் பகுதிகளுக்கே முன்னுரிமை தரப்படவேண்டும் என்றே சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. நடுவர் மன்றமும் முழுமை யான நீதியை தமிழகத்துக்கு வழங்காவிட்டாலும் ஓரளவு நீதியை உறுதிப்படுத்தியிருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளும் அதே கண்ணோட் டத்தில்தான் பிறப்பிக்கப்படுகின்றன. கன்னடர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மறுத்தால் உச்சநீதிமன்றத்தைத் தான் எதிர்க்க வேண்டுமே தவிர, தமிழர்கள் மீது ஏன் கோழைத்தனமாக தாக்குதலை நடத்த வேண்டும்?

‘தேச ஒருமைப்பாடு’, ‘தேச பக்தி’, ‘இந்துக்களின் தேசம்’ என்று கூப்பாடு போடும் தேச பக்தர்கள், காவிரிப் பிரச்சினையில் கன்னடத்தின் இந்த வன்முறைகளுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? இதில் முதன்மையான முரண்பாடாக இருப்பது ‘இந்தியா’ ஒரே தேசம் என்ற அரசியலமைப்பு முறை தான். எனவே, தன்னாட்சி உரிமை பெற்ற தேசங்களாக மாறும்போது தான் காவிரிப் பிரச்சினையிலிருந்து கல்வி உரிமை பிரச்சினை வரை தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கும். இந்த மாற்றம் குறித்து மனம் திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

Pin It