கடந்த வருடம் பிப்ரவரி 9 அன்று நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட அஃப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அஃப்சல் குரு மீது, எந்தவித குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. மக்களின் கூட்டு மனசாட்சியின்படியே “மரண தண்டனை” வழங்கப்படுகிறது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு, இந்தியாவில் நீதியை விரும்பக்கூடிய மக்களின் மீது விழுந்த அடியாக மாறியது.

நாடாளுமன்ற தாக்குதலின் பின்னணியில் உள்ள விடை தெரியாத கேள்விகள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றது. அதேப்போன்று, அஃப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில் முறையான சட்ட வரம்புகள் பின்பற்றப்படவில்லை என்பதும், ஒரு வருடத்தை தொட்டு நிற்கும் இந்த தருணத்தில் அதைப்பற்றி அலச வேண்டிய தருணத்தில், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் இருக்கின்றோம்.

பாரதிய ஜனதா ஆட்சியில் இருந்தபோது, 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலின் பின்னணியில், பாரதிய ஜனதாவின் அப்பட்டமான அரசியல் இருக்கின்றது என்பதை, அரசியல் ஆய்வாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

பாரதிய ஜனதாவிற்கு பிரச்சனை வரும்போதெல்லாம், இந்தியாவில் ஏதாவது ஒரு நிகழ்வுகள் நடப்பது என்பது, எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதேபோன்றதொரு சூழலில்தான் 2001 அன்று நாடாளுமன்றத் தாக்குதலும் நடைபெற்றது. இந்த தாக்குதல் நடைபெற்று முடிந்த பிறகு, பி.ஜே.பி.யின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் மறைக்கப்பட்டது என்பதுதான் உண்மையான விஷயம்.

அப்பொழுது நாட்டையே உலுக்கிய கொண்டிருந்த கார்கில் போரில் உயிரிழந்தவர்களுக்கு, சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்தது தொடர்பாக பாரதிய ஜனதாவின் வண்டவாளம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருந்தது. இது தொடர்பான விவாதம்தான் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போதைய எதிர்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பி கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படுகின்றது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவவி சோனியா காந்தி நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறுகின்றார்.

அதன் பிறகுதான் 11.40 மணியளவில் அந்தத் தாக்குதல் நடைபெறுகின்றது. ஒரு நாட்டின் உயர்மன்றமாக கருதப்படும் நாடாளுமன்றத்தை, தீவிரவாதிகள் பலத்த பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடத்துகின்றனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் அம்பாசிடரில் வந்த ஐந்து நபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர். பாதுகாப்பு பணியில் இருந்து இராணுவத்தினர் சுட்டதில் ஐந்து பேரும் உயிரிழக்கின்றனர். இந்த நிகழ்வு ஒட்டு மொத்த உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஊடகங்களும், மீடியாக்களும் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கின்றது. ஏனென்றால், நமக்கு இரை கிடைத்து விட்டது அல்லவா? பாரதிய ஜனதா கட்சியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

ஏனென்றால், அப்பொழுது ஒட்டுமொத்த உலகமுமே நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் தான் மனதில் பதிந்தது. பாரதிய ஜனதாவின் சவப்பெட்டி ஊழல் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது. ஊடகங்களும், மீடியாக்களும் ‘சவப்பெட்டியை (சவப்பெட்டி ஊழலை) மறந்து ‘நாடாளுமன்றத்தை’ (நாடாளுமன்ற தாக்குதலை) கையில் எடுக்கின்றனர். பாரதிய ஜனதாவின் சவப்பெட்டி ஊழல் ஒட்டுமொத்த மக்களின் பார்வைக்கும் சென்று, அவர்களுடைய முகமூடி கிழிக்கப்படும் தருணத்தில், இந்த நிகழ்வு அவர்களின் ஊழலை மறைத்துவிட்டது.

இந்த, தாக்குதல் உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நிறைவேற்றினார்களா? அல்லது வேறும் யாரும் நிறைவேற்றினார்களா? என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏன்? என்றால் நம்முடைய நாடாளுமன்றம் அவ்வளவு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. ஐந்து அடுக்கு பாதுகாப்புள்ள நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் எவ்வாறு நுழைந்தனர் என்ற கேள்வியும் பொது மக்களிடம் எழுந்தது உண்மைதான்.

டிசம்பர் 13,2001 அன்று நடந்த அந்தத் தாக்குதலில் எட்டு பாதுகாப்பு படை வீரர்களும், ஒரு தோட்டக்காரரும் இறந்தனர். தாக்க வந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். வழக்கம்போல், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான் என்று காவல்துறையும் உளவுத்துறையும் கூறியது.

இதில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இத்துடன், காஷ்மீரைச் சேர்ந்த மூவர் எஸ்.ஏ. ஆர். ஜிலானி, ஷவுகத் ஹுஸைன் குரு, முகமது அஃப்சல் குரு, ஷவுகத்தின் மனைவி அப்சான் குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பொடா வழக்குகளை நடத்துவதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட சிறப்பு துரித விசாரணை நீதிமன்றத்தில், தில்லி காவல்துறை தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. நீதிமன்றம் கிலானி, ஷவுகத் மற்றும் அப்சலுக்கு மரண தண்டனையை தீர்ப்பளித்தது. அப்சான் குருவுக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை. உயர்நீதிமன்றம் கிலானியையும் அப்சானையும் குற்றமற்றவர் என விடுதலை செய்தது. ஆனால், ஷவுகத் மற்றும் அப்சலின் தண்டனையை மறு ஊர்ஜிதம் செய்தது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பிலும் இருவரையும் விடுதலை செய்து, ஷவுகத்தின் தண்டனையை குறைத்து பத்து ஆண்டுகள் கடுங்காவல் தீர்ப்பளித்தது. இருப்பினும் முகமது அப்சலின் தண்டனையை இன்னும் மெருகேற்றியது. அவருக்கு மூன்று ஆயுள் தண்டனையும், இருமுறை மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் ஆகஸ்ட் 4, 2005 தீர்ப்பு மிக தெளிவாக கூறுகிறது. முகம்மது அஃப்சல் குரு ஒரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் அல்லது வேறு நிறுவனங்களில் இருந்தவர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மேலும், வழக்கமான சதித்திட்டங்களை போல இந்த வழக்கிலும் கிரிமினல் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான அல்லது தொடர்புபடுத்துவதற்கான நேரடி ஆதாரங்கள், தடயங்கள் ஏதும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில் அஃப்சல் குரு நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதற்கான எந்த நேரடி சாட்சியங்களும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மக்களின் கூட்டுமனசாட்சியின்படியே நீதிமன்றம் அஃப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை வழங்கியது.

நீதிமன்றம் இந்த தாக்குதலுக்கு பின்புள்ள முழு பின்னணியைப்பற்றியும் ஆராயவில்லை. நீதிமன்றம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட முக்கியமான தடயங்களை விசாரிக்க மறுத்து விட்டது. அதை விசாரித்திருந்தால் உண்மையான தகவல்கள் வெளிவந்திருக்கும். அதேப்போன்று, அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பின்னணியும், அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் மர்மமாகவே இருந்து வருகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக சமூக ஆர்வலரும், மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய் அவர்கள் எழுப்பி கேள்விகளுக்கு அப்போதிருந்த பா.ஜ.க. விடம் இருந்தும், தற்போது ஆட்சியில் இருந்து வரும் காங்கிரசிடமிருந்தும் எந்தப் பதிலும் இல்லை.

அந்தக் கேள்விகள் மறுபடியும் நம்முடைய நினைவுக்கு கொண்டு வருவோம்:

கேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசம்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கப்பட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது?

கேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்ஏமுகம்மது மற்றும் லஷ்கர்இதொய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சி.பி.ஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது?

கேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங்கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது? அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர்? அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்? அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கப்படவில்லை? இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை?

கேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பயவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது?

கேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்திரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்சநீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது?

கேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா?

கேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது? இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள்? கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தம் எத்தனை ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள்? தொடர் ராணுவ வாகனங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள்? இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது?

கேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது? கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பத்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13ஐயும் இணைத்தது?

கேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (குகூஊ ஒஓ) தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பல் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்?

கேள்வி 10 : லஷ்கர்இதொய்பா, ஜைஸ்ஏமுகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க குகூஊன் நேரடி தொடர்பில், கண்காணிப்பல் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா?

கேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் குகூஊல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 12 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லஷ்கர்இதொய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்ததாகவும், கைது செய்தவுடன் முகமதை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரங்களையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்?

கேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை?

இப்படி புதைந்து கிடக்கும் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்காமல் காங்கிரஸ் அரசு அஃப்சல் குருவை, பிப்ரவரி 9, 2013 அன்று டெல்லியில் உள்ள திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றியது. பிப்ரவரி 3 அன்று இவரின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது எனவும், அதனைத் தொடர்ந்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது எனவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. இவரின் தூக்குத் தண்டனையில் கூட அரசு ஒரு முழுமையான நீதியை பின்பற்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

சி.பி.ஐ. ஒத்துழைப்புடன் மும்பையில் சட்ட அறக்கட்டளை ஒன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் சனிக்கிழமை (9.02.2014) பங்கேற்று தலைமை நீதிபதி ப. சதாசிவம் அவர்கள் பேசியதாவது, கருணை மனுக்கள் மீது பரிசீலித்து முடிவு எடுப்பது பற்றியும் மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிகளை வகுத்துள்ளது.

இந்த நியதிகளின்படி கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை மரண தண்டனை குற்றவாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். தூக்கிலிடப்படுவதற்கு முன் குடும்ப உறுப்பினர்களை அவர் சந்திக்க வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது என்றார். (பார்க்க: 9.02.2014 தி இந்து தமிழ் நாளிதழ்)

ஆனால், அஃப்சல் குருவின் தூக்கில் இந்த நடைமுறைகள் எதையும் பின்பற்றப்படவில்லை. அவரின் குடும்பத்திற்கு கூட தகவல் தெரிவிக்கப்படாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகின்ற செய்தியும், அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய குடும்பத்திற்கு இந்த தகவல் ஸ்பீட் போஸ்ட்டில் தான் அனுப்பப்பட்டுள்ளது. அவருடைய குடும்பம் முன்வைத்த கோரிக்கையான, அவரின் உடலையாவது எங்களிடம் ஒப்படையுங்கள் என்ற வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது.

இப்படி, ஒட்டுமொத்தமாக அரசும், நீதித்துறையும் அஃப்சல் குருவுக்கும், அவரின் குடும்பத்துக்கும் துரோகம் இழைத்தது. தூக்கு தண்டனை கைதிக்குக்கூட, இந்த அரசு முறையான வழிமுறைகளை பின்பற்றாது என்பதை நிரூபித்து விட்டது. சட்டங்களை அரசுகளே மதிக்காமல் போகும்போது, சாமான்ய மக்கள் அதை பின்பற்றவில்லை என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கின்றது.

ஒரு வருடத்தை தொட்டு நிற்கும் அஃப்சல் குருவின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட இத்தருணத்தில், நாடாளுமன்ற தாக்குதல் பின்னாலுள்ள அரசியல், பாரதிய ஜனதாவின் சதி செயல், ஆளும் காங்கிரஸின் மறைக்கப்பட்டு வரும் உண்மைகள் என்று முழு தகவலும் வெளிவராமல் மறைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. அஃப்சல் குருவை தூக்கிலிட்டதன் மூலம், உண்மை குற்றவாளிகள் தப்பித்து விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். ஒரு நாள் வரும் நாடாளுமன்றத் தாக்குதல் பின்னணியில் உள்ள உண்மைக் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள். அப்பொழுது, அஃப்சல் குருவின் தூக்கில் மரணித்த நீதி, மீண்டும் எழுப்பப்படும்.

Pin It