மாண்புநிறை தமிழக சட்டமன்றத்தின் எட்டாவது கூட்டத்தொடர் துவங்குகிற தியாகிகள் தினமாம் சனவரி 30-ம் நாள், தமிழக அரசிடமும் மற்றும் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நீதி கேட்கும் விதத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்காரர்கள் சிலர் கீழ்க்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தின் 900-வது நாளான சனவரி 31, 2014 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவங்குகிறோம்:
 
[1] கூடங்குளம் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

[2] தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும், ஊழல்கள் மலிந்திருக்கும், குளறுபடிகள் நிறைந்திருக்கும், நம்பகத்தன்மையற்ற முதலிரண்டு அணுஉலைகளின் முழுமையான, உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகளால் பரிசோதித்து, உச்சநீதிமன்றம் தெரிவித்த 15-அம்ச பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றனவா எனும் தகவல்களை மக்களிடம் முழுமையாகச் சொல்ல வேண்டும். எங்கள் குற்றச்சாட்டுக்கள் உண்மையென்று தெரியும்போது, 1-2 உலைகளை இழுத்து மூடவேண்டும்.
 
[3] மத்தியத் தகவல் ஆணையம் பணித்திருப்பது போல, கூடங்குளம் அணுஉலைகள் சம்பந்தமான தல ஆய்வறிக்கை (Site Evaluation Report), பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report), பேரிடர் தயாரிப்பு அறிக்கை (Emergency Preparedness Report), விவிஇஆர்--ரக அணுஉலை செயல்திறன் அறிக்கை (VVER Reactors Performance Report) போன்றவற்றை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
[4] மீனவர்கள், விவசாயிகள் போன்றோரின் பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் வாழ்வாதார இழப்பு போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் ஏற்பாடுகள் பற்றி முழுமையானத் தகவல்களைச் சொல்ல வேண்டும்.
 
[5] இரண்டு லட்சத்து இருபத்தேழாயிரம் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் 360 பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

தென் தமிழகத்தைச் சார்ந்த லட்சக்கணக்கான மக்களும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராளிகளும் கடந்த 900 நாட்களாக கூடங்குளம் அணுஉலைக்கு எதிரானப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை மத்திய அரசோ, பெரிய அரசியல் கட்சிகளோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை, ஏனென்றும் கேட்கவில்லை. முதலில் எங்களை ஆதரித்த தமிழக அரசு பின்னர் தனது நிலையை மாற்றிக் கொண்டது. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்ற தமிழக முதல்வர் பின்னர் நாங்கள் “மாயவலை” விரிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
 
கடந்த 2011 செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து, மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ஹரிப்பூர் அணுமின் நிலையத்தை வேண்டாம் என்று சொல்வது போல நீங்களும் சொல்லுங்களேன் என்று கேட்டுக் கொண்டோம். அப்போது தமிழக முதல்வர் “அந்தத் திட்டம் துவக்க நிலையில் இருப்பதால் அவரால் அப்படி கேட்டுக் கொள்ள முடிகிறது; ஆனால் கூடங்குளம் திட்டம் முடியும் தருவாயில் இருக்கிறதே” என்று சொன்னார். கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, இடமும் தேர்ந்தெடுத்து விட்டோம் என்று அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு இதுவரை அந்த அறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையும் புரியாமல் தவிர்த்து வருகிறது. எங்கள் மீது சுமார் 360 கடுமையான பொய் வழக்குகளை சுமத்தி எங்களை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கேட்டுக்கொண்ட பிறகும், எங்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவில்லை.
 
தி.மு.க. அணுசக்தியை, அணுசக்தித் திட்டங்களை பெரிதும் ஆதரித்து வருகிறது. கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலாரில் புதைக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போராடிய காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.ஐ. போன்ற தேசியக் கட்சிகள் கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றி, தமிழர் நலம் பற்றி கவலைப்படவேயில்லை. அமெரிக்க, பிரான்சு நாட்டு அணுஉலைகளை வரிந்துக்கட்டிக் கொண்டு எதிர்க்கும் சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடங்குளம் அணுசக்தித் திட்டத்தை ஆதரிக்கின்றன. கூடங்குளத்தில் 3 & 4 அணுஉலைகள் வருவதை எதிர்ப்போம் என்றவர்கள் தற்போது அதுகுறித்து அமைதிகாத்து வருகின்றனர்.
 
அ.தி.மு.க. அரசும், காங்கிரசு அரசும், பிற பெரியக் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில், எங்களோடு கைகோர்த்துப் போராடிய ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க., ம.ம.க. போன்ற கட்சிகளும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால், கூடங்குளம் பிரச்சினை பற்றிப் பேசாமல் இருக்கின்றன.
 
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழக அரசும், ஆளும் கட்சியும், தமிழகத்தில் இயங்கும் பிற அரசியல் கட்சிகளும் போராடும் மக்களின் கோரிக்கைகளை ஆதரித்து, அவற்றை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் செயல்படும் அணுஉலை எதிர்ப்பு இயக்கங்கள், தத்தம் வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற ஆங்காங்கேப் போராடிக் கொண்டிருக்கும் போராளிக் குழுக்கள், மாணவர்கள் மற்றும் சமூக அக்கறையுள்ள அனைவரும் எங்களுக்கு ஆதரவு தரும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
 
- போராட்டக் குழு மற்றும் போராடும் மக்கள்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

Pin It