சனவரி 3, 2014 நாளிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வந்த ஒரு செய்தி அதிர்ச்சிக்கும், வியப்புக்கும், நகைப்புக்கும் ஒரேசேர ஆளாக்கியது. செய்தியின் சாரம் இதுதான். சென்னை வண்ணாரப்பேட்டை ஜி.ஏ.சாலையில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. ப்ரி.கே.ஜி முதல் 4ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழை அவர்களின் பெற்றோர்களுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ளது. பதறியடித்து பள்ளிக்கு வந்த பெற்றோர்களிடம் நிர்வாகம் அளித்த விளக்கம், “தேர்ச்சியில் தகுதியில்லாதவர்களுக்கே மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக” கூறியுள்ளது. “அரையாண்டுத் தேர்வு முடிந்துள்ள நிலையில் எப்படி தேர்ச்சிக்கு தகுதியில்லை எனக் கூறமுடியும்?” என்ற பெற்றோர்களின் நியாயமான கேள்விக்கு நிர்வாகத்திடமிருந்து நேர்மையான பதில் இல்லை.

 நான்காம் வகுப்புவரை மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்ற இப்பள்ளி நிர்வாகத்தினர் ஏதே பட்டப்படிப்பிற்கோ அல்லது ஆய்வுப் படிப்பிற்கோ அங்கு படித்த மாணவர்கள் தகுதியில்லாதவர்கள் போல கருதும் செயல் எவ்விதத்தில் நியாயமானதென்று புரியவில்லை. ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கிலும் மாதாந்தோறும் பெற்றோர்களிடம் 'கறக்கும்' இத்தனியார் பள்ளிகள் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வியளிக்க முடியும் என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கலாமே? அல்லது மாணவர்களின் சேர்க்கையின்போதே பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கலாமே? நன்றாகப் படிக்கும் மாணவர்களை வைத்துக்கொண்டு தேர்ச்சி விகிதத்தில் பள்ளியின் தரநிலையை உயர்த்தி மேலும் கொள்ளையடிக்க விளம்பரம் தேடும் இந்தக் கல்வித் தந்தையர்களிடம் மாணவப் பிஞ்சுகள் மாட்டிக்கொண்டு படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல.

 மற்ற பள்ளியைவிட தங்கள் பள்ளி நிறைய சாதிக்க வேண்டும், விருது பெறவேண்டும், தேர்ச்சி விழுக்காட்டில் முதன்மைபெற வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் ஓட்டப்பந்தய வீரனைப்போல மூச்சிறைக்க மாணவர்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கும் காட்சியை பலவீனமான இதயமுள்ளவர்களால் பார்க்க முடியாது. அவ்வளவு பெரும் கொடுந்தாக்குதல் மாணவர்களின் சிந்தனையின் மீது தமிழக தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

 பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானதாகும். பள்ளி திறந்த நாள்முதலே அதிகாலை 5-00 மணிமுதல் இரவு 9-00 மணிவரை பாடம் நடத்துகிறோம் என்ற பெயரில் மாணவர்களை கசக்கிப் பிழிகிறார்கள். சரி மாணவர்களின் மீது இவ்வளவு அக்கறையா ஆசிரியர்களுக்கு? ஒருவேளை கொடுக்கும் பணதிற்கு உண்மையாகப் பாடுபடுகிறார்களோ என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் அதிக மதிப்பெண் பெற்றால்தான் பகுதியளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என்று பெயர் எடுக்க முடியும். அப்போதுதான் “இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைப் போல தங்கள் பிள்ளைகளும் வரவேண்டும்” என்று பெற்றோர்கள் முண்டியத்துக் கொண்டு பள்ளிக்குப் படையெடுப்பார்கள். இதன்மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற பொருளாதாரக் கணக்கில் மூழ்கித் திளைக்கிறார்கள் தனியார் கல்விக் கொள்ளையர்கள்.

 அதிலும் ஒன்பதாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் தனியார்பள்ளி மாணவர்களுக்கு அந்த ஆண்டிற்கான பாடத்தை நடத்தாமல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பாடத்தையும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடத்தையும் நடத்துகிறார்கள். அதாவது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்தினை தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படிக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பாடங்களைப் படிப்பதில்லை என்பதுதான் உண்மை. இப்படி இரண்டாண்டு படித்துத்தான் அரசுப் பள்ளியை விட தேர்ச்சி விழுக்காட்டில் கூடுதல் கணக்கைக் காட்டி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.

 சிறப்பு வகுப்பிற்காக அதிகாலை 5-00 மணிக்கு பள்ளிக்குச் செல்ல வேண்டுமானால் 4-00 மணிக்கே ஒரு மாணவர் தூக்கத்திலிருந்து எழுந்தாக வேண்டும். அதாவது முந்தைய இரவு 9.00 மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு உடனே அசதியில் தூங்கி அடுத்த சிலமணி நேரத்தில் எழுந்தாக வேண்டிய கட்டாயம். காலை கடனைக்கூட கழிக்க முடியாத அந்த அதிகாலை நேரத்தில் பள்ளிக்குச் சென்ற அடுத்த சிலமணி நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க உடல் தயாராகும்போது பல மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரிடம் அனுமதி கேட்கக் கூச்சப்பட்டுக் கொண்டு இரவு வரைக்கும் தவிக்கும் மாணவர்களின் உடலியல், உளவியல் சிக்கலைப்பற்றி எந்தப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அரசும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 இந்த இலட்சணத்தில் மாணவர்களை கண்காணிக்கவும் அவர்களின் அன்றாட வீட்டுப் பாடத்தின் பட்டியலையும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்து வருகின்றன. இதன்படி வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் வீட்டுப்பாடத்தினை பெற்றோர்மூலம் அறிந்து அதை செயல்படுத்தும் வேலையில் மாணவர்கள் இறங்கியாக வேண்டும். அதாவது படி, படி எழுது, எழுது எப்பாடு பட்டாவது முன்னேறு நீ தேர்வில் முன்னேறினால் மட்டுமே எங்கள் பள்ளியை எதிர்காலத்தில் பல்கலைக்கழகமாக மாற்ற முடியும் என்ற பணத்தாசையினால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதி மனநோயாளிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

 விழுப்புரத்தில் மனிதஉரிமை செயல்பாட்டில் அக்கறை கொண்ட என் நண்பர் உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகிலுள்ள விடுதியுடன் கூடிய ஒரு தனியார் பள்ளியில் பல லட்சம் பணத்தைக் கொட்டி தனது மகனை சேர்த்துள்ளார். நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள அந்தப் பள்ளி நிர்வாகத்தினர், விடுதியில் எந்தவித வசதியும் ஏற்படுத்தாமல் இருப்பது குறித்து விசாரிக்க என்னையும் உடன் அழைத்துச் சென்றார். பள்ளியின் நுழைவுவாயிலின் அருகில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் நின்றிருந்தனர். அவர்களிடம் விளக்கம் கேட்டதற்கு “திருவண்ணாமலை தீபத்தன்று விடுமுறை எடுத்துக் கொண்டு தீபத்திற்கு குடும்பத்துடன் சென்று விட்டதால் பள்ளிக்கு வரமுடியவில்லை. எங்களின் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு வந்தால்தான் பள்ளியில் சேர்ப்பதாக நிர்வாகத்தில் கூறிவிட்டார்கள். இதனால் கடந்த மூன்று நாட்களாக காலை முதல் மாலை வரை பள்ளிக்கு வெளியிலேயே நின்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம்” என்றனர்.

“தீபத் திருவிழாவிற்காக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்தததையும் மீறி எதற்காக அன்று பள்ளி திறந்தீர்கள்” என்று நிர்வாகத்திடம் கேட்டதற்கு “ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் வரும் விடுமுறைகளுக்கு தங்கள் பள்ளியில் விடுமுறை கிடையாது” என பொறுப்பற்ற பதில் வந்தது. இப்பிரச்சினையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னரே மாணவர்களை நிர்வாகத்தினர் பள்ளியில் சேர்த்துக்கொண்டனர். இந்தாண்டு வந்து சென்ற தமிழர் திருநாளுக்கு எந்த தனியார் பள்ளியும் விடுமுறை விடவில்லை. இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பாததால் கல்வி அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகனத்தினரின் எலும்புத் துண்டுக்கு வாலை ஆட்டிக்கொண்டு விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 பண வெறியில் ஆட்டம் போடும் இப்படிப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்தினரின் வாலை நறுக்குவதற்குப் பதிலாக தமிழகத்தில் அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் பயிலும் 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு என்று வகுப்பறையை வதைக் கூடங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டைவிட தற்போதைய கல்வி ஆண்டிலாவது மாவட்ட வாரியான பட்டியலின் தரவரிசையில் தான் பொறுப்பு வகிக்கும் கல்வி மாவட்டம் முன்னேற வேண்டும் என்கிற ஆசையில் கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்து அதன்படி அரசுப்பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களின் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர்.

 விழுப்புரத்தை அடுத்த நேமூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சியான மாணவனை 11ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள தலைமையாசிரியர் மறுத்தார். இது தொடர்பாக விசாரிக்க மாணவனுடன் சென்று பள்ளி தலைமையாசிரியரிடம் விளக்கம் கேட்டதற்கு, “மாணவன் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், மதிப்பெண் விழுக்காட்டளவில் குறைவாக உள்ளது. அதனால் வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலரிடமும் தொலைபேசி வழியாக புகார் கூறியதற்கு “இந்தாண்டு மாணவர்களுக்கு நிறைய மதிப்பெண் வழங்கியிருக்கிறோம். அப்படியிருந்தும் இவனின் மதிப்பெண் குறைவாக இருப்பதால் தான் பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டுகிறார் தலைமையாசிரியர். எனவே நீங்கள் வேறு பள்ளியில் சேர்ப்பதுதான் சரி” என்றார். “இதே பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவனை இதே பள்ளியில் மேல்வகுப்பிற்குச் சேர்க்காவிட்டால், வெளியூர் சென்று புதிய மாணவர்கள், புதிய ஆசிரியர்கள் என்று பழக்கப்படாத சூழலில் ஒரு மாணவனால் எப்படி மேற்படிப்பைத் தொடர முடியும்” என்று கேட்டு சட்ட ரீதியான சில செய்திகளை விளக்கியபிறகே அம்மாணவனுக்கு மீண்டும் அப்பள்ளியில் மேற்படிப்பிற்கு இடம் கிடைத்தது. இதுதான் இன்றைய தமிழகத்தின் கல்வி நிலை. ஏழை வீட்டுப் பிள்ளைகளிடமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி வீட்டுப் பிள்ளைகளிடம் இருந்தும் 'சரஸ்வதி' விலகி வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறாள், இதுதான் இன்றைய உண்மை நிலை.

 பாடாய் படுத்தும் இந்தக் கல்வி முறையாலும், ஆசிரியர்களின், பள்ளி நிர்வாகத்தினரின் இடைவிடாத சித்ரவதையாலும், நாமக்கல், ராசிபுரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு போன்ற உண்டு, உறைவிடப்பள்ளியில் பயின்ற 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த சில மாதங்களில் மட்டும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திண்டிவனத்தில் உள்ள வழக்குரைஞர் நண்பர், சமீபத்தில் கூறியது மாணவனின் இன்றைய நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. தனியார் பள்ளியில் பயிலும் அவரது நண்பரின் மகளிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தனது புத்தகத்தில் உள்ள கேள்விக்கான விடைகளையே கூறுகிறாராம். எடுத்துக்காட்டாக எந்தப் பள்ளியில் படிக்கிறாய்? என்று கேட்டால் அவரது பாடத்தில் உள்ள ஏதாவது ஒரு கேள்விக்குண்டான பதிலையே கூறுகிறாராம். கேள்வி என்று எதைக் கேட்டாலும் அது பாடத்தில் உள்ள பதிலை மட்டுமே கூறவேண்டும் என்று கல்வி வணிகர்களால் மாணவர்களின் உள்ளத்தில் ஊன்றியுள்ள இந்த நச்சுச் செடியை உடனடியாக பிடுங்கியெறியாவிடில், அடுத்த தலைமுறைகளில் பல பேர் மனநோயாளியாக இருப்பார்கள் என்பதே உண்மையாகும்.

- கா.தமிழ்வேங்கை

Pin It