அரசியல் நிகழ்வுகளில், கோத்தபய ஆதரவு நிலைப்பாடுகளோடு, அவ்வப்போது தவணை முறையில் ஒருபக்கப் பேட்டி தட்டுவது இந்து ராமின் பழக்கம். கடந்த 1ம் தேதி இந்து தமிழில் 'சாத்தியம் இல்லாதது தமிழீழம்' என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் இந்து ராமின் பேட்டி வெளிவந்தது. தனது அரசியல் ஆர்வம், பத்திரிகைப் பணி, ஃபோர்போஸ்,மோடி, பிரபாகரன், தமிழீழம், திராவிட நாடு என்று எட்டுத் திக்கும் பாய்ந்து தனது கருத்தை கக்கியிருக்கிறார் இந்த கருத்து கந்தசாமி.
சிங்கள இனவாத கூட்டாளிகளின் குறிப்பறிந்து செயல்படுவதில், இந்து ராமின் ஒரு பக்க கட்டுரைகள் அல்லது நேர்காணல்கள் தங்களுக்கான பணியை மிகச் சிறப்பாகவே செய்துவருகிறது. ஈழப் போரின்போது கோத்தபய ராஜபட்சேவின் ஊது குழலாகவே மாறியிருந்த ராமின் நிலைப்பாடு என்ன என்பதை நாம் கண்கூடாகவே பார்த்திருக்கிறோம். அப்படி இருக்க... பிரபாகரன், தமிழீழம் போன்ற அல்வா சாப்பிடும் தலைப்புகளில் பேசுவது என்றால் இந்து ராமுவிற்கு கசக்கவா போகிறது?.
"தொடக்கம் முதலே 'தி இந்து' தனித் தமிழீம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்துதான் வந்திருக்கிறது. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.
இறுதி போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இது இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து ராஜபட்சே தயக்கமின்றிச் செயல்படவேண்டும்" என்று தனது நுண்ணிய அரசியல் அறிவை இப்பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார் ராம்.
போரில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜபட்சேவிற்கு என்ன தயக்கம் இருந்துவிட போகிறது? கொலை செய்தவனையே, கொலை சம்பதமாக விசாரிக்கச் சொல்லி தீர்ப்பு சொல்லவேண்டும் என்றால் அவன் என்ன ஜகா வாங்கவா போகிறான்? இறுதிப் போரின் போது புலிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று கூறிக் கொண்டு ஃபிரி சோனில் இருந்த அப்பாவி மக்களை கொன்று குவித்தவர்களிடமே விசாரணை செய்யக் கோருவது என்பது எத்தகைய அபத்தமானது?. இதைத்தானே இவர்கள் விரும்புகின்றனர்.
போர் மும்முரமாக நடைபெற்றபோது, தமிழகத்தில் சில ஊடகங்களுக்கு பணமும் ஏக்கரா கணக்கில் தேயிலைத் தோட்டங்களும் பரிசாகத் தரப்பட்டது என்ற வதந்தி இன்றும் உயிர்ப்புடன் நிலவி வருகிறது. தங்களது இலங்கை தேயிலைத் தோட்டங்களில் தேயிலை முனை கிள்ளுவது போல், இவர்கள் இலங்கைப் பிரச்சனையை கிள்ளி பலன் அடைந்து வருகின்றனர். அதன் தொடர் பராமரிப்புக்காகவே இங்கே இத்தகையதொரு ஒப்பந்த புதிப்பிப்புச் செய்திகள் வெளியிடப்படுகின்றனவோ என்ற அய்யம் எழத்தான் செய்கிறது?
அப்பாவித் தமிழர்களை சிங்கள இனவாத அரசு கொன்று குவித்த அந்த இறுதிப் போரின் போது பல நேர்காணல்கள் இந்துவில் வெளிவந்திருக்கிறது. ராஜபட்சேவை நேரடியாக சந்தித்து, பேட்டியும் புகைப்படமும் எடுத்து, ஒரு பக்க அளவில் வெளியிடுவார் இந்து ராம். 'ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றைக் கட்டி இறைக்க மாட்டார்கள்' என்பதுபோல், அந்த ரிஸ்க்கான நேரத்தில் வெளிவந்த பல நேர்காணல்களுக்கு நல்லதொரு ரஸ்க் கிடைத்திருக்கும்தானே...?!.
இதில் காங்கிரஸ் அரசின் ஆதரவோடுதான், இத்தகைய ராஜபட்சே நேர்காணல்கள் இந்தியாவில் வெளிவந்தன. அதே கூட்டணி கண்டினியுட்டிதான் இந்து ராமை, நரேந்திர மோடிக்கு எதிரான ஒரு பக்க கட்டுரைகளை இரு முறை எழுதச் செய்தது. கூட்டி கழித்துப் பார்த்தால் ஒரு கணக்கு புரியும். சிங்கள அரசு, காங்கிரஸ் அரசு பிளஸ் இந்து ராம் இவை மூன்றுமே தமிழர்களுக்கு எதிரான தீய சக்தி என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
இப் பேட்டியில் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனை போல்பாடிஸ்ட் என்று வர்ணித்திருக்கிறார் இந்து ராம். கம்போடிய கொடுங்கோலனான போல்பார்ட் லட்சக் கணக்கில் தனது நாட்டு மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவன், உலக கொடுங்கோலர்களில் அவனும் ஒருவன். அத்தகைய போல்பார்டோடு பிரபாகரனை ஒப்பிட்டு பேசி இருப்பது, ராஜபட்சேவின் உப்பைத் தின்றவனால்தான் முடியும். உலக தமிழர்களிடையே இச்செய்தி, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய சுபாஷ் சந்திர போஸ், சீனா விவசாயிகளுக்காக போராடிய மாசேதுங், ஜார் மன்னனை வீழ்த்தி ரஷ்யப் புரட்சியை தோற்றுவித்த லெனின், பிரஞ்சு ஆதிக்கத்தையும் அதற்குத் துணை வந்த அமெரிக்க ஏகாதிபத்தியப் படைகளை தோல்வியுறச் செய்து வியட்நாமை காப்பாற்றிய ஹோ-சி- மின், பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய யாசர் அராபத், 27ஆண்டுகால இருட்டறையில் இருந்து, தனது கருப்பின மக்களை இருட்டறையில் இருந்து மீட்ட நெல்சன் மண்டேலா, உலகப் புரட்சியளர்களின் உன்னத அடையாளமான சேகுவேரா என்று இந்த உலகை உய்வித்த உத்தமர்கள் மிகச் சொற்பமே. அந்த வரிசையில் வரக்கூடிய மாபெரும் புரட்சியாளர் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்.
20ம் நூற்றாண்டில் இறுதியில்தான் ஈழ விடுதலைப் போரானது உக்கிரம் பெற்றது எனலாம். முன் சொன்ன பத்தியில், ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கும் ஏதோ ஒரு நாடு ஆதரவு தெரிவிக்க... தமிழ ஈழப் போராட்டம் மட்டுமே எந்த ஒரு நாட்டின் ஆதரவும் இல்லாமல், புலம் பெயர்ந்த தாய் வழி உறவுகளின் ஆதரவால் நடைபெற்றது. நான்காம் கட்ட இறுதிப் போரின் போது கிட்டதட்ட 12 நாடுகளின் கூட்டு ராணுவ ஆயுத உதவியோடு போரிட்ட, சிங்களப் படையினரை புலிகள் எதிர் கொண்டனர். தனது தாய் மண்ணை மீட்டெடுக்க நடைபெற்ற போரில் இறுதிவரை களமாடினர்.
ஈழ விடுதலைப் போராட்டம் என்பது முன்பு அறவழிப் போராட்டமாகத்தான் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அறவழி என்பது அறமற்ற மனிதர்களின் காதுகளை எட்டாது என்பதை புரிந்து கொண்ட பின்னரே அறவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. தனது 16 வயதில் ஈழப் போராட்டக் களத்தில் குதித்தவர் பிரபாகரன். கிட்டதட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து காட்டில் வாழ்ந்து கொரில்லா போர் முறையில் தனது மக்களுக்காகப் போராடிய மாவீரன் பிரபாகரன்.
கையில் இருக்கும் இரண்டு லிட்டர் தண்ணீரைக் கொண்டு ஒரு வாரம் வரை தாக்குப் பிடித்து தாக்கும் திறன் கொண்ட படையினரை தம்பிகளாகக் கொண்டவர் பிரபாகரன். திட்டமிடுதல், எதிர்பாராத தாக்குதல், அடர்ந்த காடுகளில் மரங்களில் பரண் அமைத்து தங்கி தாக்குதலைத் தொடர்தல் என்று சிங்கள இனவாத அரசை எதிர்த்து தனது மக்களுக்காகப் போராடியவர் பிரபாகரன்.
1984ல் சண்டே இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுத்தபோது, "நீங்கள் போராட்டக் களத்தில் ஈடுபட தனிப்பட்ட முறையில் ஏதேனும் காரணம் இருக்கிறதா?. சிங்கள அரசால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா...?" என்ற கேள்வியை கேட்டார். "1958களில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது, சிங்கள இனவாத அரசு தமிழர்களின் வீடுகளைக் கொளுத்துவதும், ஆண்களை கொலைச் செய்தும் பெண்களை வன்புணர்வு செய்தும் பெரும் துயரங்களை எமது மக்கள் மீது திணித்தது. சிறு குழந்தைகளை கொதிக்கும் தார்களில் வீசிக் கொன்றனர். இத்தகைய நெஞ்சை உலுக்கும் பல துயரக் கதைகளை நான் கேட்டேன். அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகினர் என்பதையெல்லாம் நான் கேட்கும்போது, என் மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி மிருகங்களிடமிருந்து எம் மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் உந்துதல் ஏற்பட்டது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுகெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இந்த அமைப்பினை, ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்" என்றார். அத்தகைய மேன்மை கொண்டவர் பிரபாகரன். இதெல்லாம் இந்தப் பதர்களுக்கு எப்படித் தெரியும்?
தாய் மொழி , தாயினம், தாய் நாடு இவை மூன்றும் பிறப்பு வழியில் நாம் பெற்றுள்ள உரிமைகள் ஆகும். இந்தப் பிறப்புரிமைகளை காப்பதும், உரிமைகளைப் பறிக்கப்படுமானால் போராடி மீட்பதும் இயல்பான மாந்தர் கடமை. இத்தகைய கடமை உணர்வுகள் இல்லாதவர்கள் 'மக்கட் பதடிகள்' என்பார்கள். ஈழ விடுதலைப் போர் என்பதும் தமிழீழம் என்பதும் எள்ளி நகையாடுவதற்கும், தங்களது வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த பிரட் பட்டர் ஜாம் என்றும் இந்து ராம் போன்றோர் நினைத்து விடுகிறார்கள். நாற்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டம் என்பது நேரம் போகாமல் பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டது அல்ல. தங்களது விடுதலைக்காக, களப்பணியாற்றி உயிர் உடமை இழந்து, காடுகளை இழந்து, வாழ்விழந்து, உறவிழந்து போனவர்களின் ஜீவ மரணப் போராட்டம் என்பதை இத்தகைய ஊடகவியலாளர்கள் உணரவேண்டும்.
- தோழன் மபா, சென்னை-109 (