அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒரு அதிகாரியாகப் பணியாற்றி வரும் தேவயானி கோப்ரகடே அண்மையில் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு, கை விலங்கிடப்பட்டு அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்ட செய்தி இந்திய ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலையை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இப்பொழுது நம் நாட்டிற்கு வந்துள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, மக்களவைத் தலைவர் மீரா குமார், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் மட்டுமல்லாது ராகுல் காந்தியும், மோடியும் கூட மறுத்துள்ளனர்.

அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கவில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு இதுவரை அளித்து வந்த சலுகைகளை மத்திய அரசு இரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

குற்றம் சுமத்தப்பட்டவரைக் கைது செய்து, நீதி மன்றத்தில் நிறுத்தும்போது கை விலங்கிடப்படுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது. அது ஒரு நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவருக்கும் பொருந்தும்; ஒரு சாதாரணக் குடிமகனுக்கும் பொருந்தும். அதனால் இந்தச் செயலை நாமும் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஆனால் இங்குள்ள காவல் துறை ஒரு எளிய குடிமகனைக் கைது செய்யும்போது எவ்வாறு கை விலங்கிட்டும், இழிவாகவும் நடத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது இங்குள்ள ஆட்சியாளர்களுக்குக்குத் தெரியாத இரகசியம் அல்ல! ஆனால் ஓர் உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி அவ்வாறு நடத்தப்படும்போது மட்டும் இவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வர்க்கப் பாசம் இவர்களுடைய இரத்தத்தைத் துடிக்க வைக்கிறது.

ஒரு பொறுப்பான அதிகாரியை இவ்வாறு நடத்தியது மிகப் பெரும் தவறுதான். ஆனால் அந்த அதிகாரி எந்தத் தவறும் செய்யவில்லையா? அவர் தனது வீட்டு வேலைகளைச் செய்வதற்காக சங்கீதா ரிச்சர்ட் என்ற பெண்ணை இந்தியாவிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார். அவரைப் பற்றி பொய்யான தகவல் கொடுத்து அமெரிக்காவில் நுழைய அனுமதி பெற்றுள்ளார். மேலும் அங்கு அழைத்துச் சென்ற பிறகு அந்தப் பெண்ணுக்கு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்ட ஊதியத்தையும் வழங்கவில்லை. தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் கடுமையாக வேலை செய்யப் பணிக்கப்பட்டுள்ளார். அதனால் அந்தப் பணிப் பெண் காவல் துறையிடம் புகார் கொடுக்க, அதன் விளைவுதான் இந்தக் கைது நடவடிக்கை.

இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அதிகாரி பொய்யான தகவலைக் கூறி தனது வீட்டில் பணி புரியும் பெண்ணுக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி பெற்றது பற்றியோ, அந்தப் பெண்ணுக்கு உரிய ஊதியத்தைக் கொடுக்காமல் ஏமாற்றியது பற்றியோ, அந்தப் பெண்ணைச் சட்ட விதிக்குப் புறம்பாகக் கடுமையாகச் சுரண்டியது ஏமாற்றியது பற்றியோ இங்குள்ள ஆட்சியாளர்கள் யாரும் வாய் திறக்கவில்லை.

அந்த அதிகாரியால் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு இந்தியக் குடிமகள்தான். ஆனால் அந்த எளிய குடிமகளுக்காகப் பரிந்து பேசவும், அந்த அதிகாரியின் தவறான செயல்களைக் கண்டிக்கவும் இங்குள்ள ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. ஏனென்றால் அந்தப் பெண் உழைக்கும் வர்க்கம்; தாழ்ந்த வர்க்கம். ஆனால் அதிகாரியோ அதிகார வர்க்கம்; உயர்ந்த வர்க்கம். அதிகாரியும் வீட்டு வேலைக்காரியும் சமமாக முடியுமா?

மேலும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அந்த அதிகாரியின் செயலைக் கண்டிக்கவும் மாட்டார்கள். ஏனென்றால், உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் பணியாற்றி வரும் பெரும்பாலான அதிகாரிகளும் மலிவான கூலி கொடுத்துத் தமது வீட்டுப் பணியாளர்களைக் கடுமையாகச் சுரண்டும் இதே தவறுகளைத்தான் செய்து வருகின்றனர்.

இந்த ஆட்சியாளர்கள் அமெரிக்கா இந்தியாவுக்கு இழைத்து வரும் அனைத்து அவமானங்களையும் அவ்வாறே கருதுகிறார்களா?

1984 ஆம் ஆண்டு போபாலில், யூனியன் கார்பைடு என்னும் பூச்சிக் கொல்லி தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் பொறுப்பற்ற தன்மையால் ஏற்பட்ட பெரும் விச வாயு விபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்; அதனால் பாதிக்கப்பட்டு முடமாகிப் போன பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்றும் நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர். முப்பது ஆண்டுக்களுக்குப் பிறகு இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனங்களுடன் பிறக்கின்றன. அதனால் பாதிக்கப்பட்ட மக்கள் உரிய நிவாரணம் கிடைக்காமல் இன்றும் போராடி வருகின்றனர்.

இன்று இந்திய அதிகாரிக்கு அமெரிக்கா இழைத்த அவமானத்தைப் பற்றி வாய் கிழியப் பேசும் இந்த ஆட்சியாளர்கள், அந்த நிறுவனத்தின் முதலாளி வாரன் ஆண்டர்சனைக் கைது செய்து, அவனைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவனை இராஜ மரியாதையுடன் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர். அவன் இன்றும் அமெரிக்காவில் சுகமாக வாழ்ந்து வருகிறான்.

இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான ஏழை, நடுத்தர மக்கள் இறந்தபோதும், முடமாக்கப்பட்டபோதும் இந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்காக இரக்கப்படவில்லை. அந்தக் கொடூரமான நிகழ்வுக்குக் காரணமான முதலாளியைத் தப்ப வைத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றாலும், முடமாக்கினாலும் நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அமெரிக்காவின் ஆதிக்க பலத்தைக் காட்டி கொக்கரித்துக் கொண்டிருக்கும் ஒரு முதலாளியின் கொடுஞ்செயல் இந்த நாட்டு மக்களுக்கு இழைத்த அவமானமாக இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரியவில்லை. அது பற்றி வாய் திறப்பதும் இல்லை. ஏனென்றால் அவனோ முதலாளி. இறந்தவர்களோ ஏழை, எளிய மக்கள், பஞ்சை பராரிகள். இந்த நாட்டில் உயிர் வாழவும் தகுதியற்றவர்கள். முதலாளியும், பஞ்சை பராரி மக்களும் சமமாக முடியுமா? நிச்சயம் முடியாது.

அவர்கள் நம் நாட்டின் மீதும், நம் மக்கள் மீதும் பற்று கொண்டவர்கள் என நாம்தான் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.

- புவிமைந்தன்