தொடர்புடைய படைப்புகள்

வரும் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 மாவட்டங்களில்  சிலிண்டருக்கான நேரடி மானியம் ஆதார் அட்டை மூலம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இனி 410 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை 845 ரூபாயாக விலை உயர்த்தப்படும். சிலிண்டருக்கான மானிய தொகை 435ஐ அரசாங்கம் இனி ஆதார் அட்டையின் மூலம் மக்களின் வங்கிக்கணக்கில்  செலுத்திவிடும். கேட்பதற்கு இது என்னமோ இனிப்பாக தான் இருக்கிறது. ஆனால் இதன் பின் உள்ள அரசியலை உற்று நோக்கினால் தான் இதன் ஆபத்து புரியும்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் ஆதார் அட்டையை அறிமுகப்படுத்திய பொழுது  ஆதார் அட்டையை அனைவரும் பெறவேண்டிய  கட்டாயமில்லை அவரவர் சுயவிருப்பத்தின் பெயரில் இதை பெற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் இப்பொழுது பொருட்களுக்கான மானியங்களை ஆதார் அட்டையின் மூலம் அளிப்பதன் மூலம் ஆதார் அட்டையை அனைவரும் பெறவேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது.

மேலும் இப்பொழுது சிலிண்டருக்கு மானியத்தை வங்கிக்கணக்கில் அளிக்கப் போவதாக சொல்லும் இவர்கள் நாளை ரேசன் கடைகளை மூடிவிட்டு ரேசன் பொருட்களுக்கான மானியத்தையும் ஆதார் அட்டையின் மூலம் அளிக்கப் போவதாக சொல்வார்கள்.

நன்றாக யோசித்து பாருங்கள் சொந்தங்களே. ரேசனில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசிக்கு அரசாங்கம் உங்கள் வங்கியில் 5 ரூபாய்  போட்டுவிட்டு உங்களை வெளி சந்தையில் அரிசி வாங்கிக்கொள்ள சொல்லும். வெளியில் உங்களால் 6 ரூபாய்க்கு அரிசி வாங்கிவிட முடியமா என்ன?

நாளை மறுநாள் பெட்ரோலின் விலையை ஏற்றிவிட்டு இதையே சொல்வார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டியது சமையல் எரிவாயுவின் விலையும், பெட்ரோலின் விலையும், அரிசியின் விலையும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கேற்றபடி அரசாங்கம் அவர்களின் மானியத்தை ஏற்றித் தருவார்களா  என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

மேலும் நேரடி மானியம் என்ற பெயரில் நாளை அரசு மருத்துவமனைகளும், அரசு பள்ளிக்கூடங்களும், அரசு போக்குவரத்து நிறுவனங்களும் கூட இழுத்து மூடப்படும் அபாயம் நடக்கத்தான் போகிறது.

ஆதார் அட்டையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் பெரு முதலாளிகளுக்கும்  இது பயனுள்ளதாக இருக்குமே தவிர இதனால் பொதுமக்கள் நிச்சயமாக பயனடையப் போவதில்லை. ஏனென்றால் வங்கிகளில் செலுத்தப்படும் தொகையை நாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு அவசர தேவைக்காக பயன்படுத்தி விடுவோம். எனவே பொருட்களை வாங்கும் பொழுது அது அதிகப்படியான விலையாக இருந்தாலும் அரசு தான் நமக்கு மானியம் தந்துவிட்டதே என்று வாங்கப் பழகி விடுவோம். இன்று நேரடி மானியம் மூலம்  விலையேற்றத்தை சிறுக சிறுக உங்களிடம் பழக்கிவிட்டால் நாளை மானியம் குறைக்கப்பட்டாலோ அல்லது நிருத்தப்பட்டாலோ உங்களுக்கு அது பெரிய பிரச்சனையாக தெரியாது. உதாரணத்திற்கு எப்படி மின் தடையை பழகிக் கொண்டோமோ அதே போல் தான்.

ஆதார் அட்டையை பயன்படுத்துவதால் இது மட்டும் தான் பாதகமா என்றால் அது தான் இல்லை. நாளை அனைத்து துறையிலும் நேரடி மானியம் என்று அறிமுகப்படுத்தப்பட்டால், ஆதார் அட்டை மூலம் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், உங்கள் தனிநபர் வருமானம் என்ன, வங்கி இருப்பு என்ன  என்பது வரை உங்கள் தனிமனித விவரங்களை கண்காணிக்க முடியும். இது நல்ல விஷயங்கள் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆதார் அட்டைக்கான விவரங்களை திரட்டுவது அரசாங்க அதிகாரிகள் அல்ல UIDAI தனியார் நிறுவனமே. ஒரு தனியார் நிறுவனத்திடம் எப்படி உங்கள் தனிநபர் விவரங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்  என்பதன் மூலம் இதிலிருக்கும் ஆபத்தை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

ஆதார் எனும் பெயரில் நம் தனிமனித உரிமைகளை நசுக்க வரும் அரக்கனை எதிர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

- கார்த்திக், மே 17 இயக்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

3 comments

3
RRaj
This one sound like ""NEW WORLD ORDER""....
Saravanan
தவறான வாதம். சமயல் எரிவாயு அரசினால் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு அரசு தனது குடிமக்களுக்கு எவ்வளவு சுமையை ஏற்கிறது என்பது குடிமக்களுக்கு தெரிவது நல்லது. இது அந்த குடிமகனை மேலும் பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும். தவிற, மானியம் என்பது மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் வரைதான் அரசாங்கம் கொடுக்க வேண்டும். மக்களின் பொருளாதார நிலை மேன்மை அடைந்தால் மக்கள் சுயசார்புடன் இருக்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு சுயமரியாதையை பெற்றுத்தரும். "நான் எவ்வளவு வருமானம் பெற்றாலும் அரசு எனக்கு மானியம் கொடுக்க வேண்டும்" என்று நினைப்பது மக்களை பிச்சைக்காரர்களாய் மாற்றும். அரசும் வளர்ச்சிப்பணிக்கு நிதி ஒதுக்கமுடியாமல் போகும். அதுபோல் மானியம் பெறும் மக்கள் அரசிடமிருந்து பெறும் பொருட்களில் தரத்தை எதிர்பார்க்கலாம். ஏனெனில் இவர்களும் மற்றவர்களைப்போல் முழு விலை கொடுத்து பொருள் பெறுகின்றனர். அரசு திட்டங்களில் வெளிப்படைத்தன்மை அதிகரித்து ஊழல் குறையும். ஆதார் திட்டம் வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
வினோத்
//..தவறான வாதம். சமயல் எரிவாயு அரசினால் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு அரசு தனது குடிமக்களுக்கு எவ்வளவு சுமையை ஏற்கிறது என்பது குடிமக்களுக்கு தெரிவது நல்லது..//

எப்படி சரவணன்.. உங்களால சிர்க்காம காமெடி பண்ண முடியுது ? அரசு இலவசமா தருதா ? யார நம்ப சொல்லுறீங்க...

உங்க எரிவாயுவையெ எடுத்துக்குவோம்... எரிவாயு இந்தியாவில் ஏராளாமா இருக்குன்னு, சமையலுக்கு பயன்படுத்தியது போக அதில் மின்சாரம் தயாரிக்க வைக்குறாங்க...

ஆனால் மக்களுக்கு விற்கும்போது மட்டும் குவைத் / ஈரான் இறக்குமதி எரிவாயுவின் விலையை இந்திய தயரிப்பு எரிவாய்விற்கும் கணக்கிட்டு அதுக்குமேல வாட் வரி சுங்க வர்ன்னு பல வரி விதிச்சப்புரம் தான் அதன் விலை 800 வருது ...

ஊரில் எங்காவது இது இந்திய எரிவாயு 150 ருபாய்... இது இறக்குமதி எரிவாயுவு... 800 ருபாய்ன்னு இருக்கா?

இல்ல இது இந்திய பெட்ரோல் லிட்டர் 10 ரூபாய், இது இறக்கு மதி பெட்ரோல் 70 ரூபாய்ன்னு இருக்க ? உங்களுக்கு தெரிஞ்சு இருக்கா?

உண்மையில் பொருளின் விலையை இப்படியா நிர்ணயிப்பாங்க? இப்படி பருத்திக்கு விலை வச்சா ஓவ்வொரு பருத்தி விவசாயியும் அம்பனியுடன் போட்டியிட முடியும்... 30 ஆயிரம் கடனை திரும்ப தர முடியாமல் ஏன் தற்கொலை செஞ்சுக்க போறாங்க ?

இதே முறைதான் பெட்ரோல் டீசல் எல்லாவற்றிலும்...
நடப்பது பகல் கொள்ளை, வழிப்பறி கொள்ளை...

சந்தேகம்னா உலக அளவில் பெட்ரோல் விலை என்னன்னு பாருங்க தெரியும்...

இதுக்கு போய் சப்போர்ட் பண்ணூறீங்களே... எல்லாம் முழு திருடர்கள் ...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.