பேரன்புக்குரிய தம்பி, தங்கைகளே! மாமதிப்பிற்குரிய மாணவப் புலிகளே! நேச வணக்கம்.

உலகமே சேர்ந்து தமிழினத்தை அழித்த பெருங்கொடுமையை எண்ணி எண்ணித் துடித்துக் கொண்டும், இதற்கொரு விடிவு வராதா என ஏங்கிக் கொண்டும் இருக்கும் பல கோடித் தமிழ் மக்களில் ஒருவன்தான் நான்!

ஆனால் என்னைப் போலவோ, என்னைப் போலிருக்கும் இன்னும் ஏராளமான தமிழ் மக்களைப் போலவோ வீட்டுக்குள் வெம்பிக் கிடக்காமல் வீதிக்கு வந்து போராடும் உங்கள் எழுச்சி கண்டு நாங்கள் மலைத்து நிற்கிறோம்! உங்களை விட அகவையிலும், பட்டறிவிலும், புகழிலும், செல்வாக்கிலும் இன்னும் எத்தனையோ வகைகளிலும் மேம்பட்டிருக்கும் பெரும்பான்மை மக்கள் செய்யாததை, செய்யத் தவறியதை இன்று நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்! அதற்காகத் தமிழ்ச் சமூகம் உங்களுக்குத் தலைவணங்குகிறது!

ஈழத்தில் தமிழர் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து அதை வைத்து அரசியல் நடத்தி வருபவரும், தமிழ் இனத்தையே அழிக்கக் காரணமாயிருந்தும் தமிழ் மக்களிடையே செல்வாக்கு இழக்காதவரும், இன்றளவும் உலகத் தமிழர் பிரதிநிதிகளால் தமிழினத் தலைவர் என அழைக்கப்படுபவருமான ஒருவரே ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதில் உங்களோடு போட்டி போட்டு இன்று தோற்றிருக்கிறார் என்றால் எந்த அளவுக்குத் தமிழ் மக்களிடையே உங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அலை வீசுகிறது, எந்த அளவுக்கு உங்கள் போராட்டம் மக்களிடையே தமிழ்த் துரோகிகளுக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நீங்கள் உணரலாம்!

அதே நேரம், உங்களுடைய இந்தப் போராட்டத்தைக் கண்டு மெய்சிலிர்த்துப் போய் இந்தப் போராட்டமாவது நம் மக்களுக்கு ஒரு நல்வாழ்வைத் தந்துவிடாதா என எதிர்பார்த்து நிற்கும் உலகத் தமிழ் மக்கள் அனைவரின் சார்பில், பொதுமக்களுள் ஒருவன் எனும் முறையில் சில வேண்டுகோள்களை உங்களிடம் முன்வைக்க விரும்புகிறேன்! கனிவு கூர்ந்து பரிசீலியுங்கள்!

தோழர்களே! உங்கள் போராட்டமும், அதன் வழிமுறைகளும் உண்மையிலேயே மெச்சத்தகுந்தவை! அதே நேரம், நீங்கள் அனைவரும் தனித் தனியாக, கல்லூரி கல்லூரியாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இதனால் உங்கள் போராட்டமும் பல வகைகளில் பிரிந்து கிடக்கிறது. ‘தமிழீழம்’ எனும் ஒரே கோரிக்கைக்காகப் போராடும் நீங்கள் இப்படித் தனித் தனியாகப் பிரிந்து நிற்பதை விட ‘தமிழீழத்துக்கான தமிழ்நாட்டு மாணவர் அமைப்பு’ ஒன்றை உடனடியாக உருவாக்கி அதன் கீழ் ஒரே மொத்தமாகத் திரண்டால் அதன் ஆற்றல் எப்பேர்ப்பட்டதாக இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

அடுத்தது, உங்கள் கோரிக்கைகளில் இருக்கும் வேறுபாடுகள். சிலர், ‘அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கிறோம்’என்கிறீர்கள்; சிலரோ, ‘அமெரிக்கா தன் தீர்மானத்தைத் தமிழர்களுக்கு நன்மை செய்யும் வகையில் இன்னும் சில திருத்தங்களோடு கொண்டுவர வேண்டும்’ என்கிறீர்கள்; இன்னும் சிலரோ, ‘அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் தேவையில்லை, இந்தியாதான் ஈழத் தமிழர்களுக்காகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ என்கிறீர்கள்.

தமிழினப் படுகொலையின்பொழுது இந்தியா இலங்கைக்குச் செய்த உதவிகளும் இன்ன பிற தமிழினத் துரோகங்களும் நீங்கள் அறியாதவையல்ல. இந்நிலையில், எந்த இலங்கை, தமிழர்களுக்கு அபாயகரமானது என்று கூறி, அவர்களிடமிருந்து தமிழர்களைத் தனிநாடாகப் பிரித்து வாழவைக்க வேண்டும் என நீங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறீர்களோ, அந்த இலங்கைக்குச் சற்றும் குறைந்ததில்லை இந்தியா. அப்படிப்பட்ட இந்தியா, ஈழத் தமிழர்களுக்காகத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தான கோரிக்கை என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

தவிர, இப்படி உங்களுக்குள்ளேயே கோரிக்கைகளில் இவ்வளவு வேறுபாடுகள் இருந்தால் அது எந்த அளவுக்குப் போராட்டத்தின் வலிமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும் நீங்கள் கனிவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்! ஒரே நோக்கத்துக்காகப் போராடுபவர்கள், ஒரே அணியாக ஒரே குரலில் போராடாமல், தனித் தனியாக, வெவ்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடினால், அவர்களுள் ஓரளவுக்குத் தங்கள் நிலைப்பாட்டுக்கு நெருக்கமானவர்களாகப் பார்த்துப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களைப் போராட்டத்திலிருந்து பின்வாங்க வைத்து, அதைப் பார்த்து மற்ற போராட்டக் குழுவினர்களும் ஊக்கம் இழந்து படிப்படியாகப் போராட்டத்தைக் கைவிடும்படிச் செய்வது காலம் காலமாக ஆளும் வர்க்கத்தினர் கையாண்டு வரும் இராஜதந்திரம்! இதற்கு நீங்களும் பலியாகிவிடாமல், உடனடியாக உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் சீர்திருத்த வேண்டியது இன்றியமையாதது!

மூன்றாவதாக, உங்கள் போராட்டங்களைத் திரித்துக் கூறும் ஊடகங்களை நீங்கள் கண்டிக்க வேண்டியதன் தேவை. எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமானால் ஊடகங்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஆனால், தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் போராட்டங்களைப் பற்றிக் கூறும் தவறான ஒரு கருத்து உங்கள் போராட்டத்தின் நோக்கத்தையே அழித்து விடக்கூடியதாக இருக்கிறது.

அதாவது, தமிழ் இனம் அழிந்து இத்தனை காலம் ஆகியும் இவ்வளவு நாட்களாக நீங்கள் பொறுமை காத்ததற்குக் காரணம், மேற்குலக நாடுகள் மீது நீங்கள் கொண்டிருந்த நம்பிக்கை என்பது என் கணிப்பு. நீங்கள் மட்டுமில்லை, உலகெங்குமுள்ள தமிழர்கள் அனைவரின் ஒரே இறுதி நம்பிக்கையும் அதுவாகத்தான் இருந்தது. என்னதான் இனப்படுகொலையில் இலங்கைக்கு ஆதரவாக நின்றிருந்தாலும், அதன் பிறகு தமிழர்களுக்கு ஆதரவாகப் பன்னாட்டு அளவில் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வந்த பல நடவடிக்கைகள் நமக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்து வந்தன. எப்படியும் அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து கூடிய விரைவில் தமிழீழத்தைப் பெற்றுத் தந்து விடும் என்று நாம் மிகவும் நம்பினோம். ஆனால், இலங்கைக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அமெரிக்கா கொண்டு வந்த இந்த உப்புச் சப்பில்லாத தீர்மானம் நம் நம்பிக்கையைத் தகர்த்தது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ எனும் நம் முன்னோடிகளின் முதுமொழியை நமக்கு நினைவூட்டியது.

நம் மக்களுக்காக நாம்தான் போராட வேண்டுமே தவிர மற்றவர்கள் வந்து போராட மாட்டார்கள் என்பதை நமக்கு உணர்த்தியது. அதனால்தான் நம் மக்களுக்காக மீண்டும் நீங்கள் போராட்டக் களத்துக்கு வந்தீர்கள். சுருங்கச் சொன்னால், அமெரிக்கத் தீர்மானத்தின் மீதான அதிருப்திதான் தமிழ்நாடெங்கும் கொதித்தெழுந்திருக்கும் இந்த மாணவப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி. ஆனால், இதை முற்றிலும் திசைதிருப்பும் வகையில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டி மாணவர்கள் போராட்டம்’ என்றே மீண்டும் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. அதாவது, எதை எதிர்த்து நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களோ அதை ஆதரித்து நீங்கள் போராடுவதாகத்தான் உண்மையில் இங்கு ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன.

· இதை விட ஒரு பெரிய தீங்கை உங்களுக்கு யாரும் செய்து விட முடியாது.

· ஒரு போராட்டத்தை இதை விடக் கொச்சைப்படுத்தும் முயற்சி வேறெதுவும் இருக்க முடியாது.

· உங்கள் போராட்டத்தைத் தோற்கடிக்க இதை விடப் பெரிய காரணி வேறு இருக்க முடியாது.

எனவே, போராளிகள் நீங்கள் உடனடியாக இதை எதிர்த்து அறிக்கை விட வேண்டும்! இது பற்றித் தமிழ்ச் சமூகம் முழுவதிலும் நிலவுகிற, பரப்பப்படுகிற குழப்பத்துக்கு நீங்கள் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்தையே இவர்கள் பாதிப்புக்கு ஆளாக்கியவனுக்கு ஆதரவான போராட்டமாகப் பதிவு செய்து விடுவார்கள்!

கடைசியாக ஒன்று! உங்களுடைய இந்தப் பிரிவுபட்ட நிலையை, உங்கள் கோரிக்கைகளில் இருக்கும் சிற்சில முரண்பாடுகளை, உங்கள் நிலைப்பாடுகளில் இருக்கும் சிறு சிறு குழப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு மிகப் பெரிய அளவில், பன்னாட்டு அளவில் காய் நகர்த்தச் சில மூத்த அரசியல் பெருச்சாளிகள் ஆயத்தமாகி வருகின்றன. நிரல்பாட்டில் (programming-இல்) இருக்கக்கூடிய சிறிய ஒரு பிழை கூட மொத்தப் பிணையத்தையும் (network) காலி செய்து விடும் என்பது இன்றைய கணினியுக இளைஞர்களான உங்களுக்குத் தெரியாததில்லை!

எனவே, கனிவு கூர்ந்து உடனடியாக மேற்கண்ட வேண்டுகோள்களை நிறைவேற்றுங்கள்! தமிழர்களின் உயிர்க் குறிக்கோளான தமிழீழத்தை வென்றெடுங்கள்!!

இப்படிக்கு,

உங்கள் நேசத்துக்குரிய:

(இ.பு.ஞானப்பிரகாசன்).

Comments

9 comments

9
Salanan
சாதாரண தமிழக மக்கள் மிகப்பலருக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். (ஏதோ ஆர்வக்கோளாறில் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்) இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடும் மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. ஆனால் அது இறையாண்மை கொண்ட தனி நாடு. அதனால் தான் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டை உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.
MAYURI
தக்க தருனதில் தந்த அருமையன கருத்து கடிதம்.. ஒர்ருமைக்கு வலிமை அதிகம்...
puthiyamaadhavi
நெருக்கடியான நேரத்தில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய கருத்துகளை மிக அருமையாக சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள். நேற்று - 18/3/13 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சியில் நெல்லை மாணவர்கள் கண்களைக் கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு நடத்திய போராட்டம் குறித்து நேரலை செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது விசாரணைக்குழு பற்றிய கேள்விக்கு இலங்கை அரசும் அதில் இருக்கலாம். இலங்கை அவர்கள் நாடுதானே அதில் தவறில்லை என்றும் அடுத்த கேள்விக்கு தமிழீழமே எங்கள் நோக்கம் என்றும் கருத்து ரீதியாக தெளிவில்லாமல் ஒரு மாணவர் பேசிக்கொண்டிருந்தார்.. அதற்குமேல் பார்க்க முடியாமல் மனம் நொந்துப்போனது. உங்கள் கட்டுரையை முடிந்தால் நகல் எடுத்து மாணவர்களிடம் சேர்ப்பிக்கவும்.
பாராட்டிய புதிய மாதவிக்கும், மயூரிக்கும் நன்றி! சலானனின் கருத்துக்களுக்கு நன்றி!

புதிய மாதவி அவர்களே! நீங்கள் கூறியது போல் என்னுடைய இந்தக் கருத்துக்களை மாணவர் கூட்டமைப்பிடமே கொண்டு செல்ல என்னாலான முயற்சிகளை எடுக்க இருக்கிறேன்.
Rubia
i appreciate and thank you for your encouraging informative letter.
i assure you that i will take this letter to many.
mani
மாணவர்கள் போராட்டம் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணை என்ற அளவில் தானே இருக்கிறது. அதனை தங்களது நோக்கமான தமிழீழக் கோரிக்கையாக மாற்றிக் கொள்ளும் உங்களது நேர்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. தமிழீழம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமையை கடைசியில் ஈழத் தமிழ் மக்களிடமிருந்து தமிழக மாணவர்கள் கைகளுக்கு மாற்றி விட்டிருக்கின்றீர்கள். ராஜபக்சேவுக்கு தமிழினத்தில் இப்படி ஒரு விபீடணன் கிடைப்பான் என்பதை இதற்கு முன் நான் யோசிக்கவே இல்லை.
குற்றவாளியான இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானம் பற்றிய தங்களது காலத்தால் அரதப்பழசான அச்சமும், அதற்காக மட்டுமே மறுப்பதும் போராடும் எவரிடத்திலும் காண இயலாத ஒன்று. நிரல்களோடு போராடுபவர்கள் பயப்படும் வைரஸ் தான் அது. மற்றபடி மெய் உலகில் அதற்கு என்ன பயனும் இல•
கோரிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக தாங்களும் முன்வைக்கவில்லையே!
எப்படி இணைவது என்பதற்கு கோரிக்கைகளை விட்டுத் தருவதல்ல வழிமுறை!
Salanan
தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.
இன்றைக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்களாகவும் மிகப்பெரிய பதவிகளிலும் இருக்கிறார்கள். பலர் பெரும் பணக்காரர்களாக உள்ளார்கள். ஆகையால் தான் இந்தியா போன்ற பெரிய நாடுகளின் தடைகளையும் மீறி சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக இவர்களால் உலகளவில் லாபி செய்யவாவது முடிகிறது. இன்றைய உலகில் சாதாரண மக்கள் எத்தனை கோடி பேர் ஒன்றாக சேர்ந்து கொண்டு போராடினாலும் அதற்கு பலன் அவ்வளவாக இருக்காது. ஆனால் அறிவுஜீவிகளை அதிகம் கொண்ட ஒரு சிறிய இனம் உலகத்தையே கட்டுப்படுத்த முடியும். வெறும் ஒன்றரை கோடி பேர்களை கொண்ட யூத இனம் இதற்கு ஒரு உதாரணம். இந்திய மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதம் கூட இல்லாத பார்ப்பனர்கள் மொத்த இந்தியாவையே கட்டுப்படுத்துவதற்கு காரணம் அவர்களின் சாதி அறிவுஜீவிகளை அதிகம் கொண்டிருப்பதால் தான். ஆகவே தமிழகத்தில் மிகுந்த ஆங்கில புலமையும் தமிழ் இன உணர்வும் கொண்ட திறமையான மாணவர்களை உருவாக்கவேண்டும். உலகெங்கிலும் நம் மக்கள் உயர் அதிகார பீடங்களை அலங்கரிக்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நம் கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் காட்டிக்கொடுக்கும் கூட்டிக்கொடுக்கும் நயவஞ்சக கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இவர்களின் ‘டெசோ’ சார்பில் நடந்த முழு அடைப்பே இதற்கு ஒரு உதாரணம். ஆளும் கட்சியின் ஆதரவு மறைமுகமாகவாவது இருந்தால் தான் இம்மாதிரியான போராட்டங்கள் முழு வெற்றியடைய முடியும். ஆனால் ஆளும் அ.தி.மு.க-வின் ஒப்புதல் இல்லாமல் கருநாநிதியாலும் அவரின் எடுபிடிகளாலும் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டது தான் இந்த டெசோ பந்த். இப்போது தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த ஈழப்பேரழிவை முன்னிறுத்தி சுய ஆதாயம் தேட கருநாநிதி முயன்று வருகிறார். வரும் நாட்களில் இவரும் இவர் கட்சியும் எடுபிடிகளும் பல்வேறு போராட்டங்களையும் பித்தலாட்டங்களையும் முன்னெடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வார்கள். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தேர்தல் வருகிறதல்லவா? ஆகவே கொலைகாரனின் கூட்டாளியாக இருந்து ஆதாயம் தேடியது போதாதென்று பிண வீட்டிலும் ஆதாயம் தேடும் இந்த மாதிரியான திராவிட கழிசடைகளிடம் தமிழகத்து மக்கள் வரும் நாட்களில் உஷாராக இருக்க வேண்டும். அது தான் இப்போதைய தேவை.
thamizhpriyan
ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக ஒவ்வொரு மாணவனும் கவனத்தில் கொள்ள வேண்டிய, தக்க தருணத்தில் பதிவு செய்யப் பட்ட உண்மை கருத்துக்கள். திருமிகு இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும். வாழ்க தமிழ், வெல்க தமிழினம்!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.