தர்மபுரி - நாயக்கன்கொட்டாய் நத்தம் காலனி கிராமத்தில் கடந்த 07.11.2012 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் 1000த்திற்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் கத்தி உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதே போன்று அண்ணாநகர், கொண்டபட்டி காலனி, செங்கல்மேடு, மரவாடி ஆகிய பகுதிகளிலும் இவ்வன்கொடுமைக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 வீடுகள் சேதப்படுத்தப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டன. தலித் இளைஞர் இளவரசன் என்பவர் சாதி இந்துப் பெண் திவ்யா என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டதற்காக, சாதி இந்து வன்கொடுமை கும்பல் இக்கொடிய வன்முறையில் ஈடுபட்டது.

                தலித்துகள் மீதான இக்கொடிய வன்கொடுமை மாநில அளவிலும் தேசிய அளவிலும் கவனம் பெற்றன. இவ்வன்கொடுமைக்குப் பிறகு சில சாதி இந்துக் கட்சிகள், இயக்கங்கள் தலித்துகளுக்கு எதிராக பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக "தலித் இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு வாழாமல் துரத்தி விடுகின்றனர். பணம் கேட்டு மிரட்டியும் வருகின்றனர்" என்ற குற்றச்சாட்டுகளை சாதி இந்து இயக்கங்கள் பரப்பி வருகின்றன.

                இது உண்மையா? என்பதைக் கண்டறிய எமது எவிடன்ஸ் அமைப்பு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி 2009 முதல் டிசம்பர் 2012 வரை 4 வருடங்களில் நடந்த சாதிமறுப்புத் திருமணம் குறித்த வழக்குகளின் விபரத்தை திரட்டியது.

             சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு கணவரால் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் விபரம்

             கணவரின் குடும்ப உறுப்பினர்களால் சித்திரவதை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள்

             திருமணம் செய்த பின்னர் சேர்ந்து வாழ மறுத்து கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்

             திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெண்கள்

ஆகிய 4 வன்கொடுமை நிலைகளின் அடிப்படையில் இத்தகவல்கள் பெறப்பட்டன‌. இதனடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் சாதிமறுப்புத் திருமணம் குறித்து 94 வன்கொடுமை சம்பவங்கள் நடத்திருப்பது கண்டறியப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல்நிலையங்கள், குற்றஎண், குற்றப் பிரிவுகள், வழக்கின் தற்போதைய நிலை, குற்றவாளிகள் கைது விபரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் பெறப்பட்டன.

கோவை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தகவல்களைப் பெற முடியவில்லை (தகவல் கேட்டு 2 மாதம் ஆகியும் மேற்குறிப்பிட்ட 5 மாவட்டங்களிலிருந்து உரிய பதிலில்லை). பெறப்பட்ட 24 மாவட்டங்களில் கன்னியாகுமரி, அரியலூர், கரூர், நீலகிரி, சேலம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு அதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்று கண்டறிய முடிந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களின் சாதி விபரம்

                கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் 94 பெண்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தங்களது கணவராலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தலித் பெண்கள் 77 (82 சதவீதம்) பேரும், சாதி இந்துப் பெண்கள் 17 (18 சதவீதம்) பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                சாதி இந்துப் பெண்களை சாதிமறுப்புத் திருமணம் மற்றும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 17 சம்பவங்களில் 13 பேர் சாதி இந்துக்களே உள்ளனர். மற்ற 4 நபர்கள் தலித்துகளாக இருக்கின்றனர். ஆகவே 94 வழக்குகளில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு சாதி இந்து கணவராலும், ஏமாற்றப்பட்ட ஆண்களாலும் பாதிக்கப்பட்ட 96.4 சதவீத்தினர் தலித் பெண்கள். மற்ற 3.6 சதவீதத்தினர் இதர பெண்கள்.

                பாதிக்கப்பட்ட 94 பெண்களில் 77 பெண்கள் தலித் பெண்கள். இவற்றில் 42 பெண்கள் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 20 பெண்கள் பள்ளர் சமூகத்தையும், 13 பெண்கள் அருந்ததியர் சமூகத்தையும், 2 பெண்கள் இதர தலித் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

                இதனடிப்படையில் தமிழகத்தில் சாதிமறுப்புத் திருமணம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பறையர் சமூகத்துப் பெண்களின் எண்ணிக்கை 45 சதவீதம். பள்ளர் சமூகத்துப் பெண்களின் எண்ணிக்கை 21 சதவீதம். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் எண்ணிக்கை 14 சதவீதம்.

                இதே போன்று சாதிஇந்துக்கள் மற்றும் தலித்துகளால் பாதிக்கப்பட்ட 17 பெண்களில் 3 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், இருவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், கவுண்டர், பிறமலைக் கள்ளர், நாயுடு ஆகிய சமூகங்களைச் சேர்ந்த தலா ஒரு பெண்களும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட ஆண்களின் சாதி விபரம்

                பாதிக்கப்பட்ட 77 தலித் பெண்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடிய சாதி இந்துக்களின் பட்டியல் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர் (24 சதவீதம்) வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 8 பேர் (8.5 சதவீதம்) நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 8 பேர் (8.5 சதவீதம்) கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 6 பேர் (6.3 சதவீதம்) அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 6 பேர் (6.3 சதவீதம்) செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 4 பேர் பிறமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், இதர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 19 பேரும் உள்ளனர்.

                சாதிமறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட 17 சாதி இந்துப் பெண்களை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களின் சாதி விபரம். நான்கு பேர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், வன்னியர், அகமுடையார், நாடார், முதலியார் தலா ஒருவரும் உள்ளனர்.

வன்முறையின் வடிவங்கள்

                பாதிக்கப்பட்ட 77 தலித் பெண்களில் 4 பெண்கள் கணவரின் வன்முறையாலும், 5 பெண்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 7 பெண்கள் திருமணத்திற்குப் பிறகு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் விரட்டியடிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளனர். மற்ற 62 (64.9 சதவீதம்) தலித் பெண்கள் சாதி இந்து ஆண்களால், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

                பாதிக்கப்பட்ட 17 சாதி இந்து பெண்களில் 13 பெண்கள் சாதி இந்து கணவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் கணவரின் வன்முறையாலும், 3 பேர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 8 பெண்கள் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாதி இந்துப் பெண்களை பாதிப்பிற்குள்ளாக்கிய தலித் ஆண்களில் நான்கு வழக்குகளில் 2 கணவரின் வன்முறையாலும், 2 கணவரின் குடும்பத்தினராலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.     

சம்பவங்களின் பட்டியல் சில…

1.            தர்மபுரி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் எம்.தீபா. எம்.எஸ்.சி., பி.எட் படித்துள்ளார். தீபாவும், சாதி இந்துவான விஷ்ணுராம் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு விஷ்ணுராம் தீபாவை பல்வேறு விதங்களில் கொடுமை செய்துள்ளார். தீபாவோடு வாழ மறுத்தும் உள்ளார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2.            தர்மபுரி பகுதியைச் சேர்ந்த வேளாங்கன்னி என்கிற 16 வயது தலித் சிறுமியை சாதி இந்துவான நாகராஜ் என்பவர் காதலித்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு நாகராஜும் அவரது குடும்பத்தினரும் வேளாங்கன்னியை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு நிலுவையில் உள்ளது.

3.            ஈரோடு பகுதியைச் சேர்ந்த கஸ்தூரிதேவி என்கிற தலித் பெண்ணை, சாதி இந்துவான சோமசுந்தரம் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இச்சம்பவம் பிப்ரவரி 2010 மாதம் நடந்துள்ளது.

4.            கடலூர், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த சிவசண்முகவள்ளி என்கிற தலித் பெண், அருள்முருகன் என்கிற சாதி இந்து இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு அருள்முருகனும், அவரது குடும்பத்தினரும் சிவசண்முகவள்ளியை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இவ்வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

5.            கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தலித் பெண் ரூபா. நாகராஜ் என்கிற சாதி இந்து இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பின்பு நாகராஜ், தலித் பெண் ரூபாவை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து வாழ மறுத்துள்ளார். இதுகுறித்த வழக்கு தேன்கனிக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் சாதிமறுப்புத் திருமணத்தாலும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்முறையாலும் 80 சதவீதம் பாதிக்கப்படுவது தலித் பெண்கள்தான். ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 94 சம்பவங்களில் 95.2 சதவீதம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது சாதி இந்து ஆண்கள். 4.8 சதவீதம் வன்முறையில் ஈடுபட்டிருப்பது தலித் ஆண்கள். இதுதான் உண்மை நிலை.

                இதன் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர் என்று கூறப்படுகிற குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

பல சாதிஇந்து இயக்கங்கள் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டு தலித் இளைஞர்கள் சாதி இந்துப் பெண்களை ஏமாற்றிய வழக்கு 2500 உள்ளது என்றும், 1850 வழக்குகள் உள்ளன என்றும் போகிற போக்கில் புள்ளி விபரங்களை கூறிவருவது ஏற்புடையதல்ல. முதலில் இதுபோன்ற வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறைவாகவே உள்ளன. உலக பொது மனித உரிமை சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் தலித் பெண்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளில் 5 சதவீதம் கூட வழக்காக பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. இதிலிருந்து பார்க்கின்ற போது பல பாதிக்கப்பட்ட தலித் பெண்களின் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்பதும் புலப்படுகிறது.

தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு சாதி இந்து இயக்கங்களும், கட்சிகளும் சாதிய துவேசத்தை விஷப் பிரச்சாரமாக பரப்பி வருவதனால், தலித் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. தர்மபுரி கலவரத்திற்குப் பிறகு தலித் பெண்கள் மீதான வன்முறைகளின் சில பட்டியலாக‌ இணைக்கப்பட்டுள்ளது)

பரிந்துரைகள்

1.            திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.

2.            திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தலித் பெண்களை ஏமாற்றி வருகிற சாதி இந்து கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5)ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.            வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 முறையாக நடைமுறைப்படுத்தப்படாததனால் தான் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தற்போதைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் பல குற்றவாளிகள் எளிதாக தப்பித்து வருகின்றனர். ஆகவே இந்த சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உரிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

4.            தலித்துகள் மீது வன்முறையில் ஈடுபடுகிற குற்றவாளிகளுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்கிற சிறப்பு அம்சத்தை கடுமையாக்கி கட்டாய சிறைவைப்பு என்கிற அடிப்படையில் இதன் சிறப்பம்சத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

5.            சாதிமறுப்புத் திருமணத்தாலும் மற்ற வன்முறையாலும் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு நீடித்த, நிலைத்த மறுவாழ்வு திட்டங்களை கொண்டு வர அரசு சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மறுவாழ்வில் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித்தொகை, நிலம் போன்ற மேம்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

தர்மபுரி சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற கௌவரக் கொலைகளும், தலித் பெண்கள் மீதான தாக்குதல்களும்

1.            கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள கிராமம் சென்னிநத்தம். இக்கிராமத்தில் வசித்து வந்த தாழ்த்தப்பட்ட தலித் இளைஞர் கோபாலாகிருஷ்ணன் (20) த.பெ.மாயகிருஷ்ணன் என்பவ‌ரும் சாதி இந்து பெண் துர்கா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த துர்காவின் குடும்பத்தினர் கோபாலாகிருஷ்ணனை கடந்த 19.12.2012 அன்று படுகொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து திருமுட்டம் காவல்நிலையத்தில் குற்றஎண்.326/2012 பிரிவுகள் 342, 364, 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2.            கடலுர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், பு.முட்லூர் அருகில் உள்ள கிராமம் சம்பந்தம் காலனி. இக்கிராமத்தில் வசித்து வருகிற தலித் பெண் சந்தியா சிதம்பரத்தில் உள்ள போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இப்பெண்ணை போட்டோ ஸ்டுடியோவின் உரிமையாளர் கடந்த 25.12.2012 அன்று பாலியல் வன்புணர்ச்சிக்கு முயற்சி செய்து கொலை செய்துள்ளார் என்று சந்தியாவின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

3.            திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ஆழ்வார்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கருத்தபிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.முருகன் (39). தாழ்த்தப்பட்ட இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த முருகனின் 13 வயது மகள் பிரியா 17.01.2013 அன்று மாலை 6.30 மணியளவில் சாதி கிறிஸ்துவரான சினியன் என்கிற 50 வயது நபரால் கொடூரமான முறையில் பாலியல் பலாத்கார வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் குற்றஎண்.12/2013 பிரிவுகள் 448, 376, 511 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(1)(11) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

4.            நாமக்கல் மாவட்டம், நல்லிப்பாளையம் அருகில் உள்ள கிராமம் பெரியஅய்யம்பாளையம். இக்கிராமத்தில் வசித்து வரும் 18 வயது தலித் பெண் கஸ்தூரியை கடந்த 30.12.2012 அன்று கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நல்லிப்பாளையம் காவல்நிலையத்தில் குற்றஎண்.887/2012 பிரிவுகள் 366, 376 இ.த.ச. தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5.            கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் தலித் பெண் சுகந்தி (21). கடந்த 24.12.2012 அன்று சுகந்தியும் அவரது உறவினர் பாக்கியராஜ் என்பவரும் விருத்தாசலம், மணிமுத்தாறு படித்துறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு 10க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் வந்துள்ளனர். அக்கும்பல் தலித் பெண் சுகந்தியின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தியுள்ளனர். பாக்கியராஜ் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் குற்றஎண்.812/2012 பிரிவுகள் 147, 341, 506(2), 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

6.            திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள கிராமம் மெதூர். இக்கிராமத்தில் வசித்து வருகிற சாதி இந்து பெண் நந்தினி (21) என்பவர் தலித் இளைஞர் பிரவீன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் உறவினர்கள் கடந்த 17.01.2013 அன்று நந்தினியை கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரின் கழுத்தை அறுத்துள்ளனர். படுகாயமடைந்த நந்தினி சிகிச்சை எடுத்து வருகிறார். இச்சம்பவம் குறித்து கும்மிடிபூண்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.31/2013 பிரிவுகள் 341, 307 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

7.            வேலூர் அருகில் எரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசி. தலித் பெண் ரோசி, கந்தன் என்கிற சாதி இந்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கந்தனின் குடும்பத்தினரால் ரோசி கடந்த 15.12.2012 அன்று தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

8.            செஞ்சி, தும்பூர் காலனியைச் சேர்ந்த ரீட்டாராணி என்கிற தலித் பெண், மணிமாறன் என்கிற சாதி இந்துவை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தலித் பெண் ரீட்டாராணியை மணிமாறன் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து செஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

9.            கடலூர் மாவட்டம், பென்னடம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கிற தலித் பெண்ணை ஆடலரசன் என்கிற சாதி இந்து கடந்த 02.02.2013 அன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பென்னடம் காவல்நிலையத்தில் குற்றஎண்.50/13 பிரிவுகள் 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10.          பொன்னேரி பகுதியில் வசித்து வருகிற தலித் சிறுமி ரேவதி (15) என்பவரை 52 சாதி இந்து ஜெயசீலன் என்பவர் கடந்த 26.01.2013 அன்று கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து சோழவரம் காவல்நிலையத்தில் குற்றஎண்.80/2013 பிரிவு 376 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(10) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

11.          சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் சிறுமி இசக்கியம்மாள் என்பவரை சாதி இந்துவான ஞானதுரை என்பவர் கடந்த 27.01.2013 அன்று கடத்திச் சென்று கடுமையாக சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சி வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல்நிலையத்தில் பிரிவுகள் 366அ, 376 இ.தச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

12.          சேலத்தில் 16 வயது தலித் சிறுமி தீபா என்பவரை கடந்த 16.01.2013 அன்று இரண்டு சாதி இந்து வன்கொடுமை கும்பல் கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் குற்றஎண்.134/2013 பிரிவுகள் 366அ, 376 இ.த.ச.வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

13.          திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த தலித் பெண் ரஞ்சனி (16) என்பவரை சாதி இந்துவான சரவணன் என்பவர் அடித்து சித்திரவதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குற்றஎண்.3/2013 பிரிவு 366அ, 376 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

14.          திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த தலித் பெண் இளையநிலா என்பவரும் அவரது காதலரும் பேசிக்கொண்டிருந்தபோது 18.12.2012 அன்று அப்பகுதியைச் சேர்ந்த சாதி இந்துக்கள் அவரது காதலனை கடுமையாக தாக்கி இளையநிலாவை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில் குற்றஎண்.1243/2012 பிரவுகள் 341, 294(b), 323, 365, 506(2) இ.த.ச தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(1)(10), 3(1)(12) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்

Comments

15 comments

15
ஆறுமுகம்
ஆக மொத்தத்தில் காதலினால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
அதி அசுரன்
ஜாதி ஒழிப்புக் களத்தில் நாம் செய்ய வேண்டிய மிக மிக அவசியமான பணியை மிக அருமையாகச் செய்திருக்கிறார் எவிடன்ஸ் கதிர். அதுவும் உரிய காலத்தில் செய்திருக்கிறார். ஏப்ரல் 30 இல் பா.ம.க இராமதாஸ் நடத்த உள்ள அனைத்து சமுதாய ஆர்ப்பாட்டங்களுக்கு முன்பு இந்தத் தகவல்களை துண்டறிக்கைகள், சுவரெழுத்துக்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
Guest
நல்ல கட்டுரை.
Ramadas and his groups are proved as liars ...
பருத்தி வீரன்
சாதி ஒழிப்பு சூரப்புலிகள் - அருந்ததிய மக்கள் மீது எத்தகைய தீண்டாமை வன்கொடுமையைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும்; எத்தகைய சாதிமேலாதிக்கம் செய்கிறார்கள் என்பதற்கும் - ஆதாரமாகச் சில செய்திகளைத் தருகிறேன்.
அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள்
அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் ஒரு பகுதி;
“பெரியார் திராவிடர் கழகம் சார்பாக எங்கள் தோழர்கள் கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களின் தேனீர்க்கடைகளில் கையாளப்படும் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க இயக்கம் நடத்திக்கொண்டிருந்தபோது - மருதமலை செல்லும் வழியில் உள்ள தேனீர்க் கடைகளில் 3 குவளைகள் இருப்பதைக் கண்டனர். அருந்ததியர் தேனீர் குடிக்கும் குவளையில் நாங்கள் தேனீர் குடிக்கமாட்டோம் என்று பிற தலித் சாதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் - அருந்ததியர் தேனீர் அருந்துவதற்கு என்று மூன்றாவது குவளை நடைமுறைக்கு வந்ததென கடைக்காரர்கள் கூறினார்களாம்”
இந்த சாதி ஒழிப்பு சூரப்புலிகள்தான் சாதியை ஒழிக்க - மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார்களாம்.
எனக்குத் தெரிந்து நிறைய தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பிராமணப் பெண்களை மணந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சாதி ஒழிந்துவிட்டதா? தலித் சமூகத்தைச் சேர்ந்த சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் காணாமல் போனதுதான் மிச்சம்.
பறையர் சமூகப் பெண் ஒருவர் அருந்ததிய ஆணுடன் திருமணம் செய்து கொண்டதற்காக அருந்ததியப் பெண்களை பறையர்கள் கற்பழித்துச் செய்த கொடூரம்
சாதி ஒழிப்பு பேசும் திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் கரடிசித்தூர் கிராமத்தில் ஒரு அருந்ததியப் பையன் - ஒரு பறையர் பெண்ணோடு ஓடிப்போனதற்காக அருந்ததிய மக்கள் மீது எத்தகைய வன்கொடுமை ஊழிக் கூத்தாடினார்கள் என்ற விபரத்தைத் தருகிறேன்.
-
இரா.அதியமான்; எழில்.இளங்கோவன்; பேராசிரியர் கல்யாணி; தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன்; கவிதாசரண் இதழாசிரியர் கவிதாசரண்; பேராசிரியர் அ.மார்க்ஸ் போன்றோர் அடங்கிய உண்மையறியும் குழு கள ஆய்வு செய்து தந்த அறிக்கையின் சில பகுதிகள்:
-
கரடிசித்தூரில் பறையர் குடியிருப்பில் 1500பேர்கள் இருக்கிறார்கள். ஆதிதிராவிடர் குடியிருப்பை ஒட்டி உள்ள ஊர் கோடியில் நான்கு அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன.
2004ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதி - வீரன் என்ற அருந்ததியர் இளைஞன் பரிமளா என்ற பறையர் பெண்ணோடு திருமணம் செய்யும் நோக்கோடு ஓடிவிட்டார்.
ஆகஸ்டு 9ஆம் தேதி -
பரிமளா குடும்பத்தினர் இன்னும் 3 நாட்களுக்குள் இருவரையும் ஒப்படைக்கா விட்டால்-
அருந்ததியர் வீடுகளை ஏலம் விட்டு ஊர்ப்பொதுவுக்கு எடுத்துக்கொள்வோம்; உங்களை ஊரை விட்டே துரத்தி விடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.
ஆகஸ்டு 10ஆம் தேதி-
அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்களான கோவிந்தராசு; வீரனின் அப்பா பெரியசாமி; சித்தப்பா சின்னையன் ஆகியோர் சென்னைக்குத் தேடப் புறப்பட்டுவிட்டனர். நீங்கள் வருவதற்குள் உங்கள் பெண்களை நாசம் பண்ணிவிடுவோம் என மிரட்டியும் இருக்கிறார்கள்...
சொன்னபடியே-
12ஆம் தேதி இரவில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த பாக்கியராஜ்; செந்தில் முனுசாமி; மாரி; கோபி; மாரியாபிள்ளை ஆகிய ஆறு பறையர் இளைஞர்கள் நன்கு குடித்துவிட்டு அருந்ததிய வீட்டுமுன் போய் ஆபாசமாகத் திட்டியுள்ளனர். கதவு திறக்காததைக் கண்டு அருகிலிருந்த வண்டி நுகத்தடியைக் கழட்டி - வீட்டுக்கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து நுகத்தடியால் பெண்களைத் தாக்கி இருக்கிறார்கள்.
மாயவன் மகள் நதியா (17) என்பவரை, இவதான்டா அழகா இருக்கா முதலில் இவளைப் புடிங்க என்று சொல்லிக்கொண்டே அவரைக் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து ; ஆடைகளைக் கிழித்து ; பாலியல் உறுப்புகளைக் கடித்து; கசக்கி நாசப்படுத்தியுள்ளனர். சில நிமிடங்களுக்குள்ளேயேஅந்தப் பெண் மயக்கமடைந்துள்ளார்.
அங்கிருந்த வீரனின் தங்கை கோவிந்தம்மாளை (16) நிர்வாணப்படுத்தி மார்பகங்களைக் கடித்துள்ளனர்.
வீரனின் தம்பி மனைவியான கர்ப்பிணிப் பெண் கலா (19)வையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
சமீபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டவரும் பறையராகிய பாலமுருகனைத் திருமணம் செய்துகொண்ட அருந்ததியப் பெண்ணான வெள்ளையம்மாளை (29) அந்தப் பெண்ணின் கணவரைத் தூணில் கட்டிப்போட்டுவிட்டு அந்தப் பெண்ணின் பெற்றோர் முன்னிலையில் - நுகத்தடியால் வயிற்றிலும் இடுப்பிலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.
சிகிச்சை பலனின்றி; படுத்த படுக்கையாகி; கண்பார்வை இழந்து ஒருமாத காலத்திற்குள் வெள்ளையம்மாள் இறந்து போயிருக்கிறார்.
பள்ளர்; பறையர் முதலான தலித் பிரிவினர் அருந்ததியர் மீது தீண்டாமைக் கொடுமையை இழைத்து வருகின்றனர். பரமக்குடியில் பள்ளர்களால அருந்ததியப் பெண்ணான கருப்பி கொல்லப்பட்டதும்; சூலூரில் கொல்லப்பட்ட இந்திராணியும் சில உதாரணங்கள்.
பண்ருட்டிப் பகுதியில் இதேபோல் பறையர்களின் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் அருந்ததியர்.
இதர ஆதிக்க சாதியினர் பறையர்களிடம் எவ்வாறு நடந்துகொள்வார்களோ - அவ்வாறே பறையர்கள் அருந்ததியினரிடம் நடந்துகொள்வதை நாங்கள் கவனித்தோம் (இந்த அறிக்கையை ஏப்ரல் - 2004 அச்சமில்லை இதழில் வெளியிட்டுள்ளோம்)
மானப்பிரச்சனை என்பது பறையருக்கு மட்டும் தானா? மற்ற சாதியினருக்குக் கிடையாதா?
பறையர் பெண்ணை அருந்ததியர் ஒருவர் இழுத்துக்கொண்டு ஓடினால் அது பறையர்களுக்கு இழிவு - மானப்பிரச்சனை.
பறையர்கள் மற்ற சாதிப் பெண்களை இழுத்துக்கொண்டு ஓடினால் அது மற்ற சாதிகளுக்கு இழிவு இல்லையா? மானப்பிரச்சனை இல்லையா?
மற்றசாதிப் பெண்களை பறையர்கள் இழுத்துக்கொண்டு ஓடினால் அதற்கு பெயர் முற்போக்கு, புரட்சி; சாதி ஒழிப்பு எனப் போலி வேசம் போடும் தலித் தலைவர்களே-
கரடிசித்தூர் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த நதியாவுக்கும்; கோவிந்தம்மாளுக்கும் நீங்கள் செய்த பாலியல் கொடுமைகளையும்; வெள்ளையம்மாளைக் கொன்ற கொடூரத்தையும் - மற்றசாதிப் பெண்களைப் பறையர்கள் இழுத்துக்கொண்டு ஓடும்போது மற்ற சாதியினர் தலித் பெண்கள் மீது நிகழ்த்தினால் -
நதியாவை; கோவிந்தம்மாளைப் போல் கெடுக்கப்படாத தலித் பெண்கள் எந்த ஊரிலாவது இருக்க முடியுமா?
வெள்ளையம்மாளைப் போல ஒரு பாவமும் செய்யாத பறையர் பெண்களின் கொலைகள் ஊருக்கு ஊர் நடக்காதா?
எங்களுக்கு மட்டும்தானே தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் இருக்கிறது? வன்னியனுக்கு ஏது? செட்டியாருக்கு ஏது? சாகுல் செரீப்புக்கு ஏது? முதலியாருக்கு ஏது? என்ற தைரியமா?
தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் தலித்துகளுக்குக் கிடைத்த வரம்! அதைச் சாபமாக மாற்றிக் கொண்டு அழிந்து போகாதீர்கள்... தீண்டாமையை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு தீண்டாமையை மேலும் கெட்டியாக வளர்த்துவிடாதீர்கள்.
ஒரு கட்டம் வரைக்கும்தான் இந்த தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் உங்களுக்குப் பாதுகாப்புக் கேடையம்!
உங்கள் அராஜகங்கள் எல்லைமீறிப் போகிறபோது- பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களும் ஒருங்கிணைந்து நக்கீரன் இதழ் எழுதியிருப்பது போல் சட்டத்தைக் கையில் எடுத்தால்தான் தங்கள் மானம் மரியாதையைக் காத்துக்கொள்ள முடியும் என்ற முடிவுக்கு வந்தபின்பு -
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்ற பாரதி வழியில் துணிவு கொள்ள ஆரம்பித்தால்‡-
வரமாக வந்த வன்கொடுமைச் சட்டமே உங்களுக்கு சாபமாகிவிடும் என்பதைப் புரிந்துகொண்டு திருந்துங்கள்..
அப்போது உங்கள் மீதான இழிவைத் துடைக்க எங்கள் நேசக்கரங்களும் நீளும்.
raju
இரண்டரை கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு இனம் சமூகத்தில் குறைந்தளவு பொருளாதார வசதியோடும், தன்னம்பிக்கையோடும் வாழவேண்டும் என்று அந்த இனத்தைச் சார்ந்த ஒருவன் நினைப்பது சாதிவெறியல்ல. சமூகத்தில் இருந்து அந்த இனத்தையே அழித்துவிட வேண்டும், அந்த இனத்துப் பெண்களை நாசம் செய்து அவர்களை மனநோயாளிகளாக்க வேண்டும்... அவர்களை எப்போதும் தங்களுக்கு அடிமைகளாக, கொடிபிடிப்பவர்களாக வைத்திருக்கவேண்டும், வன்கொடுமைச் சட்டத்தைப் போட்டு அந்த இனத்து இளைஞர்களை வாழ்வியல் முடவர்களாக மாற்ற வேண்டும் என்று எண்ணுகிற திருமாவளவன், கருணாநிதி போன்ற ஒலகத் தலிவர்கள்தான் சாதிவெறியர்கள். நண்பர்களே புரிந்துகொள்ளுங்கள். தன் இனமும் வாழவேண்டும் என்பது சாதிவெறியல்ல! ஒரு இனத்தைத் திட்டமிட்ட அழிப்பதுதான் சாதிவெறி!
னேம்
குடும்ப வன்முறை வழக்குகளிலும்,விவாகரத்து வழக்குகளிலும் வன்முறை,வரதட்சணை கொடுமை போன்றவற்றின் காரணமாக பல பெண்கள் நீதி கோருகின்றனர். இதில் காதலித்து திருமணம் செய்து கொண்டோரும் உண்டு. இதில் ஒரிரு உதாரணங்களை எடுத்துக் கொண்டு காதல் திருமணம் செய்வது பெண்களுக்கு ஆபத்து என்று ஒருவர் கூறினால் எப்படி இருக்குமோ அது போல்தான் இந்தக் கட்டுரையும் இருக்கிறது.

தலித் பெண்கள் சாதி இந்துக்களை காதல் திருமணம் செய்து கொண்டால், காதலித்தால் பாதிக்க்ப்படுவார்கள் என்று இந்த ‘ஆய்வின்’ முடிவை புரிந்து கொள்ளலாமா.திருமண உறவில் வன்முறை என்பது தலித் அல்லாத ஆண்களால் மட்டும்தான், அதுவும் தங்களை மணந்து கொண்ட தலித் பெண்கள் மீது ஏவப்படுகிறதா.தலித் அல்லாத ஆண்களை மணந்து கொண்டு மகிழ்வோடு வாழும் தலித் பெண்கள் இல்லையா இல்லை எவிடென்ஸ் கதிர் போன்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் வாழ்கிறார்களா.

சாதி மறுப்பு திருமணங்களின் எண்ணிக்கை என்ன என்பதை கட்டுரை குறிப்பிடுவதில்லை. சரியான் ஆய்வு முறைகளை கையாளாமல் இது போன்ற ‘ஆய்வு’ களால் ஒரு பயனும் இல்லை.
c.thangaraju
தாழ்த்த பட்ட பெண்கள் அல்லது ஆண்கள் பாதிக்க படும் போது அவர்கள் தன்னை பாதுகாக்க கிடைத்த ஆர்புத ஆய்தம் வன்கொடுமைச்சட்டம்.அதன் பயனாகவே இன்று ஓரளவாவது தலித் மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.ஆனால் அதனை தவறாக சிலர் பயன்படுத்தும்போதும், அதனை காரணம் காட்டி சட்டத்தை மற்ற நினைப்பதும் ஒரு சமூகத்துக்கு செய்யும் துரோகமேயன்றி வேரில்லை.இன்றோ நேற்றோ இது வந்ததல்ல.பெரியார் அம்பேத்கார் போராடி பெற்று போட்ட பிச்சை. தாழ்த்த பட்ட சமூகம் இன்று இருக்கும் நிலை வேறு. முந்தய நிலை வேறு.செத்தவனுக்கு முக்தி அடய மேளம் அடித்தும் பிச்சை எடுத்தும் மலம் அள்ளியும் தலை குனிந்தும்
செருப்பு தைத்தும் யாரும் செய்யாத அசிங்கத்தொழிலை நிர்பந்தத்தாலும் எழ்மையினாலும் செய்த அல்லது செய்துகொண்டிருகிற ஒரு சமூகத்துக்கு கிடைத்த வாய்ப்பை எதையாவது சொல்லி கெடுத்து விடாதீர்கள் தோழர்களே.அப்படி ஒரு நிர்பந்தம் வந்தால் அதற்கு முன் அம்பெத்கார் ,பெரியார் போராட்ட வரலாறுகளை வாழ்கையில் ஒரு முறையாவது படியுங்கள்.
selvan
தலித்துகளைப் போல் மாட்டிக் கொள்ளாமல் தவறு செய்ய தெரியவில்லை என்பதுதான் இதிலிருந்து புரிகிறது.
எந்த தலித் அல்லாதவராவது ஒரு பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி தலித் பெற்றோர்களிடமிருந்து பணம் கறந்துள்ளாரா? இந்த இழி செயலுக்கு அவர்களின் ஜாதி சங்கமோ கட்ச்சியோ உதவி செய்திருக்கிறார்களா?
ஆனால் தலித்துகள் இப்படி செய்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
selvan
இது தொடரப்பட்ட வழக்குகள் மட்டுமே. நிரூபிக்கப்பட்ட குற்றங்கள் இல்லை.
தவறே செய்யாதவர்கள் மீது வழக்கு போடுவதும் தவறு செய்தவர்கள் சுதந்திரமாகத் திரிவதும் இங்கு ஒன்றும் புதிதல்ல.

நீங்கள் சொல்வதிலிருந்து தலித் அல்லாத பெண்கள் மட்டுமல்ல. தலித் பெண்களும் ஜாதி மாறி காதலிப்பது திருமணம் செய்வது ஆபத்தானது என்று புரிகிறது. எனவே தலித் பெண்களிடம் பிற சமூகத்து ஆண்களைக் காதலிக்காதீர்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அதை விட்டுவிட்டு காதல் மாநாடு நடத்துவது அவர்களின் மீது நீங்கள் கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
K Srinivasan
Ramadoss is under compulsion to run his party till his son gets a plum post in the Ministry- Central or State. He thinks that SC/ST community people are fools. If an Adhi dravida loves a vanniyar girl, he says that the love is for money sake. I bet Ramadoss that many vanniyar girls are suffering in the hands of your vanniyar boys for dowry than that of a dalit. Do not think that you are over smart and whatever you bluff in the open will be right and the people will be carried away by your gimmicks. Your party will become zero in case you play this rubbish caste politics.
Bala
இதை பர்கும் பென்கல் தான் கவனமக இருகவென்டும், முடிவில் பதிப்பு அவர்கலுககு தான். இதில் எந்த ஒரு தனி நபரைஇம் குரை சொலி பயன் இல்லை.
irshadahmed.M
islam is only one gad... allah only.. so u join..

i am basic "PALLAN" 2day i am good muslim.. so i am convert.
தமிழரசன் மள்ளர்
சக்கிலியர்களை அருந்ததியர்கள் என்று இயல்பாக இயல்பாக அழைக்கும் நீங்கள் தேவேந்திர குல வேளாளர்களை பள்ளர் என்ற இழி சொல்லால் அழைப்பது ஏன்?????கட்டுரையாளர் கதிர் கதிர் அவர்கள் என் வினாவிற்கு விடையளிப்பார் என நம்புகிறேன் !!!!!! /////பருத்தி வீரனும்தான்////
jaya magan
good work kathir. Please any one knows Dr.S.Ramadoss address please tell me. i want to send these to him
Sudalaimanian
மிக அருமையான உபயோகமானக் கட்டுரை. தமிழரசன் அவர்களுக்கு," தேவேந்திர குல வேளாளர்" என்ற சொல்லை விட " பள்ளர் " என்ற "மள்ளர்" மிகச் சிறப்பான சொல். "வேளாளர்" என்ற சொல் அடிமைகளைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதேயன்றி உழு தொழிலைக் குறித்து அல்ல.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.