28.11.2012- ஆம் நாளிட்ட தமிழக அரசியல் பக்கம் 44-ல் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் தலைவர் பொங்கலூர் மணிகண்டனின் பேட்டியும், அதற்கு எதிரான விவாதங்களும்:

1999 ஆம் ஆண்டு கோவை செழியனால் உருவாக்கப்பட்ட தலித் அல்லாதோர் பேரவையை மீண்டும் அவரது நினைவு நாளான மார்ச்சு 14ல் தொடங்கப் போகிறாராம் மணிகண்டன். அதற்குக் காரணமாக அவர் அளிக்கும் விளக்கம் தான் வேடிக்கைக்கும், நகைப்புக்கும் உரியதாக இருக்கிறது. பார்ப்பனரல்லாதார் இயக்கம் உருவான தமிழகத்தில் தலித் அல்லாதார் பேரவையாம்! ஈழத்து ஆறுமுகனாரும், தமிழகத்து வையாபுரிப் பிள்ளைகளும் நிரந்தரமாகச் சாகவில்லை. தமது சமூக சிந்தனையின் வாரிசுகளை விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை இராமதாசு, மணிகண்டன் போன்றவ‌ர்களின் செயல்பாடுகள் நினைவூட்டுகின்றன.

ramadoss_castehindus_640

காரணம்: 1

* கலப்புத் திருமணங்கள் அல்லது சாதி மறுப்புத் திருமணங்களால் தங்கள் சாதியின் பாரம்பரியப் பெருமைகளும், தனித்தன்மைகளும் சீரழிந்து போய்விடுகிறது.

நமது விளக்கம் :

* தலித் சமூக இளைஞர்கள் பலரும் சாதி ஒழிப்புக்கான அரசியல் கருத்துகள் மேலோங்கி திட்டமிட்டுக் காதலிப்பதில்லை. இதே போலத்தான் கொங்குவேளாளர் உள்ளிட்ட பிற சமூகத்துப் பெண்களும், ஆண்களும்கூட திட்டமிட்டுக் காதலிப்பதில்லை. உண்மையில் சாதி மறுத்து, காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பலர் சமூக, அரசியல் மாற்றத்துக்கான போராட்டங்களிலோ, இயக்கங்களிலோ முழுமையாகவோ, பகுதியளவிலோ கூட பங்கேற்பதில்லை. அதற்காக சாதிமறுப்புத் திருமணங்களை ஆதரிக்காமல் இருந்து விட முடியாது. இந்து சமூக அமைப்பில் சாதி மறுப்புத் திருமணங்கள், சமூக மாற்றத்துக்கு குறிப்பிட்ட அளவில் பங்காற்றுகிறது என்பதை கருத்தில் கொண்டே எங்களைப் போன்றவர்கள் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைப்பதற்கும், ஆதரிப்பதற்கும் காரணம் ஆகும்.

* காதல் என்பது வயது, பருவம், பணியிடம், கல்வி கற்கும் சூழல், பழகுவதில் ஏற்படும் நெருக்கம், அன்பு, இரக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் இளைஞர், இளைஞிகளிடம் கருக்கொண்டு உருவாகிறது. இதை ஏதோ தலித்துகளின் திட்டமிட்ட சதியாக மணிகண்டனும், மருத்துவர் இராமதாசும் புரிந்து கொண்டிருப்பது அபத்தமாகும். காதல் திருமணங்களை / சாதி மறுப்புத் திருமணங்களை சமுதாய வரலாற்று வளர்ச்சியின் விரும்பத்தக்க அம்சமாக, பெரியார், அம்பேத்கர் போன்றவ‌ர்களின் சாதி ஒழிப்புக் கருத்தின் வெற்றியாக, மார்க்சிய, தமிழ்த் தேசிய அரசியலுக்கு உந்து சக்தியாக பார்க்க மறுத்து, ஏதோ தங்கள் சாதியின் பாரம்பரியம், பெருமை இவற்றுக்கே கேடு நேர்ந்துவிட்டதாகப் புலம்புகிறார்கள். கொங்கு வேளாளப் பெண்களைத் திருமணம் செய்யும் தலித்துகள், அவர்களது சொத்தில் பங்கு கேட்பதாக வேறு பிதற்றுகிறார்கள்.

* கொங்கு வேளாளர், வன்னியர், தேவர் உள்ளிட்ட‌ சாதிகளின் பாரம்பரியப் பெருமைகளைச் சற்று பார்ப்போமா! கொங்கு மண்டலம் பழைய காலத்தில் வானம் பார்த்த புஞ்சை நவதானிய பூமி. மரக்கலப்பைகளால் மாட்டைக் கொண்டு ஏர்பூட்டி, நாள் முழுவதும் உழுது விதைத்துவிட்டு, மறுமழை வரும் வரை விதை முளைக்குமா, பயிர் பிழைக்குமா என்றிருந்த நிலைதான் இவர்களது வேளாண்மைப் பாரம்பரியம். ஆனால் இன்று அந்த நிலையா நீடிக்கிறது? வரகும், கேழ்வரகும், சாமையும், அவரையும், துவரையும், கம்பும், மக்காச்சோளமும் பயிரிட்ட தங்கள் நிலங்களில் இன்று இருபோகம், முப்போகம் நெல்லும், கரும்பும், மஞ்சளும், வாழையும், பருத்தியும் விளைவித்து தங்கள் பாரம்பரியத்தை மாற்றிக் கொண்டது எப்படி? ஏர்க்க‌ல‌ப்பையிலிருந்து டிராக்ட‌ர் உழ‌வுக்கும், க‌வ‌லை, சால், ஏற்ற‌ம் இவ‌ற்றிலிருந்து மின்சார‌/டீச‌ல் மோட்டார் பாச‌ன‌த்துக்கும் மாறிய‌து எத‌னால்?

* நாட்டு வெள்ளாடும், நாட்டுக் கோழியும், நாட்டுப் பசுமாடும் வளர்த்த இவர்கள் இன்று சிந்துமாடும், பிராய்லர் கோழிப் பண்ணைகளும், சீனப் பன்றிகளும் வளர்ப்பது எவ்வாறு நிகழ்ந்தது?

* வெள்ளைச்சேலை உடுத்தி கைம்பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்த இவர்கள், இன்று அதே சமுதாய கைம்பெண்கள் பல வண்ண ஆடை உடுத்துவதும், மறுமணம் செய்து கொள்வதும் வீட்டுக்கு வெளியே தொழில், வணிக, கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்வதும் நடக்கிறதா இல்லையா? இதையெல்லாம் கூடாது என்ற பொருளில் நாங்கள் வாதிடவில்லை. கண்மூடித்தனமான‌ பழக்கவழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக வேண்டும் என்று தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், மேதை அம்பேத்கரும் இன்னபிற வணக்கத்துக்குரிய சமூக முன்னோடிகளும் பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் சொன்னபடியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் காலமாறுதலில் அனைத்தையும் ஏற்றுக் கொண்ட இந்தப் பாரம்பரிய சிசுக்கள், சாதி மறுப்புத் திருமணத்தில் மட்டும் தங்கள் பாரம்பரியம் அழிந்துவிடுவதாக உளறுவதுதான் நகைச்சுவையாக இருக்கிறது.

* குடும்பங்களில் திருமணம் என்றதும் உங்கள் பங்காளிகளை அழைத்து, வாசலில் பந்தக்கால் நட்டு பந்தல்போடுவதும், மூன்று மாதத்திற்கு முன்னதாகவே திருமண விருந்துக்காக பங்காளி வீட்டுப் பெண்களைக் கொண்டு நெல் அவிப்பதும், கூட்டாக காய வைப்பதும், பின்னர் உரலில் அதை இடித்து அரிசியாக்குவதும் தானே இவர்களது பண்பாடு, பாரம்பரியம். ஆனால் இன்று எப்படி திருமணங்களை நடத்துகிறார்கள்? வானுயர்ந்த அழகிய திருமண அரங்குகளில் அனைத்து உறவினர்களைப் போலவே திருமண வீட்டாரும் சென்று, மணமக்கள் மணம்முடிந்தவுடன் சாப்பிட்டுவிட்டு தங்கள் வீட்டுக்கு வந்துவிடுகிற அளவுக்கு, வாடகை அரங்குகள், ஒப்பந்த சமையல், தொலைபேசியிலே அழைப்புகள் என்று இன்றைய திருமண முறைகளில் ஒவ்வொரு நிலையிலும் மிகப்பெரிய மாற்றங்கள். போட்டோ மட்டும் எடுத்த காலங்கள் போய், வீடியோக்களால் ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியும் ஒரு சிறுபடமாக மாறவில்லையா? எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய இவர்களது திருமண முறையில் உள்ள பாரம்பரியம்தான் இன்றும் நிலவுகிறதா?

* உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மணமகன் வீட்டாரிடம் பரிசப் பணமாக, திருமணச் சீராக பல ஆயிரம் வாங்கிய நபர்கள், இன்று மணமகனுக்கு லட்சங்கள், கோடிகளைப் பணமாக, நகைகளாக, கார்களாக சீர்வரிசை செய்கிறீர்களே! உங்க‌ள் பாரம்பரியம் ஏன் நிலைக்கவில்லை?

* புறாக் கால்களில் தொடங்கி, 5 பைசா அஞ்சல் அட்டை வழியாக தொடர்ந்த நமது கடிதப் போக்குவரத்து, அஞ்சல் பெட்டியில் போட்ட பிறகு உரியவரைச் சேர ஒரு வாரம், குறைந்தது மூன்று நாட்கள் ஆகும். அதற்கான பதிலைப் பெற இன்னும் ஒரு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று அலைபேசியும், இ‡மெயிலும், எஸ்.எம்.எஸ்-ம், ஏ.டி.எம். வங்கிச் சேவையும் நமது பாரம்பரியத்தை தவிடுபொடி ஆக்கவில்லையா?

* தாழ்த்தப்பட்டவன் குதிரை ஏறிச் சென்று திருமணம் செய்யவும், கட்டை வண்டியின் இருப்பிடத்தில் உட்கார்ந்து வண்டி ஓட்டவும் இருந்த தடைகளைத் தகர்த்து தொழில்நுட்பமும், அறிவியலும் தாழ்த்தப்பட்டவர்களை விமானிகளாகவும், பேருந்து ஓட்டுநர்களாகவும் மாற்றிவிட்ட பிறகு, தலித்துகள் ஓட்டுனர்களாக இருக்கும் வாகனங்களில் பயணம் செய்ய மறுத்து, கொங்குவேளாளர்கள் கால்நடையாக நடந்தேதான் வெளியூர்களுக்குச் செல்கிறீர்களா?

* பதுமைக்கூத்து, தெருக்கூத்து, மேடை நாடகம் என்றிருந்த கலாச்சார வடிவங்களில் பேசாப் படம் தொடங்கி, மூன்று மணிநேரம் ஓடிய முழுநீள வெள்ளைப்படத்தில் தொடர்ந்து, இன்றைக்கு வீட்டுக்குள்ளேயே வீட்டு திரையரங்குகள் (home theater) என்று சினிமாவும், சீரியலுமாக, உலகையே வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டு கொங்கு வேளாளர்கள் உள்ளிட்ட மணிகண்டன் பட்டியலிடும் பெரும்பான்மைச் சாதிகள் தங்கள் நவீன வாழ்க்கையைத் தொடரவில்லையா?

* பழம்பாசி இலையை கசக்கியும், அரைத்தும் குளித்த நீங்கள், சீயக்காய்க்கு மாறி இன்று விதவிதமான வாசனை சோப்புகளையும், சாம்பு வகைகளையும் பயன்படுத்தவில்லையா? பழைய நாட்டு ஓட்டை, கல்லில் உரசிக் குழம்பாக்கி தலைவலிக்குப் போட்டுக் கொண்ட நீங்கள், இன்று நவீன அலோபதி மருத்துவத்தின் முகடுவரை சென்று முழு உடல் பரிசோதனை மையங்களின் ஆளுகைக்குள் அமிழ்ந்து போய்விடவில்லையா? செக்கில் எண்ணெய் ஆட்டிய பழைய நிலையிலிருந்து இன்றைக்கு தொழில்துறையானது ஒவ்வொரு தொழிலும் பலபடித்தான பரிமாண‌ங்களைக் கடந்து வளர்ந்துள்ள வளர்ச்சிகளை அங்கீகரித்து, அதன் பயனையும், லாபத்தையும் நுகர மறுத்து முடங்கியா கிடக்கிறார்கள் கொங்கு வேளாளர்கள்?

* களிமண்ணில் படம் வரைந்து எழுதிய நிலைபோய், பனை ஓலையில் ஆணியால் எழுதியும், சாணிப்பாலையே மையமாகக் கொண்டு பத்திரங்கள் எழுதிய நமது பாரம்பரியம், இன்று அச்சு எழுத்து முறையே தகர்த்தெறிந்து கணினி அச்சு முறையும், அதனால் பல வண்ணம் பிரமாண்ட அச்சுத் தொழில் நுட்பமும் வந்துவிட்டதே! உங்கள் பாரம்பரியத்தில் கணினி அச்சு முறை பாரம்பரியச் சொத்தோ கொங்கு வேளாளர்களே?

pongalur_manikandan_350* கேழ்வரகு, கம்பங்களி உருண்டையில் தயிர் ஊற்றி உடைத்துச் சாப்பிட்டு, கொள்ளுத் துவையலை தொட்டுக் கொண்டு சாப்பிட்ட கொங்கு வேளாளர்களின் பரம்பரை இன்று ஆந்திரப் பொன்னி, கர்நாடகப் பொன்னி, வெள்ளைப் பொன்னி அரிசியை, தேடித்தேடி வாங்கி, தலைச்சேரி ஆட்டுக்கறிக் குழம்பிலோ, ஆங்கிலேயர் காய்கறிகள் என்று சொல்லப்படும் பீட்ரூட், காரட், முட்டைக்கோசு போன்ற காய்கறிகளிலோ, மைசூர் துவரம்பருப்பில் வெளிநாட்டு பவுடர் பாலில் எடுத்த நெய்யைப் போட்டு குழையக் குழைய சாப்பிடுகிறீர்களே! இப்போது எங்கே போனது உங்கள் உணவுப் பாரம்பரியம்?

மரபீணி மாற்றுவிதை விவசாயம் உங்கள் பாரம்பரியத்தின் பரம்பரை வாரிசையே அழித்து உங்களை ஆண்மையற்றவர்களாகவும், உங்கள் வீட்டுப் பெண்களை மலடியாக்கவும் விரைந்து வந்து கொண்டிருக்கிறதே! என்ன செய்யப் போகிறது உங்கள் பாரம்பரியமும், பண்பாடும்? இந்திய அரசுக்கு எதிராக மான்சாண்டோ விதைகளுக்கு எதிராக கொங்குவேளாளர் பேரவையின் சுண்டுவிரலாவது அத்திசை நோக்கி நீளுமா?

* நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா வட இந்திய மாநிலம் ஒன்றைச் சேர்ந்த நடிகை ஜோதிகாவைத் திருமணம் செய்து கொண்டபோது, உங்கள் கொங்கு வேளாளரில் எத்தனை பேர், அத்திருமண விருந்தில் கலந்து கொண்டு நாக்கைச் சுழற்றிச் சுழற்றி ருசித்துச் சாப்பிட்டீர்கள்... நடிகர் சூர்யாவிடம் உங்கள் பாரம்பரியப் பெருமை பற்றி வாய்திறக்காதது ஏன்? இந்தியாவையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்துவிட்டும், விற்றும் ஏகாதிபத்தியச் சேவை செய்யும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கொங்குவேளாளர் பெண்ணான நளினியைத் திருமணம் செய்து கொண்டபோது உங்கள் பாரம்பரியம் காற்றில் பறக்கவில்லையா?

* பறையரும், பள்ளரும், சக்கிலியரும் - கொங்கு வேளாளர், வன்னியர், கள்ளர் சாதி உள்ளிட்ட இதர சாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதால் மட்டும் தான் உங்கள் பாரம்பரியம் கெட்டுவிடுமோ? தலித்துகள் கல்வி கற்பதும், அரசு தனியார் துறைகளில், வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் பணிக்குச் செல்வதும், புதிய உடைமை வர்க்கங்களாக வளருவதும், அதன் பயனாக சமூக வளர்ச்சியின் வெளிப்பாட்டில் எங்கோ சிலர் சாதி மறுத்து காதலித்து திருமணம் செய்து கொள்வது மட்டும் எப்படிப் பாரம்பரிய மீறலாகும்?

* எல்லாவற்றிலும் தங்கள் பாரம்பரியத்தை மீறிய கொங்கு வேளாளர்கள் உள்ளிட்ட தலித் அல்லாத சாதிகள், தலித்துகளோடு திருமணம் செய்து கொள்வதை மட்டும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்று கூக்குரலிடுவது ஏன்?

* பழைய பிரபுத்துவ சாதிய வேளாண்மை உற்பத்திக் காலங்களில் தலித் பெண்களை திருட்டுத்தனமாகவும், கட்டாயப் பாலுறவுக்கு உட்படுத்தியும் தங்கள் காமத் தின‌வை, திமிரை தீர்த்துக்கொண்ட பாரம்பரியம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. இதேபோல் கொங்கு வேளாளர் உள்ளிட்ட வேளாண்மை உடைமைவர்க்க சாதிப் பெண்கள் தங்கள் கணவனிடம் கிடைக்காத காம நுகர்ச்சியின் பற்றாக்குறையை தங்கள் வீடுகளில் / பண்ணைகளில் / தோட்டங்களில் வேலை செய்த தலித் ஆண்களைச் சரிசெய்து வைத்துக் கொண்டு, தங்கள் வீட்டு ஆண்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக காம இச்சையை நுகர்ந்த ஆயிரமாயிரம் நிகழ்ச்சிப் போக்குகள் தான் தமிழ்ப் பெரும்பான்மைச் சாதிகளின் பாரம்பரியமும் என்பதை நமது சாதி வரலாறு நெடுகினும் பார்க்கலாம். இன்று, அந்த நிலைமை மாறி, சாதி மாறிக் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் வெளிப்படையாக நிகழ்கிறது.

* நம்முடைய வட்டாரக் குலதெய்வங்கள் பலவற்றின் வரலாற்றைத் தோண்டி துருவினால், அத்தனையும் சாதி மீறிக் காதலித்து திருமணம் செய்து கொண்ட வரலாறுகள் தான். காத்தவராயன் கதை, முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை, வெள்ளையம்மாள் வெள்ளைச்சி கதை, வேம்பையன் தங்கையம்மாள் கதை, இப்படிப் பல கதைகளும் வரலாறுகளும் சாதி மீறியும், மாறியும் காதலித்த கதைகள் தான். தற்போது இளவரசன் - திவ்யா சாதிமறுப்புத் திருமணத்தைக் காரணமாகக் காட்டி, கொள்ளை, தீவைப்பு, சூறையாடல் நடந்த நத்தம் காலனி மக்களில் பல பெண்களின் பெயர்கள் கொடகாரி என்றும், ஆண்களின் பெயர் கொடகாரன் என்றும் இருக்கிறது. இதன் வரலாறு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கொடகாரியை தலித் கொடகாரன் காதலித்து மணந்து வாழ்ந்திருந்த வரலாற்றில், கொடகாரி வன்னிய சாதிவெறியர்களால் கொலை செய்யப்பட்டு, அவளைத் தெய்வமாக வணங்கும் தலித்துகள் (பறையர்கள்) தங்கள் வீட்டில் பிறக்கும் பெண்ணொருத்திக்கு கொடகாரி என்று பெயரிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

* கல்வி, அரசு, தனியார்துறை வேலை வாய்ப்பு யாவற்றிலும் முன்னிலும் கூடுதலான எண்ணிக்கையில் தலித்துகளும், இதர சமூகப் பெண்களும் ஒப்பீட்டளவில் வெளியே வந்துள்ளார்கள். இதழியல், இணையதளம், தொலைக்காட்சி, சினிமா, அலைபேசி போன்ற பல நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இளைஞர்களைச் சுண்டியிழுக்கவும், ஒருவருக்கு ஒருவர் நெருங்கிப் பழகவும், புரிந்து கொள்ளவும், அன்பு செலுத்தவும், ஆதரவுக்கரம் நீட்டவுமான போக்கு, மெல்ல மெல்ல காதலாகிக் கசிந்துருகி, கலந்துறவாடி திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது. இப்படிப்பட்ட திருமணங்கள் செய்து கொள்பவர்கள் தங்களது காதலை இருவேறு சாதிகளின் காதலாகப் பார்ப்பதில்லை. இருபால் அன்பின் காதலாகப் பார்க்கிறார்கள். ஆணும், பெண்ணுமாக இளைஞனும், இளைஞியுமாக காதலிக்கிறார்கள். இப்படிக் காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் தொடர்புடைய இருவரின் மனித உரிமைகள், சனநாயக உரிமைகள் ஆகும். இதை சம்பந்தப்பட்ட இருவருக்கும் வெளியே இருக்கிற நபர்கள், 'ஆகா இது எங்கள் சாதிக்கு / பெருமைக்கு, பாரம்பரியத்துக்கு எதிரானது' என்று பேசுவதும், எழுதுவதும், கூச்சலிடுவதும் அத்தகையவர்களின் சாதி வெறியையே வெளிப்படுத்துகிறது.

சாதிவெறியைத் தூண்டி தன் சாதி மக்களைத் திரட்டி, தலித்துகளின் மீது தாக்குதல் தொடுத்து, தன் சாதி ஓட்டுக்களைப் பெற்று, ஊராட்சி மன்றத் தலைவராக ஒன்றிய கவுன்சிலராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக உயர்ந்து, உயரத்துக்கேற்ப கொள்ளையடித்துப் பணம், சொத்து சேர்க்க இந்த சாதிவெறி மூலதனமாகுமேயல்லாமல், தன் சொந்த சாதி ஏழைக்கு, தொழிலாளிக்கு, கடனில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிக்கு மயிரளவும் உதவிட துணை செய்யாது!

* கொங்குவேளாளர், வன்னியர் சாதிப் பெண்கள், தங்கள் சாதி ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், உங்கள் சாதிகளில் மணமகளுக்கு கொடுக்க வேண்டிய வரதட்சணை, சீர்வரிசை, பணம், நகை, கார், பாத்திரம் பண்டம் இவற்றையெல்லாம் சராசரி ஏழை கொங்கு வேளாளப் பெண்களோ, வன்னியப் பெண்களோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. திருமணம் ஆகாமலே முதிர்கன்னிகளாகத்தான் பலரும் தங்கள் இளமையைத் தொலைக்க வேண்டும். அறிவும், தெளிவும் உள்ள உங்கள் சாதிப் பெண்களில் சிலர் தனக்கான ஆண் துணையை தேடுவதற்கு வரதட்சணையை முன்னிபந்தனையாக, தடையாக இருப்பதால், அவர்கள் தலித்துகளை காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். 2000 வன்னியர் பெண்களை 2000 தலித் இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்து விட்டார்கள் என்று கதறுகிறார் டாக்டர் இராமதாசு. இதன் உண்மையான பொருள் 2000 வன்னியப் பெண்கள், முற்போக்காளர்களாக அம்பேத்கர், பெரியார் கொள்கைகளுக்கு வலிமை சேர்க்கிறவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதே ஆகும். இதில் வருத்தப்படுவதற்கோ, வேதனைப்படுவதற்கோ, கோபப்படுவதற்கோ எந்தவிதமான நியாயமான, அறிவியல் பூர்வமான காரணமும் இல்லை, சாதி வெறியைத் தவிர.

* ஏன் இந்தச் சாதிவெறி? பறையர், பள்ளர், அருந்ததியர், வண்ணார், நாவிதர் போன்ற சாதியினர் உங்கள் பார்வையில் என்றென்றும் அடிமைச் சாதிகள், சேவைச் சாதிகள். இவர்கள் இப்படி அடிமைத் தொழிலாளிகளாக‌, கூலித் தொழிலாளிகளாக‌, சேவைத் தொழிலாளிகளாக‌ சில நூறாண்டுகாலமாக ஊதியமின்றியும், குறைந்த ஊதியத்திற்கும் ஏன், எதற்கு என்று கேட்காமல் தாங்கள் காலால் இட்ட வேலையை, தலையால் செய்து தாங்கியதால் தான் உங்களின் உயர் சாதிப் பெருமையும், பாரம்பரியமும் நீடித்து வந்தது; வருகிறது! இது உடைந்து நொறுங்குகிறபோது பாரம்பரிய சாதிப் பெருமை பேசி  வானத்துக்கும் பூமிக்குமாய் எகிறிக் குதிக்கறீர்கள்!

முட்டாள்களே! சூழ்ச்சிக்கார சுயநலப் பேய்களே! உங்கள் சாதிப் பாரம்பரியப் பெருமை காக்க தலித்துகள் ஏண்டா உங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும்? நாங்களும், எங்கள் முன்னோர்களும் பிறந்த தமிழ் மண்ணில் தான் நீங்களும் பிறந்தீர்கள். ஆனால் வரலாற்றை மாற்றி தமிழ்மண்ணின் பூர்வகுடி என்று நீங்கள் உங்களைப் பற்றிப் பேசிக் கொள்கிறீர்களே! நாங்கள் என்ன மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களா? மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் காலில் விழுந்து மண்டியிட்டுக் கிடப்பதோடு, ஆரியத்தின் அடிமடியிலேயே கைவைத்து, ஆதிக்க கோட்டைகளை தகர்த்த தத்துவ மரபினரான தொல் தமிழர்களை (தலித்துகளை) அன்னியர் போல சித்தரிக்கும் உங்கள் சிறுமைப் புத்தி தமிழ் மண்ணில் ஒரு நாளும் வெற்றி பெறாது.

* தீண்டாமை, கீழ்ச்சாதி, பிறவி ஏற்றத்தாழ்வு, உயர் சாதிப் பெருமை பேசும் மணிகண்டன் உள்ளிட்ட சாதி இந்துக்களே! சாதித் தமிழர்களே! தலித் பெண்கள் வயலில் நடவு செய்யும்போதும், களை பறிக்கும்போதும், அடர்ந்த கரும்புத் தோட்டத்தில் தோகை பிரித்து விடும்போதும், கரும்பு வெட்டும் போதும், கால்வ‌ழியே தான் சிறுநீர் கழிக்கிறார்கள். நீங்கள் பயிருக்குப் போடும் யூரியாவோடு எங்கள் தலித் பெண்கள் விட்ட சிறுநீரில் உள்ள உப்பும் (யூரியா) சேர்ந்து தான் நெல்லும், கரும்பும், வாழையும், மஞ்சளும், பருத்தியும் விளைகிறது என்பதை உங்கள் அறியாத மூளைகளுக்கு அறியச் சொல்கிறோம். தலித் பெண்ணின் சிறுநீரில் விளைந்த அரிசியும், கரும்பும், வாழையும் இனிக்கிறபோது, தலித் பெண்ணும் உங்கள் சாதி ஆணும், தலித் ஆணும் உங்கள் சாதிப் பெண்ணும் கலந்து இணைந்து வாழுகிற வாழ்க்கை மட்டும் எப்படிக் கசக்கும்? பெரியார் மொழியில் பாரம்பரியமாவது வெங்காயமாவது! உடைபடட்டும் பாரம்பரியம்! ஒழியட்டும் சாதியம், தழைக்கட்டும் சாதி மறுப்புத் திருமணங்கள்! மலரட்டும் தமிழ்த்தேசம்! மிளிரட்டும் மானுடம்!

2. காரணம்:

* வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே அச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும்.

* “தீண்டாமைக் கொடுமையே செய்யாத நிலையில் பிறசாதியினர் மீது பொய்யாகப் புகார் கொடுக்கிறார்கள். இச்சட்டத்தால் தலித் அல்லாத 10 பிறசாதியினர் அதாவது பெரும்பான்மைத் தமிழ்ச் சாதியினர் அச்சுறுத்தப்படுகிறோம், பாதிக்கப்படுகிறோம். எனவே இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

நமது விளக்கம்:

இதன் பொருள் 'நாங்கள் எத்துணை மேலவளவுகளையும், திண்ணியத்தையும் தருமபுரிகளையும் நிகழ்த்தினாலும் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஏனெனில் நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். எங்களின் ஆளுகைக்கு கட்டுப்பட மறுக்கிறபோது, எங்களின் அடக்குமுறைக்கு நீங்கள் உட்பட்டு, கட்டுப்பட வேண்டுமே தவிர, சட்டத்தின் துணை கொண்டு நீங்கள் தப்பிப்பதையோ, பாதுகாப்பு தேடிக் கொள்வதையோ, சட்டத்தின் வழியாக எங்களுக்கு சமமாக உங்களை நடத்த வேண்டும் என்பதையோ நாங்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள முடியாது' என்பது தானே!

* நாட்டில் இருக்கிற கிரிமினல், சிவில் சட்டங்களும், நாடாளுமன்ற, சட்டமன்றங்களும், நீதிமன்றங்களும் அதிகாரவர்க்க நிர்வாக அமைப்பு முறைகளும் எங்களுக்கு (ஆதிக்க சாதிகளுக்கு) மட்டும் சேவை செய்வதற்கானதே என்றும், மாறாக நாங்களாகப் பார்த்து உங்களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுத்தால் மட்டும் அதைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, உங்களுக்கென்று, எங்களைக் கட்டுப்படுத்துகிற தனிச் சட்டங்கள் இருப்பதை ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்பதையே நண்பர் மணிகண்டன் நமக்குச் சொல்கிறார்.

* நண்பரே, உலகமயமாதல் கொள்கைக்கு முன்பு 165 வடிவங்களில் தமிழகத்தில் தீண்டாமை நிலவியது. 1990க்குப் பிறகு அதுவே 200க்கும் மேற்பட்ட வடிவங்களில் கோலாச்சுகிறது. ஊராட்சி மன்றங்களில், பொது இடங்களில் வைக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில், ஊராட்சி மன்ற சிமெட்டி (பெஞ்சில்) பலகையில் உட்கார்ந்து தலித்துகள் படம் பார்ப்பதும், தலித்துகள் செல்போனில் பேசுவதும், இருசக்கர மோட்டார் சைக்கிளில் பயணிப்பதும் கூடாது போன்ற பல புதிய வடிவ‌ங்களை தீண்டாமை எடுத்துள்ளது.

* அனைவருக்கும் வாடகைக்கு அளிக்கப்படும் திருமண அரங்குகள், நம்பியூரில் அருந்ததியருக்கு மறுக்கப்பட்டதும் நவீன தீண்டாமைதான்.

கயர்லாஞ்சி கிராமத்தில் நடந்தேறிய கொடுமை* இத்தகைய பாகுபாடுகளுக்கு, கொடுமைகளுக்கு குறைந்த அளவு தீர்வு காணவும், குற்றங்களைக் களையவும் தான் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆண்டு இந்திய அளவில் கொண்டு வரப்பட்டது. ஆதிக்க சாதியினரால் பணியிடத்திலோ, பொது இடத்திலோ, தனியிடத்திலோ, அவமதிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், ஆயுதம் கொண்டு தாக்கப்படுவதும் மட்டுமே இங்கே தீண்டாமையின் கோரத்தாண்டவமல்ல! ஆதிக்க சாதிக்கு கூலி வேலைக்குப் போகாமல் சொந்த நிலத்தில் தலித்துகள் சாகுபடி செய்யும் சுதந்திரத்தைக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று தான் 200 செய்து சாதி வெறியர்கள், மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சி என்கிற கிராமத்தில் பய்யலால் என்ற தலித் ஒருவரின் மனைவியையும், மகளையும் சாலையில் தரதரவென‌ இழுத்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்து சாதிவெறியாட்டம் போட்டனர். வேலைக்குப் போக மறுத்தாலும் வன்கொடுமைகள் வீடுதேடி வரும் நிலைமையே இன்னும் தொடர்கிறது.

* இத்தகைய நாட்டில் ஒரு சில கொங்கு வேளாளரும், ஒரு சில வன்னியரும், ஒரு சில கள்ளர்களும் வேண்டாம் என்று சொன்னவுடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எவ்வளவு வன்மம் இருக்கும் என்பதை தயவு செய்து ஜனநாயக ஆற்றல்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

* தலித்துகள் பொய்ப் புகார் கொடுத்தால், அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் போடுவது அவ்வளவு எளிதானதா? உண்மையான குற்றங்களுக்கே புகாரை வாங்க மறுக்கும் போலீசார் பொய்ப்புகார்களை அவ்வளவு எளிதில் வழக்காகப் பதிவு செய்து விடுவார்களா? ஒரு புகார் பெய்யா / மெய்யா என்பதை புலனாய்வு அதிகாரியும், நீதிமன்றமும் தான் இறுதி செய்ய வேண்டுமே தவிர, புகாருக்கு உள்ளானவரே, பொய்ப் புகார் என்பதை எந்த தர்க்கத்தின் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

* சாதாரணக் கொலை வழக்குகளில் கூட கொலைக் குற்றம் செய்தவன், தான் கொலையே செய்யவில்லை, என் மீது போடப்பட்டது பொய்வழக்கு என்று தான் வாதிடுகிறான். அவன் அப்படிச் சொன்ன மாத்திரத்திலேயே IPC- தண்டனைச் சட்டப்பிரிவுகளையே ரத்து செய்ய வேண்டும் என்று ஒருவன் கோருவான் என்றால் அப்படிக் கோருபவனை பைத்தியக்காரன் என்று தான் உலகம் சொல்லும்.

* இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிகள், மனித உரிமைப் போராளிகள், சாதி ஒழிப்புப் போராளிகள் எனப்பலர் மீதும் பல பொய்யான வழக்குகளைப் போட்டு, பல ஆண்டுகள் சிறைவாசிகளாகவே வைத்திருக்கின்றார்கள். அவர்கள் கூட IPC- யையே எடுத்துவிட வேண்டும் என்று கோரவில்லை. தடா, பொடா போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் மட்டும் அரசியல் பழிவாங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதால் ஜனநாயக ஆற்றல்கள் போராடி அச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

* பொய்யான புகாரில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூட எப்படி IPC- யையே ரத்து செய் என்று கோராமல், வழக்காடி தன் மீதான புகார் பொய்யென நிரூபணம் செய்து விடுதலை ஆகிறாரோ, அப்படித்தான் தீண்டாமை / வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் வழக்கு நடத்தி, குற்றமற்றவரா / தண்டிக்கத்தக்கவரா என்ற‌ நீதிமன்றத்தின் முடிவுக்கு உட்பட வேண்டுமே தவிர, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று சொல்வதும், அனைத்துப் புகார்களும் பொய்யானவை, தலித் அல்லாதவர்கள் அனைவரும் சமரச சன்மார்க்கவாதிகள் என்று பேசுவதை தருமபுரி தீவைப்புகளுக்குப் பிறகும் ஒப்புக் கொள்ள முடியாது.

* வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை நீதிமன்றத்தில் தோல்வியடைவதற்குக் காரணம், புகாரின் பொய்த் தன்மையல்ல; மாறாக, பதிவு செய்கிற காவல் அதிகாரி, குற்ற அறிக்கை தயார் செய்கிற காவல் அதிகாரி, மருத்துவ அறிக்கை கொடுக்கிற மருத்துவர், எதிர்வழக்காடுகிற வழக்கறிஞரின் திறமை, தலித்துகளுக்காக வாதாடுகிற வழக்கறிஞரின் திறமையின்மை மற்றும் அவரை சிறப்பு வழக்கறிஞர் பணிக்கு பரிந்துரை செய்த அரசியல் கட்சிகளின் திரைமறைவு வேலைகள், நிர்பந்தங்கள், தீர்ப்புச் சொல்லுகிற நீதிபதி. இவர்களில் சிறப்பு வழக்குரைஞர் தவிர அனைவருமே சாதி இந்துக்கள்.

ஆட்டுக்குட்டிகளுக்கு ஓநாய்களிடம் நியாயம் கிடைக்குமா? சாதிய இந்து மனங்களைக் கவ்வியுள்ள இருட்டில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற சிறு தீக்குச்சி வெளிச்சத்தால் மட்டுமே தலித்களுக்கு முழு நீதியும் கிடைத்துவிடாது.

ஆகக் குறைந்த அளவு பாதுகாப்பு என்ற அளவில்தான் இச்சட்டம் தன்னளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எடுத்துவிட்டால் சாதி வெறியர்களின் கட்டறுத்த கொலை வெறியாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வழியே இல்லை.

மூக்கணாங்கயிறு இல்லாத மாட்டை எப்படிக் கட்டுப்படுத்துவது சிரமமோ, அதுபோலத்தான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இல்லாத சமூகத்தில் சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்துவதும் இயலாததாகிவிடும்.

* நண்பர் மணிகண்டன், எந்தெந்த ஊரில், என்னென்ன புகார்கள், பொய்ப்புகார்கள் என்பதைப் பட்டியலிடட்டும். அவற்றை மட்டும் ஒரு பொது விசாரணை மூலம் உண்மையா / பொய்யா என முடிவு செய்வோம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என சகட்டுமேனிக்கும் அனைத்துப் புகார்களையும் பொய்ப்புகார் என்று கூறுவதை முதலில் ஏற்க முடியாது. ஒருவேளை பொய்யாக ஒரு தலித் புகார் கொடுத்தால், புகாருக்கு உள்ளானவர் அதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ளாமல் காவல் துறையில் ஆளைப் பிடித்து கட்டைப் பஞ்சாயத்து மூலம் தீர்த்து வைக்கச் சொல்லி ஆயிரக்கணக்கில் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு, தலித்துகளில் சில புரோக்கர்களையும் தயாரித்துக்கொண்டு, காவல் நிலையத்துக்கு ஏன் படையெடுக்க வேண்டும்? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமேன், நண்பர் மணிகண்டன் அவர்களே!

காரணம் :3

* கல்வி, வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் பெரும்பான்மை சாதி மக்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.

நமது விளக்கம்:

அப்பட்டமான பொய்யும், அண்டப்புளுகும், ஆகாசப்புளுகும் என்றால் என்ன என்பதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டு மணிகண்டனின் மூன்றாவது குற்றச்சாட்டு தான். நெறி திறம்பாத நேர்மையாளா! இன்று வரை தெருக்கூட்டுகிற துப்புர‌வுப் பணியில் 100 விழுக்காடும் தலித்துகள் தான். அதிலும் கூட அருந்ததியினரே 90% விழுக்காட்டினர் ஆவார்கள். நகர சுத்தித் தொழிலான இதுவும் முத்திரை வில்லை (stamp) ஒட்டி அரசு சம்பளம் பெறுகிற வேலைதான். அரசுப்பணியில், வேலைவாய்ப்பில் பெரும்பான்மை சமூகங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக வேதனைப்படும் மணிகண்டன் அவர்களே! துப்புரவுப் பணிக்கு / மலம் அள்ளுகிற பணிக்கு, (செப்டிக் டேங்க்) கழிவுக் கிடங்கில் இறங்குகிற பணிக்கு எத்தனை கொங்கு வேளாளர்கள் தயார்? பட்டியல் கொடுங்கள்!! உடனே பணியில் சேர்த்து விடுவோம். கலெக்டர் வேலைக்கும், பேராசிரியர் வேலைக்கும், பொறியாளர், மருத்துவர் வேலைக்கும் இடஒதுக்கீடு கோருகிற உங்களைப் போன்றவர்கள், ஏன் மலம் அள்ளும் பணிக்கு மட்டும் இடஒதுக்கீடு கோர மறுக்கிறீர்கள்? மருகுகிறீர்கள்?

* தமிழகத்தில் தலித்துகள் 22% உள்ளனர். அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட்டிருப்பதோ 18% விழுக்காடு மட்டுமே. பழங்குடியினருக்கு 1% மட்டுமே. தலித்துகளுக்குச் சேரவேண்டியதோ இன்றும் 3% ஆகும். ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள 18%லும் அனைத்து துறைகளிலும், அனைத்து நிலைப்பணியிடங்களிலும் முழுமையாக இட ஒதுக்கீடு நிறைவு செய்யப்படவில்லை என்பதே தலித்துகளின் தொடர் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இருக்கிறபோது, தலித் அல்லாத சாதிகளின் இடஒதுக்கீட்டை தலித்துகள் அபகரித்துக் கொள்வதாக அவர் சொல்வது, ஒருவேளை தலித்துகளுக்கு அரசுப்பணி அளிக்கப்படுவதையே ஏற்றுக் கொள்ள முடியாது என்ற சாதி வெறியின் உச்சமாக இருக்குமோ? மாறாக அவர்களது கரும்புத் தோட்டங்களில் கரும்பு வெட்டும் தினக்கூலிகளாக பண்ணையடிக்க வேண்டும் என்பதுதானே அவரது வாதத்தின் ஆழமான பொருள். மணிகண்டன் அவர்களே, தமிழ்நாடு உங்களுக்கு மட்டுமோ, உங்களைப் போன்ற சாதி வெறியர்களுக்கு மட்டுமோ பட்டா போடப்பட்ட நாடல்ல. இது எங்களின் தேசம். எங்கள் இரத்தமும், சதையும், வியர்வையும் கசிந்து வளர்ந்த, வளர்க்கப்பட்ட தேசம் என்பதை உங்கள் குருட்டுக் கண்களுக்கு ஒளியூட்டியும், செவிட்டுக் காதுகளில் ஓங்கி அறைந்தும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

தலித்துகளைப் பொருத்தவரை அரசுப் பணிக்கு மட்டும்தான் ஓரளவு வாய்ப்புள்ளது. தனியார் துறையில் தலித்துகள் என்றால் உதட்டைப் பிதுக்கும் முதலாளிகளும், நிறுவனங்க‌ளும் தான் இங்கு அதிகம். சில நிறுவனங்க‌ளில் தலித்துகளுக்கு வேலையளிக்கப்பட்டாலும் அது குறைந்த கூலியும், கொத்தடிமை கீழ்மட்டப் பணியாகத்தான் இருக்கும்.

ramadoss_340* தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களின் தொகை 75% ஆனால் அவர்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பு நிறுவனங்களில் அளிக்கப்பட்டிருப்பதோ 27% மட்டுமே. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30%, மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தான். இந்த இடஒதுக்கீட்டின் அளவு நியாயமாக 75% ஆக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் நடைமுறையில் இருப்பதோ (30 + 20%) 50% மட்டுமே. 75% உயர்த்துவதற்குத் தடையாக இருப்பது மணிகண்டன் பட்டியலிடும் பூர்வீக பெரும்பான்மைத் தமிழ்ச் சாதிகளின் எஜமானர்களான பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனிய மனோபாவம் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான். தகுதி, திறமை என்ற பெயரால் சிறுபான்மை பார்ப்பன‌ர்கள் பெரும்பான்மை கல்வி, வேலைவாய்ப்புகளைக் கபளீகரம் செய்யக் கண்டுபிடித்த துருப்புச் சீட்டுத்தான் - 'உச்ச அளவு இடஒதுக்கீடு 50க்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என்ற வரம்பு. அரசியல் சட்டத்துக்கே முரணாக தீர்ப்பளிக்கும் இந்த நீதிமன்றங்களை எதிர்த்துப் போர் முழக்கமிடாமல் மணிகண்டன்களும், இராமதாசுகளும் தலித்துகளின் மேல் பாய்வது ஏன்?

* கொங்கு வேளாளர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் கூடுதல் இடமளிக்கும் அதிகாரம் தலித்துகளிடம் இன்னும் வந்துசேரவில்லை! ஒரு வேளை அப்படி அதிகாரம் வந்தால் மணிகண்டன் போன்றவர்களின் கோரிக்கையைப் பரீசிலிக்கிறோம். அப்போதும் கூட மணிகண்டன் பிறந்த சாதியில் வறுமையில் உழலும் ஏழைப் பாட்டாளிகளுக்கே அந்தக் கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைக்கும். பல கொங்கு வேளாளர்களின் மிகையான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். அதுவரை மணிகண்டன் பொறுமையாக இருக்க வேண்டும்.

* தற்போதுள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பெற்று வரும் 69% விழுக்காடு இட ஒதுக்கீடு போக எஞ்சிய 31% விழுக்காடு அனைத்து சாதியினரும் தகுதி திறமை அடிப்படையில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய இடங்களாகும். தலித்துகளால் தனிமைப்படுத்தப்பட்டதாகச் சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை தமிழ்ச்சாதிகள் தங்களின் தகுதி, திறமையைப் பயன்படுத்தி, முடிந்தால் 31% விழுக்காட்டையும் கைப்பற்றிக் கொள்ளட்டுமே. அது உங்கள்பாடு, பார்ப்பான்பாடு! இடையில் நாங்கள் என்ன செய்ய முடியும்?

எங்களில் சிலர் உங்களைவிடவும் உங்கள் எஜமானர்களான பார்ப்பனர்களை விடவும் தகுதி, திறமை கூடிப்போய் பொதுப் போட்டிக்கான இடத்திலும் சில நேரங்களில், சில பணிகளில் வெற்றி பெற்று விடுகிறோம். அதற்குப் பெயர்தான் தகுதி, திறமை. உங்கள் சாதிகளின் தகுதி, திறமையை உயர்த்தப் பாருங்கள்.

* அறிவும், பண்பும், தகுதியும், திறமையும் உலக மானிடப் பரப்பை உயரப் பறந்து அண்ணாந்து பார்க்கும்போது தான் வளரும். குண்டுச்சட்டிக்குள் குதிரை ஏறி ஓடமுயல்வதும், கிணற்றுத் தவளைபோல் இது தான் உலகம் என்று எண்ணுவதும், கொங்கு வேளாளரை ஆகச் சிறந்த சாதி; அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று குறுகிய மனப்பாங்கும் ஒரு காலமும் உங்கள் தகுதி, திறமையை உயர்த்தாது.

* அரசுத்துறை மட்டுமல்லாது, தனியார்துறை வேலை வாய்ப்புகளும், தனிச் சொத்துடைமை வாய்ப்புகளும் நிறைந்த கொங்கு வேளாளர், வன்னியர், தேவர் ஆகியோரை ஏதுமற்ற தலித்துகள் எப்படி தனிமைப்படுத்த முடியும்? உங்கள் மனமெல்லாம் சாதி போதையேறியதால் உளறிய உளறலே இதுபோன்ற குற்றச்சாட்டுகள்.

நில உரிமை மீட்பு : 4

இதுவும் மோசடியான, பொறாமைத் தீயில் முளைத்த குற்றச்சாட்டுத்தான். தலித்துகள் கோரும் நில உரிமையோ, உரிமை மீட்புப் போராட்டமோ கொங்கு வேளாளர்களையோ, இதர சாதிகளுக்குச் சொந்தமான நிலங்களையோ குறித்ததல்ல.

* தலித்துகளுக்கு பிரிட்டீசார் அளித்த நிலங்களை மீட்டுத் தரக் கோருகிறோம். எங்களால் சம்பாதிக்கப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக அரசால் பறிக்கப்பட்ட, பறிக்க முயற்சிக்கும் நிலங்களை மீட்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் போராடுகிறோம். எங்கள் தேவைக்கும், வரலாற்று ரீதியாக வஞ்சிக்கப்பட்ட எங்கள் வாழ்வுரிமைக்கும் ஈடாக, தற்போதுள்ள அரசுக்குச் சொந்தமான தரிசுகள், காடுகள், மலைகள், கோவில்கள், மடங்கள் பெயரில் குவிந்து கிடக்கும் நிலங்களில் எங்களின் பங்கை கோரிப் போராடுகிறோம்.

எங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டது மத்திய, மாநில அரசுகளே தவிர மணிகண்டன்கள் அல்லவே. எங்கள் பங்குரிமை கொங்கு வேளாளர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களாக இருக்குமேயானால் அந்நிலங்களுக்காகவும் நாங்கள் போராடுவது எங்கள் நில உரிமைப் போராட்டத்தின் கடமைகளில் ஒன்று தான். தலித்துகள் எப்போதும் தங்களுக்காக மட்டும் போராடுகிறவர்கள் அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக தமிழக அரசு கைப்பற்றிக் கொடுத்த மொத்த வேளாண்மை நிலத்தின் அளவு ஒரு லட்சத்து 80000 ஏக்கர். இதில் தலித்துகளுக்குச் சொந்தமானது மட்டும் 800000 ஏக்கர். எஞ்சிய ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களும் கொங்குவேளாளர் உள்ளிட்ட இதர சாதிகளுக்குச் சொந்தமானது. தலித்துகளுக்கு எதிரான உங்கள் போராட்டக் களத்தில் 10ல் ஒரு பங்கை இந்திய / தமிழக அரசின் SEZக்கு ஆதரவான நிலையை எதிர்த்துப் போராடுங்களேன், பார்க்கலாம்! அப்போது மணிகண்டன்களை எம்போன்றவர்கள் ஓடோடிச் சென்று பாராட்ட உறுதியளிக்கிறோம். அழைத்தால் அரசை எதிர்த்துப் போராடுவற்கு அணி சேரவும் தயாராக இருக்கிறோம்.

அதைவிடுத்து தலித்துகளின் நில உரிமைப் போராட்டங்களைக் கண்டு அலறுவதால் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.

காரணம் : 5

தமிழ் மண்ணில் பூர்வீக குடிகளான பெரும்பான்மை சாதிகளின் கூட்டணி; அதாவது கொங்கு வேளாளர்கள், தேவர், வன்னியர், நாடார், உடையார், முதலியார் உள்ளிட்ட பெரும்பான்மைச் சாதிகள் இணைவது காலத்தின் கட்டாயமாம்.

நமது விளக்கம்:

* வர்க்கக் கண்ணோட்டமும் இல்லாமல், தமிழ்த் தேசியக் கண்ணோட்டமும் இல்லாமல், சாதி ஒழிப்புக் கோட்பாடும் இல்லாமல் ஓர் அதிகார வர்க்க கொள்ளைக் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ள மணிகண்டன்களே! அப்படி என்ன காலத்தின் கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது? மறைந்திருந்து தாக்கும் போர்முறையில் ஆயுதம் இல்லாத தலித்துகளை அழித்தொழிக்க ஒரு கூட்டணியா? நாங்கள் உயிர்வாழ்வதே உங்களுக்குப் பிடிக்கவில்லையோ! ரொம்பவும் முடியவில்லையென்றால், தயவு செய்து காடுகளில் போய் வசியுங்கள். நாடு எங்களிடம் இருக்கட்டும், காடு உங்களுக்கே ஆகட்டும்!

* உங்களின் பெரும்பான்மைத் தமிழ்ச் சாதிக் கூட்டணி அமைந்தால், தீராத காவிரிச் சிக்கலுக்கு தீர்வுகோரிப் போராடுமா? முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திடுமா கேரள அரசு? அதற்காக உங்கள் கூட்டணி போராடுமா? வெற்றி பெறுமா? பாலாற்றின் குறுக்கே அணைகட்டி வடமேற்கு தமிழகத்தின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரத்தைப் பறிக்கும் ஆந்திராவுக்கு எதிராக உங்கள் கூட்டணி போராடுமா?

* தமிழக பெரும்பான்மைச் சாதிகளிடமுள்ள சிறுதொழில், குறுதொழில், வேளாண்மை, வணிக நிறுவனங்களின் இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் தடையாக‌வுள்ள இந்திய அரசின் மின்சாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவீர்களா? சில்லரை வணிகத்தை அழித்து, பன்னாட்டு மொத்த வணிக நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் மத்திய அரசை எதிர்த்து, சாலையில் மரம்வெட்டி மத்திய / மாநில அரசுகளை நிலை குலைய வைப்பீர்களா?

* குவாரி, காண்ட்ராக்ட் கொள்ளையை, ஊழலை எதிர்த்துக் களமிறங்குவீர்களா? தென் தமிழக மக்களை கூண்டோடு அழிக்கும், தலைமுறைகளைப் பாதிக்கும் கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி உங்கள் சாதிக் கூட்டணி களம் காணுமா? இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து தமிழ்மொழியின் தனித்தன்மை காக்கப் போராடி மொழிப்போர் தியாகிகளின் வழியில், தமிழ்நாட்டில் எங்கும், எதிலும் தமிழ் ஒலிக்க, நிர்வாகம் நடத்த உங்கள் சாதிக் கூட்டணி போராடுமா?

* மூன்றாம் வகுப்பிலிருந்தே அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் நடத்தும் தமிழக அரசின் மொழிக் கொள்கைக்கு எதிராக உங்கள் சாதிக் கூட்டணி முழங்குமா? குறைந்த அளவு மாநில அரசில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% விழுக்காடு இட ஒதுக்கீட்டை 75% விழுக்காடாக உயர்த்திடவாவது போராட முன் வருவீர்களா?

* சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக உங்கள் நிலங்களைப் பறிக்கும் மத்திய மாநில ஆட்சியாள‌ர்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராடுவீர்களா? தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் வணிகச் சந்தையில் கொள்ளை லாபமடிக்கும் கொக்கோ, பெப்சி நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவீர்களா? உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு பல கோடிகளை மானியமாகவும், கடன் தள்ளுபடியாகவும் வரி விலக்குகளாகவும் தந்து கொண்டிருக்கும் மத்திய அரசு, விவசாயிகளுக்கு பஞ்சுமிட்டாய் மானியங்களைக் கூட வெட்டுவதைக் கண்டித்து வீதிக்கு வருவீர்களா?

* தமிழ்நாட்டின் வளத்தை, வருமானத்தை ஆண்டொன்றிற்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டு, சில ஆயிரம் கோடி ரூபாய்களை மட்டும் ஆண்டு திட்ட நிதியாக அளிக்கும் மோசடியை அம்பலப்படுத்திட சாதிக் கூட்டணி போராடுமா?

* இவை எதையுமே செய்யாத உங்கள் சாதிக் கூட்டணி என்ன செய்யும்? தலித்துகளின் நிலங்களை அபகரிக்கும், வீடுகளைக் கொளுத்தும், உழைப்பைச் சுரண்டும், ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டணி போட்டு கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்ளும். இதைத் தானே மருத்துவர் இராமதாசு பாட்டாளி மக்கள் கட்சியாகி இருந்து சாதித்தார். அவர் தனியாகச் செய்ததை சாதிக்கூட்டணியில் இணைந்து அனைவரும் கொள்ளை இலாபத்தில் பங்கு பெறப்போகிறீர்கள். அதற்குத் தானே தலித் அல்லாதோர் பேரவை, பெரும்பான்மை சாதிகளின் கூட்டணி என்று பெயர் வைக்கிறீர்கள்.

கடந்த காலங்களில் தனித்தனியாக ஊரையடித்து உலையில் போட்டுக் கொண்டவர்களின் சாதிக் கூட்டணி என்று நேரடியாக பெயர் வைப்பது தானே சாலப் பொருத்தமாக இருக்கும். இதற்குத் தான் உங்கள் கூட்டணி என்பதற்கு கடைசியாக, தருமபுரி தலித்துகள் மீதான தாக்குதலுக்கு மருத்துவர் இராமதாசும், மணிகண்டனும் கொடுத்துள்ள விளக்கமே சாட்சி.

இதோ அவை :

* தருமபுரி கலவரத்தில் ஊடகங்களும், தலித் தலைவர்களும் சொல்வதில் 60% விழுக்காடு உண்மையில்லையாம். எரியும் ஒரு குடிசையிலிருந்து இன்னொரு குடிசைக்கு படல்களை ஊடகமாக்கி தலித்துகள் தாங்களாகவே எரித்திருக்கிறார்கள். மணிகண்டன் கொங்கு வேளாளர் முன்னேற்றப் பேரவை கூறுகிறார். தருமபுரியில் எரிக்கப்பட்டது 4 வீடுகள்தான்; மீதி வீடுகள் தலித்துகள் தானாகவே எரித்துக் கொண்டது. மருத்துவர் இராமதாசு பேட்டி.

dalith_colony_642

பாரம்பரியப் பெருமை பேசும் கொங்கு வேளாளரின் பாரம்பரியம் என்னவென்பது இப்போது தானே எங்களுக்குப் புரிகிறது. தருமபுரியில் எரிக்கப்பட்டது குடிசைகள் அல்ல மணிகண்டன் அவர்களே, ஓட்டு வீடுகளும், பல லட்சங்கள் ரூபாய் மதிப்புள்ள 20 மாடி வீடுகளும் ஆகும். அவதூறும், பொய்யும், திரித்துப் பேசுவதும் தான் உங்கள் பாரம்பரியம் என்பதை எண்ணி வெட்கப்படுகிறோம். இப்படிப்பட்ட சாதிப் பெருமிதங்களை கோடி கோடியாய் கொடுத்தாலும் பெற மாட்டார்கள் தலித்துகள். சத்தியம் தவறாத உத்தமர்கள் தலித்துகள்; சரித்திர நீதியாக உழைப்பாளிகள். தலித்துகள் பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களே தவிர, யாரையும் வஞ்சித்தவர்கள் அல்ல. நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டியில் தலித்துகளின் வீடுகளைத் திட்டமிட்டு கொள்ளையடித்து விட்டு பிறகு தீவைத்துச் சூறையாடியுள்ளது வன்னிய சாதிவெறிக் கூட்டம்! உள்ளே நுழைந்தும் பீரோக்களை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் பெட்ரோல் குண்டுகளால் தீ வைத்து எரித்துள்ளனர்.

சைக்கிள்கள், இருசக்கர மோட்டார் வாகனங்கள் நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள், வாடகைக்கு விடும் ஒலிபெருக்கி மையம் வைத்திருந்த தகரக் கொட்டகை, மரக் கட்டில்கள், மெத்தைகள், கதவுகள், நிலைகள் எரிக்கப்பட்டன.

ஒடுகள், கண்ணாடிகள், பண்ட பாத்திரங்கள், ரேடியோ, தொலைக்காட்சிப் பெட்டி, கிரைண்டர், மிக்சி, வீடியோ செட்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன‌.

* ஒருமுறை தருமபுரி நத்தம் காலனிக்கும், அண்ணாநகர், கொட்டம்பட்டிக்கும் நேரில் வந்து பாருங்கள். பயமாக இருந்தால் நானே தங்கள் பாதுகாப்புக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

* அதெப்படி மணிகண்டன், கொங்கு வேளாளரான நீங்களும், வன்னியரான இராமதாசும் பொய் பேசுவதில் யாரை யார் மிஞ்சுவது என்று போட்டி போடுகிறீர்கள்? பொய் பேசுவோரின் சாதிக் கூட்டணி என்று கூட உங்கள் கூட்டணிக்கு நாமகரணம் சூட்டலாமே!

* இப்படியே பேச ஆரம்பித்தால் நந்தன் முதல் நத்தம் குடியிருப்பு வரை, வெண்மணி முதல் பாச்சாரம்பாளையம் வரை கொளுத்தப்பட்ட தலித்துகளின் வீடுகளையும், கொல்லப்பட்ட தலித்துகளின் உயிரையும், தலித்துகள் தங்களுக்குத் தாங்களே கொளுத்திக் கொண்டும், தங்களைத் தாங்களே கொலை செய்து கொண்டும் தங்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டதாகக் கூட உங்கள் இருவராலும் (மணிகண்டன், இராமதாசு) கூற முடியும். இராசபக்சேவாக இருப்பதற்கு சிங்களவனாகத் தான் பிறக்க வேண்டுமென்பதில்லை; சாதித் தமிழனாக பிறந்தாலே போதும்.

என்றுமே உங்கள்

பகை நெருப்பைப் பொசுக்கும்,

வஞ்சக வலையறுக்கும்,

மானுட விடியலுக்காக முழங்கும்

- அரங்க.குணசேகரன், பொதுச் செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், 90475-21117

Pin It