நவம்பர் 12, 2012, தீவிரவாதத்திற்கு தூக்கு தண்டனை. நாடெங்கும் ஒரே கொண்டாட்டம். ஏன் தெரியுமா? 166 பேரை காவு வாங்கிய அஜ்மல் கசாப்புக்கு சாவு மணி அடிக்கப்பட்டது. பிரதமர் முதல் பாமரன் வரை ஏதோ பெரிய சாதனை செய்தது போல் சந்தோஷக் கூத்தாடினர். 'உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதலாக நீதி வழங்கப்பட்டது' என்று நிதியமைச்சர் கூறுகிறார். 'கசாப் தூக்கிலிடப்பட்டது நாட்டுக்கு கிடைத்த வெற்றி' என்று ஒரு வழக்கறிஞர் கூறினார். மகாராஷ்ட்ர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டில் ' கசாப்பின் தூக்கு தண்டனை, மும்பைத் தாக்குதலில் பலியானவர்களுக்கு மரியாதை செய்வது போல் உள்ளது' என்றார். பலகட்சித் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி சந்தோஷத்தை பரிமாறிக்கொண்டனர். இறுதி நேரத்தில் கசாப்பின் அருகில் இருந்த காவலர்கள், அவனுடைய இறுதி பாவனைகளை செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

          குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்னும் சிலருக்கு தண்டனை நிலுவையில் இருக்கும் போது, கசாப்புக்கு மட்டும் என்ன அவசரம்? மரண தண்டனை கூட அரசியலாக்கப்படுகிறதா? 

          மனிதம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? மனிதன் எப்போழுது கடவுளாக மாறினான்? சகமனிதனுக்கு மரண தண்டனை கொடுக்க இவன் யார்? மாற்றானுக்கு மரண தண்டனை கொடுக்கும் நீ என்ன புத்தனாக வாழ்கிறாயா? ஒரு மனிதனின் இறப்பை இனிப்புகளை வழங்கிக் கொண்டாடுவது மனிதத்தன்மையா? விலங்குகள் கூட வேறு இனத்தைத்தான் அடித்து சாப்பிடும். அப்படியானால் மனிதன் விலங்குகளைக் காட்டிலும் தரம் கெட்டுவிட்டானா? மனிதம் மழுங்கடிக்கப்பட்டு விட்டதா? இறந்து கொண்டிருக்கின்ற ஒருவனுக்கு உயிர் கொடுக்க முடியாதவனுக்கு உயிரை எடுக்க என்ன தகுதியிருக்கிறது. 'தீவிரவாதம்' என்னும் பெயரால் 166 உயிர்கள் போகக் காரணமானவனுக்கு மரண தண்டனை என்றால், சாதியத்தின் பெயரிலும், ஆணாதிக்கத்தினாலும் அரங்கேற்றப்படும் கொலைகள், கருணைக் கொலைகள், கௌரவக் கொலைகள் போன்ற மிருகத்திலும் கீழ்த்தரமான, கொடுரமாக கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை எப்போது?

ஏழைகளையும், தாழ்த்தப்பட்டோரையும், மலைவாழ்மக்களையும் நசுக்கி, பணத்திற்காகவும், நிலத்திற்காகவும், காமத்திற்காகவும், இரையாக்கப்படும் எண்ணற்ற உயிர்களைக் கொல்லும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும், பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கும் மரண தண்டனை எப்போது? அன்னிய முதலீட்டுக்கு ஆதரவளித்து தமிழகத்தை பிணக்கிடங்காக மாற்ற அணுமின் நிலையத்தை பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு மரணதண்டனை எப்போது? குற்றம் செய்தவனைவிட குற்றம் செய்யத் தூண்டியவனுக்கும், துணையாயிருந்தவனுக்கும்தான் தண்டனை அதிகம். அப்படியானால் இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராட்சசன் ராஜபக்ஷேவிற்கும் அதற்குத் துணைபோனவ‌ர்களுக்கும் மரண தண்டனை எப்போது?

பல லட்சம் மக்களைக் கொன்ற ராஜபக்ஷேக்கு பட்டுக் கம்பள வரவேற்பு? மற்றவர்களுக்கு மரண தண்டனை? மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டியா? என்ன நியாயம் இது? உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றே. ஒரு உயிரானாலும் சரி பல உயிர்களானாலும் சரி உயிர்கள் விலைமதிப்பில்லாதவை. போன உயிரை எந்த மனிதனாலும் கொடுக்க முடியாது. அதைத் எடுக்கும் உரிமை எந்த மனிதனுக்கும் கிடையாது. ஒரு ஜனநாயக நாடு சிறிதும் யோசிக்காமல் மரண தண்டனையை ஆதரித்து வாக்களிக்கிறது (நவம்பர் 19, 2012). ஆனால் அப்பாவித் தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக கொன்று குவித்த ராஜபக்ஷேயின் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமானால் 'இறையாண்மை'யைப் பற்றிப் பேசுகிறது. இதுதான் ஜனநாயகமா? புக்குசிமாவின் நிகழ்விற்குபின் அணுவின் பயங்கரத்தை உணர்ந்தும் நிலநடுக்கமோ பேரலையோ எதுவந்தாலும் அதைத்தாங்கும் சக்தி கூடங்குளத்துக்கு உண்டு என்கிறார்கள். இவர்கள் என்ன கடவுளா?

          தாய் மண்ணையும் மக்களையும் அடகுவைத்து அன்னிய முதலீட்டை வரவேற்கிறார்கள். இது ஜனநாயகமா? அல்லது சர்வதிகாரமா?

                   இத்தனை கொலைகளையும், அராஜகங்களையும், அட்டூழியங்களையும், கொள்ளைகளையும் செய்த, செய்துகொண்டிருக்கின்ற இவர்கள் ராஜமரியாதையோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு கொடுக்கப்படவேண்டும் மரண தண்டனை? மரண தண்டனையே வேண்டாம் என்னும் சமுதாயத்தில், மரண தண்டனைகூட அரசியலாக்கப்படுகிறது.

          அன்பையும், மன்னிப்பையும் போதிக்கும் எண்ணற்ற சமயங்கள் கொண்ட இந்தியாவில் மரண தண்டனைக்கு மரணம் எப்போது? 

- சகோ.பாபு.ஜி, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி

Pin It