இன்றைய நிலைமையும் தீவிரமடையும் நெருக்கடிகளும் நாடு இன்னொரு சோமாலியாக மாறும் அபாயம்

கிடைத்ததற்கரியதும் மனித சக்தியினால் உருவாக்க முடியாததுமான நீர் அபரிதமாக உள்ளது என்று பலரும் நம்புகின்றனர். ஆனால் உலகின் மொத்த நீரின் அளவோ குறைந்து கொண்டே வருகிறது . நமது பூமியில் 130 கோடி கன மீட்டர் நீர் வளம் உள்ளது. இதில் 97 விழுக்காடு உவர் நீராக உள்ளது. 2 விழுக்காடு வடதென் துருவங்களில் பனிக்கட்டியாக உள்ளது. 1 விழுக்காடு குடிநீரும் உலகின் சில பகுதிகளில் கூடியும் சில பகுதிகளில் குறைந்தும் காணப்படுகிறது. இந்த 1 விழுக்காடு தண்ணீரைத்தான் 620 கோடி மக்களும் 8000 கோடி உயிரினங்களும் பயன்படுத்த வேண்டும். இப்போது உலகில் நீர் வளத்திற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 1998ல் உலகிலுள்ள 28 நாடுகள் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டன. இந்நாடுகளின் எண்ணிக்கை வரும் 2025ல் 56 நாடுகளாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1990லிருந்து 2025வரை போதிய நீரில்லாக நாடுகளில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கை 131லிருந்து 817 மில்லியன்களாக அதிகரிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கு முன்னரே இந்தியாவும் இந்தப் பட்டியலில் சேர்ந்து விடும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

water_crisis_320ஒரு நாட்டில் நீர்ப் பற்றாக்குறை இருப்பதை எப்படிக் கணக்கிடுகின்றனர்? பொதுவாக நபர் ஒன்றுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1000 கன மீட்டருக்கும் குறைவான தண்ணீர் கிடைத்தால் அந்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ளதென்றும் அந்நாட்டின் சுகாதார மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் மதிப்பிடப்படுகின்றது. ஆண்டு ஒன்றுக்கு ஒரு நபருக்கு 500 கன மீட்டருக்கும் குறைவாக கிடைத்தால் அந்நாட்டின் மக்கள் வாழ்வே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

உலக அளவில் மூன்றில் ஒருவருக்கு (200 கோடி பேர்) தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. வளரும் நாடுகளில் நோய் வாய்ப்பட்டிருப்பவர்களில் இரண்டில் ஒருவர் தண்ணீரில் உருவாகும் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உலகில் மொத்தக் கழிவு நீரில் 5 விழுக்காடு மட்டுமே முறைப்படி கையாளப்படுகிறது. ஒவ்வொரு 20000 குழந்தைகளுக்கும் ஒரு குழந்தை தண்ணீரால் பரவும் நோய்களினால் மடிகின்றனர்.

நமக்கு மழை பொழிவதினால் தண்ணீர் எவ்வளவு கிடைக்கிறது? மழை பெய்வது சுழற்சி முறையாகும் என்று அனைவரும் அறிந்ததே. பருவ காலங்களில் நீர் சுழற்சி ஏற்பட்டு 700 கோடி கன மீட்டர் ஆவியாகி பின் 1,20,000 கோடி கன மீட்டர் மழையாக பூமிக்கு மறுபடியும் திரும்ப வருகின்றது. ஆனால் பூமிக்கு வரும் நீரில் 5000 கோடி கன மீட்டர் நீரைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். மீதி 7000 கோடி கன மீட்டர் நீர் கடலில் கரைந்து விடுகின்றது. தவறான கொள்கைகள், தண்ணீரை வியாபாரமயமாக்கியது உள்ளிட்ட பல காரணங்களினால் 600 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பூமியில் 200 கோடி மக்கள் சுத்தமான சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

நமது நாட்டில் 1951ல் நபர் ஒன்றுக்கு 3450 கன மீட்டர் தண்ணீர் கிடைத்தது. அது 1990களில் 2250 கனமீட்டராகவும் 2001ல் 1820 கனமீட்டராகவும் குறைந்து விட்டது. 2025ல் 1341 கன மீட்டராகவும் 2050ல் அது 760 கன மீட்டராக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் 16 விழுக்காட்டினை கொண்டுள்ள இந்தியா உலக வளத்தின் 4 விழுக்காட்டினையே பயன்படுத்துகிறது. உலக நீர் வளர்ச்சி அறிக்கையின் படி தரமான நீர் கிடைக்கின்ற நாடுகளின் பட்டியலில் (122 நாடுகள்) 120வது இடத்தையே இந்தியா பெற்றுள்ளது. அதே போன்று சுலபமாக நீர் கிடைக்கின்ற நாடுகளின் பட்டியலில் (180 நாடுகள்) 133வது இடத்தைத் தான் இந்தியா பிடித்துள்ளது. நமது அண்டைய நாடுகளான வங்கதேசம் (40வது), இலங்கை (64வது), நேபாளம் (78வது) இடத்தையும் பெற்று ஒரளவு முன்வரிசையில் இடம் பிடித்துள்ளனர். (ஆதாரம்: சுற்றுச்சூழல் அறிவியலாளர் முனைவர் வந்தனா சிவா மற்றும் குன்வர் ஜலிஸ் எழுதிய கங்கை பொதுச் சொத்தா? கம்பெனியின் சரக்கா? என்ற நூலிருந்து)

இந்தியாவில் கிட்டத்தட்ட பல மாநிலங்களில் உள்ள நீர் நிலைகள் வற்றி விட்டன. ஆண்டுக்கு 2000 செ.மீ. மழை பொழியும் உலகின் மழை தலைநகரமான சிரபுஞ்சியில் வசிக்கும் மக்களே பல கிலோ மீட்டர் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. நடுவண் அரசின் நீர்வள அமைச்சகத்தின் தகவல்படி 20 நதிப்படுகைகள் வறண்டு விட்டன. அதாவது இதனால் 200 மில்லியன் மக்களின் வாழ்வு கேள்விக்குள்ளாகி உள்ளது.

தமிழகத்தின் நீர் வளம் கீழ்க்கண்ட இரண்டு பகுதிகளைக் கொண்டது. அவை தமிழக எல்லைக்குள் பெய்யும் மழை, அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஆற்று நீர் ஆகும். தமிழகம் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலமாகவே கருதப்படுகிறது. தமிழகத்தின் மழை பெரும் பகுதி பருவக்காற்று மழை; அதிலும் வடகிழக்குப் பருவக் காற்று மழையினால்தான் கூடுதலான பலன் கிடைக்கிறது.

தமிழகத்தில் 365 நாட்களில் சராசரியாக 35 நாட்கள் மட்டுமே 30 மணித்துளிகளில் 13 மி ஹெக்டேரில் 923 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இது 120000 கனகோடி மீட்டராகும். இதில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் 32 விழுக்காடு மழையும் வடகிழக்கு பருவக்காற்று மூலம் 48 விழுக்காடும் பெய்கிறது. மீதி கோடை மழையாக பெய்வதன் மூலம் கிடைக்கிறது. இது இந்தியாவில் கிடைக்கும் நீரில் 3 விழுக்காடே ஆகும். கங்கையில் ஒரு ஆண்டுக்கு 5 நாள் ஓடும் வெள்ள நீரின் அளவு தமிழகத்தின் ஒரு ஆண்டு தேவையாகும்.

தமிழ்நாட்டில் நபர் ஒன்றுக்கு நாளொன்றுக்கு 800 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி நபர் ஒருவருக்கு கிடைக்கும் அளவு 1000 கன மீட்டருக்கு குறைந்தால் அது நீர் தட்டுப்பாடான பகுதி என்பதை இங்கு மீண்டும் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கணக்குப்படி இந்தியா 2025ல் நீர் தட்டுப்பாடான பகுதியாக மாறும் என்றால் தமிழ்நாடு இப்போதே மிகவும் தண்ணீர் தட்டுப்பாடான மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20லிருந்து 25 ஆண்டுக்குள் இது மிகவும் மோசமடைந்து நீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் பெய்யும் போதும் அதன் பிறகும் சில பகுதி ஆவியாகி வீணாகி விடுகிறது மற்றும் ஒரு பகுதி நிலத்தடி நீருடன் கலந்தும் மண்ணின் மேல் பகுதியிலிருந்து ஆவியாகி செடி கொடிகள் மூலமாகவும் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் மேற்பரப்பு நீரை ஆராய்ச்சி செய்து எவ்வளவு நீர் ஆண்டுதோறும் ஆற்றில் ஓடுகிறது என்பதை கணக்கிட்டுள்ளனர். பொதுப்பணித்துறை செய்த இந்த ஆய்வின் படி தமிழகத்தின் 17 ஆற்றுப்படுகைகளில் காவிரி ஆற்றுப்படுகையைத் தவிர 16 ஆற்றுப்படுகைகளில் 1.311 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் ஓடுவதாகவும் ப.குமாரசாமி போன்ற நிபுணர்களின் கணக்குப்படி காவிரி ஆற்றுப்படுகையில் 1.020 மில்லியன் ஹெக்டேர் மீட்டர் மேற்பரப்பு நீர் ஓடுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நீரில் சுமார் 95 விழுக்காட்டிற்கு மேல் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 52 பாசன நீர் தேக்கங்கள் உள்ளன. இந்நீர் தேக்கங்களின் கொள்ளவு சுமார் 225 டி.எம்.சி ஆகும். நீர் தேக்கத்திலிருந்து கால்வாய் மூலம் 8.5 இலட்சம் ஹெக்டேர் நிலத்தில் பாசனம் செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் மொத்தம் 39000 குளங்கள் உள்ளன. இதில் 25000 வானம் பூமியாக வறண்டு கிடக்கின்றன. இந்த ஏரிகளில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலும் மற்றவை ஊராட்சி அமைப்புகளின் கட்டுபாட்டிலும் இருந்து வருகின்றன. இவற்றின் மொத்த கொள்ளவு சுமார் 200 டி.எம்.சி. அளவில் உள்ளது. இந்த ஏரிகளிலிருந்து 1970ல் ஏரிப்பாசனம் மூலம் 9 இலட்சம் ஹெக்டேர் நிலங்களில் விவசாய உற்பத்தி நடைபெற்றது. ஆனால் ஏரிகளின் கொள்ளவு குறைந்ததாலும் மழை சரி வரப் பெய்யாததாலும் நீர் வரத்து வாய்க்கால் மற்றும் நீர்ப்பிடிப்பு இடங்கள் ரியல் எஸ்டேட் மாபியாக்களினால் ஆக்கிரமிக்கப்பட்டதினாலும் மணல் கொள்ளையினாலும் ஏரியின் மூலம் பாயும் நிலப்பரப்பு குறைந்து தற்போது 6. 5 இலட்சம் ஹெக்டேராக உள்ளது.

water_crisis_3801970ல் நிலத்தடி நீர் வளம் சுமார் 1.78 ஹெக்டேர் என தமிழ்நாடு நிலத்தடி நீர் இயக்கமும் மத்திய நிலத்தடி நீர் வாரியமும் கணக்கிட்டனர். ஆண்டுதோறும் நிலத்தடியில் நீர் சேருவது சுமார் 2.64 மி.ஹெக்டேராக கணக்கிட்டுள்ளனர். தற்போது மிகவும் அபாயகரமான முறையில் இந்த அரிய வளம் குறைந்து வருகிறது. தமிழக நிலத்தடி நீர் ஆய்வகம் மாவட்ட ரீதியாகவும் ஒன்றிய வாரியாகவும் நிலத்தடி நீரின் அளவு மாற்றங்கள் குறித்து தொகுப்பாக ஆண்டுதோறும் நிலத்தடி நீர் நிலை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இவை பொதுப்பணித்துறையின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டு வருகிறது. இத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியலின் படி தமிழ்நாட்டில் நிலத்தடி நீரில் 70 விழுக்காட்டிற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் 88 ஒன்றியங்கள் கருப்பு ஆகவும் (முற்றிலும் நிலத்தடி நீர் இல்லை என்பதற்கான நிறம்) 88 ஒன்றியங்கள் பழுப்பு ஆகவும் (ஒரளவு நீர் உள்ளது) வெள்ளையாக உள்ள ஒன்றியங்கள் 209 எனவும் (நிலத்தடி நீர் உள்ள பகுதிகள்) ஆய்வு விபரங்கள் வெளியிட்டுள்ளது.

இந்த விபரங்களை மிகவும் பழையதாக்கும்படியாக நிலைமைகள் மிக வேகமாக மாறி வருகின்றன. அதாவது தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (இந்த மண்டலங்களில் தண்ணீர் இலவசம் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம், கட்டணம் இல்லை) பன்னாட்டுக் கம்பெனிகளின் தண்ணீர் கம்பெனிகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் நீரை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள கேளிக்கை மையங்கள் (Water resort centres), ஆயிரக்கணக்கில் அதிகரித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை நிலத்தடி நீரை ஒட்ட சுரண்டி வருகின்றன. ஏற்கனவே தேனி, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிலத்தடிநீர் 1000 அடிக்கு கீழே சென்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலையில் ஒரு ஆய்வு நடத்தும்பட்சத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகமான எண்ணிக்கையில் நிலத்தடி நீர் இல்லாத பல பகுதிகள் வெளிவரலாம்.

தமிழகத்திலுள்ள நீர் நிலைகள் மற்றும் வளங்களின் நிலைமை எந்த அளவு மோசமடைந்து வருகிறது என்பதை மேற்கண்ட விபரங்களே தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட கடுமையான சூழலில்தான் தண்ணீர் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது .

16 நகரங்களில் தண்ணீர்தனியார்மயம்

ஆறுகள், நதிகள் தனியார்மயம்

நமது நாட்டில் அமல்படுத்தப்பட்டு வரும் உலகமயமாக்கல் கொள்கைகளின் ஒரு பகுதியாகவே தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. நமது நாடு உலக வர்த்தக அமைப்பிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தண்ணீர் தனியார் கம்பெனிகளுக்கு முக்கியமாக பன்னாட்டு தண்ணீர் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களுள் ஒன்றான காட் (General Agreement on Trade and Tariff- GATT) ஒப்பந்தத்தின் பிரிவு 11 கூறுகிறது: தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கும் வியாபாரமயமாக்குவதற்கும் எதிரான கட்டுப்பாடுகளை அரசு இரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின்படி தண்ணீர் துறை சார்ந்த சேவைகளை தனியார்மயமாக்குவதை நடுவண் அரசும் மாநில அரசுகளும் தொடங்கி உள்ளன.

முதலில் உலகவங்கியே கடன் உதவி என்ற பெயரில் தண்ணீர்ப் பஞ்சத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை பல நாடுகளில் அமல்படுத்தியது. பசுமைப்புரட்சி, கரும்புரட்சி (பருத்தி மற்றும் கரும்பு பயிரிடுவதை ஊக்குவிப்பது) நீலப்புரட்சி (இறால் பண்ணைகள்) போன்ற பல நீர் வள ஆதாரங்களை வறண்டு போக வைக்கும் உலக வங்கியின் திட்டங்களினால் பல நாடுகளில் வறட்சியும் நீர் நிலைகள் மாசாவதும் ஏற்பட்டன. ஏனெனில் எங்கெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகின்றதோ அங்கெல்லாம் நீர் வியாபாரத்திற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளதாக பல பன்னாட்டுக் கம்பெனிகளும், தேசங்கடந்த தொழிற்கழகங்களும் கருதி வருகின்றன. இந்த வாய்ப்பை திட்டமிட்டே நீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு உலக வங்கி நிதி வழங்கி வருகிறது. உலகளவில் நீர் திட்டங்களுக்கு உலக வங்கி 20 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உலகளவில் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் விவேண்டி(vivendi), சூயஸ் லியோனைஸ் டெ ஈக்ஸ்(suez lyonnaise des eaux), மான்சான்ட்டோ(monsonto) மற்றும் பெக்டல்(Bechtel) ஆகிய 5 தேசங்கடந்த தொழிற்கழகங்கள் இந்தியாவில் தண்ணீருக்கு 2000 மில்லியன் டாலருக்கு சந்தை இருப்பதாக மதிப்பிட்டுள்ளன. இக்கம்பெனிகளில் விவேண்டிதான் உலகிலேயே மிகப் பிரம்மாண்டமான தண்ணீர் கம்பெனியாகும். இதன் அங்கீகாரம் பெற்று இதன் கிளையான ஜெனரல்டெஸ் டெஈக்ஸ் 90 நாடுகளில் செயல்படுகிறது. சூயஸ் கம்பெனி 120 நாடுகளில் 72 மில்லியன் மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருகிறது.

இந்தியாவில் இந்த கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது. பல மாநிலங்களில் இக்கம்பெனிகள் தத்தம் கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தண்ணீரை முழுமையாக தனியார்மயமாக்குவதற்கு கடுமையான எதிர்ப்பு உருவாகும் என்பதால் இந்திய அரசு தந்திரமாக தண்ணீர் சம்பந்தப்பட்ட துறைகளை ஒவ்வொன்றாகவோ அல்லது ஒரே சமயத்தில் பல துறைகளையோ தனியார் கம்பெனிகளிடமிருந்து குறிப்பாக இப்பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து வருகின்றது. ஒரு நாட்டில் தண்ணீருக்கான இலாபகரமான சந்தை இருப்பதைக் கண்டறிந்து முன்கூட்டியே இதே தந்திரத்தை ஏற்கனவே இப்பன்னாட்டுக் கம்பெனிகள் முன்வைத்து வந்தன. வேடிக்கை என்னவென்றால் இருவரும் ஒரே தந்திரத்தை கடைபிடிப்பதால் யாரிடமிருந்து யார் காப்பி அடிக்கிறார்கள் என்பது மர்மமான விசயம் அல்ல. இப்பன்னாட்டுக் கம்பெனிகள் தண்ணீர் சந்தையில் நுழைவதற்கு பொதுவாக கீழ்க்கண்ட 3 தந்திரங்களை கடைபிடிக்கின்றன.

water_crisis_319             இக்கம்பெனிகள் தாங்கள் விரும்புகின்ற சந்தையுள்ள பகுதியில் ஏதாவது ஒரு நிறுவனத்துடன் பொது மக்கள் – தனியார் கூட்டாளி (public –private partnership) என்ற பெயரிலோ அல்லது கூட்டாளியாகவோ ஆவது (joint venture) உதாரணமாக ஜெர்மனியில் ஒரு நீர் நிலையை தனியார்மயமாக்குவதற்கு விவேண்டி ஆர்.டபுள்யூ.இ (RWE) என்ற கம்பெனியுடன் பொது மக்கள் தனியார் கூட்டாளியாக ஒப்பந்தம் செய்து கொண்டு 49.9 விழுக்காட்டை தனியார்மயமாக்கியது

             தாங்கள் விரும்புகின்ற பகுதியில் செயல்படும் தண்ணீர் கம்பெனியில் பங்கு ஒன்றை வாங்கிக் கொண்டு படிப்படியாக அந்த கம்பெனியை முழுமையாக வாங்கி விடுவது.

             தண்ணீர் பாட்டில் சுத்திகரிப்பு அல்லது தயாரிப்பில் புதிய தொழில் நுட்பங்களை வாங்குவது அல்லது உருவாக்குவது.

இப்படிப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி சூயஸின் கிளை நிறுவனமான டெக்ரிமாண்டிடம் இந்தியாவின் 6 நகரங்களில் தண்ணீர் சுத்திகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நகரங்களில் தண்ணீர் துறை சார்ந்த சேவைகள் (சுகாதாரப்பணி, சுத்திகரிப்பு, சாக்கடையை சுத்தம் செய்தல் போன்றவை) பல்வேறு பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பெரும்பாலான தண்ணீர் சேவைத்துறைகள் ஏகமனதாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் பெப்சி மற்றும் கோக்கோ கோலா சேராது. இவற்றின் தண்ணீர் கொள்ளை தனிக்கதையாகும். ஆறுகள், நதிகள், ஏரிகளைக் குறி வைத்து இவை இயங்குகின்றன. நம்முடைய தண்ணீரை எடுத்து நமக்கே விற்கின்றன. அதையும் அனைவரும் எந்த உணர்வின்றி வாங்கிக் குடிக்கின்றனர். இதைக் குடிப்பதை பெருமை என்று விளம்பரப்படுத்தி அதில் நமது நடிக நடிகைகள் நடிக்கின்றனர். யாரிடம் யார் சோரம் போவது என்று பெரும் போட்டியே இங்கு சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வெட்கக்கேட்டை யாரிடம் போய் முறையிடுவது? இவர்களுக்காகவே தண்ணீர் கொள்கை 2012 இயற்றப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தூய குடிநீரை வழங்குகிறோம் என்ற போர்வையில் தண்ணீர் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. நீரை பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பாட்டில்களிலோ கேன்களிலோ விற்பதும் அதை வாங்கி அனைவரும் அருந்துவதும் சாதிமத வர்க்க வேறுபாடின்றி சமத்துவமான முறையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகவும் மாறி விட்டது. இப்போது எந்த வீட்டிலும் கடையிலும் இலவசமாக தண்ணீர் கொடுத்து உபசரிப்பதோ தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைப்பதோ நடைமுறையில்லை. இந்த பண்பாட்டையே தண்ணீர் கம்பெனிகள் நீக்கமற ஒழித்துக்கட்டி விட்டன. சர்வதேச நிதி நிறுவனத்தின் கணிப்பின்படி ஆண்டுக்கு 12000 கோடி (23 பில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள தொழிலாக வளர்ந்து வருகிறது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடைபெறும் தண்ணீர் வியாபாரத்தில் இந்தியாவில் மட்டும் கிடைக்கும் இலாபம் 800 கோடியாகும். இதுவரை அதிகாரப்பூர்வமாக தனியார்மயமாக்கப்பட்டுள்ள தண்ணீர் துறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரம்,கர்நாடகம்,கேரளா, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், இராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஆந்திரா மற்றும் சிக்கிம் ஆகியவை ஆகும். இதில் 8 திட்டங்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டுக் கம்பெனிகளினாலும் மற்றவை ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானியக் கம்பெனிகளாலும் அமல்படுத்தப்படுகின்றன.

தண்ணீரை தனியார்மயமாக்குவதும் வியாபாரமயமாக்குவதும் நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு ஈடானதாகும். தண்ணீர் வளம் மீண்டும் கிடைக்கவோ அல்லது எப்படி பாடுபட்டாலும் உருவாக்கவோ முடியாத மிக அரிய அற்புதமான வளமாகும். அதை விற்பது என்பது நாட்டை திட்டமிட்டு சோமாலியா ஆக்குவதாகும். எதை விற்றால் என்ன? காசு கிடைத்தால் சரி இலாபம் கிடைத்தால் சரி என்று அதற்காகவே இரவும் பகலும் பாடுபடும் ஆட்சியாளர்களைக் கொண்டுள்ள நாடும் நமது தமிழகமும் என்ன ஆகும்? பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் தான்.

தண்ணீர்ப் பஞ்சத்தை போக்குவதற்கு நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது என்று திட்டம் போட்டார்களே அது என்ன ஆயிற்று? அதைப்பற்றி அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

- சேது ராமலிங்கம்

Pin It