முறையற்ற ரியல் எஸ்டேட் வணிகத்தின் பெருக்கத்தால், சென்னை போன்ற மாநகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மட்டுமே வீடு வாங்கவோ, வாடகைக்கு குடியிருக்கவோ முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு அடுக்குமாடிக் குடியிருப்பும் அறிவிக்கப்படாத ஓர் அக்ரஹாரமாக உள்ளது. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களைப் பார்த்து, பிற்படுத்தப்பட்டோரும் தங்களை நவீன பார்ப்பனர்களாக உயர்த்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவிடுகின்றனர்.
தலித்துகளுக்கும், முஸ்லிம்களுக்கும் அனுமதி கிடையாது; அசைவம் சமைக்கக் கூடாது; அசோசியேஷன் சார்பில் கொண்டாடப்படும் எல்லா இந்துப் பண்டிகைகளின் செலவையும் பராமரிப்பு கட்டணத்தில் (Maintenance charge) சேர்த்து விடுவது; நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ கோலம் போட வேண்டும்; பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துவது எனத் தொடரும் இந்துமயத்தின் அக்கிரமத்திற்கு அளவில்லை. தீபாவளியும், வினாயகர் சதுர்த்தியும் கொண்டாடலாம்; ஆனால் மே தினமோ, பெரியார் பிறந்த நாளோ கொண்டாட முடியாது. பெரியாரியவாதிகளைப் பொருத்தவரை, இத்தகைய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சனாதன சிறைக்கூடங்களாகவே இருக்கின்றன.
இத்தகைய குடியிருப்புகளில் இருந்து விலகி, பெரியார் முன்வைத்த மாதிரி குடும்ப வாழ்க்கையை முயற்சித்துப் பார்க்கும் குடியிருப்பாகவே இந்த 'பெரியார் குடியிருப்பு' திட்டத்தை முன்வைக்கிறோம்.
-
ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இடம் வாங்கி, அதில் 20 வீட்டு மனைகள் ஏற்படுத்துவது.
-
அவரவர் தேவைக்கேற்ப இரண்டு படுக்கையறை அல்லது மூன்று படுக்கையறை கொண்ட தனி வீடுகள் கட்டிக்கொள்வது.
-
சமையலறையில் இருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்கும் விதமாக, ஒவ்வொரு வீட்டிலும் தனியே சமையலறை இருப்பினும், அனைத்து வீடுகளுக்கும் பொதுவாக ஒரு சமையலறையை ஏற்படுத்தி, சமையல்காரர் மூலமாக அதில் பொது சமையல் செய்வது. அலுவலகம் செல்பவர்களுக்கு மதிய உணவு (Lunch box) தயாரித்து கொடுப்பது. சமையல் பொருட்கள், சமையல்காரர்களுக்கு ஆகும் சம்பளத்தைப் பகிர்ந்து கொள்வது. (இதில் விருப்பமில்லாதவர்கள் தனியே தங்கள் வீடுகளில் சமைத்துக் கொள்வதற்கும் எந்த மறுப்புமில்லை)
-
எந்த மதப் பண்டிகைகளும் இல்லாது, பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள்கள் மற்றும் மே தினத்தைக் கொண்டாடுவது.
-
அவரவர் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைத் தொகுத்து, பெரியார் குடியிருப்புக்கென ஒரு பொது நூலகம் உருவாக்குவது; தினசரிகள், இலக்கிய மற்றும் இயக்கப் பத்திரிக்கைகளை தருவித்துக் கொள்வது
-
கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், குடும்ப விழாக்கள் நடத்த ஏதுவாக ஒரு சமுதாயக் கூடம்
-
வளாகம் முழுவதும் பசுமையான, பயனுள்ள மரம், செடி, கொடிகளை வளர்ப்பது
-
குழந்தைகள் விளையாடுமிடம்
-
உடற்பயிற்சிக் கூடம்
-
நீச்சல் குளம்
-
இவை அனைத்திற்கும் ஆகும் செலவை (இடம் வாங்குவது, கட்டடம் கட்டுவது) எந்த இலாப நோக்கமும் இன்றி, குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் அசல் விலைக்குத் தருவது.
இவைதான் இந்த 'பெரியார் குடியிருப்பு' திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.
இதற்கான இடத்தை சென்னை கூடுவாஞ்சேரியிலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் பார்த்திருக்கிறோம். ஒரு காலி வீட்டு மனையின் விலை தோராயமாக ரூ.10 இலட்சம். கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு தொடங்குவதால், அதற்கு ஆகும் செலவு, வடிவமைப்பு மற்று உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, வீட்டுமனை வாங்குபவர்கள் அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும். தற்போது இடம் வாங்குவது முதல் கட்ட வேலை. 20 மனைகளுக்கான இடம் உள்ளது. ஏற்கனவே 7 பெரியாரியவாதிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளோம்.
இத்திட்டத்தில் சேர இரண்டே இரண்டு நிபந்தனைகள்தான்:
1. சாதி, மதம், கடவுள், மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாத சமத்துவமான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும்.
2. பிற்காலத்தில் மனையை விற்பதாக இருந்தாலும், முதல் நிபந்தனைக்கு உட்படுபவர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும்.
நீங்களும் இத்திட்டத்தில் சேர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: தோழர் ஓவியா (9994782229), தயாளன் (9841150700), கீற்று நந்தன் (9940097994,
பெரியாரியவாதிகள் இணைந்து ஒரு மாதிரி சமூகத்தை கட்டமைப்போம், வாருங்கள்!!