சமூகத்தில் நிலவும் பெண்கள் பிரச்சினைகளுள் மிகவும் முக்கியமானது கைம்பெண் பிரச்சினை ஆகும். பொதுவாகவே, சமூகத்தில் கைம்பெண்களின் நிலை சற்றுத் தாழ்வானதாகவும் இரண்டாம் தரக் குடி மக்களாக நோக்கத் தக்கதாகவும், பாதுகாப் பற்றதாகவுமே இருந்து வருகிறது. கைம்பெண்கள் மறுமணம் செய்து கொண்டு தக்கத் துணையோடு வாழ்வதில் இன்று சட்டப்பூர்வத் தடை ஏதும் இல்லை. பலர் இப்படி மறுமணம் செய்து கொண்டு நல்ல நிலைமையில் சிறப்பாகவே வாழ்ந்து வருகின்றனர். என்ற போதிலும் இன்னமும் சமூகத்தில் அதற்கு உரிய அங்கீகாரம் கிட்டாமலே, அதாவது சாதாரணத் திருமணங்களைப் போலவே கைம்பெண் மணங்களையும் நோக்குமளவுக்கு நடத்துமளவுக்கு சமூகம் பக்குவம் பெறாமலே உள்ளது.

இதிலும் ஒரு ஆண் முற்போக்குச் சிந்தனை நோக்கில் யாராவது ஒரு கைம்பெண்ணுக்கு வாழ்வளிக்க வேண்டும் என்கிற அக்கறையில் தான் விரும்பும், தன்னை விரும்பும் ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வதற்கும், கணவனை இழந்த ஒரு கைம்பெண், தான் மறுமணம் செய்து கொள்ளத் தானாக ஒரு துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பதற்கும், இரண்டிலும் செயற்படுவது கைம்பெண் மறுமணம்தான் என்றாலும் கூட, இது ஆணின் முயற்சியாக நடை பெறுவதற்கும், பெண்ணின் முயற்சியாக நடைபெறுவதற்கும், இரண்டிற்கும் வேறுபாடு கற்பிக்கப்படுகிறது. இரண்டும் வேறுபட்ட தாகவே நோக்கப்படுகிறது.

அதாவது இது ஆணின் முயற்சியில் நடைபெறுவதில் நியாயம் இருப்பதாகவும், அது இயல்பானதாகவும், ஏற்றுக் கொள்ளப்படுவது போல், பெண்ணின் முயற்சியில் நடைபெறுவதும் நியாயமானதாகவும், இயல்பாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சற்றுக் குறைவாகவே நோக்கப்படுகிறது. அதாவது இதிலும் ஆணாதிக்கச் சிந்தனையே மேலோங்கி ஆண் முதன்மை நோக்கு, ஆண்வழிப்பட்ட நட வடிக்கைகள் ஆகியவற்றை வைத்தே அவை மதிப்பிடப் படுகின்றன.

இந்த அளவு கைம்பெண்கள் நிலையிலும், பெண்ணுக்கு முதன்மை தராமல், அல்லது சமத்துவம் தராமல் அவர்களை ஆண் பார்வை நோக்கிலேயே வைத்து மதிப்பிடும் நோக்கு நீடித்து வருகிறது. இந்நோக்கைக் கட்டமைத்ததிலும் ஆதிக்க சக்திகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சமூகத்தின் பாலுறவு வளர்ச்சியில் குழு மணம், இணை மணத்துக்கு அடுத்தே ஒரு தார - ஒரு கணவ முறை தோன்றியது என்பதை, அதாவது தனியுடைமை மற்றும் அதைப் பாதுகாப்பதற்காக உருவான குடும்ப அமைப்பு இவற்றுடனேயே ஒரு தார - ஒரு கணவ மணம் தோன்றியது என்பதை நாம் அறிவோம்.

இந்த முறையின் உடன் நிகழ்வாகவே ஆணாதிக்கமும் தோன்றுகிறது. இதனடிப்படையில்தான் மனைவியை இழந்த ஆண் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் கணவனை இழந்த கைம்பெண் அப்படிச் செய்து கொள்ளக் கூடாது, முடியாது. அவளுக்கு அந்த உரிமை கிடையாது என ஆக்கப்படுகிறது. கைம்பெண் மறுமணம் சமூகத்தால் தடை செய்யப் படுகிறது. கணவனை இழந்த பெண்கள் காலாகாலத்துக்கும் கைம்பெண்ணாகவே கிடந்து சாக வேண்டியதுதான் எனப் பெண்ணுக்கான விதி தீர்மானிக்கப்படுகிறது.

ஏன் இப்படி என்றால், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அன்றைக்குத் தோற்றமெடுத்திருந்த, குடும்ப வாழ்வில் ஆண் வெளியிலிருந்து ஒரு பெண்ணைத் தன் குடும்பத்துக்குக் கொண்டு வருகிறான். தனக்குத் தேவையான வாரிசைப் பெற்றுத் தரும் கருவியாக அவளைப் பயன்படுத்திக் கொள்கிறான். அவளுக்குப் பிறப்பது அவனது வாரிசாகக் கொள்ளப் படுகிறது.

ஆனால், கணவனை இழந்த அக்கைம்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள அனுமதித்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு ஆண் வெளி யிலிருந்து வருகிறான். அவன் வழி இப்பெண்ணுக்குக் குழந்தை பிறந்தால், அக்குழந்தை அதன் தந்தை வழி வாரிசாகத்தான் கருதப் படுமேயல்லாது, பெண் வழி வாரிசாகக் கருதப்படமாட்டாது. இதனால் குடும்பத்தில் வேற்று ஆணின் ஆதிக்கமே மேலோங்கும். எனவேதான், குலப் புனிதம், குடும்பப் புனிதம் காக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும் கைம்பெண் மறுமணம் தடை செய்யப்படுகிறது.

இங்கே ஒரு கேள்வி எழலாம். தன் குடும்பத்தில் கைம்பெண் ஆன ஒரு பெண்ணுக்கு வெளியில் இருந்து ஒரு ஆணைக் கொண்டு வந்தால்தானே இந்தச் சிக்கல். அதற்குப் பதிலாக இந்தப் பெண்ணையே வேறு குடும்பத்துக்கு அளித்துவிட்டால், அதாவது மகளைக் கட்டிக் கொடுப்பது போலவே, கணவனை இழந்த மருமகளையும் வேறு யாருக்கும் கட்டிக் கொடுத்து விடலாமில்லையா என்று கேட்டால், வேறு குடும்பத்து ஆண் இந்தப் பெண்ணை ஏற்கமாட்டான். அவள் ஏற்கெனவே திருமணமானவள், வேறு ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானவள் என்பதால், அவள் புனிதமற்றவள், களங்கமானவள், தீட்டுப் பட்டவள் என்றே நிராகரிக்கப்படுவாள். தவிரவும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு ஆணை மணந்து, அந்தக் குடும்பத்தில் கலந்துவிட்ட ஒரு பெண் அக்குடும்பத்திற்குச் சொந்தமாகி விடுகிறாள். இப்படி ஒரு குடும்பத்துக்குச் சொந்தமாகி விட்ட ஒரு பெண்ணை வேற்றுக் குடும்பத்திற்கு அளிப்பதில் இந்தக் குடும்பத்திற்கும் ஏற்பற்ற நிலை இருக்கிறது. எனவே இந்த இரண்டு நோக்கிலும் கைம்பெண் மணம் மறுக்கப்படுகிறது.

இப்படிப்பட்ட மறுமணம், ஒரு பெண் கணவனோடு சில காலம் வாழ்ந்து சில குழந்தைகளைப் பெற்றுத் தாய்மை அடைந்து அனுபவித்து கணவனை இழந்தால் கூட பரவாயில்லை. சரி, ஏதோ வாழ்க்கையில் ஒரு அம்சத்தை வாழ்ந்து விட்டாள், சில சுகங்களை அனுபவித்து விட்டாள். அந்த மட்டத்திலாவது போதும் என்று ஒரு குறைந்தபட்ச நியாயம் கற்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், எதுவுமே இல்லாமல், 5, 6 வயதுள்ள சிறுமிகளை இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து, அவர்களுக்கு 7, 8 வயதுள்ள சிறுவர்கள் கணவர்களாக அமைய, அச்சிறுவர்கள் நோய்வாய்ப் பட்டோ, வேறு காரணங்களாலோ இளமையிலேயே இறக்க நேரிட்டால், அந்த 5, 6 வயது இளம் சிறுமிகள் காலம் முழுக்க கைம்பெண்களாக ஆக்கப்பட்டு, வாழ்வின் எந்தச் சுகமுமே அறியாமல் காலா காலத்துக்கும், அவர்கள் அப்படியே பத்தினி விரதம் பூண்டு வாழவேண்டும் என்பது எப்படிப்பட்ட கொடுமை.

ஆனால், இப்படிப்பட்ட கொடுமையைத்தான் ஆதிக்க சக்திகள் தங்கள் குடும்பப் புனிதம் காக்க, குடும்ப உடைமை காக்க கூசாமல் செய்து வந்தனர். இதையே சமூகத்தின் பிற பகுதி மக்களையும் செய்ய வைத்தனர். விளைவு? சமூகத்தில் இளம் கைம்பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இக்கொடுமை தமிழ்நாட்டை விடவும் வட மாநிலங்களிலேயே மிகவும் அதிகம்.

காட்டாக, உத்திரப் பிரதேசத்தில் 1921 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, 10 வயதுக்குட்பட்ட கைம்பெண் சிறுமிகளின் எண்ணிக்கை 12,000 ஆகவும், 5 வயதுக்குட்பட்ட கைம்பெண் சிறுமிகளின் எண்ணிக்கை 1,200 ஆகவும் இருந்துள்ளது. இவர்களுக்கு அப்பால் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களின் எண் ணிக்கையும் மிக அதிகமாக 49,555 ஆக இருந்துள்ளது.

தவிர, இக்கைம்பெண் பட்டியலில் உயர்சாதிப் பிரிவினரே அதிகம் இருந்தனர் என்பதும், அடித்தட்டு மக்களில், கடைநிலைப் பணி யாளர்கள் மத்தியில் இவ்வெண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கைம்பெண்கள் தீராத தணிக்கமுடியாத தங்கள் உடற்பசியை, பாலுறவு வேட்கையை, இயற்கையான சட்ட, சமூக அங்கீகாரத்துக்குட் பட்டுத் தணித்துக் கொள்ள வாய்க்காத நிலையில் அவர்கள் கள்ளத் தனமான உறவுகளில் ஈடுபட்டார்கள். அதனால் ஏற்பட்ட கருத் தரிப்புகளையும் அவர்கள் கள்ளத்தனமாகக் கலைத்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

இத்துடன் இயற்கையாகவே பாலியல் வேட்கையில் ஒரு பெண் ஒரு ஆணை விடவும் எட்டு மடங்கு வீர்யமும் வேட்கையும் மிக்கவளாக இருக்கிறாள் என்று சாத்திரங்கள் குறிப்பிடுவதாக விற்பன்னர்கள் தெரிவித்த கணிப்பில் இதை முற்றாகத் தடுத்து விட முடியாது என்றும் அவர்களால் கருதப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில்தான் 18ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்கள், இப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண முயன்றன. இந்த நோக்கிலேயே இளம் வயது திருமணங்களைத் தவிர்த்தல், கைம்பெண் மறுமணங்களை ஊக்குவித்தல் முதலான சிந்தனைப் போக்குகளும் முகிழ்த்தன.

எனினும் முற்போக்கு எண்ணங் கொண்டோர், மனித நேயம் மிக்கோர் இவற்றை ஆதரித்த அதே வேளை, ஆசார மனோபாவம் கொண்டோர், அடுத்த உயிரின் இம்சை பற்றி அக்கறைப்படாதோர் இதை கடுமையாக எதிர்த்தனர்.

காட்டாக, பிரும்ம சமாஜப் பிரிவினர் ஆரிய சமாஜத்தின் ஒரு பிரிவினர் ஆகியோர் இளம் வயது திருமணத்தைத் தவிர்க்கவும், கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கவும் செய்தபோது, முழுக்க முழுக்கப் பார்ப்பன குலத்தைக் கொண்டு அமைந்த சனாதன சமாஜத்தினர் கைம்பெண் மறுமணக் கருத்தைக் கடுமையாக எதிர்த்தனர். கைம்பெண் மறுமணம் என்பது தங்கள் மேல்சாதி புனிதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றதுடன், கைம்பெண் தங்கள் உடல் இச்சையைத் தவிர்த்து, கட்டுப் பெட்டித் தனமாகவும், ஆசார, அனுஷ்டானங்களுடனும் வாழ விதிக்கப் பட்டவர்களே தவிர, அவற்றை மீறுவதற்காக அல்ல என்றும் வாதிட்டனர்.

ஆகவே, கைம்பெண்கள் பொது இட நிகழ்வுகளுக்கு வரக் கூடாது, ஆண்களோடு பழகக் கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக் கூடாது, வண்ண ஆடைகள் உடுத்தக் கூடாது, அணிகலன்கள் அணியக் கூடாது, நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது, பால் வேட்கையைத் தூண்டும் சத்துள்ள உணவுகளை உண்ணக்கூடாது, மென் படுக்கையில் துயிலக் கூடாது என்பது முதலான மனித உரிமை மீறல் கருத்துகளை வலியுறுத்தி காலாகாலத்துக்கும் இவர்கள் கைம் பெண்ணாகவே வாழவேண்டும் என்றனர்.

கூடவே, கைம்பெண் மறுமணம் கூடாது என்பதற்கு அவர்கள் சொன்ன மிக முக்கியமான காரணம், கைம்பெண் மறுமணத்தை அனுமதித்தால், அவர்கள் கணவன் உயிருடன் இருக்கும்போதே, வேறு ஆடவன்மீது ஆசைப்படவும், அவனை அடையும் வேட்கையில் அதற்குத் தடையாக இருக்கும் உயிருள்ள கணவனையோ அல்லது தன் சொந்தக் குழந்தைகளையோகூட அவர்கள் விஷம் வைத்துக் கொன்று விட நேரிடும் என்றும், இத்துடன் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியருக்கும் இடையேயான இணக்கத்தையும் கூட இது பெருமளவு குறைத்து, பெண்களுக்கு மாற்று ஆடவன் மீதான ஆசையைத் தூண்டி விடும் என்றும் வாதிட்டு, எனவே கைம்பெண் மறுமணத்தை அனுமதிக்கக் கூடாது என்றனர்.

அதேவேளை கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தவர்கள் அனைவரும் முழுமையான முற்போக்கு எண்ணத்தில் இதை ஆதரித்தனர் என்றும் சொல்ல முடியாது. 1871 இல் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்கள் அறிமுகம் செய்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் திட்டம், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்துக்கள் எண்ணிக்கையை விடவும், இசுலாமியர்களின் எண்ணிக்கையைக் கூடுதலாகக் காட்டியது, இந்துக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துவதாக இருந்தது. அதற்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்குப் பின் 1891இல் வெளிவந்த கணக்கெடுப் பின் முடிவுகள் இந்தக் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இசுலாமியர்கள் மத்தியில் கைம்பெண் மறுமணத்திற்குத் தடை கிடையாது. ஆகவே, இசுலாமியர்களுள், கணவனை இழந்த பெண்கள் தாங்களாக அப்படித் தனித்து வாழ விரும்பாமல் கைம்பெண்களாக இருக்க வாய்ப்பு கிடையாது. எனவே, அவரவரும் மறுமணம் செய்து கொண்டு அவரவர்கள் பாட்டுக்குக் குழந்தைகள் ஈன்று கொண் டிருந்தார்கள். இப்படியிருக்க, இந்துக்கள் மத்தியில் மட்டும் கைம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், இதனால் அவர்களது குழந்தைப்பேறு தடைப்பட்டதுமே மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை இப்படி குறைவுபடுவதற்குக் காரணம் என்று தெரிய வந்தது. எனவே, இந்துக்கள் மத்தியில் கைம்பெண்களை அதிகரிக்க விட்டு, அவர்களது பிள்ளைப் பேற்றுக்குத் தடையாக இருந்து, இந்துக்களாகிய நாம், நாமாகவே நமது எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வது உசிதமல்ல என்னும் கருத்தும் வலுப்பட்டது.

இத்துடன் இந்துக் கைம்பெண்கள் சிலர் இசுலாமிய ஆண்களோடு இரகசியமாக உறவு வைத்திருந்ததுடன், வாய்ப்பும் துணிவுமுள்ள சில கைம்பெண்கள் இசுலாத்துக்கு மதம் மாறி இசுலாமிய ஆண்களுடன் சேர்ந்து வாழும் நிலையும் உருவாகியது. இந்நிலையில் தான் இது இப்படியே நீடித்தால் இது இந்துக்களுக்குப் பாதகமான எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிற எண்ணமும் ஏற்பட பழமைவாதி களிடமிருந்து கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவான சூழலை உருவாக்கியது.

இந்த எண்ணத்தின் விளைவாக, முதல் கட்டமாகக் கன்னித் தன்மையே கழியாமல், வாழ்வின் பாலுறவு அம்சங்களையே காணாமல், கணவனை இழந்து கைம்பெண் ஆனவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்கிற அனுமதி வழங்கப்பட்டு சமூகத்திலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை வேத சாத்திரங்களும் அனுமதிப்பதாக மேற்கோள்கள் காட்டப்பட்டன. இதன் வழி பிறகு படிப்படியாகப் பிற கைம்பெண்களும் மறுமணம் செய்து கொள் ளலாம் என்கிற கருத்துக்கு இசைவு அளிக்கப்பட்டது.

 இசுலாமிய மதம் மட்டும் மக்கள் தொகையில் இந்துக்களுக்குப் போட்டியாக இல்லாமலிருந்தால், இந்துக் கைம்பெண்கள் மட்டும் இசுலாமிய ஆடவர்களை நாடாமலிருந்தால், இளம் வயதுத் திருமணத் தடை, மற்றும் கைம்பெண் மறுமணம் போன்றவற்றிற்குச் சனாதன இந்துக் களிடமிருந்து எந்த அளவு ஆதரவு கிட்டியிருக்கும் என்பது கேள்விக் குரியதே.

ஆக, ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில் சனாதனிகளும் இதை ஏற்க வேண்டி நேர, வரலாற்றுப்பூர்வமான சமூக வளர்ச்சி, நவீன வாழ்க்கை முறை, பெண்ணுரிமை சார்ந்த விழிப்புணர்வு சிந்தனைகள் காரணமாக இன்று கைம்பெண் மறுமணம் என்பது பெரும்பாலும் இயல்பாகச் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக மாறியிருக்கிறது.

எனினும், இதிலும் சனநாயக நோக்கிலும், தனி மனித சுதந்திர நோக்கிலும் ஒரு கருத்தை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதாவது, கைம்பெண் மறுமணம் என்று சொல்லும்போது கைம்பெண்ணாயிருப் பவர்கள் தாங்கள் விரும்பினால் மறுமணம் செய்து கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றுதான் பொருளே தவிர, அப்படி விருப்பம் இல்லாதவர்களையும் மறுமணம் செய்து கொள், செய்து கொள் என்று வற்புறுத்துவதற்காக இது கூறப்படவில்லை.

ஏனெனில், கணவன் மேல் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு, அல்லது அவனோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அல்லது ஒட்டு மொத்த வாழ்க்கையில் ஏற்பட்ட அலுப்பு, விரக்தி, மீண்டும் ஒரு குடும்ப வாழ்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே தோன்றாமல் அல்லது அதை முற்றாகவே விரும்பாமல், எஞ்சிய நாள்களை, தனிமையிலேயே கழித்து விடலாம் என்று சில பெண்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட வர்களைப் போய் மறுமணம் செய்து கொள், அதுதான் முற்போக்கு என்று யாரும் கட்டாயப் படுத்த வேண்டியதில்லை.

ஏனெனில், மறுமணம் செய்து கொள்ள விரும்பும் கைம் பெண்ணை அது கூடாது என்று தடுப்பது எந்த அளவு வன்முறையோ, அதே அளவு வன்முறைதான் விரும்பாத கைம்பெண்ணை மறுமணம் செய்து கொள் என்று கட்டாயப்படுத்துவதும்.

எந்த ஒரு கருத்தையும் எடக்கு மடக்காய்ப் புரிந்துகொண்டு, ஒன்று, இருந்தால் இந்தக் கோடி நிலை, இல்லாவிட்டால் அந்தக் கோடி நிலை என்ற அணுகுமுறை கொண்டவர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றுகின்றன. எனவே அவர்களுக்காகவே இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, எதிலும் எதுவும் சம்பந்தப்பட்டவர்களின் விருப்பம், ஆர்வம், தேவை பொறுத்துதானேயொழிய, எதுவும் வற்புறுத்தலுக் குரியதல்ல. வேண்டுமானால், ஆலோசனை சொல்லலாம். முடிவெடுத்துக் கொள்வது அவரவர் விருப்பத்தின்பாற்பட்டது என விட்டு விடுவதுதான் சனநாயகம். அந்த நோக்கில்தான் கைம்பெண் மறுமணமும்.

Pin It