திருமணத்திற்கு முன்பான பாலுறவை - அதாவது வன்முறை வற்புறுத்தல் இன்றி இருவர் விருப்பத்துடன் நிகழும் பாலுறவை அனுமதிப்பது போலவே திருமணத்திற்குப் பிறகான, இருவர் சம்மதத்துடன் நிகழும் பாலுறவையும் அனுமதித்துவிடலாம்.

இப்படிச் சொல்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இருக்கட்டும். இதுபற்றி உணர்ச்சி வயப்படாமல் கொஞ்சம் அறிவார்த்தமாக யோசிப்போம்.

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி மண உறவை ஏற்படுத்திக் கொண்டு இல்வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த இல்வாழ்க்கை பிணக்கு இன்றி இனிதாகவே நடக்கிறது. ஆனால் இடையில் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மண உறவு தாண்டி வெளியில் ஒரு உறவு - அதாவது பணியிடங்களில், அக்கம்பக்கத்துக் குடியிருப்புகளில் - அமையும் சூழல் வாய்ப்பைப் பொறுத்து ஏதோ ஏற்பட்டு விடுகிறது என்று கொள்வோம். அப்போது அதை எப்படி எதிர்கொள்வது?

இல்வாழ்க்கையில் கணவனும் மனைவியும் நம்பகத் தன்மையுடனும், விசுவாசத்துடனும், ஒருவருக்கொருவர் துரோகம் நினைக்காமலும் இணக்கமாக வாழவேண்டும் என்பதே பொது நியதி. எதிர்பார்ப்பு. நியாயம்.

இந்நிலையில் இதைத்தாண்டி, ஆணுக்கு வேறொரு பெண்ணுடனோ, அல்லது பெண்ணுக்கு வேறொரு ஆணுடனோ தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. இது திட்டமிட்டு, ஒருவருக்கொருவர் துரோகம் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற வஞ்சக எண்ணத்துடனோ சூழ்ச்சியாகவோ நடைபெறவில்லை. இயல்பான பழக்கத்தில் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்படும் ஈடுபாட்டில் நிகழ்ந்து விடுகிறது.

இது மாதிரி சந்தர்ப்பங்களில் இது பெண்ணுக்கு நேர்ந்தால், இது கணவனுக்குச் செய்யும் துரோகமில்லையா என நோக்கப்படுகிறது. அதே ஆணுக்கு நேர்ந்தால் இது மனைவிக்குச் செய்யும் துரோகம்தான் என்றாலும் சற்று விட்டுக் கொடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியது தான் என்று சற்றுச் சலுகையோடு அணுகப்படுகிறது.

இவ்வாழ்வில் கணவனுக்கோ, மனைவிக்கோ ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லையானால், சேர்ந்து இணங்கியே வாழமுடியாது என்கிற நிலை ஏற்படுமானால் சட்டப்படி மணவிலக்குப் பெற்று பிரிந்து வாழலாம். விரும்பும் வேறொரு துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. சரி. எனவே மண உறவுக்கு அப்பால் இதுபோன்ற தொடர்புகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கணவன் மனைவியர் மணவிலக்கு பெற்று பிரிந்து விட வேண்டியதுதான் என்று சிலர் கருத்து கூறலாம். நல்லது.

ஆனால் மேலே நாம் குறிப்பிடுவது கணவனுக்கு மனைவி மேல் வெறுப்போ கசப்போ எதுவுமில்லை. கணவன் மனைவியை முழு அன்போடு நேசிக்கிறான். இதைத்தாண்டி பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.

இதேபோல மனைவிக்குக் கணவன் மேல் கசப்போ வெறுப்போ எதுவுமில்லை. மனைவி கணவனை முழு அன்போடு நேசிக்கிறாள். ஆனால் இதைத் தாண்டி அவள் பணியிடத்தில் அக்கம் பக்கத்துக் குடியிருப்பில் ஒரு ஆணோடு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.

இந்த நிலையில் இருவருமே யாருமே மணவிலக்கு கோரவில்லை. அந்த அளவுக்குப் போகிற பிரச்சினையாகவும் அவர்கள் இதைப் பார்க்கவில்லை. ஏதோ சந்தர்ப்பச் சூழல் நேர்ந்துவிட்டது. அவ்வளவுதான் என்கிற நிலை. இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்யலாம்?

கணவன் மனைவி இருவரும் பேசி மண உறவுக்கு அப்பால் ஏற்பட்ட இந்த உறவைத் துண்டித்துக் கொள்ளக் கோரலாம். துண்டித்துக் கொண்டு பழையபடியே சுமுகமாக இல்வாழ்க்கை நடத்தலாம்.

ஆனால் இப்படி முற்றாகத் துண்டித்துக் கொள்ள முடியவில்லை. இல்வாழ்க்கையும் வேண்டும். இதற்கு அப்பால் ஏற்பட்ட தொடர்பும் நீடிக்கவேண்டும் என்கிற நிலைமை ஏற்படுகிறது என்று கொள்வோம். அப்போது என்ன செய்யலாம்? பேசிப் பார்த்துப் பிரச்சினை தீர வில்லை யானால் மணவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது மண உறவு தாண்டி வெளியில் உறவு வைத்துக் கொண்டிருக்கும் கணவனை மனைவியும், இதேபோல வெளியில் உறவு வைத்துக் கொண்டிருக்கும் மனைவியைக் கணவனும் விவாகரத்து செய்து விடலாம். இதிலும் ஒன்றும் பிரச்சினை இல்லை.

ஆனால் இதற்கு அப்பால் வேறு ஒரு சூழல் நிலவுகிறது. மண உறவுக்கு அப்பால் வெளி உறவு ஏற்பட்ட கணவனுக்கு வெளி உறவையும் விட முடியவில்லை. மனைவியையும் மணவிலக்கு செய்ய விருப்ப மில்லை. மனைவி குழந்தைகளை அன்போடு நேசிக்கிறான். அவர்களை விட்டுப் பிரிய மனமின்றித் தவிக்கிறான். அதே வேளை தன்னை நேசித்துத் தன்னை நம்பி, தன்னோடு உறவு ஏற்படுத்திக் கொண்டவளையும் துண்டித்துக் கொண்டு அவளை வேதனைக் குள்ளாக்க விருப்பமில்லை. இந்த மனநிலையை மனைவியிடம் சொல்லிக் கெஞ்சுகிறான். மனைவியும் கணவன்மீது உள்ள அன்பில் அல்லது வேறு ஏதோ பொருளியல் மற்றும் மனவியல் காரணங்கள், பாதுகாப்புகள் கருதி இதை ஏற்றுக் கொள்கிறாள். அனுமதிக்கிறாள் என்று கொள்வோம்.

அப்போது என்ன நடக்கிறது? இதுமாதிரி சந்தர்ப்பங்களில் மண உறவு தாண்டி தொடர்பு ஏற்பட்டுள்ள பெண்ணையும் விடாமல் மனைவியையும் விடாமல் இரண்டு பெண்களோடு வாழும் நிலை ஏற்படுகிறது. அதாவது சூழலைப் பொறுத்து வேற்றுப் பெண்ணை மணம் புரிந்துகொண்டோ, புரிந்து கொள்ளாமலோ வாழும் நிலை ஏற்படுகிறது. இப்படி மனைவியின் சம்மதத்தோடு இரண்டு பெண் களோடு வாழும் ஆண்கள் நிறைய உண்டு. ஒவ்வொன்றுக்கும் சில குறிப்பான காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்களின் அடிப் படையில் இந்த உறவு நிகழும், நீடிக்கும்.

ஆனால் இங்கே இதில் ஒரு சிக்கல். மண உறவு தாண்டி வெளியில் உறவு கொள்ளும் பெண் திருமணமாகாத பெண்ணாயிருந்தால் பிரச்சினையில்லை. ஆனால் அவள் திருமணமானவளாக, இன் னொருவன் மனைவியாக இருக்கிறாள். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் இருக்கிறாள் என்று கொள்வோம். அப்போது இது பெரும் சிக்கல் இல்லையா?

உண்மைதான். இதுபோன்ற நிலைமைகளில் சம்பந்தப்பட் டவர்களை அழைத்துவைத்து இதனால் ஏற்படும் பின்விளைவு களையும் பாதிப்புகளையும் பற்றிப் பேசி இந்த உறவை முறித்துக் கொள்வதே உசிதம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி, இதற்கு ஒரு தீர்வு காணலாம்.

அல்லது சம்பந்தப்பட்ட இருவருமே இதில் இந்த உறவை விட்டுவிட மனமில்லாமல் இருக்கிறார்கள் என்று கொள்வோம். அப்போது வெளிப்பெண்ணின் கணவனது நிலைப்பாடுதான் முக்கிய மாகிறது.

இதேபோலவே தான் மண உறவில் இருக்கிற பெண்ணுக்கும். இப்பெண் மண உறவு தாண்டி வேறு ஒரு ஆணோடு தொடர்பில் இருக்கிறாள். அந்த ஆண் மணமாகாத இளைஞனாக இருக்கலாம். மணமாகி குழந்தைகளோடு வாழ்பவனாகவும் இருக்கலாம். எப்படி யானாலும் ஆண் தரப்பில் பிரச்சினை அதிகம் இருக்காது. எப்போதும் சிக்கல் பெண் தரப்பில்தான்.

இதுமாதிரி சந்தர்ப்பங்களில் மண உறவைத் தாண்டி வெளியில் உறவு கொள்ளும் மனைவியைக் கணவன் பேசிப்பார்த்து அவளை இணக்கப்படுத்தி அவளை அவ்வுறவைத் துண்டித்துக் கொள்ளக் கோரலாம். அவள் ஏற்காவிட்டால் அவளை மணவிலக்கு செய்துவிடலாம். அப்படிச் செய்ய மனமில்லை, குழந்தைகள் நலன் கருதியும், அவர்கள் மேல் உள்ள பாசம் கருதியும், மனைவியின் மீதான நேசம் கருதியும் அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவள் தனக்கு நிச்சயம் வேண்டும் என்கிற நிலையில் மணவிலக்கு கோருவதில் விருப்பமில்லாமல் இருக்கலாம்.

இப்படிப்பட்ட சூழலில் மனைவியின் மகிழ்ச்சி கருதி, குழந்தைகளின் நலன், எதிர்காலம் கருதி, கணவன்மார்கள் சற்று விட்டுக் கொடுத்துப் போவதே பொருத்தமாயிருக்கும்.

எந்தக் கணவனும் தன் மனைவி வேறு ஒருவனோடு உறவு கொள்வதை ஏற்க மாட்டான், சகிக்க மாட்டான் என்பது பொதுக் கருத்தாகக் கொண்டாலும், இப்படி ஏற்றுக்கொள்கிற கணவர்களும் உண்டு என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது தன்னல நோக்கில், பொருளியல் நோக்கில் அல்லது வேறு ஏதாவது நோக்கிலும் நிகழலாம். ஆக நிகழ்கிறது என்பது முக்கியம்.

எனவே இந்த அடிப்படையில் கணவன் தன் மனைவியை விட்டுத்தரும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னோடும், தன் குழந்தைகளோடும் பாசத்தோடும் நேசத்தோடும் இவர்களை விட்டுப் பிரிய மனமின்றியும் வாழும் மனைவியின் மகிழ்ச்சியைக் கவனத்தில் கொண்டு மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் ஏதோ ஒரு சுற்றுலா போல் அவள் உறவு சார்ந்த ஆணோடு இருந்து விட்டு வர அனுமதித்து விடலாம்.

இப்படிச் சொல்வதைக் கேட்டு, சிலருக்கு மீசை துடிக்கலாம். மானமுள்ள, ரோஷமுள்ள எந்த ஆண் இதைச் சகித்துச் சம்மதிப்பான் என்று துள்ளலாம். இப்படிப்பட்டவளைக் கொடுவாளை எடுத்துக் கண்ட துண்டமாக வெட்டிப் போடுவதை விட்டுக் கூட்டிக் கொடுத்து வாழச் சொல்லிக் கணவனுக்கு உபதேசிப்பதாக, இப்படி வாழ்வது கேவலம் இல்லையா என்று இரத்தம் கொதிக்கலாம். படிக்கிற புத்தகத்தையே கிழித்து எறியலாம் என்றெல்லாம் கூட ஆவேசம் எழலாம். நல்லது. ஆனால் காலம் காலமாக இதுதான் நடந்து வருகிறது. மனைவி நாட்டம் கொள்கிற, அல்லது மனைவி மீது நாட்டம் கொள்கிற ஆணைப் பழி தீர்ப்பது, கொன்று போடுவது என்று. ஆனால் இப்படி இந்த மிருகவெறி வாழ்க்கைக்கு அப்பால் ஒரு மனித நேய வாழ்க்கை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

ஆனால் இப்படியும் வாழ்க்கை இருக்கிறது என்பதை இவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அதாவது நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, சில சந்தர்ப்பங்களில் அவள் ஈன்ற குழந்தைகளையும் வெட்டிப்போட்டு தன் உடைமை வெறியைத் தீர்த்துக் கொள்ளும் ஆண்களைப் பற்றிய செய்திகள் அன்றாடம் நாளேடுகளில் இடம் பிடிப்பது ஒரு புறமிருக்க, செய்தியாகாமல், அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் மேலே குறிப்பிட்டவாறு வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் இப்படி மனிதநேய நோக்கில் நம்மைச் சிந்திக்கவிடாமல் தடுப்பது எது? பாலுறவு பற்றிச் சமூகம் ஏற்படுத்தித் தந்திருக்கும் மதிப்பீடுகள். இந்த மதிப்பீடுகள் தானே எல்லாக் கொடுமைகளுக்கும் காரணமாக இருக்கின்றன? எனவே தான் இந்த மதிப்பீடுகளை மாற்றுவதைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும் என்கிறோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஒரு மாதர் சங்க மாநாட்டில் வாழ்த்துரைக்காகப் போயிருந்தேன். அங்குப் பேசிய ஒரு பெண்மணி ஒரு செய்தியைக் குறிப்பிட்டார்.

பெரும்பாலான திரைப்படங்களில் மனைவியை இழந்த கணவன் ஏகபத்தினி விரதனாக, அவள் தந்த குழந்தையை வைத்துக் கொண்டு, அதை வளர்க்கப் பாடுபட்டு கொண்டிருக்க, பக்கத்து வீட்டில் இருக்கும் இளம்பெண் இதைப் பார்த்து பாவப்பட்டு அந்த ஆணைக் காதலித்து வற்புறுத்தி திருமணம் செய்து கொள்வதாகவும், திருமணமாகி மாலையோடு படியேறி வரும் இரண்டாம் மனைவியைப் பார்த்துக் கணவன் சுவரில் மாலைபோட்டு அலங்கரித்திருக்கும் ஒரு பெண்மணியின் படத்தைக் காட்டி, இவள்தான் உன் மூத்தாள். என் முதல் மனைவி. நம் இல்லறம் இனிதே நடைபெற அவளை வணங்கி அவள் வாழ்த்தைப் பெற்றுக் கொள் என்று சொல்வான்.

ஆனால் எந்தப் படத்திலாவது ஒரு பெண் கணவனை இழந்து இன்னல்பட, ஒரு ஆண் அவளைப் பார்த்து இரக்கப்பட்டு அவளுக்கு ஆதரவு தந்து அவளை மணமுடிப்பதாகவோ, மணம் முடித்துத் தன் இல்லம் ஏகும் கணவனைப் பார்த்து, மனைவி சுவரில் மாலைபோட்டு மாட்டி யிருக்கும் ஆணின் படத்தைக் காட்டி, இவர்தான் என் முதல் கணவர், உங்கள் மூத்தவர். நம் இல்வாழ்க்கை இனிதே நடைபெற அவரை வணங்கி, அவரது வாழ்த்தைப் பெறுங்கள் என்று வசனம் பேசுவதாகவோ காட்டியிருக்கிறார்களா என்று கேட்டார்.

சாதாரணமாக உதாசினம் செய்துவிடுகிற கேள்வியில்லை இது. காலம் காலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வரும் ஆணாதிக்க, பெண் ணடிமைத்தன மதிப்பீடுகள் மீது எறியப்படும் கேள்வி. இந்தக் கேள்வியைப் பற்றி நாம் சிந்திக்கவேண்டும். அதிலுள்ள நியாயத்தை நாம் மதிக்க வேண்டும்.

ஆக, செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலிகள், தொலைக் காட்சிகள் முதலான ஊடகங்கள், புராண இதிகாசப் போதனைகள் இவை அனைத்துமே ஆணாதிக்க பெண்ணடிமைத்தன, கருத்தியலைக் கட்டிக்காத்து, அதையே மகத்துவப்படுத்தி அதுவே உண்மையானவை, அதுவே நியாயமானவை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, அதையே வலுவோடு கட்டமைத்து வருகின்றன.

இதில் இந்த ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்துப் பிரிதொரு தருணத்தில் விரிவாகப் பார்ப்போம். இப்போதைக்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது இந்த எல்லாக் கொடுமைகளுக்கும், வன்முறை களுக்கும், படுகொலைகளுக்கும் முக்கியமான அடிப்படையான காரணம், இது சார்ந்த மதிப்பீடுகள், மதிப்பீடுகள், மதிப்பீடுகள்தான். எனவேதான், இந்த மதிப்பீடுகளை மாற்றுவது பற்றியே நாம் சிந்திக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

Pin It