வளர்ந்த பின்புலங்களா அல்லது நானே என்னை வளர்த்துக் கொண்ட விதமா எனத் தெரியவில்லை. மேலோட்டமாக அடுத்தவர் வரிகளில் சொன்னால் ஒரு கஞ்சனாக என்னை வார்த்திருக்கிறேன். அவ்வளவு சீக்கிரத்திலே எனது பர்ஸை வெளியே எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்களை நான் அமைத்துக் கொள்வதில்லை. அதற்கு முன்னோர்களும் நானும் வைத்துக் கொண்ட பெயர் "எளிமை". என்னோடு பயணப்பட்டால் ஒரு வேளை காபியும் ஒரு வேளை உணவும் மட்டுமே உடன் பயணிப்பவருக்கு மிச்சப்படும். அதைத் தாண்டிய எந்தவொரு நுகர்வு அனுபவமும் பெற முடியாது. அது நண்பர்களாக, உடன் பணி புரிபவர்களாக, உறவினர்களாக அல்லது என் குடும்ப உறுப்பினர்களே ஆனாலும் அவர்கள் எதிர்பார்க்கக் கூடிய சிறுசிறு வசதிகள் கூட செய்து தருவதற்கு மனம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. அவர்கள் தங்களைச் சோம்பேறி ஆக்கிக் கொள்கிறார்கள் அல்லது முதலாளித்துவ வாழ்க்கையைச் சுவாசிக்கக் கற்றுக் கொள்கிறார்கள் என வாதம் புரியவே மனம் கொள்கிறது. என் வீட்டில் இருக்கும் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டிய எந்த ஒரு பொருளும் ஒரு அந்நியனைப் போலவேதான் என் கண்களுக்குக் காட்சி தருகிறது.

இந்த அத்தியாவசியம் என்பதை நபர்களைப் பொருத்து இடத்தைப் பொருத்து நாமே வகுத்துக் கொண்டாலும் சமுதாயத்தின் பார்வையில் பொதுவான அத்தியாவசியமானவை என்பது மாறாமல் இருக்கிறது. சமுதாயத்தில் அந்தஸ்து என்பது அவர்கள் நுகர்கின்ற பொருள்களின் தன்மை மற்றும் விலையை வைத்து நிர்ணயிக்கக் கூடிய நுகர்வுக் கலாச்சாரத்துக்குள் ஒவ்வொருவரும் தன் தலையை நுழைத்துக் கொண்டதன் விபரீதம் தான் இந்த நாட்டின் பெரும் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் அழித்து வருகிறது. அதை வளர்ப்பவர்கள் சர்வதேச வியாபாரிகள். அவர்கள் தேடுகின்ற அடிமைகள் இங்கே கிடைக்கும் நம்மைப் போல படித்த கணவான்களே. இந்தச் சர்வதேச வியாபாரிகள் வழங்கும் உதவித்தொகைக்கு ஆய்வாளர்களும், பல்கலைக் கழகங்களும், முதலீடுகளுக்கு மத்திய மாநில அரசுகளும், அரசியல் பெருச்சாளிகளும், சம்பாதித்துக் கொடுப்பதற்கு ஏற்ற ஊதியம் என்கிற நிலையில் "ஊழியர்" என்கிற பெயரிலே ஊருக்கு ஊர் கடை விரித்து புரோக்கர்களை நிரப்பி இந்த பாரதத்தைப் பத்தே வருடத்தில் அமெரிக்காவாக மாற்ற (அமெரிக்காவுக்குக் கூட்டிக் கொடுப்பது) பெரும் முயற்சி இங்கே நடக்கிறது. அதற்கு பலிகடாக்களாக நமது அடுத்த சந்ததியினரை நாமேத் தயார்படுத்திக் கொண்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தை மட்டுமல்ல, உடன் ஒரு மிகுந்த கோபத்தையும் வளர்க்கிறது.

இன்னும் என் நினைவில் நிற்கிறது. வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே எடுக்கப்படும் துணிமணிகள், அதுவும் பல நேரம் யூனிபார்ம் ஆகவே இருந்த போதும் நான் பெற்ற சந்தோசம் இன்று மாதம் ஒரு சட்டையாக "பீட்டர் இங்க்லேண்ட்"லும் "ரேமண்ட்" லும் எடுத்த போதும் பெற முடிவதில்லை. இந்த கம்பெனியின் பெயரை காலரில் வைத்து தைத்துக் கொண்டு அலுவலகம் வந்தால்தான் இந்த நவயுகக் கன‌வான்களுக்கு கம்பீரம் கிடைக்கிறதாம். அண்ணன் சட்டையை தம்பியும் அக்காள் பாவாடையை தங்கையும் உடுத்தி வளர்ந்த குடும்பங்கள் இன்று எங்கே போயிற்று? குடும்பமே ஒரே ஒரு சோப் துண்டை வைத்தும் ஒரே ஒரு டவலைப் பயன்படுத்தியும் குளித்து வந்த காலங்கள் இருக்கத் தானே செய்தன. அப்படி செய்தால் ஒருவரின் தோல் நோய் அடுத்தவருக்கு பரவி விடும் அபாயம் இருப்பதாக உலக நல நிறுவனம் சொல்லி அதை ஆதரித்துப் பேசிய ஆய்வாளர்களுக்கு லண்டனில் "சர்" பட்டமோ "டாக்டர்" பட்டமோ கொடுத்து விளம்பரம் செய்து நம்மை விழுங்கிக் கொண்ட சோப்புக் கம்பெனிகள் அனைத்தும் அயல் நாட்டினரது (லைபாய் முதல்). அதனால் ஒவ்வொரு நபரும் தனி சோப்பையும் தனித் துண்டையும் உபயோகம் கொள்ள ஆரம்பித்தோம். அவ்வை சொன்ன "குளித்த பின் உணவு" என்பதில் இருக்கும் அர்த்தத்தை ஆங்கிலத்தில் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வோம் என்பது நம்மைப் போல் மெத்தப் படித்தவர்களின் வாதம்.

நமக்கேற்ற வாழ்க்கை, நமக்கேற்ற நுகர்வுப் பொருள்கள் என்பதை மறந்து பொருள்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தோம். சட்டையின் அளவிற்கு ஏற்றாற்போல் உடலைப் பெருத்தும் சிறுத்தும் வைத்துக் கொள்வது போல செருப்பிற்கு ஏற்றக் கால்களை வளர்ப்பது மிக விரைவிலேயே வந்து விடும். இந்த மண்ணின் தெற்குப் பகுதி கருப்பையும் வடக்குப் பகுதி சிவப்பு நிறத்தையும் கொண்ட மனிதர்களைக் கொண்டிருப்பது ஏனோ விளங்கவில்லை. அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஒட்டு மொத்த தேசத்தையும் பிரிக்க வந்தவனும் இங்கே இருந்த சிலப் கேடிப் பயல்களும் செய்த நுணுக்க வேலைகளில் ஒன்று வர்ணத்தைக் கொண்டு வகைப்படுத்துதல். இதிலே தெற்கத்திக் காரிகளைக் "கருவாச்சி" என்று சொன்னவுடனே இவள்களுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டதென ஒரு முகக் களிம்புக்காரன் கண்டுபிடித்ததில், எல்லாக் கருவாச்சிகளும் நான்கே வாரத்தில் வெள்ளை நிறம் பெற்று நேர்காணலில், அவர்களின் தாழ்வுமனப்பான்மை காணாமல் போனதில் மேலாளன் வேலை கொடுப்பதாய் சொன்னானாம். கருப்பாய் இருந்த போது வேலை கொடுக்காமல் வெளுத்தவுடனே வேலை கொடுத்தானாகில் எதற்குக் கொடுத்திருக்கிறான் என ஒரு ஆணாக என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
 
எனது ஊரிலே ஒரு சொலவடை ஒன்று சொல்வார்கள், "கருத்தவளக் கட்டிக்க, வெளுத்தவள வச்சுக்க". இது ஒரு தவறான சொலவடை. வெளுத்தவளை மட்டுமே ஒரு கவர்ச்சிப் பண்டமாகவும் ஆண்கள் அவர்களைப் பார்த்தே மயங்கி விழுவதாய் சித்தரித்து விட்டனர். கவர்ச்சி வெண்மையில் மட்டுமல்ல, கருப்பிலும் இருக்கிற உண்மையை அனைத்து ஆண்களும் அறிவார்கள். அதைப் பெண்கள் நெருங்கிய ஆணிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கவர்ச்சியோ அல்லது அழகோ, எப்படி எடுத்துக் கொண்டாலும், அவை பெண்கள் சிரிக்கின்ற வெளுத்த சிரிப்பிலும் ஒரு வெட்கம் தோர்ந்த பார்வையிலும் நிறைந்திருகிறது. வடக்கத்தியப் பெண்களைக் காணுகிறபோது ஆண்கள் அங்கலாய்ப்பு கொள்வது போல் தெரிந்தாலும் எவளுடைய முகத்திலும் ஒரு லட்சணத்தை நான் கண்டதில்லை. தெற்கத்திக்காரிகளைக் காணுகிறபோது ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு அழகில் சிரிக்கிறாள்கள் என் கண்களுக்கு. ஏன் தெற்கத்திக்காரிகள் மட்டுமே வடக்கில் முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள் என்பதை இந்தக் கருவாச்சிகள் உணரத்தான் வேண்டும். இன்றைக்கு இதைப் பெரிய விசயமாக பேச வேண்டியதில்லை.

சருமங்களைக் காக்க நம் பாட்டிகள் மஞ்சள் பூசிக்கொண்டது போல நம் அம்மாமார்கள் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சியாக இதைக் கருதி விட்டு விடலாம்.

ஃபீஸா கட், கேசிஃஎஃப் சிக்கன், ஷாப்பிங் மால்ஸ், ஃபாஸ்ட் ஃபுட் சாஃப்ஸ் என நம் குழந்தைகளின் உணவையும் நிர்ணயிக்கப் போகிற சர்வதேசக் கடைகள் தினமும் ஒரு கிளையைத் திறந்த வண்ணம் இருக்கின்றன. கல்விச் சாலைகள் போட்டி போட்டிக் கொண்டு அமெரிக்க, கனடா, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களோடு ஒப்பந்தம் செய்த வண்ணம் இருக்கின்றன. இன்றைக்கு நம் குழந்தைகளை ஒன்னரை இலட்சம் கொடுத்து எல்கேஜி சேர்த்தால், அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தின் சான்றிதழ். அந்த எல்கேஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு உடை உடுத்தி வருடந்தோறும் பட்டமளிப்பு விழா. அமெரிக்காவின் "சிலஃபஸ்" இந்த நாட்டிற்கு எப்படி ஒத்து வரும்.

நேற்றைக்கு "தண்ணீரை" தனியார்மயப்படுத்தும் ஒரு அறிவுறுத்தலை மத்திய அரசு முன்மொழிந்திருக்கிறது. தண்ணீரை மார்க்கெட் பண்ணுவதற்கு உரிமம் கோரியிருக்கும் நிறுவனம் "மான்சண்டோ". ஏற்கனவே இந்த நிலத்தின் சத்தைப் பிடிங்கித் தின்ற அதே மான்சண்டோ. பின்பு விதைகளை, இந்த மண்ணின் வித்துக்களைப் பிடுங்கித் தின்றது. தற்போது தண்ணீரைப் பாழ்படுத்த இறங்கியிருக்கிறது. ஏற்கனவே நம்மில் பல பேருக்கு இந்த மண்ணின் நீர் ஒத்து வராமல் போகவே "அக்குவாஃபினா மினரல் வாட்டரில்" உயிர் வாழ்ந்து வருகிறோம். இன்னும் ஒரு சிலருக்கு "ஃப்ராண்ட்" மாற்றினால் காய்ச்சல் வருகிறதாம். தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ!!! சொல்லி விட்டு மாண்டு போனான் அந்த பாரதி. அவன் வார்த்தையும் வெகுவே இறந்து போய்விடுமென்றே எனக்குத் தோன்றுகிறது.
 
நான் மிகைப்படுத்திக் கூறுவதாக நினைக்க வேண்டாம். இந்த மண்ணில் எத்தனை பேர் மேற்கூறிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? வெகு சிலரே. ஒத்துக் கொள்கிறேன். ஒரு பத்து சதம் இருப்பார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஒரு கவலை இதற்குப் பின்னால் இருக்கிறது. நாளை இந்த நாட்டை ஆளப் போகிற சந்ததியினர் நம் குழந்தைகளா? இல்லை இந்தச் செல்வக் குழந்தைகளா? சுதந்திரம் கிடைத்த தருவாயில் இந்த நாட்டின் தலையெழுத்தை, திட்டங்களை வகுப்பதற்கு எந்த அந்நிய சக்தியும் கிடையாது. ஆனால் இன்று நம்முடைய அடிப்படை ஆதாரங்களுக்காக பணத்தைக் கடனாக வாரி இழைத்திருக்கக் கூடிய பன்னாட்டு நிறுவனங்கள் சும்மா விடுமா நம்மை? கடன் கொடுத்தவன் அசலையும் வட்டியையும் வாங்காமல் விடுவானா? நாமெல்லாம் இந்த நாட்டின் பிரதிநிதிகள் என்கிற முறையில் ஒரு விலங்காக கணக்கில் கொள்ளப்பட்டு, இத்தனை விலங்குகளுக்கு இவ்வளவு கடனுதவி என்கிற முறையிலே மத்திய மாநில அரசுகள் நம் தலை மீது கடன் வாங்கி டெண்டரை உறவினர்களுக்கு விட்டு லாபம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். கடன் மட்டுமே மிஞ்சி நிற்கையில் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் பணம் பண்ணுவதற்கான விலங்குகள் நிலைக்குத்தான் நம் நிலைமை. இல்லை இப்படியும் கூடக் கொள்ளலாம். கொடுக்காத பணத்திற்கு அடிமைகளாக நம்மையும் இந்த‌ மண்ணையும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே அவர்கள் சொல்லக் கூடிய கருத்துகளை நாம் கேட்டேத் தீர வேண்டும். நமக்கான ஆணைகள் வெள்ளை மாளிகையில் தயாரிக்கப்படும்.

அதனுடைய ஆரம்பகட்டம்தான் இது. ஒரு தேசம் மீண்டும் அடிமையுறப்பட்ட கதையை நாம் இல்லாவிட்டாலும் நம் பேரன் ஒருவன் எழுதக்கூடும். நாம் பெற்று வளர்த்த நம் குழந்தை வேறொருவனுக்கு அடிமையாகவா? எண்ணிப் பார்க்க முடிகிறதா? இந்த மண், நீர், உணவு, உறைவிடம், உடுத்தும் ஆடை, பயிலுகிற கல்வி, தொழில் நுட்பம், மருத்துவம், பண்பாடு, கலைகள், கலாச்சாரம், மொழி, விளையாட்டு என அத்தனையும் அவனுடையதாகவே இருக்கும் காலம் நாம் இறந்த பின்னால் வருவது நல்லது.

அத்தனையையும் தான் மட்டுமே உண்டு செரித்துச் செத்துப் போவது நுகர்வுக்கலாச்சாரம். பின்னால் வரும் சந்ததியினருக்கும் மிச்சப்படுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் அளித்துச் செல்வதுதான் நம் மூதாதையர்கள் கண்ட எளிமையும் நாகரிகமும். இந்த மண்ணின் மேற்கூறிய சிறப்புகள் அத்தனையையும் களங்கப்படுத்தாமல் நம் குழந்தைகள் கையில் வழங்குவதுதான் நம் கடமை, புத்திசாலித்தனமும் கூட. ஒன்றை மற்றொன்று கொன்றே தனக்கான கொடிகளை பூமியின் வரலாறு முழுவதும் இந்த மனித மிருகங்கள் பறக்க விட்டிருக்கின்றன. நமக்காக, நம் மனைவிக்காக, நம் குழந்தைக்காக நம் மூதாதையர் கட்டி காப்பற்றிக் கொடுத்த இந்தக் கட்டிலில் இன்னொருத்தனைப் படுக்கவிடுவது நமக்கு நாமே செய்யும் துரோகம் அல்லவா? ஆனாலும் இந்தியாவை அமெரிக்காவாக மாற்றி விடுவதற்கு பிஸ்கட் சாப்பிடும் நாய்கள் நிறையவே இந்த நாட்டில் இருக்கின்றன.

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It