சமீபகாலங்களில் பத்திரிக்கை செய்திகளில் இலங்கைத் தமிழர் போராட்டம், கூடங்குளம் போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், விலைவாசிக்கு எதிரான போராட்டம், பஸ் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம், ஊழலுக்கு எதிரான அன்னா ஹசரோவின் போராட்டம், மீனவர் போராட்டம் என்று அநேகம் வெளிவந்து கொண்டிருந்த நேரத்தில், வாச்சாத்தி வன்கொடுமை, இருளர் இன பெண்கள் கற்பழிப்பு, பரமக்குடி சம்பவம் என்று தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறை பற்றிய செய்திகளும் வெளிவந்து கொண்டிருந்தன.

 முதலாவதாக சொன்ன போராட்டங்கள் எல்லாம் தமிழர் உரிமைக்கான போராட்டங்கள் என்றால் இரண்டாவதாக சொல்லப்பட்ட அனைத்தும் தமிழர்('தலித்) மக்களை ஒடுக்குமுகமாக அமைந்துள்ளன‌. தலித்துகள் உரிமைக்காகவும், உயிர்காக்கவும் போராட வேண்டிய தேசத்தில் தலித் ஒவ்வொருவரும் ஒரு அடி எடுத்துவைப்பதற்கே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருக்கிறது.

 தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் புராண காலங்களில் இருந்தே நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. இராமயணத்தில் சம்புகன் தன் குல வழக்கத்தை மீறி தவம் செய்தற்காக இராமன் அவன் தலையை வெட்டி எறிந்தான் என்றும், மகாபாரதத்தில் ஏகலைவன் என்கிற மலைவாசி வில் வித்தையில் சிறந்து விளங்கினான் என்பதற்காக அவனது கட்டை விரல் தானமாகப் பெறப்பட்டது என்றும் கூறுகிறது. இவற்றைத் தாங்கி வருகின்ற மனுஸ்மிர்தையும் சூத்திரர்களை அடி மட்டத்தில் வைத்து மனு தர்ம அடிப்படையில் பார்ப்பனர், சூத்திரன் வீட்டில் யாகத்திற்காக அவனுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ பொருட்களை எடுத்து செல்லலாம் என்று கூறுகிறது.

 இதனால் தான் டாக்டர்.அம்பேத்கர் 1927ல் டிசம்பர் 25ந்தேதி மனுதர்ம சாஸ்திரத்தை தீயிட்டுக் கொளுத்தினார். பின்பு அவர் ஏற்றத் தாழ்வுகளை உண்டு பண்ணும் நீதிநெறிமுறைகள் இனி பாரதத்தில் செல்லாது என்று கூறினார். வேதநாகரிகம்தான் பழமையானது என்று கூறிக்கொள்கிறது இந்துத்துவம். இங்கே வேதங்கள் பழமைமையானதோ(அ) புதுமையானதோ என்பது விவாதம் அல்ல; அந்த வேதத்தில் உள்ள சமூக கட்டமைப்புகளைப் பொறுத்தே வேதம் பற்றிய மதிப்பீடு செய்ய முடியும்.

 அம்பேத்கர் தலித் மக்களுக்காக மட்டும் போராடவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடிய தலைவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்று அவரை தலித் தலைவராகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் சிந்தனைகள் உலகமயமாகிக் கொண்டிருக்கின்றன. ஹங்கேரி நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெர்தாக்திபோர் மற்றும் ஆர்சொஸ்ஜெனோஸ் இருவரும் ரோமா இன மக்களுக்காகப் போராடி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெர் போர் குறிப்பிடுகையில் அம்பேத்கார் பற்றிய நூல் ஒன்றை பாரிசில் எதேச்சையாக படிக்க நேர்ந்தது என்றும் அது தனக்கு ஒரு புதிய சக்தியை தோற்றுவித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியர் ரோம இன மக்களுக்கும் இந்தியாவில் உள்ள தலித்துகளுக்கும் ஏறக்குறைய ஒற்றைமை ஒரே மாதிரியாக அமைந்துள்ளது.

2007ல் "ஜெய் பீம்" குழுவை ஹங்கேரியில் அமைத்தனர். அந்த மக்களை பவுத்தத்தை தழுவுமாறு கேட்டுக் கொண்டன‌ர். அதோடு மட்டுமல்லாமல் அம்பேத்கர் பெயரில் ரோமா குழந்தைகளுக்கென சஜோகசா ஒஸ்த் மற்றும் யஹகிமென் ஆகிய இடங்களில் மூன்று மேல்நிலைப் பள்ளிகளைத் திறந்தனர். மேலும் இக்குழுவின் நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள இளம் தலித் செயற்பாட்டளர்களை ஹங்கேரி அழைத்துச் சென்று ரோமா இன மக்களோடு பழகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். மேற்கண்ட செய்தியை 2009ல் இந்து நாளிதழ் வெளியிட்டு இருந்தது. ஆக இதன் மூலம் உலகில் எந்த மூலையில் சமூக ஒடுக்குமுறைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அவற்றையெல்லாம் அம்பேத்கரின் சிந்தனைகளும், போராட்டங்களும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

 தலித் மக்களுக்காக அம்பேத்கர் தொடங்கிய போராட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. சாதி என்பது இந்துக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்துவிடாமல் தடுக்கின்ற சுவராகவோ (அ) வேலியாகவோ இருந்தால் அதை எளிதில் உடைத்து விடலாம் என்று அம்பேத்கர் கூறினார். ஆனால் அது முற்றிலும் உண்மை என்பதை நிரூபித்துக் காட்டினர் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணயினர். உத்தபுர சுவற்றை உடைத்து அந்த மக்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

பார்ப்பனிய‌ ஆதிக்கத்தை எதிர்த்து இடைநிலைச் சாதியினர், தலித்துக்கள் போராடி வந்தனர். இதில் இடைநிலைச் சாதியினர் சமூக அந்தஸ்து பெற்று விட்டு தலித் மக்களை பார்ப்பனர்கள் போல் இன்றளவும் ஒடுக்கி வருகின்றனர்.

இடைநிலைச் சாதியினரின் ஆதிக்க சாதி வெறியினால் தமிழ்நாடு நிலைகுலைந்து காணப்படுகிறது. தலித் மக்களுக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடுகின்ற தலைவர்களை கழுத்தறுக்கும் வேலையையும் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாக 1957ல் சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடிய இம்மானுவேல் சேகரனாரின் படுகொலையும் அரைப்படி நெல் கூலி உயர்வாகக் கேட்டதற்காக கீழ் வெண்மணியில் 44 உயிர்கள் தீக்கிரையான சம்பவமும்தான் நினைவுக்கு வருகிறது.

 தலித் மக்களுக்கு எதிராக காவல் துறையினரும் இடைநிலைச் சாதியினரோடு கைகோர்த்துக் கொள்கின்றனர் என்பதற்கு உதாரணமாக பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்த தலித் மக்கள் 7 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். நமது நாட்டில் விலங்குகளை சுட்டுக் கொல்வதற்கு அனுமதி கிடையாது. ஆனால் மனிதர்கள் எளிதாக சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

 செப்டம்பர் 11 தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் வருடந்தோறும் அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடமும் 2011ல் அனுசரிக்கப்பட்ட நிலையில் ஐந்து முனை சாலையில் அந்த இனத்தைச் சேர்ந்த தலைவரை கைது செய்தத‌ற்கு எதிராகவும், விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்த 50 பேர் கொண்ட கும்பலை கலைப்பதற்கு முயற்சிக்கமால் நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது ஆதிக்க சாதியினரின் கோரமுகமாகவே வெளிப்படுகிறது.

தலித் விடுதலை என்பது சமூக விடுதலையாகும். சமூக விடுதலை பெற வேண்டுமானால் சமூக மாற்றத்தை விரும்புகிற மக்களின் பலத்தோடு அணி திரட்டப்பட்டு ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களை கையிலெடுக்க வேண்டியது காலத்தின் சமூகத் தேவையாகும்.

Pin It