[முழு மூச்சுடன் பேரலையாக எழுந்திருக்க வேண்டிய ஒரு உயிரைத் தூக்கிலிட்டு, மாய்த்து முடிவுக்குக் கொண்டு வருவது, காட்டுமிராண்டித்தனம் மட்டுமல்ல, "நியாயப்படுத்த முடியாத" மகத்தான குற்றம். 1931ம் ஆண்டு எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரை, பர்மாவில் ஒரு குற்றவாளிக்கு மரணதண்டைன நிறைவேற்றப்பட்டதை வைத்து எழுதப்பட்டது. 1922 முதல் 1927 வரை பிரிட்டிஷ் இம்பீரியல் காவல்துறையில் பர்மாவில் சேவை செய்தபோது கிடைத்த அனுபவத்தை வைத்து, இக்கட்டுரையை ஆர்வெல் எழுதியுள்ளார்]

அது பர்மா. பகல், மழையால் ஈரமாயிருந்தது. சிறையின் முற்றத்தை ஒட்டியிருந்த பெரும் சுவர் வழியே, மஞ்சள் காரியத்தாளைப் போன்று, துயரம் அளிக்கக் கூடிய ஒளி வழிந்தோடியது. நாங்கள் சபிக்கப்பட்ட அந்தக் கொட்டடிகளுக்கு வெளியே காத்திருந்தோம்;

அந்த ஒவ்வொரு சிறைக் கொட்டடியின் கொட்டாரத்தின் முன்னரும் ரெட்டைத்தூண் இருக்கும். ஒவ்வொரு கொட்டடியும் பார்ப்பதற்கு மிருகங்களை அடைக்கும் கூண்டு போலிருக்கும். அவைகள் பத்து அடி நீளத்துக்குப் பத்து அடி அகலமுள்ள அறை. ஒவ்வொன்றிலும் ஒரு மரக்கட்டிலும், தண்ணீருடன் ஒரு குவளையும் இருக்கும். சில கொட்டடிக்குள், கபிலநிற மனிதர்கள் உள்ளறைத் தூணை ஒட்டி, போர்வையால் போர்த்திக் கொண்டு, அமைதியாக ஒடுங்கிப் போய் குந்தி இருப்பார்கள். இவர்கள்தான் சபிக்கப்பட்ட மனிதர்கள். இன்னும் ஓரிரண்டு வாரங்களில் தூக்கிலிடப்படப் போகிறவர்கள்.

ஒரு கைதியைக் கொட்டடியில் இருந்து, இழுத்து வந்தார்கள். அவர் இந்து.. நொய்ந்து போன வைக்கோல் கட்டு போலிருந்தார். தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. கண்கள் தெளிவற்று ஜலமாக இருந்தது.. அவரது அடர்ந்து வளர்ந்துள்ள மீசை தடிமனாகவும், அவரது உடலுக்குப் பொருத்தமில்லாது மிகவும் பெரிதாக இருந்தது.. அந்த மீசை திரைப்பட கோமாளிகள் வைத்திருப்பது போலிருந்தது.

ஆறு உயரமான இந்திய சிறைக்காவலர்கள், அவரைப் பாதுகாப்புடன், தூக்கிற்கு தயார் செய்து அழைத்துச் சென்றார்கள். அவர்களில் இருவர், முனையில் ஈட்டி பொருத்தப்பட்ட ரைபிளுடன் முன்னால் நின்றார்கள். மற்றவர்கள் அவரது கைகளுக்கு விலங்கிட்டார்கள். பின்னர் அந்த விலங்கில், இரும்புச் சங்கிலிகளைச் சுற்றி, அதன் முனைகளைத் தங்களது இடுப்புவாரில் சொருகிக் கொண்டார்கள். அது இறுக்கமாக உள்ளதா எனச் சுண்டிப் பார்த்தார்கள். அந்தக் காவலர்கள் அந்தக் கைதியைச் சுற்றி மிகவும் அருகாமையில் கூட்டமாக நின்றார்கள். அவர்களது கரங்கள் கைதியின் மேல் ஜாக்கிரத்தையான இறுக்கத்துடன் பிடித்திருந்தது. கூடவே அவர்களது பிடி, கைதி அங்குதான் இருக்கிறார் என்பதை கைதிக்கு உணர்த்துவதாகவும் இருந்தது.. வலையில் உயிருடன் தத்தளித்துக் கொண்டு மறுபடியும் தண்ணீருக்குள்ளேயே விழத் துடிக்கும் மீன் ஒன்றைக் கையாளுவதைப் போல் அவர்கள் அந்தக் கைதியைக் கையாண்டார்கள். ஆனால் கைதி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் நின்று கொண்டிருந்தார்; அங்கு என்ன நடக்கிறது என்பதையே கவனிக்காதது போல, தனது கரங்களைக் கயிற்றுக்குள் பிணைத்துக் கொள்ள, தொய்வுடன் அவர் அனுமதித்தார்.

எட்டு மணி அடித்தது... ஊதுகுரல் அழைப்பு ஈரமான காற்றில் மிகவும் சன்னமாக அளவுடன் தூரத்திலிருந்த முகாமிலிருந்து ஒலித்தது. சிறைக் கண்காணிப்பாளர், சிறைக்காவலர்களை விட்டு சற்று விலகி, முன்னர் நின்று கொண்டிருந்தார். அவர் தனது கழியைக் கொண்டு விநோதமான மனநிலையுடன், சரளையைக் கிளறிக் கொண்டிருந்தார். ஊதுகுரல் அழைப்புக் கேட்டதும், தலையை வேகமாக நிமிர்த்திப் பார்த்தார். அவர் சாம்பல் நிற பல்துலக்கி பிரஸைப் போன்ற மீசையையும், கரகரப்பான குரலையும் உடைய இராணுவ மருத்துவர். அவர் பொறுமையில்லாமல், “பிரான்சிஸ்! கடவுளுக்குப் பயந்தாவது சீக்கிரம் வேலை பாரேன்!” என்றார். “இந்த மனுசன் இந்த நேரத்திற்குள் செத்திருக்க வேண்டும்! நீங்களெல்லாம் இன்னும் தயாராகவே இல்லை?”

பிரான்சிஸ் தலைமை ஜெயிலர். கொழுத்த திராவிடர். வெள்ளை டிரில் சூட்டும், தங்க பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தார். அவர் தனது கருத்தக் கரத்தை ஆட்டிக் கொண்டே, “சரி சார்! சரி சார்!” என்று உற்சாகம் பொங்கச் சொன்னார். “எல்லாத்தையும் திருப்திகரமாக செய்திருக்கிறது, சார்! தூக்குப் போடுபவர் காத்திருக்கிறார். நாம் புறப்படலாம், சார்!”

“அப்படியென்றால் சீக்கிரம் வாருங்கள்! இந்த வேலை முடியற வரைக்கும், எந்த காவலாளிகளுக்கும் காலை உணவு கிடையாது!”

நாங்கள் தூக்குமேடையை நோக்கி முன்னேறினோம். இரண்டு சிறைக்காவலர்கள், கைதியின் இரண்டு பக்கத்திலும், தங்களது ரைபிளைச் சாய்த்து வைத்துக் கொண்டு, நடை போட்டுச் சென்றார்கள். இரண்டு காவலர்கள் மிக அருகாமையில் கைதியின் கைகளையும் தோள்பட்டையையும் பிடித்துக் கொண்டு அவரைத் தள்ளிக் கொண்டும் அதே நேரத்தில் தாங்கிக் கொண்டும் நடை போட்டுச் சென்றார்கள். மீதியுள்ள மாசிஸ்திரேட் உள்ளிட்ட நாங்கள் யாவரும், அவர்களைத் தொடர்ந்து சென்றோம். நாங்கள் முப்பதடி முன்னால் சென்றிருப்போம், திடீரென எங்களது ஊர்வலம் எந்தவித எச்சரிக்கையோ அல்லது உத்தரவோ இன்றி நிறுத்தப்பட்டது. அந்த திகிலுண்டாக்கிற விசயம் நடந்தேறியது! எங்கேயிருந்து, எப்படி வந்ததென்றே கண்டுபிடிக்க முடியாதபடி, ஒரு நாய் அந்த முற்றத்தில் தோன்றியது. சத்தமாய் குறைத்துக் கொண்டே எங்களுக்கு நடுவே துள்ளிக் குதித்தோடியது. அது தனது ஒட்டுமொத்த உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு, எங்களைச் சுற்றி பாய்ந்தோடியது. இவ்வளவு மொத்தமாக மனிதர்கள் சேர்ந்து இருப்பதைப் பார்த்ததும், ஏகக்களிப்பில் குதித்துக் கூத்தாடியது. அது கலப்பு அரிடெல் இனத்தைச் சார்ந்த பெரிய வேட்டை நாய். அதன் உடம்பு முழுதும் கம்பளி வளர்ந்திருந்தது..

சில கணங்கள் எங்களைச் சுற்றி தாவி தாவி ஓடிக் கொண்டிருந்தது.. பின்னர் அதை யாரும் நிறுத்துவதற்குள், நாய் கைதியை நோக்கிப் பாய்ந்து, அவரது முகத்தை நக்குவதற்கு குதித்துக் கொண்டிருந்தது. அனைவரும் திகைத்துப் போய், நாயைப் பிடிக்க வேண்டுமென்ற உணர்வு கூட இல்லாமல், பின்வாங்கினர்.

“இந்த நாயை யார் உள்ளே விட்டது?” என்று சிறை மேற்பார்வையாளர் கோபத்தில் கத்தினார். “யாராவது அதைப் பிடியுங்களேன்!”

காவலில் இருந்த ஒரு காவலர் அதிலிருந்த தன்னை விடுவித்துக் கொண்டு, ஏடாகூடமாய் நாயைத் துரத்தினார். நாய் நாட்டியத்துடன் குதியாட்டம் போட்டுக் கொண்டு, அவருக்குப் போக்குக் காட்டியது. ஒரு இளம் யூரேசியன் சரளைக் கல்லை எடுத்து நாய் மேல் விட்டெறிந்தான். நாய் கல்லிலிருந்து லாவகமாகத் தப்பி, மறுபடியும் எங்கள் அருகில் வந்து விட்டது. அதன் வள்ளென்ற குரைப்பு சிறை சுவர்களுக்கிடையே பட்டுத் தெறித்து எங்கும் எதிரொலித்தது. இரண்டு காவலர்களின் பிடியில் இருந்த சிறைக்கைதி, தூக்கிலிடுவதற்கு முன்னர் இப்படிச் செய்வதும் ஒரு சடங்கு போல என நினைத்துக் கொண்டு, அதை அக்கறையற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியில் ஒருவர் நாயைப் பிடிப்பதற்குள் கொஞ்ச நேரமாகி விட்டது.. எனது கைக்குட்டையால் அதன் கழுத்தைச் சுற்றி கட்டி, அது சிணுங்க சிணுங்க அதை நெட்டி இழுத்துக் கொண்டு சென்றார்கள்.

தூக்குமேடை நாங்கள் இருந்த இடத்திலிருந்து வெறுமனே 120 அடிதான் இருக்கும். எனது கண்முன் மேடையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த கைதியின் வெற்று பழுப்பு முதுகைப் பார்த்தேன். கரங்களை காவலர்கள் பற்றியிருக்க அவர் அவலட்சணமாக நடந்து சென்றார்; ஆனால் வழக்கமாக இந்தியர்கள் செய்வதைப் போல் முட்டியை நேராக வைக்காமல், ஆனால் அசராமல் குதித்துக் குதித்துச் சென்று கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும் போதும், அவரது தசை அதன் இடத்திற்குச் சரியாக வழுக்கிச் செல்லும்; அவரது முடியப்பட்ட குடுமி உச்சந்தலையில் அங்கும் இங்கும் நடனமாடியது.. அவரது பாதங்கள் ஈரச்சரளை மண்ணில் தடம் பதித்துச் சென்றது.. ஒரு கணம், இருவர் அவரின் தோள்பட்டையைப் வலுவாகப் பிடித்திருந்தும் கூட, வழியில் தேங்கியிருந்த சேற்றில் கால் படாமல் தவிர்க்க சற்று விலகி நடந்தார்.

சுயஉணர்வுடன், ஆரோக்கியமாக உள்ள மனிதனை அழிப்பதற்கு, என்ன அர்த்தம் என்பதை அந்த நொடி வரை நான் உணரவில்லை என்றாலும், அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்தான் இருந்தேன். ஆனால் நான் அந்தக் கைதி தேங்கியிருந்த சகதியைத் தவிர்ப்பதற்கு விலகி நடந்ததைப் பார்த்ததும், முழு உச்சத்தில் இருக்கும் ஒரு வாழ்க்கையை இடையிலேயே வெட்டி முறிப்பதிலுள்ள விளக்கவே முடியாத மாபாதகத்தை, விளங்கா மறைபொருளை, என்னால் தெளிவாகக் காண முடிந்தது. இந்த மனிதன் சாகவில்லை, இவர் நம்மைப் போலவே உயிருடன்தான் இருக்கிறார். அவரது அனைத்து உறுப்புகளும் வழக்கம் போல்தான் பணியாற்றி கொண்டிருக்கின்றன. அவரது இரைப்பை உணவை ஜீரணிக்கிறது; தோல் தன்னை மறுபடியும் புதுப்பித்துக் கொள்கிறது; நகம் வளர்கிறது; திசுக்கள் உருவாகிறது - எல்லாம் எவ்வளவு பெரிய முட்டாள்தனத்துடன் செயல் புரிந்து கொண்டுள்ளது. அவரைத் தொங்க விடுவதற்கு அங்கே நிறுத்தப்படும் போதும், பத்தில் ஒரு நொடிக்குள் அவர் தொங்கவிடப்பட்டு, வாழ்க்கை முடியும் போதும், அவரது நகம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அவரது கண்கள் மஞ்சள் சரளைப் பார்த்தன, சாம்பல் நிற சிறைச் சுவற்றைப் பார்த்தன, அவரது மூளை இன்னும் நினைத்துக் கொண்டிருந்தது, முன்னறிந்தது, பகுதுதணர்ந்தது - தேங்கியிருந்த சகதியை தாண்டிச் செல்லும் அளவுக்கு அவருக்கு அவரது மூளை ஆணையிட்டது. அவரும், நாங்களும், ஒரே உலகத்தைப் பார்த்து, கேட்டு, உணர்ந்து, புரிந்து கொண்டு, ஒன்றாகக் குழுவாக நடந்து செல்லும் மனிதர்கள்தாம்; ஆனால் இன்னும் இரண்டு நிமிடங்களில், எங்களில் ஒருவர் திடீரென்ற சொடக்கில், நிரந்தரமாய் போய் விடுவார்; பிறகு ஒரு மனது குறைவாகவும், ஒரு உலகம் குறைவாகவும் இருக்கும்.

தூக்கு மேடை ஒரு சிறிய முற்றத்தில் இருந்தது.. அது சிறைச்சாலையின் முதன்மையான மைதானத்திலிருந்து பிரிந்து இருந்தது. அங்கு உயரமான ஊசி போன்ற களைகள் எங்கும் படர்ந்து கிடந்தது. அங்கு மூன்று பக்கங்களும் செங்கல் கட்டு கட்டி, சுவர் எழுப்பப்பட்டிருந்தது... மேலே பலகைப் பாவப்பட்டிருந்தது. அதன் மேல் இரண்டு உத்திரம் எழுப்பப்பட்டு, அவற்றிற்கு இடையே குறுக்குப்பாளம் போடப்பட்டிருந்தது. குறுக்குப் பாளத்திலிருந்துதான், கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அங்கே தூக்குப்போடுபவரும், தண்டனைப் பெற்ற கைதிதான். சிறைக் கைதிக்கான வெள்ளைச் சீருடையில் இருந்தார். அவர் தூக்குப்போடும் எந்திரத்தின் பின்புறத்தில் இருந்தார். அவர் நாங்கள் உள்ளே நுழையும் போது, அடிமைத்தனமாகத் தலை குனிந்து எங்களை வரவேற்றார். பிரான்சிஸ் ஏதோ சொன்னதும், காவலாளிகள் எப்போதையும் விட கைதியை மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் பாதி கைதியை தூக்கிற்குள் தள்ளியது போலவும், பாதி கைதியை தூக்கிற்கு வழிநடத்தி சென்றது போலவும் இருந்தது. அவர்கள் குளறுபடியுடன் கைதி ஏணியில் ஏறுவதற்கு உதவினார்கள். பின்னர் தூக்கு போடுபவர் மேலே ஏறி, கயிற்றை கைதியின் கழுத்தில் சுற்றி கட்டினார்.

நாங்கள் பதினைந்து அடி தள்ளி நின்று காத்திருந்தோம். காவலாளிகள் தூக்கைச் சுற்றி வட்டமாகச் சுற்றி நின்றார்கள். எப்போது சுருக்குக் கயிறு கழுத்தைச் சுற்றி போடப்பட்டதோ, அப்போதிருந்தே கைதி தனது கடவுளை கதறி அழைக்க ஆரம்பித்து விட்டார். அவர் மறுபடி மறுபடி, "ராம்! ராம்! ராம்! ராம்!.....” என்று உச்ச ஸ்தாயியில் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். அக்குரல் பயத்துடன் கூடிய அவசரமான பிரார்த்தனை போலும் அல்லாமல், அல்லது உதவிக்கான கூக்குரல் போலும் அல்லாமல், ஆனால் கிட்டத்தட்ட தொடர்ந்து மணி ஒலிப்பது போல, ஒரே சீராகவும், சமநிலையிலும் இருந்தது. நாய் அந்தக் குரலுக்கு ஒரு முனகலுடன் பதிலளித்தது. தூக்குப்போடுபவர் இன்னும் தூக்குமேடையில்தான் நின்று கொண்டிருந்தார். மாவுப்பை போலிருந்த சின்னப் பருத்திப் பையைக் கொண்டு, கைதியின் முகத்தை இழுத்து மூடினார். அந்த பையினால் சத்தம் மட்டுப்படுத்தப்பட்டாலும், அக்குரல் எங்கும் வியாபித்து மறுபடியும் "ராம்! ராம்! ராம்! ராம்! ராம்!" என்று ஒலித்துக் கொண்டேயிருந்தது.

தூக்குப்போடுபவர் கீழே இறங்கி வந்து, விசைக் கோலை இழுத்து விட, பிடித்துக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தார். உறுதியான, மட்டுப்படுத்தப்பட்ட கைதியின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. “ராம்! ராம்! ராம்!” என்று குரல் ஒரு கணம் கூட தடைபட்டு பின்வாங்கி விடவில்லை. சிறைக் கண்காணிப்பாளர், தனது தலையைத் தனது நெஞ்சில் கவிழ்த்துக் கொண்டு, தனது கம்பால் மெள்ள தரையைக் குத்திக் கொண்டிருந்தார். ஒரு வேளை அவர் கைதியின் கதறலை எண்ணிக் கொண்டிருந்து இருந்திருக்கலாம்.. கைதி ஐம்பது முறை அல்லது நூறு முறை "ராம்! ராம்!” என்று சொல்ல அனுமதித்திருக்கலாம்.

ஒவ்வொருவரின் நிறமும் மாறியது. காபி மோசமாகத் திரிந்து போனது போல, இந்தியர்களின் நிறம் சாம்பலாய் மாறியது. துப்பாக்கிமுனை ஈட்டி தள்ளாடி நடுங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் முகம் மூடப்பட்டு, தொங்கவிடப்படுகிற மனிதரைப் பார்த்துக் கொண்டே, அவரது கூக்குரலைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு கூக்குரலும், அவரது வாழ்வின் மற்றுமுள்ள சில கணங்கள். எங்களது மனதில் எல்லாம் ஒரேயொரு எண்ணம்தான் குடி கொண்டிருந்தது : ஓ! அவரைச் சீக்கிரம் சாகடியுங்கள்! எல்லாம் முடியட்டும்! அந்த சகிக்க முடியாத சத்தம் நிற்கட்டும்!

திடீரென சிறைக்கண்காணிப்பாளர் தனது மனதை உறுதிப்படுத்திக் கொண்டார். தனது தலையை நிமிர்த்தி, தனது கழியைக் கொண்டு, துரிதமாக ஒரு சுழற்று சுழற்றினார். பின்னர் குரூரமாக, “சலோ!” என்று கத்தினார்.

சங்கிலி சலசலக்கும் சத்தம். தொடர்ந்து சவ அமைதி. கைதி மறைந்து விட்டார். கயிறு முறுக்கிக் கொண்டு தொங்கியது.

நான் நாயைப் போக அனுமதித்தேன். அது உடனே தூக்குமேடையின் பின்புறம் பாய்ந்து சென்றது. அருகே சென்றதும், அப்படியே நின்று குரைத்துக் கொண்டிருந்தது.. பின்னர் அப்படியே பின்வாங்கி முற்றத்தின் ஒரு மூலைக்குச் சென்று அடங்கியது. அங்கிருந்த களைகளுக்கு நடுவே நின்று கொண்டு எங்களை அச்சத்துடன் அந்த நாய் பார்த்தது.

நாங்கள் தூக்குமேடையைச் சுற்றிச் சென்று, கைதியின் உடலை ஆய்வு செய்தோம். அவரது கால்விரல் கீழே குத்திட்டு நிற்க, அவர் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடல் கயிற்றில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. கல் மாதிரி அசையாமல் செத்துக் கிடந்தார்.

சிறைக் கண்காணிப்பாளர் தனது கழியுடன் எங்களருகே வந்தார். அந்தச் சடலத்தை தனது கம்பால் குத்திப் பார்த்தார். அந்த உடல் லேசாக கயிற்றில் ஊசலாடியது. “அவர் சரியாகி விட்டார்!” என்றார் சிறைக் கண்காணிப்பாளர். அவர் தூக்குமேடையிலிருந்து பின்வாங்கி, ஆழ்ந்து மூச்சை உள்வாங்கி இழுத்து விட்டார். அவரது திடமற்ற கிளர்ச்சியுற்ற உணர்வு அவரது முகத்திலிருந்து திடீரென விடை பெற்றது.. அவர் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார். “மணி எட்டாகி, எட்டு நிமிசமாகுது. சரி! இவ்வளவுதான், காலை வேலை முடிந்தது. கடவுளுக்குத் தோத்திரம்!”

காவலாளிகள் துப்பாக்கிமுனை ஈட்டியை நீக்கிவிடடு, அங்கிருந்து அகன்றார்கள். காலையில் மோசமாக நடந்து கொண்ட உணர்வுடன், அமைதியாகிப் போன நாய், அவர்கள் பின்னாடியே நழுவிச் சென்றது.. நாங்கள் தூக்குமேடை இருந்த முற்றத்தில் இருந்து வெளியே நடந்து வந்து, அந்தச் சபிக்கப்பட்ட சிறைச்சாலையிலுள்ள தூக்கை எதிர்நோக்கி காத்திருக்கும் கைதிகளின் முன்னர் கடந்து சென்றோம். பின்னர் சிறைச்சாலையின் பெரிய மத்திய முற்றத்தின் முன் வந்தோம். காவலாளிகளின் பொறுப்பில் இருந்த தண்டனைப் பெற்ற கைதிகள் தங்களது காலை உணவைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் நீண்ட வரிசையில் குந்தி இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு உலோகக் வளையைக் கையில் வைத்திருந்தார்கள். இரண்டு காவலாளிகள் ஒரு வாளியில் இருந்த வெந்த அரிசிக் கஞ்சியைக் கரண்டியில் மொண்டு ஊற்றிக் கொண்டிருந்தார்கள். தூக்குப் போட்ட பிறகு இப்படியொரு காட்சியைப் பார்ப்பது மிகவும் வழக்கமானதாகவும், சந்தோசமாகவும் இருந்தது.. கொடுத்த வேலையைச் செய்து முடித்த பெரும் விடுதலை உணர்வு, எங்களை அப்படியே கவ்விப் பிடித்துக் கொண்டது. எங்களில் ஒருவருக்கு பாட வேண்டுமென்று தோன்றியது; ஒருவருக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடி விட வேண்டும் போல் தோன்றியது; ஒருவருக்கு ஏளனமாய் சிரிக்கத் தோன்றியது. திடீரென அனைவரும் உல்லாசமாக சளசளக்க ஆரம்பித்து விட்டோம்.

என்னுடன் வந்து கொண்டிருந்த யூரேசியன் பையன் நாங்கள் வந்து கொண்டிருக்கும் போது, தலையைத் தாழ்த்தி வணங்கி விட்டு, ஒரு சிநேகப்பூர்வமான புன்சிரிப்புடன் சொன்னான்: “உங்களுக்குத் தெரியுமா, சார்? நம்ப நணபர் (இறந்தவரைச் சொல்கிறார்) தனது அப்பீல் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று தெரிந்ததும், தனது செல்லின் தரையிலேயே மூத்திரம் போயிட்டார். எல்லாம் பயம் - தயவு செய்து எனது சிகரெட்டை எடுத்துக் கொள்ளுங்கள், சார்! எனது வெள்ளி சிகரெட் டப்பாவைப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கிறதா? இதை ரெண்டு ரூபா எட்டணா கொடுத்து பெட்டிவாலாகிட்டே இருந்து வாங்கினேன். அப்படியே அழகான ஐரோப்பியன் ஸ்டைலில் உள்ளது இது!”

பலர் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எதற்காகச் சிரித்தோம் என்பது குறித்து ஒருவருக்கும் திட்டவட்டமாக எந்தக் கருத்தும் கிடையாது.

பிரான்சிஸ் சிறைக் கண்காணிப்பாளருடன் சேர்ந்து சளசளவென பேசிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். “எல்லாம் நல்ல திருப்திகரமாக நடந்தேறியது! துளி பொழுதில் எல்லாம் முடிந்து விட்டது. எப்போதும் இப்படி நடப்பதில்லை! டாக்டர்கள் தூக்குமேடைக்குக் கீழே போய், கைதியின் காலை இழுத்துப் பார்த்து, அவர் இறந்து விட்டார் என்று உறுதி செய்பவர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் ஏற்றுக்கொள்ளதக்கதே அல்ல.!.”

“உடம்பை நெளித்து வளைப்பதா? அது ரொம்ப மோசம்!” என்றார் சிறைக் கண்காணிப்பாளர்.

“ஆமாம் சார்! அவர்கள் வசப்படுத்த முடியாதவர்களான பிறகு, இப்படிச் செய்வது படுமோசம், சார்! எனக்கு நல்லா ஞாபகம் இருக்குது, சார்! ஒரு தடவை ஒருத்தரை அழைச்சிட்டு வர உள்ளே போனபோது, அவர் தனது செல்லில் உள்ள பாளத்தில் போய் பிடித்துக் கொண்டு இருந்து விட்டார். அவரை அங்கேயிருந்து பிரித்துக் கொண்டு வர, ஆறு காவலாளிகள் தேவைப்பட்டார்கள் என்பதை, நீங்கள் நம்பவே மாட்டீர்கள் சார்! ஆமாம் சார், ஒவ்வொரு காலையும் மூணு மூணு பேரா பிடிச்சு இழுத்தோம். நாங்க அவருக்குத் தெளிவா விளக்கினோம், 'ஐயா! நண்பரே! எங்களுக்கு நீங்க தரும் துயரத்தையும் துன்பத்தையும் நினைச்சுப் பாருங்க' என்று நாங்க சொன்னோம். ஆனால் அவன் முடியாதுனு சொல்லிட்டான். ரொம்ப பிரச்சினையைக் கொடுத்துட்டான்.”

நான் ரொம்ப சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருப்பதைக் நானே கண்டேன். அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். சிறைக் கண்காணிப்பாளர் கூட, அடக்கிக் கொண்டே சிரித்தார். “எல்லாரும் வெளியே வாங்க! போய் ஒரு டிரிங்ஸ் எடுத்துக்குவோம்!” என்று வாஞ்சையுடன் அழைத்தார். “நான் எனது காரில் ஒரு பாட்டில் விஸ்கி வைத்திருக்கிறேன். முதலில் அதை முடிப்போம்!”

நாங்கள் சிறைச்சாலையின் பெரிய இரட்டைக் கதவு வழியாக வெளியே வந்து, ரோட்டை அடைந்தோம். “அவரது காலை இழுக்கணும்” என்று சொல்லி ஆச்சரியப்பட்ட பர்மீய மாஜிஸ்டிரேட், திடீரென அடக்க முடியாமல் சத்தம் போட்டுச் சிரித்தார். நாங்கள் அனைவரும் மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தோம். இந்த மாதிரி சமயத்தில், பிரான்சிஸ் சொன்ன உண்மைக் கதை ரொம்பவும் கேலிக்கூத்தாக இருந்தது.. நாங்கள் ஐரோப்பியர்களும் உள்நாட்டவர்களும் மிகவும் சிநேகப்பூர்வமாக ஒன்றாக குடித்தோம்.

செத்த மனிதர் ஒரு முன்னூறு அடி அப்புறமாகக் கிடந்தார். 

எழுதியவர்: ஜார்ஜ் ஆர்வெல்

தமிழில்: சொ.பிரபாகரன்

Pin It