அன்னா ஹசாரேவின் ஆர்ப்பாட்டதைச் சுற்றி ஒரு போலி நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் வேளையில், அவர் கைது செய்யப்பட்டதும் அதைத் தொடர்ந்த உண்ணாநிலையும் ஊடகத்தால் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ஆயுதப்படைகள் சிறப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி 2000 ஆண்டிலிருந்து ஐரோம் ஷர்மிளா மேற்கொண்டிருக்கும் காலவரையற்ற உண்ணாநிலை இந்த தேசத்தாலும் ஊடகங்களாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

sharmila_340கொடியேற்றுதல், தேசியகீதம் மற்றும் தேசபக்திப் பாடல்கள் இசைத்தல், பிரதமர் உட்பட அரசியல்வாதிகள், இந்திய ஜனநாயகத்தின் ஆற்றல் பற்றிப் பேசக் கேட்டல் ஆகிய வருடாந்திர சடங்குகளுடன் இந்தியர்கள் சுதந்திரதினத்தைக் கொண்டாடிய பிறகு அடுத்த நாள், ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகப் பெரிதும் கொண்டாடப்படும் அன்னா ஹசாரே மீதும் அவரது அணி மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்தது.

அவரும் அவரது அணியினரும் கைது செய்யப்பட்டது, அதற்கடுத்து அதிகரித்து வந்த எதிர்ப்புக்கள், பின்னிரவில் ஹசாரே விடுதலை செய்யப்பட்டது, அவர் விடுதலையாக மறுத்தது எனத் தொடர்ந்த நாடகம் வெறும் அபத்தம் மட்டுமல்ல; எதிர்ப்பு தெரிவிப்பதற்கான மக்களின் உரிமைகளுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல், அந்த உரிமையைக் கோருவோரைக் கையாள்வதற்கான எந்த செயலுறுதியும் இல்லாமல், அரசாங்கம் நடந்து கொண்டது பரிதாபகரமான எடுத்துக்காட்டாகும். ஒரே நாளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எதிர்க்கட்சியினரை ஒன்றுபடுத்திவிட்டது. அவருடைய அணியின் லோக்பால் சட்ட வரைவு தான் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் எனபது போன்ற ஹசாரேவின் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தனர். ஆகஸ்டு 16 அன்று அன்னா ஹசாரே ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தை வெற்றிகரமாகக் ‘கைது’ செய்தார்.

புறக்கணிப்பு

நூற்றுக்கணக்கானோர் தாமாக முன்வந்து கைதானதன் மூலம் ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் உந்தம் பெற்றது. அதே வேளையில் இந்தியாவின் இன்னொரு பகுதியில் இதே போன்ற ஒரு உத்தியைப் பயன்படுத்தி, ஓர் எதிர்ப்பாளர் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு வருவது நாட்டின் எஞ்சியோராலும் அரசியல் தலைமையாலும் தொடர்ந்து உதாசீனபடுத்தப்பட்டு வருகிறது.

ஊழலை ஒழிக்கும் பிரச்சனையை எடுத்துக்கொண்டு, இந்தியாவெங்கும் பெருநகரங்களில் குழுக்களைத் திரட்டுவது, ஊடகங்களின் கவனத்தை ஒருங்கு குவிப்பதுமாக இருக்கும் நேரத்தில் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில், ஒரு பெண் தன்னந்தனியாக மணிப்பூர் மீது திணிக்கப்பட்டுள்ள, அந்த மாநிலத்தின் சாதாரண மக்களின் வாழ்க்கையை நரக‌மாக்கிக் கொண்டிருக்கிற, ஜனநாயக விரோத, ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராகத் தனது போராட்டத்தைத் தொடர்ந்து வருவது குறித்துப் பேசுவது பொருத்தமில்லாதது என்று சிலர் கருதலாம்.

மணிப்பூரில் சுதந்திரதினக் காட்சி வியக்கத்தக்க வகையில் மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இம்பால் சுதந்திர இதழின் ஆசிரியரான பிரதிப் பஞ்சூபம் ‘சுதந்திரத்தின் நிலை’ என்ற தலைப்பில் தனது தலையங்கத்தில் இந்த நெகிழச் செய்யும் தொடக்கப் பத்தியை எழுதியுள்ளார்:

“இந்தியாவின் சுதந்திரதினத்தின் முன்மாலைப் பொழுதில் இம்பால் ஒரு போர்முனையின் தோற்றத்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. உண்மையில், மணிப்பூரின் பிற நகரங்களிலும் பெரும்பகுதி வடகிழக்கில் உள்ளதைவிட காட்சிகள் வேறு மாதிரி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் இது ஏறக்குறைய ஒரு சடங்கு போல ஆகிவிட்டது. நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய, மிக முக்கியமான கொண்டாட்டமாக வாதிடப்படும் சுதந்திரதினக் கொண்டாட்டத்தைப் புறக்கணிக்க பல்வேறு போராளி அமைப்புக்களும் அழைப்பு விடுப்பார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதத்தில், நிர்வாகத்தின் அதிகாரத்தை எடுத்துக்காட்டும் வகையில், மாகாண அரசாங்கங்கள் உண்மையியே கொடி அணிவகுப்பை நடத்தி, எந்தவிதமான அச்சுறுத்தலையும் கண்டு ஊக்கம் குன்றாமல் முன்னேறிச் செல்வார்கள். தெருக்களின் ஒவ்வொரு மூலையிலும் சீருடையணிந்து துப்பாக்கியேந்திய பாதுகாப்புப் படையாட்கள் வாகனங்களில் வருவோரை நிறுத்தி, அவர்களுடைய வாகனங்களை சோதனையிட்டு, அவர்களை கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுப்பார்கள். எதிபார்த்தது போல அந்த மாபெரும் நாள் நெருங்குவதற்கு ஒருவாரம் முன்பே இம்பால், குறிப்பாக பொழுது சாய்ந்தபிறகு, ஆளரவமற்ற தோற்றத்தை அணியத் தொடங்கும். மக்கள் விரைவாக வீடு திரும்பி விடுவார்கள், இல்லையென்றால் பாதுகாப்புப் படையாட்களால் அவர்கள் சாலை ஓரமாக நிற்க வைக்கப்பட்டு, தேடுதல் மேற்கொள்ளப்பட்டு, ஏதோ அவர்கள் தாம் தொல்லைகொடுக்கும் முக்கியமான ஆட்கள் என்று கருதும் வகையில் கேள்விகள் கேட்டு அவமதிக்கப்படுவார்கள். சாதாரண மக்கள் இந்த யுத்த விளையாட்டில் வெறும் பார்வையாளர்களாகத் தான் கருதப்படுகிறார்கள். ஆனால் ஒவ்வொருமுறையும் இது போன்ற தருணங்களில் பதட்டம் அதிகரிக்கிறது. தேவையே இல்லாமல் பலியாவதற்கு அவர்கள் தயாராக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. மேலும் சிலநேரங்களில் அதாவது குடிமக்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் இனிப்புத் தடவிய சொற்களில் ‘ஒரு மோதலில் குடிமக்கள் பலியாவது’ இன்றியமையாதது என்றும் மன்னிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டு இராணுவ நடவடிக்கைகளில் வெறும் புள்ளிவிவரக் கணக்குகள் ஆகிவிடுகின்றன.”

ஆம், இந்தியாவின் எஞ்சிய நகரங்களில், நமது வாழ்க்கை மின்வெட்டால், குடிநீர்ப் பற்றாக்குறையால், குண்டும் குழியுமான சாலைகளால், பண வீக்கத்தால், எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமை மீது நாட்டம் கொண்டவர்களுக்கு அரசாங்கம் அதை மறுக்க முடிவு செய்வதால் அவ்வப்போது தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும்
ஒப்பீட்டளவில் நமது வசதியான வாழ்க்கையிலிருந்து இம்பால் வெகு தூரத்தில் இருக்கிறது. ஆனால் மணிப்பூரும் இந்தியாவில் தான் இருக்கிறது. இருப்பினும் இங்கு மக்கள் பெரும்பாலான நாட்கள், தலைநகரில் கூட, மின்சாரம் இன்றி வாழ்கின்றனர். அரசாங்கமும் படையும் செயல்படும் இடங்கள் மட்டும் தான் இங்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் இடங்களாக இருக்கும். இங்கு இருட்டிய பிறகு வெளியே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். அங்காடிகள் கூட அந்தி சாய்ந்ததும் மூடப்பட்டுவிட்டுகின்றன. இங்கு ஆயுதம் தரித்த மனிதர்கள், பாதுகாப்புப் படையினர், பல்வேறு போராளிக்குழுக்கள் ஆகியோர் தாம் இயக்குகின்றனர். இங்கு ‘ஜனநாயகம்’ கோட்பாட்டு கட்டமைப்பாகத்தான் தெரிகிறதே தவிர, நிச்சயமாக வாழும் உண்மைநிலையாக அல்ல.

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

மேலும் இங்கு, 2000 நவம்பரிலிருந்து ஐரோம் ஷர்மிளா என்ற 38 வயதுப் பெண்மணி ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு வருகிறார். அவர் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, இம்பாலில் ஒரு பொது மருத்துவமனையில் காவலில் வைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக உணவு செலுத்தப்படுகிறார். ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுதலை செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் கைது செய்யப்படுகிறார். இருப்பினும் கற்பனைக்கெட்டாத துணிச்சல் கொண்ட இந்தப் பெண்மணி தளர்ந்து விடவில்லை. மேலும் தன்னுடைய தீர்மானத்தைப் பற்றிக்கொண்டு தனது மாநில மக்களுக்காக ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏந்தியிருக்கிறார். மக்கள் கவனிப்பார்கள், தனது உறுதிப்பாடு அங்கீகரிக்கப்படும், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறு பரிசீலனை செய்வதாக முந்தைய ஆட்சிக்காலத்தில் வாக்குறுதியளித்த இப்போதைய அரசாங்கம் தனது இன்னுமொரு வாக்குறுதியை பொய்யாக்காது என்று நம்புகிறார்.

ஐக்கிய முற்போக்கு அரசாங்கம் 2004ல் பதவியேற்றுக் கொண்ட ஓராண்டுக்குப் பிறகு, அது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையில் ஐந்து உறுப்பினர் குழுவை நிறுவியது. அந்தக் குழு, பிற விடயங்களோடு, ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. எனவே ஷர்மிளாவின் கோரிக்கை நியாயமற்றதல்ல; அரசாங்கமே நியமித்த குழு அதை ஆதரித்துள்ளது. ஆனால் அந்தப் பரிந்துரை அளிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இருப்பினும் இன்றும் பாதுகாப்புப் படைகள் தவறுக்குத் தண்டிக்கப்படவியலாத உரிமையை தொடர்ந்து அனுபவிக்கின்றன; அதேநேரத்தில் மணிப்பூர் குடிமக்கள், அவர்கள் இந்தியாவின் குடிமக்களாக இருந்தும், நமது அரசியல் சட்டம் அவர்களுக்கு உத்தரவாதமளித்துள்ள அடிப்படை உரிமைகள் பலவும் இல்லாமலேயே வாழ்கின்றனர்.

தலைநகரில், ஊடகங்களின் முழுமையான ஒளிவெள்ளத்தில் நடக்கும் அன்னா ஹசாரேயின் போராட்டம், ஊழலைக் கையாளும் விடயத்தில் அரசாங்கத்தின் நோக்கம் பற்றிய சந்தேகத்தை அடிப்படையாக‌க் கொண்டதாகும். ஆனால் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் அதுகுறித்த எந்த இயக்கமும் இல்லாத நிலையில், சந்தேகம் கொள்வதற்கு ஷர்மிளாவுக்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது.

நாம் சுதந்திரம் பற்றி அக்கறை கொண்டவர்களானால், ஜனநாயக உரிமைகள் குறித்தும் எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை குறித்தும் அக்கறை கொண்டவர்களானால், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளின் எதிர்ப்புக்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஷர்மிளாவை நினைவில் கொள்வோம்.

கல்பனா சர்மா (தி இந்து 20.08.2011)     
தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It