வழக்கறிஞர் க.சக்திவேல் எழுதிய ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்பது முதல் மொழிப்போரின் (1938) போது தமிழறிஞர்களும் தந்தை பெரியாரும் தந்த முழக்கம். ஆனால் இந்த முழக்கத்தைத் தலைப்பாக்கி வந்துள்ள நூல் பெரியாரை அறவே இழித்தும் பழித்தும் பேசுவதற்கென்றே எழுதப்பட்டுள்ளது.

 தந்தை பெரியார் தம்மை ஓரிடத்தில் கன்னட பலிஜா நாயுடு என அழைத்துக் கொண்டார் என்றும் அவர் பிறப்பால் தெலுங்கர் என்றும் சொல்லி, அவரது கொள்கைகள் நடைமுறைகள் ஒவ்வொன்றையும் இந்தக் காரணத்தைக் கொண்டே விளக்க முற்படுகிறார் சக்திவேல். இது சமூக அறிவியலுக்கு மாறான அணுகுமுறை என்பதைச் சொல்லத் தேவையில்லை. பெரியார் தாம் வந்த வழியை ஒளிவுமறைவின்றிக் குறிப்பிட்டது அவரது நேர்மையைக் காட்டும். தமிழ் நிலைப்பாடு திராவிட நிலைப்பாடாகத் திரிந்தமைக்குப் பெரியாரின் பிறப்பே காரணம் என்பது அபத்தம். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடியின் முடிவுகளுக்கெல்லாம் அவர் அயர்லாந்திய மரபில் வந்தவர் என்று காரணம் சொல்லி விளக்கமளிப்பது போன்றதே இது.

 தந்தை பெரியாரைத் திறனாய்வு செய்யக் கூடாது என்பதோ, அவரிடம் குறைகாணக் கூடாது என்பதன்று நம் நிலைப்பாடு. ஆனால் பொரியாரை அவதூறு செய்து பழிப்பதால் அவருக்கில்லை, நமக்கே இழப்பு.

 இதையொட்டி தந்தை பெரியார் என்று அழைப்பது தொடர்பான கருத்து மோதலையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். பெரியாரும் சரி, திராவிட(ர்) இயக்கமும் சரி, பொதுவாக தேசம், தேசியம் என்ற சொற்களை இந்தியாவைக் குறிக்கும் வகையிலேயே பயன்படுத்துவது வழக்கம். தமிழ்த் தேசம், தமிழ்த் தேசியம் என்ற சொல்லாட்சியை அவர்களிடம் காண்பது அரிது. எனவே அவர்கள் பெரியாரைத் தந்தை எனக் குறிப்பிட்டது இனத்தின் வழிகாட்டி, இயக்கத்தின் வழிகாட்டி என்ற பொருளில்தான். இனம் என்பது திராவிட இனமாகவோ தமிழினமாகவோ இருக்கலாம். பெரியார் தம் வாழ்க்கையின் பிற்பகுதியிலும் இறுதி வரையிலும் - திராவிடர் கழகம் என்ற பெயரை மாற்றாவிட்டாலும் - தமிழினம், தமிழ்நாடு என்பதையே வலியுறுத்தி வந்தார் என்பதை மறக்கலாகாது.

 தந்தை பெரியாரைத் தமிழ்த் தேசத் தந்தை என்று விரிவாக்கி விளக்கியது தமிழ்த் தேசிய அமைப்புகளே. இதில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கும் தோழர் பெ.மணியரசனுக்கும் முக்கியப் பங்குண்டு. இப்போது அவரை அப்படி அழைப்பதில்லை என்று அவர்கள் அறிவித்துள்ளார்கள். தேசத் தந்தை என்பது இயக்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர் போன்ற பதவியல்ல. எவர் ஒருவரையும் தேசத் தந்தையாக நியமிப்பதும் இல்லை, நீக்குவதும் இல்லை. தேசத் தந்தை என்பதாலேயே ஒருவரைக் குற்றாய்வுக்கு அப்பாற்பட்டவர் ஆக்கி விடவும் தேவையில்லை.

 காங்கிரசுக் கட்சியின் தலைமை - குறிப்பாக 1947க்குப் பின் இந்தியத் தேசத் தந்தை காந்தியாருடன் முரண்பட்ட நேர்வுகள் ஏராளம். நாமும் நம் தேசத் தந்தையை அவ்வாறு வைத்துக்கொண்டே அவரது கொள்கைகளிலிருந்து மாறுபடலாம், தவறில்லை.

 தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய நிகழ்வு என்பது தமிழ்த் தேசிய இனம் தன்னைத்தானே இனங்காணும் வரலாற்றுப் போக்கின் தொடக்கம் ஆயிற்று என்பார் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு. நம்மைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியம், சமூக நீதி ஆகிய இரட்டைக் கொள்கைகளுக்கும் அவற்றின் இடையுறவு மற்றும் இணைப்புக்கும் முன்னோடியாகவும் அடையாளச் சின்னமாகவும் தந்தை பெரியாரைப் பார்க்கிறோம்.

Pin It