திருமணக் காலம் முழுவீச்சில் இருக்கிறது. இந்தக் காலங்களில் திருமணங்களின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் பழக்கவழக்கங்களின் ஒருபடித்தான தன்மை கொண்டவையாக மட்டுமில்லை. எடுத்துக்காட்டாக,மிகவும் பாரம்பரியமானவை தவிர, மெகந்தி, இசை போன்றவை முன்பு பொதுவாக வடக்கில் மட்டும் இருந்தவை ஏறத்தாழ ஒவ்வொரு திருமணத்தின் பகுதியாகவும் இப்போது ஆகிவிட்டிருக்கின்றன. 

நமது நகரங்களில் நடைபெறும் திருமணங்களில், குறிப்பாக நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கங்களின் திருமணங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக உங்கள் கண்ணுக்குத் தெரியும் வேறொன்று இருக்கிறது. மணப்பெண்ணும் பெண்களும் மிக நுட்பமாக நெய்யப்பட்ட இந்திய சேலைகளை அணிந்த நாட்களிலிருந்து- பனாரசிலிருந்து பைந்தானி, காஞ்சீபுரம், ஜம்தானி வரை- இன்று இன்னொருவகை ஒருமைப்பாடு இருக்கிறது, அது இந்த செழிப்பையும் பல்வகையையும் மாற்றியுள்ளது. சிபானில் அல்லது ஜார்ஜெட்டில் கையால் பின்னல் வேலை செய்யப்பட்ட சேலைகளும் திருமண உடைகளும் உணமையிலேயே இன்று வழக்கமாக ஆகியிருக்கின்றன. இந்தியக் கைத்தறிகளுக்கு என்ன நேர்ந்தது? 

இந்தியக் கைத்தறிகளும் கைத்தறி நெசவாளரும் நகர்ப்புற இந்தியாவின் இந்த நாகரிக மாற்றத்திற்கு விலை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதாவது கைத்தறி நெசவாளர்கள் தங்கள் பிழைப்புக்கு உதவிய சந்தையை இழந்துள்ளார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கூட, அவருக்காகவே கைத்தறி உற்பதியாளர்களால் தயாரிக்கப்பட்டு இந்தியாவெங்குமிருந்து வந்த கண்கவரும் கைத்தறிச் சேலைகளை அணிந்து அதைப் பரப்பச் செய்த காலத்திலிருந்து, இன்று குவிந்து போன கைத்தறி உற்பத்திப் பொருட்களை

பல்வேறு நகரங்களில் கைத்தறிக் கண்காட்சிகள் மூலம் அரிதாக விற்பனை செய்வது வரை இந்தியா நெடுந்தூரம் பயணப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் செத்துக் கொண்டிருப்பது வெறும் கைவினைஞர்கள் மட்டுமல்ல, தனித்துவமிக்க கலாசாரப் பாரம்பரியமும் தான். 

சந்திரசேகரும் அவரது மனைவி ஸ்வப்னாவும் இந்தியாவில் கடுமையான துன்பங்களை எதிர்கொண்டுள்ள 43.3 லட்சம் கைத்தறி நெசவாளர்களில் இருவராவார். அவர்கள் ஹைதராபாத்திலிருந்து 50 கிலோ மீட்டர் சுற்றுக்குள் இருக்கும் போச்சம்பள்ளியில் வசிக்கிறார்கள். அவர்களுடைய ஊரின் பெயரில் தனித்துவமிக்க புகழ்பெற்ற சேலைகளை நெய்கிறார்கள்; அது ஊடை, பாவு இரண்டிலுமே ஒருவகையான கட்டுக் கட்டிச் சாயமிட்ட நூலைப்பயன்படுத்தி நெய்யப்படுவதாகும். அதற்குத் திட்டமிடுவது மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். அதற்கான சாயமிடும் செயல்முறை மிகச் சரியாக இருக்க வேண்டும், நெசவு செய்வதிலும் ஒவ்வொரு அங்குலத்திலும் மிகுந்த கவனம் செலுத்தப்படவேண்டும். 

வரலாற்று நிகழ்வு 

போச்சம்பள்ளி அதன் நெசவுக்கு மட்டும் புகழ் பெற்றதல்ல, 1951 ல் வினோபா பாவே தனது தெலிங்கானா நடைபயணத்தின் போது அந்தக் கிராமத்தில் தங்கினார். அந்த கிராமத்தில் நுழைந்ததும், அவர் இந்தக் குடும்பங்களுக்கு யாரேனும் உதவ முடியுமா என்று கேட்டார். ஒரு உள்ளூர் நில உடமையாளரான வேதிரா ராமச்சந்திர ரெட்டி எழுந்து நின்று, நிலமற்றவர்களுக்கு 100 ஏக்கர்கள் நிலம் நனகொடையாகத் தருவதற்கு முன்வந்தார். இவ்விதமாகத் தான் நிலக்கொடை (பூமிதான) இயக்கம் தொடங்கியது, அந்த இயக்கத்தின் மூலமாக, பல மாநிலங்களில், தாமாக முன்வந்து நன்கொடையளித்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைப் பெற்று வினோபா நிலமற்றோருக்கு அளிக்க முடிந்தது. போச்சம்பள்ளி அதன் பெயருடன் பூமிதான என்ற அடைமொழியைக் கொண்டுள்ளது. 

சந்திரேகரும் ஸ்வப்னாவும் இந்தக் கிராமத்தில் கைத்தறித் தொழிலை நம்பி வாழும் 3000 குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். மெய்மறக்கச் செய்யும் அழகில் ஒரு பருத்தி அல்லது பட்டுப்புடவையை நெய்து முடிக்க பலமணி நேரம் உழைக்கவேண்டும். சந்திரசேகர், ஸ்வப்னா ஆகிய இருவருமே நாள் ஒன்றுக்கு ஏழு அல்லது எட்டுமணி நேரம் வேலை செய்தாலும் அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ மாதம் ஒன்றுக்கு ரூ.3000/- மட்டுமே. அவர்களின் இரண்டு பெண்குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். அந்த சேலைக்கு தேவை மிகுதியாக இல்லாததால் அவர்களுக்கு மாதக்கணக்கில் வேலையில்லாமல் போகிறது. அவர்கள் நெசவு செய்ய வேண்டாம் என்று எட்டுக் கொள்ளப்படுகிறார்கள், ஏனென்றால் வணிகர்களிம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் இருப்பு குவிந்து கிடக்கிறது. 

ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஆண்கள் ஹைதராபாத்துக்கு வேலைதேடிச் செல்கிறார்கள். பெண்கள் பின்னல் வேலைகள் மற்றும் ஆயத்த ஆடைத் தயாரிப்பு வேலைகளுக்குச் செல்கிறார்கள். கல்வி கற்றுக் கொண்டிருக்கும் குழந்தைகள் அவர்களுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்ல முடியாது. உண்மையில், பெரும்பாலான நெசவாளிகள் தங்களுடைய குழந்தைகள் வேறு ஏதாவது வேலைக்குச் செல்வதையே விரும்புகிறார்கள். 

பல்வகைக் காரணங்கள்  

இந்த நெசவாளர்களின் நெருக்கடிக்கு தேவை குறைந்தது மட்டுமல்லாமல் நூல்விலை ஏற்றம், குறைந்த விலையில் செயற்கை இழைகள் இறக்குமதி ஆகியவையும் காரணங்களாகும். இந்தத் துறை அரசு மானியங்களைக் கொண்டு பிழைத்து வருகிறது, ஆனால் அதுவும் உண்மையாகக் கிடைப்பதில்லை. நெசவாளர்களின் இப்போதைய தலைமுறைக்கு ஓரளவு உதவி வழங்கப்பட்டாலும், போச்சம்பள்ளி இக்கத் போன்ற அந்த கைத்தறி நெசவுக்கலை இன்னொரு தலைமுறை வரை பிழைத்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை. 

பெரும்பான்மையான நெசவாளர்களில் உணமையில் பெரும்பானமையாக இருப்பவர்கள் பெண்கள் தாம் என்பதைப் பலர் உணர்ந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். ஒரு காரணம் நெசவுத் தொழிலில் வருமானம் குறைந்து வருவதாக இருக்கலாம். அதன் விளைவாக ஆண்கள் வேறு வேலை தேடுகிறார்கள், அதேசமயம் பெண்கள் நெசவுத் தொழிலில் நீடிக்கிறார்கள் இதன் பொருள் பிற வேலைகளைத் தேடிக்கொள்ளும் ஆற்றல் கொண்ட இளம் பெண்கள் தறியிலேயே நீடிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தனது படிப்பைத் தொடரமுடியாது போனதற்கு வருந்தும் இருபதே வயதான ஸ்வப்னா “திருமணத்திற்குப் பிறகு, நான் இந்த வேலையைச் செய்யத் தொடங்கினேன். அது கடினமான வேலை, நாங்கள் எதிர்பார்க்கும் ஊதியம் இதில் கிடைப்பதில்லை” என்று கூறுகிறார்.அவர் 12 ஆம் வகுப்பு வரை படித்ததாகவும் மேலே படிக்க விரும்பியதாகவும் கூறுகிறார். போதுமான தகுதி இல்லாததால் வேறு வேலை எதுவும் தேடிக்கொள்ள முடியாது என்றும் அவர் உணர்ந்துள்ளார். 

முரண் நகையாக, அதே கிராமத்தில் இன்னொரு இளம் பெண் லதா வெங்கடேஷ் கிராமத் தலைவராக இருக்கிறார். அழகாக வெளிர் மஞ்சள் நிற சேலை அணிந்திருந்த அவரும் 12 வது வகுப்பு வரை தான் படித்துள்ளார். ஆனால் அவர் ஒரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர், கிராமத் தலைவராக இருந்த அவருடைய கணவரின் வாரிசாக அவருக்கு அந்தப் பதவி கிடைத்தது என்று சிலர் தெரிவித்தார்கள். தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பது, “பெண்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது” போன்ற, கிராமத்தில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகத் தான் எடுக்க விரும்பும் நடவடிக்கைகள் பற்றி லதா ஆர்வத்துடன் பேசுகிறார். போச்சம்பள்ளி நெசவாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதையும் ஆண்களில் பெரும்பான்மையினர் நகரத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டிருகிறார்கள் என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். 

பல நாடுகளில் பாரம்பரிய நெசவுத் தொழிலும் பிற கைவினைத் தொழில்களும் இப்பொழுது ஒரு கண்காட்சிக்கான, சுற்றுலாப் பயணிகளுக்கான விற்பனைப் பொருட்கள் நடவடிக்கைகளாக ஆகிவிட்டன என்று பலர் வாதிடலாம். ஆனால் இந்தியாவில் கைத்தறிகளுக்கு ஒரு மாறுபட்ட கதை உண்டு. அவை நாடெங்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழவாதாரமாக இருந்து வருகின்றன. நீங்கள் இந்திய வரைபடம் ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் நாட்டில் இருக்கும் பல்வேறு வகைப்பட்ட கைத்தறிகளையும் குறியிட்டீர்களானால், வடகிழக்கு மற்றும் காஷ்மீரிலிருந்து தென்கோடி வரை ஏறத்தாழ ஒவ்வொரு மாநிலத்தையும் நீங்கள் தொட்டிருப்பீர்கள். 

அதற்கும் மேலாக, காஞ்சீபுரம், பனாரஸ் பட்டு, சட்டிஸ்காரிலும் அசாமிலும் கோசா, மோகா பட்டு, அல்லது வங்காளத்தின் ஜம்தானி பட்டு, பகல்பூர் பட்டு, மத்தியப் பிரதேசத்தின் சந்தேரி பட்டு, ஒரிசாவின் துஸார், இக்கத பட்டு, போன்ற இந்த சிறப்பான கைத்தறி பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபடுத்தப்படும் கைத்திறன் ஒரு சிறப்பான கலாசார மூலதனத்தின் பகுதியாகும். இது முட்டாள்தனமாக வீணடிக்கப்படக் கூடாததாகும். உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் ஆகியவற்றின் வேகத்தில், மிகவும் தனித்துவமிக்க, சிறப்பான ஒன்றை, உயர்ந்த வடிவமைப்பு மற்றும் நாகரீகத்தை நாடுவோரின் ஆளுகைக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படாமல் சாதாரண மக்களுக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றை நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். 

நமது பெற்றோர்களின் தலைமுறை காலனிய ஆட்சியை நிராகரிக்கும் ஒரு அறிவிக்கையாகக் கதரைப் பயன்படுத்திய வழியில் இன்றைய தலைமுறை கைத்தறியைப் பயன்படுத்துவதற்கு காரணத்தைக் கண்டறியுமா? போச்சம்பள்ளிக்குச் சென்று, சந்திரசேகர் மெதுவாக, கடின உழைப்புடன், அவர் நெசவு செய்யப்போகிற அடுத்த சேலைக்கான நூலுக்குச் சாயமிடுவதை கவனித்து, அவரது வீட்டின் மங்கிய இருளிலிருந்து தோன்றும் பல்வேறு வடிவங்களையும் வண்ணங்களையும் கண்டு வியப்பில் ஆழ்ந்து போகும்போது, இது இன்னும் நிகழ முடியும் என்று ஒருவருக்கு நம்பிக்கை பிறக்கிறது. 

நன்றி: தி இந்து நாளிதழ்

கல்பனா சர்மா

தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It