சென்னை கிண்டியிலிருந்து அம்பத்தூர் வரையிலான சுமார் 10 கிலோமீட்டர் தூர சாலைப்பகுதியை விட ஆபத்தான சாலைப்பகுதி உலகில் ஏதேனும் உள்ளதா என்கிற கேள்விக்கு பெரும்பாலும் இல்லை என்கிற பதிலே கிடைக்கும். அமேசான் காட்டுப்பகுதிகளில் கூட இப்படி ஒரு ஆபத்தை சந்திக்க நேராது என்கிற உண்மையை வாகன ஓட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் எந்தவொரு இயற்கை பேரிடருக்கும் பணிந்து போகாமல் எதிர்த்துப் போராடி வாழும் திறன் படைத்த மக்கள் ஜப்பானியர்களா, இந்தியர்களா என்று கேட்டால், இந்தியர்கள்தான் என்று அடித்துக் கூறலாம்.

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது யாருக்கேனும் கொட்டாவி வந்துவிட்டால் உயிரைக் கொடுத்தாவது அடக்கிக்கொண்டு விட வேண்டும். தவறி வாயை தொறந்து ஆயாசமாக கொட்டாவி விட்டால் சுமார் 100 கிராம் மணல் மற்றும் தூசு வாய்க்குள் சென்று விடும். ஒரு பீரங்கி டாங்கியை பாலைவனத்தில் ஓட்டிச்சென்றால் கூட அவ்வளவு தூசி வெளிப்படாது. அவ்வளவு தூசி நிறைந்த சாலைப்பகுதியாக மாறிப்போனது குறித்து யார் கவனிக்கிறார்கள். குறைந்த பட்சம் ஒருலட்சம் பேரின் நுரையீரலாவது பாதிக்கப்பட்டிருக்கும். சில லட்சம் பேருக்காவது சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கும். கடந்த 2 ஆண்டுகளாகவே ஆக்ஸிஜனைத்தான் சுவாதித்துக் கொண்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. ஆக்சிஜன் இல்லாமல் கூட மனிதனால் உயிர்வாழ முடியும் என்றே தோன்றுகிறது. சென்னை மக்‍கள் அத்தகைய பரிணாம வளர்ச்சியை பெற்று விட்டார்கள்.

மெட்ரோ ரயில் திட்டம் என்று கொண்டு வந்தாலும் வந்தார்கள், நூறடி சாலைகள் சுருங்கி 20 அடி சாலைகளாக குறுகிப் போயின. சில இடங்களில் ஒற்றையடிப்பாதையைப் போல் காணப்படுகின்றன. தினசரி இந்த குறுகலான சாலைகள் வழியாக செல்வது என்பது போர்க்‍களத்துக்குச்‍ செல்வது போல் பயமாக இருக்‍கிறது. இவ்வளவு குறுகலான சந்துகளின் வழியாக லட்சக்‍கணக்‍கான வாகனங்கள் கடந்து செல்வதை இந்த கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தால்தான் என்ன? இந்த மாநகராட்சி சென்னை மக்‍களின் தினசரி சாதனை நிகழ்ச்சிகளை எல்லாம் வீணடித்துக்‍ கொண்டிருக்‍கிறது. இவ்வளவு குறுகலான பாதையில் நூற்றுக்‍கணக்‍கான பேருந்துகளும், லாரிகளும், வாகனங்களும் தினசரி கடந்து செல்வதைப் போல உலகில் வேறு எந்த நாட்டுக்‍காரனாவது செல்ல முடியுமா? முடியவே முடியாது. இவையெல்லாம் சென்னை மக்‍களின் சிறப்புத் தகுதி. சென்னை மக்‍கள் அனைவரும் லைவிங் லெஜன்ட்ஸ் என்று சொன்னால் அது மிகையில்லை.

சாலைகளுக்‍கு நடுவே பள்ளம் என்ற நிலை மாறி பள்ளங்களுக்‍கு நடுவே சாலை என்கிற நிலை வந்துவிட்டது. இருசக்‍கர வாகனத்தில் செல்லும் போது குதிரைவண்டியில் செல்வது போன்ற ஒரு உணர்வைக்‍ கொடுக்‍கிறது. அவ்வளவு ​மேடு, பள்ளங்கள் சாலை முழுவதும் காணப்படுகின்றன. வண்டியில் போய்க்‍கொண்டே இருக்‍கும் பொழுது திடீரென்று டமால் என்கிற சத்தம் கேட்கும். அப்போது நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அது வெறும் பள்ளம் அல்ல, அந்த இடத்தில் ட்ரெயினேஜ் மூடியை திறந்து வைத்திருக்‍கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆம். புரிந்து கொண்டால் மட்டும் போதுமானது. கோபப்படக்‍கூடாது. யாரையும் திட்டக்‍கூடாது. திட்டினால் கூட மனதிற்குள்ளாக, யார் காதுக்‍கும் கேட்காமல் அமைதியாக மாநகராட்சியை திட்டிவிட்டு நல்ல பிள்ளையாக வீடுபோய் சேர வேண்டும்.

நூறடிக்‍கு ஒரு சிக்‍னல் என்கிற கொள்கைப்படி வைக்‍கப்பட்டிருக்‍கும் சிக்‍னலில், சட்டத்தை மீறாத நல்ல குடிமகன்கள் இருசக்‍கரவாகனத்தை முறுக்‍கிக்‍கொண்டே நின்று கொண்டிருக்‍கும் பொழுது, முதல் சிக்‍னலில் காய்கறி வாங்கிக்‍கொண்டு நடந்து வந்து கொண்டிருப்பவர் சிரித்துக்‍ கொண்டே கடந்து செல்வார். அவரது சிரிப்பு "உனக்‍கெல்லாம் அனுபவம் பத்தாது, என்னைப்போல் நடந்து செல்ல கற்றுக்‍கொள்" என்று கூறுவது போல் இருக்‍கும். சில இடங்களில் குறுகலான சாலையில் இரண்டிரண்டு பேராக சென்று கொண்டிருக்‍கும் பொழுது, சாலையின் இருபக்‍கமும் பள்ளங்கள் தோன்டி குவித்து வைக்‍கப்பட்டிருக்‍கும் மணல் மேடுகளில் அமர்ந்து மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள் அமர்ந்து மதிய உணவு உண்டு கொண்டிருப்பார்கள். சாலைகளிலேயே உணவு மேடைகள் அமைத்து இயற்கை சூழ்நிலையில் உணவு உண்ணும் முற்போக்‍கு சிந்தனைகள் எந்த உலக நாடுகளிலும் காணப்படாத அற்புதக்‍ காட்சிகளாகும்.

சில இடங்களில் எருமை மாடுகள் எதிர்த்தாற்போன்று வந்து கொண்டிருக்‍கும். யார் வளர்க்‍கும் மாடுகள் என்று தெரியாது. அவற்றிற்கெல்லாம் ஹாரன் சத்தம்கேட்டு கேட்டு பழகிவிட்டிருக்‍கும். அவை அசைந்து கொடுப்பதில்லை. என்னையெல்லாம் அசைத்துப் பார்க்‍க உனக்‍கு திறமை பத்தாது என்று கூறுவது போல் நடுரோட்டில் நின்று கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருக்‍கும். அவற்றிற்கு மியாமி பீச்சில் வெயில் காய்வதாக நினைப்பு.

முக்‍கியமாக கவனிக்‍கத் தகுந்த விஷயம் ஒன்று உள்ளது. பள்ளிக்‍ குழந்தைகள் என்றில்லை. எந்தவொரு நடுத்தர வயது பெண்மணிக்‍கும், இடது பக்‍கமாக நடந்து செல்லும் போக்‍குவரத்து வழக்‍கத்தை பற்றி தெரிந்திருக்‍கவே இல்லை. அவர்கள் சொல்லி வைத்தாற்போன்று வலது பக்‍கமாகவே 3 அல்லது 4 பேராக கைகளை கோர்த்துக்‍ கொண்டு நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி சீரியசாக பேசிச் கொண்டு குழந்தைகளை கூட்டிக்‍கொண்டு வந்து கொண்டிருப்பார்கள். இடது பக்‍கமாக சென்று கொண்டிருக்‍கும் வாகன ஓட்டிகள் இந்த இந்தியா கேட்டை கடந்து செல்வதற்குள் 15 முறை கியரையும், கிளட்சையும் பிடித்து, பிரேக்‍கை மிதித்து பாடாய் பட வேண்டியதிருக்‍கிறது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதாய் தெரிவதில்லை. ஒவ்வொரு பெண்மணியும் 100 லிட்டர் ஆயிள் டேங்க்‍ சைசில் காணப்படுவார்கள். ஏன் ஒருவர் ஒருவராக சென்றால்தான் என்ன. 3 பேராக சேர்ந்துதான் செல்ல வேண்டுமா? அவர்களிடமும் இந்த ஹாரன் சத்தம் செல்லுபடியாவதில்லை. இருசக்‍கரவாகனங்களில் வைக்‍கும் இந்த     ஹாரன் சத்தத்தால் எந்தவொரு பிரயோஜனமும் இல்​லை என்பதை அதை தயாரிப்பவர்கள் புரிந்து கொண்டு வேறுவிதமான ஹாரன் ஒலியுடன் வாகனங்கள் தயாரிப்பது குறித்து யோசிக்‍க வேண்டும்.

ஆனால் இந்த சாலையோர வியாபாரிகளை மட்டும் எந்த குறையும் சொல்லக்‍ கூடாது. அவர்கள் மட்டும் தான் மிகப்பொறுப்பாக வாகனங்கள் செல்வதற்கென்று பெரிய மனது செய்து 3 அடி தூரத்தை ஒதுக்‍கிக்‍ கொடுத்திருப்பார்கள். அந்த 3 அடி இடைவெளிக்‍குள் நாம் தைரியமாக வாகனங்களை ஓட்டிச் செல்லலாம். 40 அடி சாலையில் அவர்கள் வெறும் 37 அடி தூரத்தை மட்டும் தான் சுவீகரித்துக்‍‍ கொள்வார்கள். அதை மீறி அவர்கள் ஒரு அடியை கூட அபகரித்துக்‍ கொள்வதில்லை. மேலும், அழுகிய காய்கறிகளையும், சக்‍கைகளையும், தோல். இலை போன்ற இதர பொருட்களையும் சாலையின் நடுப்பகுதியில் போட்டு வைத்து மெத்மெத்தென்று சாலையை மாற்றியிருப்பார்கள். அதன் மேல் வண்டியை ஓட்டிச் செல்வது ஒரு வித்தியாசமான அனுபவம். மேலும் அந்த நாற்றத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அந்த நேரத்தில் நாம் மூச்சுப் பயிற்சி எடுத்துக்‍ கொள்ளலாம். சுவாசத்தை அடிவயிற்றிலேயே அடக்‍கிக்‍ கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விடலாம். எப்பொழுதாவது ஒரு முறை அழுகிய தக்‍காளி உங்களை நோக்‍கி வரலாம். அப்பொழுது நாம் தலையை குனிந்து கொண்டால் மட்டும் போதுமானது. அதற்கு மேல் ஒன்றும் செய்யத் தேவையில்லை.

இவற்றையெல்லாம் விட முக்‍கியமான விஷயம் மழை....இனிமேல் இருசக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் கொடுக்கும் போது கூடுதல் தகுதியாக நீச்சலும் தெரிந்திருக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தால் தான் பல உயிர்கள் காக்கப்படும் என்கிற சூழ்நிலைக்கு சென்னை போக்குவரத்து தள்ளப்பட்டுவிட்டது. மழைக்‍காலங்களில் கிண்டி ஹில்ட்டன் ஹோட்டலுக்‍கு எதிர்த்தாற் போன்று ஒரு நதி ஓடும். அந்த நதிக்‍கு இதுவரை எந்த பெயரும் வைக்‍கப்படவில்லை. அந்த நதியில் நீச்சல் தெரியாமல் மாட்டிக்‍ கொண்டவர்கள் ஏராளம். அந்த நதிநீரில் சாக்‍கடை நீரும் கலந்திருக்‍கிறது என்பது அதற்கு கூடுதல் தகுதி. தைரியம் உள்ளவர்கள் மட்டுமே அதற்கு மேல் கடந்து செல்ல முடியும் என்பதால், தைரியம் இல்லாதவர்கள் கிண்டி பாலத்தில் தொடங்கி பழவந்தாங்கல் வரை வரிசையாக நின்று சாலையோரங்களை ஒன்றுக்‍கு போகும் இடங்களாக பயன்படுத்தி வரும் காட்சிகள் எல்லாம் மிகச் சாதாரணம். ஆனால், போக்‍குவரத்து நெரிசலில் கூட ஒன்றுக்‍கு போவதை பொழுதுபோக்‍காக நிறைவேற்றி வரும் அசாதாரணமான மனிதர்கள் நிறைந்த நாடு நம் இந்தியத் திருநாடு என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

நீரிலும் நிலத்திலும் பயணிக்‍கக்‍ கூடிய வாகனங்களை ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மட்டும்தான் பார்த்திருப்போம். அதுபோன்ற நீரில் பயணிக்‍கும் காட்சிகளை எல்லாம் நேரடியாக பார்க்‍கும் வாய்பு சென்னை மக்‍களுக்‍கு மட்டும்தான் வாய்த்திருக்‍கிறது. அவர்கள் தரையில் செல்லக்‍கூடிய வாகனங்கள் மூலமாக நீரில் பயணிப்பதற்கு உரிய வாய்ப்பும் அவர்களுக்‍கு வழங்கப்பட்டிருக்‍கிறது. யாருக்‍கும் எந்தத் தடையும் இல்லை. யார் வேண்டுமானாலும் கிண்டி சாலையில் ஓடும் நதியில் வாகனங்களை விட்டு ஆட்டலாம். கீழே விழுந்துவிட்டால் யாரும் உங்களை தூக்‍கி விட மாட்டார்கள் என்பது ஆட்டத்தின் முக்‍கிய விதி. அதை மனதில் வைத்துக்‍ கொண்டு நீருக்‍குள் காலை வைக்‍க வேண்டும். ஆட்டத்தில் விதிகள் மிக முக்‍கியமானது. எந்த ஒரு இடத்திலும் பிரேக்‍ போடக்‍கூடாது. தவறிப்போய் அப்படி பிரேக்‍ போட்டால் பின்னால் வருபவர் எந்தவித கேள்வியும் கேட்காமல் சிரித்துக்‍ கொண்டு வந்து பின்னால் இடிப்பார். அல்லது இடித்துவிட்டு பின்னால் சிரிப்பார். நீரின் போக்‍கிலேயே செல் என்கிற புத்தரின் வாக்‍கிற்கு இணங்க நாம் நீரின் போக்‍கிலேயே சென்று விட வேண்டும். ஐயோ நாம் தேய்த்துபோட்டு வந்த சட்டையும், பேண்டும் மட்டுமல்லாமல், 3000 ரூபாய் ஷூவும் நீரில் நனைகிறதே என்று வருத்தப்படக்‍ கூடாது. உங்கள் அலுவலகத்திற்கு வரும் அத்தனை பேரும் நன்றாக ஆற்று நீரில் ஸ்நானம் செய்து விட்டுத்தான் வந்திருப்பார்கள். அதனால் எந்தவித கவலையும் படத் தேவையில்லை.

மாநகராட்சியின் இதுபோன்ற அற்புதத் திருவிளையாடல்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்த வருடம் மழைக்‍காலத்தில் இத்தகைய அற்புத அனுபவத்தை தவறவிட்டவர்கள் கவலை பட்டுக்‍ கொள்ளாமல் அமைதியாக இருக்‍கலாம். ஏனெனில் அடுத்த மழைக்‍காலத்திற்குள் மாநகராட்சி செயல்பட்டு தண்ணீர் தேங்குவதையெல்லாம் சரிசெய்துவிடப் போவதில்லை என்பதால், அடுத்த ஆண்டு நிச்சயமாக நீரில் வாகனத்தோடு நீந்திச் செல்லும் வாய்ப்பு அனைவருக்‍கும் உறுதியாக உண்டு என்பதை மனதில் நிறுத்திக்‍ கொள்ள வேண்டும்.

Pin It