விடுதலைப் போரில் பெண்களின் பங்கேற்புடன் நாடு விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆகின்றன. 1952ல் தொடங்கி 2009 வரை 15 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. முதலாவது தேர்தலில் பெண்கள் போட்டியிட வில்லை. 1957 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து பெண்களின் பங்கேற்பு ஆரம்பமானது. அன்று 494 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை 22 தான். நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 59 தான். அதாவது, 10.82 சதவிகிதம் தான்.

நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதிப்பேர் பெண்கள். தேர்தல்களில் வாக்களிப்போரிலும் சரி பாதிப்பேர் பெண்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் மட்டும் அவர்களின் எண்ணிக்கை- அரசியல் பிரதிநிதித்துவம் பத்தில் ஒரு பங்குதான்!

33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் 180 பெண் உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். இந்த 3ல் 1 பங்கு நியாயம்கூட அவர்களுக்கு வழங்கப்படாமலிருப்பது அநீதி, அநியாயம்! பக்கத்தில் உள்ள சின்னஞ் சிறு நேபாள நாட்டில்கூட நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. ஆனால் ஒரு பெரும் தேசத்தில் - நமது நாட்டில் அதற்காக இன்று வரை போராடி வருகிறோம்.

1974 ம் ஆண்டில்தான் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக பெண்கள் பிரதிநிதித்துவப் பிரச்சனை எழுந்தது. 1996ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவுடன் மத்தியில் தேவகௌடா தலைமையிலான ஆட்சி இருந்த போதுதான் முதன்முதலாக இந்த மகளிர் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு பல கட்டங் களிலும் அது சட்டமாக நிறைவேற்றப்படவேயில்லை. 1996ல் இடதுசாரிகளின் தயவு டன் மத்தியில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது இடதுசாரிகளின் நிர்பந்தத்தினால் 33 சதவிகித இட ஒதுக்கீடு என்பது குறைந்த பட்ச பொது வேலைத் திட்டத்தில் சேர்த்து உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது நிறை வேற்றப்படாமலேயே பல கட்டங்கள் கடந்துபோயின. தற்போது இதற்காக (ஜூன் 22) நாடாளுமன்றப் பெண்மணி சபாநாயகர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டமும்கூட கருத்து ஒற்றுமை ஏற்படாமலேயே கலைத்தது.

மகளிர் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதில் முதலில் காங்கிரஸ் கட்சிக்கு இதய சுத்தியான அக்கறை இல்லை. ஆதரவாக இருப்பதுபோல் நடிப்பு.

பிஜேபி, சிவசேனா போன்ற வகுப்புவாதக் கட்சிகளும் முட்டுக் கட்டை போடுகின்றன. உள்ஒதுக்கீடு என்பதன் பேரால் சமாஜ்வாதி கட்சியும் ராஷ்ட்ரிய ஜனதா தளமும் முட்டுக் கட்டை போடுகின்றன. மகளிர்க்கு நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீடுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதும் நாடு முழுவதும் போராடி வருவதும் கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட இடதுசாரிகள் தான். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பெண்களைத் திரட்டி தில்லி நாடாளுமன்றத்தின் முன்பும் தேசமெங்கம் பல போராட்டங்களை நடத்தியுள்ளது.

ஒரு உறுப்பினர் தவிர அனைத்து கட்சிகளின் 186 உறுப்பினர்களது முழு ஆதரவுடன் 2010 மார்ச் 8 உலக மகளிர் தினத்தன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேறிய இந்த மசோதா நாடாளுமன்றத்தில் எப்போது சட்டமாக நிறைவேறி மகளிர்க்கு நியாயம் கிடைக்கப்போகிறதோ...

நீதியும் நியாயமும்

காலம் கடந்தேனும்

வெல்வது நிச்சயம்!

Pin It