காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணுடன் உறவு என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது.

shobasakthiதன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி கடுமையான வசவுகள் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். அத்துமீறி நடந்த ஆண்டைகளின் குறிகளை தலித் பெண்கள் வெட்டி எறிந்த கதைகளையும் படித்திருக்கிறேன். கிராமத்துப் பெண்கள் அந்த நிமிடத்தில் எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நாகரிகச் சுமைகளை சுமந்து கொண்டு வாழும் நகரப் பெண்களுக்கு தனது எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வெளிகூட இங்கு மறைமுகமாக மறுக்க‌ப்பட்டிருக்கிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை -  திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரைமுறையற்றவை. பெண்ணிய எழுத்துக்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், ஆபாசம் என்றோ மஞ்சள் பத்திரிக்கை எழுத்து என்றோ பொதுஇடங்களில் நஞ்சைக் கக்கும் ஆணாதிக்க மனோபாவம் இன்றளவும் தொடர்கிறது.

பெண்ணியப் புரிதல் இல்லாத இவர்களை விட ஆபத்தானவர்கள், பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்களை சுரண்டக்கூடிய மனிதர்கள்... பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த இடத்தில் அண்மையில் எனக்குத் தெரிய வந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இச்சம்பவம் இப்போது நடந்ததல்ல. பாரீஸில் வசிக்கும் பெண் தோழர் அவர். பெண்ணியக் கருத்துக்களை, பெரியாரியக் கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருபவர். மணமாகி, குழந்தைகளும் இருக்கிறார்கள்.

பெண்ணியம் பேசுபவர் என்பதால், எதற்கும் தயாராக இருப்பார் என்ற ஆணாதிக்க வக்கிரத்தோடு ஒரு ‘முற்போக்கு’ முகமூடி இவரை அணுகியிருக்கிறது. பெண்ணியம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்று பேசி நூல் விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அத்துமீறி நடக்கவும் முயற்சித்திருக்கிறது. அப்போதுதான் அந்த ‘பின்நவீனத்து’வவாதிக்குத் தெரிந்திருக்கிறது, நமது பெண் தோழருக்கு கராத்தேயும் தெரியும் என்பது. அடி பின்னி எடுத்துவிட்டார். அப்போதே அதை இணையதளங்களில் எழுதியுமிருக்கிறார். ஆனால், அந்த யோக்கிய சிகாமணி இதுவரை அந்தப் பெண் தோழரிடம் அத்துமீறி நடந்தற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதெயெல்லாம் விடக் கொடுமை, அதே ‘முற்போக்கு’, இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு.

யாரென்று கேட்கிறீர்களா? இதுநாள் வரை தலித் வேஷம் போட்டுக் கொண்டிருந்த வெள்ளாளன் ஷோபா சக்திதான் அது. இந்த யோக்கியவான் பாலியல் சுதந்திரம் பேசுவது என்பது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.

பெண்களைப் பாலியல் பண்டமாக மட்டுமே பார்ப்பதில் காஞ்சி ஜெயேந்திரனுக்கும், ஷோபா சக்தி போன்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. ஜெயேந்திரன் தன்னிடம் அத்துமீறி நடக்க முயற்சித்ததை பொது ஊட‌க‌ங்க‌ளில் ப‌கிர‌ங்க‌மாக‌ வெளிப்ப‌டுத்திய‌ எழுத்தாள‌ர் அனுராதா ர‌ம‌ணன், க‌டைசிவ‌ரை எந்த‌வொரு நியாய‌த்தையும் பெறாமலேயே இறந்து விட்டார். பாரீஸ் தோழ‌ர் ப‌ல முறை எழுதியும் அவ‌ருக்கான‌ நியாய‌ம் இதுவ‌ரை கிடைக்க‌வில்லை. ஷோபா ச‌க்தியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு க‌ள்ள‌ மௌன‌த்தைத் த‌விர எந்த‌ ப‌திலையும் இதுவ‌ரை த‌ர‌வில்லை. 'வேலைக்குப் போகும் பெண்க‌ள் ஒழுக்க‌ம் கெட்ட‌வ‌ர்க‌ள்' என்று காஞ்சி ஜெயேந்திர‌ன் உதிர்த்த‌ வார்த்தைக‌ளுக்கு சற்றும் குறைவில்லாத‌து ஷோபா ச‌க்தியின் செய்கை.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் சில ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. பல பேருடன் கூடித் திரிவதற்கும், தங்களது இச்சையை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்கும்தான் இவர்கள் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்க, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில்தான், பாலியல் சுதந்திரம் குறித்து அ.மார்க்ஸ் பேசத் தொடங்கினார் என்று நண்பர் ஒருவர் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. (அம்பேத்கரும், பெரியாரும் முதல் மனைவி இறந்தபின்பே இரண்டாவது திருமணம் செய்தார்கள் என்பதும், அந்தத் திருமணத்தையும் பகிரங்கமாக செய்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை, கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். (இந்தக் கட்டுரையையும் தனிமனிதத் தாக்குதல் அல்லது அவதூறு என்று சொல்லி இவர்கள் கடந்துபோகக் கூடும். ஆனால், பொதுவெளியில் புரட்சி பேசுபவர்கள் சொந்த வாழ்க்கையில் அதற்கு விரோதமாக நடந்து கொள்வது குறித்து என்றேனும் ஒரு நாள் பேசித்தான் ஆக வேண்டும். இவர்களை திருஉருக்களாகக் கருதிக் கொண்டு பின்னால் செல்பவர்களுக்காகவாவது இதைப் பேச வேண்டும்.)

ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்காகப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை. காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசிவரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.

லீனா மணிமேகலையின் சுதந்திரத்திற்காக கூட்டம் நடத்திய அ.மார்க்ஸ் & கோ, பாரீஸ் பெண் தோழருக்காக ஒரு கூட்டம் நடத்துமா என்றால் மாட்டார்கள். யாரை சொறிந்துவிட வேண்டும், யாரைப் பிறாண்ட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

அருந்ததி ராய் மீது சேறடிப்பார்கள்; இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவார்கள்; ம.க.இ.க. தோழர்களை நக்கலடிப்பார்கள். ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவ்வாறு பத்திரமாகப் போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

(பின்குறிப்பு: ஃபேஸ்புக்கில் எழுதியதை கொஞ்சம் விரிவாக்கி இங்கே தந்திருக்கிறேன். பாரீஸ் பெண் தோழர் யார் என்பதும், ஷோபா சக்தி & கோ எனது கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினைகளும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. பொதுவான வாசகர்களின் புரிதலுக்காக அவற்றை கீழே பின்னூட்டங்களாக இட்டுள்ளேன்.)