தலைப்பைப் பார்த்ததும் இதுவும் மற்றொரு ‘அலைக்கற்றை’ விவகாரம் என எண்ணிவிடாதீர்கள்! இதற்கு, ஒரே ‘அலைஅதிர்’வில்-அதாவது ‘same frequency-யில் இயங்கும் அரசியல் என்று பொருள் கொள்ளவேண்டும்!

ஆரம்ப இயற்பியலில்…. ஒலி பற்றிப் படித்தபோது, அதில் ’ஒத்த அலையதிர்வு’(sympathetic vibration) குறித்துத் தெரிந்து கொண்டேன். இதில், ஒலியின் அதிர்வுபற்றி விளக்கும் போது எமது ஆசிரியர், “ஒரு செகண்ட்டுக்கு 256அதிர்வுகளை ஏற்படுத்தும் கம்பியொன்றினை நாம் அதிரச் செய்வோமாயின், அதே அலைவரிசையினைக் கொண்டுள்ள அதற்கு அண்மையில் உள்ள மற்றொன்றிலும் தன்னிச்சையாக அதிர்வுகள் உருவாகும்” என விளக்கிய சம்பவம், இன்றைய நமது இரு அண்டை நாடுகளின் அரசியல் விவகாரங்களிலும் எவ்வாறு பொருந்திவருகிறது என நினைக்கையில் ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

அதிலும் “ஊழல் அலை” இவ்விரு நாடுகளையும் ‘அரசியல் ரீதியாக(!)’ மேலும் நெருங்கிவரச் செய்திருக்கிறது என்று கூறலாம்!

அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக; இலங்கையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ’த ஐலண்ட்’[The Island], 05-2-2011 சனிக்கிழமை இதழில், தமிழகத்தைச் சேர்ந்த, தி.மு.க.வின் ‘பலியாடாக’ மாற்றப்பட்டிருக்கும், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரான ராசாவைத் தங்கள் நாட்டிற்கு வந்து ‘பாதுகாப்பாக’ இருக்குமாறு தலையங்கம் தீட்டியிருக்கிறது! அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் தான் இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரால் ‘ஒன்றேமுக்கால் லட்சம் கோடி’ ரூபாய் ஊழல் தொடர்பாக ராசா கைது செய்யப்பட்டிருந்தார்.

ராசாவுக்குப் பரிந்து பேசுவதுபோன்று, தனது நாட்டின் ஊழல்களைப் பட்டியலிட்டிருக்கும் அந்த ஏடு, இந்தியாவை விடவும் இலங்கை ‘ஊழல் சுதந்திரத்துக்கு’ ஏற்புடைய நாடு எனச் சான்று வழங்கியிருக்கிறது!

இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, அசந்தா டி மெல் இருந்த சமயத்தில் அதன் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகப் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டமடைய நெர்ந்ததையும், அதனால் நாட்டில் எண்ணெய் விலை தாறுமாறாக ஏற்றங்கண்டதையும் சுட்டிக் காட்டி அதற்காக இன்றுவரை அங்கு யாரும் கைதுசெய்யப்பட்டதாகவோ, தண்டனை பெற்றதாகவோ தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஒரு அரச சார்பு அதிகாரியே இலங்கையில் இவ்வளவு பெரிய ஊழலைப் புரிந்துவிட்டுப் பயமின்றித் தமது உல்லாச வாழக்கையைத் தொடராலாம் என்றால், ராசாவைப் போன்ற மத்திய அமைச்சருக்கு இங்கு எத்தகைய ‘ஊழல்களைப் புரியவும், அவ்வாறு புரிந்து விட்டுக் கைதாகாது தப்பவும் வாய்ப்புகள் அதிகம். எனவே ‘ராசாவே நீங்கள் இந்த நாட்டில் பிறந்திருந்தால் உங்களுக்கு இத்தகைய துன்பம் ஏற்பட்டிருக்காது’ எனப் பரிவு காட்டியிருக்கிறது’(?) அந்த ஏட்டின் ஆசிரியத் தலையங்கம்.

இது மட்டுமல்ல, சந்திரிகா ஆட்சியில் நடைபெற்ற ‘ரயில் பெட்டிக் கொள்வனவில்’ நடந்த ஊழல் 2007ல் மந்திரியான மெர்வின் சில்வா ‘காசோலை’க் கையாடல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் மிகச் சொற்ப தொகையான ரூபாய் 2,500 ஐ மட்டும் செலுத்தித் தன்னைப் புனிதராக்கிக் கொண்ட நிகழ்ச்சி என இலங்கையின் அரசியல் ‘மாண்பு’ பற்றி விளக்கும் அத்தலையங்கத்தில், 2010 செப்டம்பரில் 13 வயதேயான ஓர் பாடசாலை மாணவி தன் தோழியிடமிருந்து ஐந்து ரூபாய்களைத் திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ‘கோர்டில்’ நிறுத்தப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறது!

சரி ஊழலை மறந்து விட்டு, அரசியல் ஒழுக்கத்துக்கு வருவோம்….. ‘கலைஞரின்’ வார்த்தையில் சொல்வதானால் “கடமை-கண்ணியம்- கட்டுப்பாடு” என வைத்துக் கொள்ளுங்களேன்…

அண்மையில், இலங்கையின் ‘மஹரகம’ பகுதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரக் கூட்டமொன்றில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ‘கம்யூனிஸ்ட் கட்சி’யினது பொதுச் செயலாளரும், மூத்த அமைச்சருமான டி.யூ.குணசேகரா, ‘உள்ளூராட்சியில் அங்கம் வகிப்பவருக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 5000 மட்டுமே கிடைக்கிறது. அதற்காகவா இவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து பதவிக்கு வருகிறார்கள்?’ என்னும் ‘மில்லியன் டாலர்’ கேள்வியை எழுப்பி, ”அதிகாரத்தைப் பெற்ற பின்னர் கொள்ளையடிக்கவே இவர்கள் திட்டமிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?” எனப் பதிலையும் ‘பிட்டு’ வைத்திருக்கிறார்! ஆனால், அவ்வாறான பேர்வழிகளுக்கு மக்கள் இனிமேலாவது வாக்களிக்காதீர்கள் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

இதே போன்று, உண்மையைக் கூறும் மற்றொரு இலங்கை அரசியல்வாதி, முன்னைய பாராளுமன்றச் செயலாளராயிருந்த சாம் விஜேசிங்க என்கிறார்கள்.

புதிதாகப் பாராளுமன்றத்துக்கு வந்திருக்கும் மக்களவை உறுப்பினர்களுக்கென நடாத்தப்படும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் சாம் விஜேசிங்க, புதியவர்களிடம்,” நீங்கள் எதற்காகப் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளீர்கள்” எனக் கேட்பாராம். அதற்கு அவர்களிற் பலர், தாம் மக்களுக்குச் சேவை செய்வதற்காக வந்துள்ளோம் என்பார்கள். ஆனால் அவரோ, “ம் ஹூம்.. அப்படியெல்லாம் கிடையாது…… நீங்கள் எல்லோரும் பணம் சம்பாதிப்பதற்கும், அளவுக்கு மீறிய சலுகைகளைப் பெறுவதற்கும், பெரிய பதவிகளை அடைவதற்குமே வந்திருக்கிறீர்கள்” என்பாராம்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், ஓர் ‘சைக்கிள்’ வண்டியைக் கூட வாங்குவதற்கு வசதியற்றிருந்த ஒருவரின் மனைவி, அவர் அமைச்சரான சில வருடங்களில் தமது இரு கைகள் நிறையத் தங்க நகைகள் அணிந்திருப்பதைச் சுட்டிக்காட்டிக் கண்டித்த முன்னாள் அதிபர் சந்திரிகா பற்றிய செய்திகள் முன்பு வெளியாகியதும் உண்டு.

இவை அனைத்தையும் இன்று ஆசிரியத் தலையங்கங்களாக்கி மக்கள் முன் பார்வைக்கு வைக்கின்றன இன்றைய இலங்கையின் நாளிதழ்கள்.

இவற்றைப் பார்க்கும்போது, இவ்விரு நாடுகளின் அரசியலும் ஒரே அலைவரிசையில்தான் அதிர்ந்து கொண்டிருக்கின்றன என்னும் உண்மை புலப்படுகிறதல்லவா?

[www.sarvachitthan.wordpress.com]

Pin It