அரசால் முன்னின்று நடத்தப்படும் சென்னையின் குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்துதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு முயற்சிகளில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இருப்பதை அறிந்து PUCL உண்மை அறியும் குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில்,

முனைவர். வீ. சுரேஷ், வழக்கறிஞர் மற்றும் தலைவர் PUCL தமிழ்நாடு;
முனைவர். கே. சண்முக வேலாயுதம், பேராசிரியர், சமூகப்பணித்துறை, லயோலாக் கல்லூரி;
அ. நாராயணன், ஆசிரியர், பாடம் மாத இதழ்;
த. வே. நடராசன், PUCL தமிழ்நாடு;
சரவணன் கருணாநிதி, PUCL தமிழ்நாடு;
வித்யா வெங்கட், ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர்;
தர்மேஷ், ஆராய்ச்சியாளர்
அமரந்தா, எழுத்தாளர்
நூர் பாஷா, SCSTEDS
ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். Citizens Rights Forum (CRF); Forum for Securing Land அண்ட் Livelihood Rights of the Coastal Communities (FLLRC);கண்ணகி நகர் பொது நல சங்கம் மற்றும் கண்ணகி நகர் பெண்கள் சங்கம் ஆகிய அமைப்புகள், தொடர்ச்சியான ஆராய்ச்சிக்கும், களப் பணிக்கும் உதவின.

இந்தக்குழு கடந்த ஏப்ரல் 30 மற்றும் மே 1 , 2010 தேதிகளில், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளுக்கு கள ஆய்வுக்குச் சென்றது. மீண்டும் இந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர், புதிய தகவல்களைச் சேகரிக்க   ஜனவரி 7 , 2011 ஆம் தேதி மீண்டும் இந்தப் பகுதிகளுக்கு கள ஆய்வுக்குச் சென்றார். ஒரு முழுமையான ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக   PUCL கடந்த பல மாதங்களாக வேலை செய்து கொண்டுள்ளது. இந்த அறிக்கையில், உண்மையறியும் குழு கண்டறிந்த விஷயங்கள் தவிர்த்து, அரசுத் தரப்பில் உள்ள தகவல்கள், RTI மூலம் பெறப்பட்ட தகவல்கள் பத்திரிக்கைகளிலிருந்து திரட்டப்பட்டத் தகவல்கள் ஆகியவை உள்ளன.
   
முக்கிய கண்டுபிடிப்புகள்

1.  தேவையான வீட்டுவசதி கொள்கைகள் மற்றும்  'தேசிய மீள் குடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை 2007 (NRRP 2007)' ஆகியவற்றை வேண்டுமென்றே அரசு புறக்கணித்துள்ளது. மழைக்காலத்திலும் கல்விஆண்டுக்கு நடுவிலும் மீள் குடியமர்வு நடந்துள்ளது.  மீள் குடியமர்வு நிவாரணம் சரியாகத் தரப்படவில்லை. கண்ணகி நகரில் வீடுகள் கட்டி முடிக்கும் முன்னரே மக்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்லப் பட்டனர். குழந்தைகளுக்கும், பெண்களும் ஆபத்தானச் சூழலுக்குத் தள்ளப் பட்டனர். குழந்தைகள் பள்ளிகளிலிருந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மீள் குடியமர்வு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளில் மக்கள் கருத்து கேட்கப்படவில்லை.எனவே,  "யாரும் வற்புறுத்தப்பட்டு மீள் குடியமர்வு செய்யப்படவில்லை, மக்கள் கருத்து கேட்கப்பட்டது " என அரசு சொல்வது பொய். மக்களிடமிருந்து கையெழுத்து வாங்கிய படிவங்களில், அதிகாரிகளே சில வரிகளைச் சேர்த்ததாகத் தெரிகிறது.

2. தவறிய வாக்குறுதிகள் - வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான விஷயங்கள்.  NRRP 2007 ன் படி, ஒரு வீட்டின் அளவு மொத்தம் 538.2 ச.அடி இருக்க வேண்டும். ஆனால், கண்ணகி நகர் மற்றும் செம்மஞ்சேரியிலுள்ள வீடுகள் சராசரியாக 160 ச.அடி தான் இருக்கின்றன. அதேபோல், NRRP 2007 ன் படி அஞ்சலகம், விளையாட்டுத் திடல், சமுதாயக் கூடம், மருத்துவ வசதிகள் ஆகியவை மீள் குடியமர்வு பகுதிகளில் இருக்க வேண்டும். ஆனால் மக்களிடம் பேசியதிலிருந்து, இந்த வசதிகள் எல்லாம் செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது. வீடுகளுக்குத் தனியாக தண்ணீர் இணைப்பு இல்லை (அரசு இருக்கிறது என்கிறது). எல்லா வீடுகளுக்கும் மின் இணைப்பு இல்லை. மின் இணைப்புக்காக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திடமிருந்து NOC(No Objection Certificate) வாங்க வேண்டும். இணைப்பு பெற 2000-4000 ரூபாய் வரை முன்பணம் தர வேண்டியுள்ளது.

3. நில ஒப்பந்தம். 20 வருடங்கள் பொறுத்தே மக்களுக்கு வீடுகள் சொந்தமாகும். மாதத் தவணைகள் ஒழுங்காக செலுத்தா விட்டால், ஒதுக்கப்பட்ட வீடு பறித்துக் கொள்ளப் படும்.  மீள் குடியமர்வின் காரணமாக வேலை வாய்ப்பினை இழந்தவர்கள் மாதத் தவணைகள் ஒழுங்காக எப்படி செலுத்த முடியும்? அதேபோல், குடியிருப்போர் சங்கம் உருவாக்கப் பட்டு மாதா மாதம்  பராமரிப்பு பணிகளுக்காக  வசூலிக்கப் படும் தொகை நிர்வகிக்கப் படுமென்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூறியிருந்தது. 10 வருடங்கள் ஆகியும் இன்னும்  குடியிருப்போர் சங்கம் உருவாக்கப்படவில்லை.

உண்மை அறியும் குழுவின் கரிசனங்கள்

G.O. Ms. No 161, Housing and UrbanDevelopment (UD-I) 15th July 2010 ன்படி கட்டுமானப் பொறுப்புகள் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. கட்டுமானப் பொறுப்புகளை கைகழுவதன் மூலம் மட்டும் பிரச்னைகள் தீர்ந்து விடப் போவதில்லை. அமைப்பு ரீதியாக உள்ள பிரச்னைகள் பற்றி அரசு யோசிக்க வேண்டும்.

கண்ணகி நகரில் 6000 (JNNURM) மற்றும் 2048 (ETRP) புதிய வீடுகள் கட்டப் படுகின்றன. பெரும்பாக்கம் என்ற ஒரே பகுதியில்  23,864 வீடுகள் கட்டப்படுகிறன. ஒரே இடத்தில் ஆயிரக் கணக்கான மக்ககளை குடியமர்த்துவதில் உள்ள பிரச்னைகள் தெரிந்தும் அரசு இந்த முயற்சிகளை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தலைச் செயலர் கூட்டத்தில், காவல் ஆணையர் ஒரே இடத்தில் ஆயிரக் கணக்கான மக்ககளை குடியமர்த்துவதால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். உள்துறையின் முதன்மைச் செயலரும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் MD யும் பல்வேறு இடங்களில் நிலத்தை ஒதுக்குமாறு இந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

கண்ணகி நகர் சுடுகாட்டில் இடமின்மையின் காரணமாக பிணங்கள் ஒன்றன் மீது ஒன்று புதைக்கப் படுகின்றன. இங்கு வேலை செய்யும் மகாலிங்கம், அய்யாதுரை மற்றும் சுந்தரம் ஆகியோர், இளம் வயது பெண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்வதாகவும், கொலைகளும் இந்தப் பகுதிகளும் இந்த இடங்களில் நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள்

  1. வற்புறுத்தலின் பேரில் மீள் குடியமர்வு செய்வதை அரசு நிறுத்த வேண்டும். ஏற்கனவே மீள் குடியமர்வு செய்யப்பட இடங்களில் உள்ள பிரச்னைகள் பற்றி  முழுமையாக ஆய்ந்து மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து கேட்கும் வரை, அரசு, குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்துதல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு முயற்சிகளை நிறுத்த வேண்டும்.
  2. ஏற்கனவே மீள் குடியமர்வு செய்யப்பட இடங்களில் மறுவாழ்வு முழுமையாக செய்யப்படும்வரை, மனித உரிமைகள் அடிப்படையில் தேவையான வீட்டுவசதி(adequacy of housing) (see General Comments 4 and 7 of the UN Committee on Economic, Social and Cultural Rights, and the UN Basic Principles and Guidelines on Development-based Evictions and Displacement) செய்து தரும் வரை, பெரும்பாக்கம் உட்பட புதிய இடங்களில் கட்டமைப்பு வேலைகளை அரசு நிறுத்த வேண்டும். 
    வீட்டின் அளவு, இடம், மதிப்பு, வடிவம் ஆகியவற்றில் மக்கள் கருத்து கேட்க வேண்டும். இப்போது எல்லாமே அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் மீள் குடியமர்வு மற்றும் மறுவாழ்வு செய்வதற்கு முன் விரிவான மக்கள் (குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின்) கருத்து கேட்கப்பட வேண்டும்.
  3. இருக்கும் இடங்களிருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் மீள்குடியமர்வு செய்யப்பட வேண்டும்.
  4.  குடிசைப் பகுதகளில் வாடகைக்குக் குடியிருப்போருக்கும் வீடுகள் தரப் பட வேண்டும்.
  5. ஏற்கனவே மீள் குடியமர்வு செய்யப்பட இடங்களில், உட் கட்டமைப்பு வசதிகள் முழுமையாக செய்யப் பட வேண்டும்.
  6. ஏற்கனவே மீள் குடியமர்வு செய்யப்பட இடங்களில் குறிப்பிட்ட காலத்தில், மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யப் பட வேண்டும்.
  7. சென்னை மாநகரத்திற்குள் நில பயன்பாடு எப்படியுள்ளது, யார் யார் உரிமையாளர்கள் என்பது பற்றிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும்.
  8. சென்னை நிலப்பயன்பாடு குறித்து மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். குடிசை வாழ் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே மீள்குடியமர்வு செய்யப்பட வேண்டும். வியாபாரம் மற்றும் தனியாருக்கு குறைவான நிலமே ஒதுக்கப் பட வேண்டும்.
  9. சென்னை மாநகரத்திற்குள் உள்ள குடிசை பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதார நிலை குறித்து முறையான ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இவற்றை அவர்களின் வீட்டுவசதி பிரச்னை என்று கருதாமல், சென்னை மாநகரத்தின் மீதான அவர்களின் உரிமை என்று கருத வேண்டும். 

முனைவர். வீ. சுரேஷ், வழக்கறிஞர் மற்றும் தலைவர் PUCL தமிழ்நாடு;
முனைவர். கே. சண்முக வேலாயுதம், பேராசிரியர், சமூகப்பணித்துறை, லயோலாக் கல்லூரி;
அ. நாராயணன், ஆசிரியர், பாடம் மாத இதழ்;
த. வே. நடராசன், PUCL தமிழ்நாடு;
சரவணன் கருணாநிதி, PUCL தமிழ்நாடு;
வித்யா வெங்கட், ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர்;
தர்மேஷ், ஆராய்ச்சியாளர்
அமரந்தா, எழுத்தாளர்
நூர் பாஷா, SCSTEDS

Pin It