அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார்.

தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார்.

கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது.

தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்தையை அங்கு அரங்கேற்றியுள்ளார் அவர். இதை கைத்தட்டி ஏற்றுக் கொண்டிருந்தது ஒருக் கூட்டம் என்பதுதான் வெட்கக்கேடு.

தன்னை தலைவராக, தமிழக மக்களை லஞ்ச லாவண்ய ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க வந்தவராக சொல்லிக்கொள்ளும் நடிகர், தான் யோக்கியராக, முன்மாதிரியாக மக்கள் நலனில் அக்கறைக்கொண்ட செயல்வாதியாக இருக்க வேண்டும். ஆனால், மது மயக்கத்தில், முன்னால் இருக்கும் மக்களெல்லாம் அறிவிலிகளாக, கொச்சைப்படுத்தும் அளவிற்கு தெளிவில்லாத போதை முனகலில் பேசிய அந்த நடிகர் வெறும் ’நடிகர்’ தான் என்பது மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக நம் மக்கள் சினிமா எனும் கவர்ச்சியில் மயங்கிக்கிடக்கிறார்கள். சினிமா எனும் தளம் கலையாக நிற்க வேண்டியதிலிருந்து, தடம்புரண்டு, பாலியல் ஆபாசம் என்கிறவற்றை முதன்மை முழக்கமாக முழங்கிவருகிறது.

பெண்ணை ஒரு கவர்ச்சி எல்லைக்குள் தள்ளி, நுகர்வு கலாச்சாரத்திற்கு உட்படுத்தி, சதை வியாபாரம் செய்கிறது. நாளடைவில் இதுவே சினிமா கலாச்சாரமாகிவிட்ட நிலையில் இளைய சமூகத்தை உணர்வு அடிமைகளாக மாற்றிவிட்டது என்றால் அதுதான் உண்மை.

தமிழக இளைஞர்களை அறிவாளிகளாக, அறிவியலாளர்களாக தொழிலதிபர்களாக பொறுபாளிகளாக மாற்றுகிற, ஊக்குவிக்கும் ஊடக செயற்பாடுகள் இங்கு என்ன இருக்கிறது?

உணர்வு தூண்டல் என்கிற நிலையில் இருந்து பயணிக்கும் சினிமாவால் தமிழகத்தின் இளைய சமூகத்தின் எதிர்காலம் குறித்து எங்ஙனம் அக்கறை கொள்ள முடியும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுயநலங்களும், வன்மமும், பொருள் நோக்கிய பயணமுமாய் செல்லும் சமூக நிலை மனித உறவுகளை சிதைக்கும் என்பதில் அய்யமில்லை.

சமூகத்தில் போலிகளுக்குதான் மதிப்பீடுகள் கூடுகின்றன. நடிகர், நடிகைகளை மதிக்கும் பெருமைக்கொள்ளும் நிலைதான் ஓங்கியுள்ளதே தவிர அறிவிச்சார் வளங்கொண்ட மனிதர்களை போற்றுவதற்கில்லை.

வெறும் கவர்ச்சிக்கு அடிமைப்பட்டு கிடக்கும் நம்மக்கள், முன்னர் நாம் கூறிய அந்த பெரிய நடிகரின் பின்னால் செல்வதனால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றுதான் கூற வேண்டும். இவர்கள் மது, புகை, உள்ளிட்ட பழக்கங்களுக்கு அப்பாற்பட்டு நின்று வழிகாட்டுபவர்களாக இருந்தால், இவர்கள் பின்னால் செல்வதை வரவேற்கலாம்.

ஆனால், சமூக நலன், கலாசாரம், இவைகளை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாது, ஆபாசம், கட்டுக்கடங்கா வன்முறைகளுக்கு துணை போகும் இவர்களுக்கு முதல்வர் பதவி, உயிர்கொடுக்க ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் நினைக்கும்போது............

ஒரு கடைக்கோடி நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், அங்கீகாரம் உள்ளிட்டவை விவசாயிகளுக்கும், உழைக்கும் பாட்டாளிகளுக்கும் கிடைப்பதில்லை.

தமிழர்கள் எவ்வளவோ படித்து, உயர்நிலையில் இருந்தாலும் அரசியலையும், நாட்டினையும், சினிமாவையும் பிரித்துப்பார்த்தறியாதவர்களாக உள்ளார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்கும் இந்த சூழலில் ஊடகங்களின் பெருக்கமும், அதன் தாக்கமும் வேகமெடுத்துள்ளது. ஆனால், அறிவார்த்தமான பொழுதுப்போக்கிற்கு அதில் ஒரு இடம் கூட இல்லை என்பதுதான் வேதனை. சினிமாவின் பிரதிகளாக இருபத்திநான்கு மணிநேரமும், வீட்டிற்குள்ளேயே வந்து சீரழித்துக்கொண்டிருக்கிறது பெரும்பாலான ஊடகங்கள்.

இரண்டொரு நாளில் தமிழர் திருநாள் உலகமெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக ஊடகங்கள் வரிந்துக்கட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்துள்ளன. இந்த சிறப்பு நிகழ்ச்சிகளில் இடம் பிடித்து இருப்பது, தமிழ் பண்பாடும், தமிழர் வாழ்வு நெறியும் அல்ல, நடிகை, நடிகர்களின் களியாட்டங்களும், இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறைகளும் தான்.

நமது இளைய தலைமுறையின் சிந்தனைமுறைகளையும், கண்ணோட்டங்களையும் மாற்றும் ஊடகங்களாக தான் இன்றைய காட்சி ஊடகங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாது நம்மை வெறும் வேடிக்கைப்பார்க்கும் சமூகமாக மாற்றியமைத்துள்ளன என்பது தான் வெட்கம். ஒருவன் இன்னொருவனை அடிப்பதையும், தாக்குவதையும் ஏன் சமயத்தில் கொல்லுவதையும் வெறுமனே பார்த்து ரசிக்க கூடியவர்களாக உருவாக்கி விட்ட அவ்வூடகங்களால் நேரில் அந்நிகழ்வுகள் நடந்தாலும், வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாகவே ஊக்கிவித்துள்ளன என்பது தான் காணும் உண்மை. இதற்கெல்லாம் தீர்வை காண நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

நமது சிந்தனையையும், அறிவாற்றலை ஊக்குவிக்கும் ஊடகத்தையும், காட்சியாக்கத்தையும் நாம் பெறவெண்டும். அறிவுசார் உழைப்பாளிகளையும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பாட்டாளிகளையும் முன்னிறுத்தப்பட வேண்டும். அப்போது தான் நமது தமிழகம் அனைத்திலும் ஓங்கி நிற்கும்.

இனாம்களுக்கு அடிமைப்பட்டு போவதும், நமக்கென்ன என்று வேடிக்கை பார்க்கும் சமூகமாக நம்மை மாற்றியுள்ள நிலையும் அகலவும், அரசியல் தெளிவும், அறிவாற்றலும் பெருக வேண்டும். ஆட்சியாளர்களும், அவர்களை ஆட்சியில் ஏற்றியிருக்கும் மக்களும் தான் இதற்கான தீர்வுகாண வேண்டும்.

ஒரு தலைமைக்குள் அடங்கிப்போகும் உணர்வை வளர்க்கும் தற்போதைய அரசியல் கட்சிகள் மக்களுக்கான தேவைகளை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் நிலையை மாற்றி, மக்களின் பிரதிநிதிகளாகவே செயல்படக்கூடிய நிலைக்கு மாற்றியமைக்கக் கூடிய சிந்தனை முறைக்குள் மக்கள் தயாராக வேண்டும்.

- வெ.யுவராஜ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It