ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தொகுதியில் அமைந்திருக்கிறது, கீழக்கரை நகராட்சி. ராமநாதபுரம் நகரத்திலிருந்து ஏர்வாடி தர்கா செல்லும் வழியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையோர பேரூர் இது. தமிழக இசுலாமியர் வரலாற்றிலும் இலக்கியங்களிலும் பெரிதும் குறிப்பிடப்படும் சீதக்காதி என்பவர் பிறந்த ஊரும்கூட. மொத்த மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினர் இசுலாமிய மக்களே. குறுகலான தெருக்களையும், நெரிசலான வீடுகளையும், அடர்த்தியான மக்கள் நெருக்கடியையும் கொண்டிருக்கும் இவ்வூரின் திரவக் கழிவுகள், பல ஆண்டுகளாக கடலில் கலந்து விடப்படுகின்றன. திடக் கழிவுகளும் கடற்கரையோரங்களில்தான் கொட்டப்பட்டு வந்தன. இதனால் மீக நீண்ட காலமாக இவ்வூரின் கடலோரப் பகுதி, சில மைல் தொலைவுக்கு நிரந்தரமாகக் கழிவுகள் மிதக்கும் பகுதியாகவே காட்சியளித்து வருகிறது.

garbage_370தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழல் வளையத்திற்குள் கடலோரப் பகுதியும் உள்ளடங்கும். நூற்றுக்கணக்கான மீனவர்கள் இக்கடற்கரையிலிருந்து நாள்தோறும் மீன் பிடிக்கவும், கடல் பாசிகள் உள்ளிட்ட சில அரிய கடல் வளங்களை சேகரிக்கவும் சென்று வருகின்றனர். கீழக்கரை நகராட்சியில் நாள்தோறும் சேரும் திட மற்றும் திரவக் கழிவுகளின் சீர்கேட்டால், இங்கு வாழும் மக்களுக்கு எந்நாளும் நோய்களுக்கும் குறைவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மலேரியா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் மக்கள் – கீழக்கரையைச் சேர்ந்தவர்களே. தமிழகத்திலேயே இசுலாமியர்களில் அதிகளவு பணக்காரர்களும், செல்வாக்கு மிகுந்தவர்களும் இருப்பதும் இவ்வூரில்தான்.

இக்கழிவுகளால் சீர்கெட்டுப் போன சுற்றுச் சூழலையும், மக்கள் வாழ்நிலையையும் பாதுகாக்க எண்ணிய கீழக்கரை நகராட்சி நிர்வாகம், கீழக்கரை – ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் – கீழக்கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தோண்ப்பாலம் என்ற இடத்தில் திடக்கழிவு களைக் கொட்ட முடிவு செய்தது. இந்த இடம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டதல்ல. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், தில்லையேந்தல் ஊராட்சி எல்லைக்குட்பட்டது.

மேலும், இவ்விடத்தைச் சுற்றி கீழத் தில்லையேந்தல், பெரியபாளையநேந்தல் முஸ்லிம் அமார்க்குளம், பள்ளமோர்க்குளம் என 4000–க்கும் அதிகமான மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இம்மக்கள் அனைவரும் கீழக்கரை நகராட்சியின் கழிவுகள் கொட்டப்படும் இடத்திற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். கடந்த 2009 செப்டம்பர் 3 ஆம் நாள் கூடிய தில்லையேந்தல் ஊராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் மனவள்ளியின் தலைமையில், கீழக்கரை நகராட்சியைக் கண்டித்து தீர்மானம் இயற்றினர். தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு மண்டல அலுவலகத்திற்கும் புகார் மனு ஒன்றை (30.11.09) அனுப்பினர். இதுபோக, 2009 டிசம்பர் 21 அன்று தில்லையேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர், தனிப்பட்ட வகையில் தங்கள் ஊராட்சி மன்ற அனுமதியின்றி, தங்கள் எல்லைக்குள் நகராட்சி நிர்வாகம் செயல்படுவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு கடிதம் எழுதி யுள்ளார். ஏழை சொல் அம்பலம் ஏறுமா? இக்கிராம மக்களின் ஆட்சேபனைகள் காற்றில் விடப்பட்டன.

பஞ்சாயத்துராஜ் சட்டப்படி, ஓர் உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி, மற்றொரு உள்ளாட்சி அமைப்பு அதன் அதிகார எல்லையை மீறக் கூடாது என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அத்துமீறி, அதே இடத்திலேயே கழிவுகளைக் கொட்டி வந்தது. மாநில நகர வளர்ச்சித் துறையிடம் குப்பை கொட்டுவதற்கான இடம் தேர்வு செய்ததற்கான ஒப்புதல் நகல் பெறப்பட்டு, தில்லையேந்தல் ஊராட்சிக்கு வழங்கப்படவில்லை. மேலும், 2000 ஆம் ஆண்டின் நகராட்சி திடக் கழிவுகள் (கையாளும் மேலாண்மை) விதிகள், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இச்சுற்றுச் சூழல் சீர்கேட்டினால், பாதிப்பிற்குள்ளான பெரும்பான்மை தலித் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் வழிகாட்டலில், கடந்த 2010 சூன் மாதம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில், தில்லையேந்தல் ஊராட்சி பள்ள மோர்க்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் பெயரில், பொது நல வழக்கு (W.P. (MD) No. 9602/2010) தொடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கின் போக்கை அறிந்து, ஆகஸ்டு 2, 2010 அன்று அவ்விடத்தை ஆய்வு செய்தது, மாசுக் கட்டுப்பாடு வாரியம். இவ்விடத்திற்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டுமெனவும், மறுசுழற்சிக்கு உட்படாத பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்தெடுக்க வேண்டுமெனவும் நகராட்சிக்கு துணை போகும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பியது. ஆனால், இவ்வழக்கின் மீது “இனி கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அதே இடத்தில் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கொட்டப்பட்ட கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்'' என ஆகஸ்டு 10, 2010 அன்று ஆணையிட்டது.

உயர் நீதிமன்ற ஆணையை கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடம், இப்பிரச்சனையைக் கையாளுவதற்கென அமைக்கப்பட்ட கிராம மக்களின் குழு சுட்டிக்காட்டிய பிறகும், நகராட்சி தனது செயலை நிறுத்திக் கொள்ளவில்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத பணத் திமிர் குழுவின் உறுப்பினர்களை விலை பேச முயன்றது. உடனடியாக, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் தலைமைக் குழு, கிராம மக்களோடு கலந்து பேசி, நகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை அறிவித்தது.

முதல் கட்டமாக, கழிவுகளைக் கொட்ட வந்த நகராட்சி வண்டிகள் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணியின் மாநில அமைப்பாளர் இப்பிரச்சினையில் தங்கள் தலையீட்டையும், கோரிக்கைகளையும் வலியுறுத்தி – தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் இப்பிரச்சினையில் தொடர்புடைய அனைத்து நிர்வாக அமைப்புகளுக்கும் புகார் மனு ஒன்றை அனுப்பினார்.

இம்மனு (F 1650/1.11.2010) வின் மீதான பரிந்துரைகளின்படி, கீழக்கரை நகராட்சி நிர்வாகம் கோரிக்கைகளை ஏற்பதாக பதில் கடிதம் (எண். 1310,2010 நாள் : 16.11.2010) எழுதியுள்ளது. ஆனாலும் கொட்டப்பட்ட கழிவுகளை முழுமையாக அகற்றவும், அவ்விடத்திலிருந்து நகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக நீங்கவும் – ஊராட்சி மன்றத்தின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்களின் ஒப்புதலுடன் இறுதியான எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் ஏற்படும் வரை, இப்பிரச்சனையை ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி தலைமையேற்று வழிநடத்த உறுதி பூண்டுள்ளது.

இப்பிரச்சினையின் அடிப்படை வன்மமாக இருப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதி இந்துக்களின் தீண்டாமை உளவியலே என்றால் அது மிகையல்ல. இந்திய சமூக அமைப்பு இந்து, கிறித்துவம், இசுலாம், சீக்கியம் என எந்த மத வடிவத்திலாயினும் அதன் சமூக உளவியல் என்பது சாதி இந்து உளவியலே. கீழக்கரை நகராட்சி நிர்வாகம் என்பது, ஒரு குப்பை வண்டியைப் போன்ற எந்திரம் மட்டுமே. அது, தன் கழிவுகளை ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும், பயிர் செய்து உண்ணும் நிலங்களில் கொட்டத் துணிந்த கீழான நடவடிக்கையின் உரிமையாளர்களாக இருப்போர் அவ்வூரின் மக்களே. இவர்கள் பெரும்பான்மை இசுலாமியர்களாகவும், சிறுபான்மை இந்துக்களாகவும் இருந்தாலும் சாதி ஒதுக்கலை, புறக்கணிப்பை மேற்கொண்ட சாதி இந்துக்களையே நாம் குற்றம் சுமத்த முடியும்.

நகரங்களின் சாக்கடை நீர் குட்டைகள், குப்பை மேடுகள் என சேரி மக்களை வாழ நிர்பந்திக்கும் வர்க்கத் திமிர் கொண்ட சாதி இந்து உளவியல், ஒடுக்கப்பட்ட மக்களின் கிராமங்களைக் குறிவைத்து, அவற்றின் இயல்பை அசுத்தமாக்கவும், இயற்கையை சீர்கெடுக்கவும் துணிந்திருப்பது ஒரு வகை நவீன தீண்டாமையே. இந்திய சமூக அமைப்பின் ஒவ்வொரு துரும்பிலும் ஒளிந்திருக்கும் சாதிய நுண்ணுணர்வையும் தேடி அழிக்க வேண்டியது அயர்வு மிகுந்த பணியே ஆயினும், அது நமக்குக் கையளிக்கப்பட்டிருக்கும் கடமையும் சவாலும் ஆகும்.

Pin It