அந்தணர் அந்நியரே! ஆரியரே! - 2

ஆரியர்களுக்கு எதிராக நேரடிப் போர்(?) நடத்தி வெற்றிபெற்ற மன்னர்கள் என்று கூறப்படும் இருவரில் ஒருவனான நெடுஞ்செழியனின் ஆரிய எதிர்ப்பின் யோக்கியதையைப் பார்த்தோம். அடுத்து கண்ணகிக்கு கல்லெடுத்து வந்த சேரன் செங்குட்டுவனின் ஆரிய எதிர்ப்பைப் பார்ப்போம்.  

உலகுபொதி உருவத் துயர்ந்தோன் சேவடி
மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாக் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை யேரினன்
குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென
ஆடக மாடத் தறிதுயல் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

இவை நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என பார்ப்பனர்களால் போற்றப்படும் காப்பியத்தில் வஞ்சிக்காண்டத்தில் கால்கோட் காதையில் வரும் வரிகள். 

சங்க இலக்கியங்களில் தமிழ் மன்னர்கள் போருக்குப் புறப்படும்போது அதற்கு அடையாளமான வஞ்சிப்பூ மாலையைச் சூடிக்கொண்டு போருக்குச் செல்வர் என்று படித்திருப்போம். அதுபோல இந்த செங்குட்டுவனும் வஞ்சி மாலையைச் சூட்டிச் செல்கிறான்.  அதே சமயம் எவருக்கும் வணங்காத செங்குட்டுவனின் தலை சிவபெருமானுக்கு வணங்கியது. அதோடு சிவபெருமானைச் சுற்றிவந்து, பார்ப்பனர்கள் ஏந்தி வந்த நறும்புகையை ஏற்றுக்கொண்டு போருக்குப் புறப்பட்டானாம். பார்ப்பனர்களின் - ஆரியர்களின் முழு மரியாதையையும் ஏற்றுக்கொண்டு ஆரியர்களை எதிர்க்கப் போனானாம்.  அதோடு மட்டுமல்ல, திருவனந்தபுரத்திலிருந்து வந்த திருமாலின் பிரசாதமும் பார்ப்பனர்களால் செங்குட்டுவனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பதிற்றுப்பத்தைப் போலவே இச் சிலப்பதிகாரத்திலும் செங்குட்டுவன் போருக்குப் புறப்படும் பாடல்களுக்கு முன் சூரபத்மன் என்ற அசுரனை அழித்த முருகன் கதையும், ஸ்கந்த புராணக் கதைகளும் குரவைப் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. மார்கழி மாத அய்யப்பன் கோவில் பஜனைகளை முடித்து சபரிமலைக்குக் கிளம்பும் குருசாமி, கன்னிசாமிகளைப் போல மனதாலும் உடலாலும் பார்ப்பன அடிமையாகிப்போன செங்குட்டுவன் - பார்ப்பனர்களை தன் சேர நாட்டில் பாதுகாப்பாக அதிகார மய்யத்தில் வைத்துவிட்டு ஆரியர்களை எதிர்த்துப் போரிடக் கிளம்பினானாம். நம் மன்னர்கள் எவ்வளவு முட்டாள்களாக, மடையர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் இலக்கியங்களிலே காணப்படுகின்றன. மேற்கண்ட கால்கோட் காதையில் தொடர்ச்சியாக வரும் சில வரிகளைப் பார்ப்போம்.  

மலயத் தேகுதும் வான்பே ரிமய
நிலயத் தேகுதல் நின்கருத் தாகலின்
அருமறை யந்தணர் ஆங்குளர் வாழ்வோர்
பெருநில மன்ன பேணல்நின் கடனென்று
ஆங்கவர் வாழ்த்திப் போந்ததற் பின்னர்
வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக்

ஒருவழியாக பஜனைகளை முடித்துக் கொண்டு பஜனைக் கோஷ்டிகள் இமயமலைக்குப் புறப்பட்டு விட்டன. செல்லும் வழியில் நீலகிரி மலையில் முதலில் ஓய்வெடுக்கின்றனர். அப்போது அங்கும் சில பார்ப்பனர்கள் வந்து செங்குட்டுவனைச் சந்திக்கின்றனர். செங்குட்டுவன் அவர்களை எழுந்துநின்று வணங்குகிறான். அவர்கள் செங்குட்டுவனை நோக்கி,

“சிவந்த சடையுடைய சிவபெருமானின் திருவருள் பெற்ற மன்னனே, பெரிய நிலத்தை ஆளும் மன்னனே, நீ மிகப்பெரும் இமயத்தின்மேல் செல்ல உள்ளாய். அங்கே அரிய வேதங்களை உணர்ந்த, அறிந்த அந்தணர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு இன்னல் வாராது,  அந்த அந்தணர்கள் நலியாது, அவர்களைக் காப்பது உன் கடமையாகும்”

என அறிவுறுத்திச் செல்கின்றனர். இதுதான் செங்குட்டுவனின் ஆரிய எதிர்ப்பு. வேதங்களைக் கற்றுணர்ந்த  ஆரியர்களான அந்தணர்களின் நலனைக்காத்து, அவர்களுக்கு இன்னல் வராமல் பார்த்துக் கொள்வதுதான் தமிழ் மன்னர்களின் ஆரிய எதிர்ப்பு. அந்தணர் என்போர் தமிழர்களே என இட்டுக் கட்டிப் பேசும் தமிழ்த்தேசியர்களுக்கு பதில் தரும்வண்ணம் மிகத் தெளிவாக இமயமலையில் அருமறை அந்தணர்கள் வாழ்கிறார்கள் என இளங்கோவடிகளே விளக்கிவிட்டார்.

நீலகிரி மலையில் ஓய்வெடுத்துச் சலித்த பின்பு பஜனைக்கூட்டம் கங்கைக்கரைக்குச் செல்கிறது. அங்கும் ஒரு பார்ப்பான் வந்துவிடுகிறான். மாடலன் என்ற பார்ப்பான் கங்கைக்கரையில் செங்குட்டுவனைச் சந்திக்கிறான். அங்கு கோவலனின் குடும்பக்கதையை விரிவாக விளக்குகிறான். கதைகூறி முடித்தபின் வழக்கமாக பார்ப்பனர்கள் பிடுங்கிச்செல்லும் காதை அரங்கேறுகிறது. செங்குட்டுவன் தன் எடைக்கு எடை தங்கத்தையும், விலையுயர்ந்த மணிகளையும் அந்த மாடலப் பார்ப்பானுக்குப் படியளக்கிறான். கடைசிவரை பார்ப்பானுக்குப் பொன்னையும் பொருளையும் கொடுத்துப் பணிவிடை செய்யும் சேரனின் ஆரிய எதிர்ப்புதான் கீழ்க்கண்ட வரிகளில் வருகிறது. இப்பாடல் சிலம்பில் நீர்ப்படைகாதையில் வருகிறது.

அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே
பெருமகன் மறையோற் பேணி யாங்கவற்கு
ஆடகப் பெருநிறை யையைந் திரட்டித்
தோடார் போந்தை வேலோன் றன்னிறை
மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு

அந்தணர் என்போர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதற்கு சிலம்பின் மதுரைக்காண்டத்தில் சில ஆதாரங்கள் உள்ளன. புறஞ்சேரியிறுத்த காதையில்

நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்

என்று சில வரிகள் வருகின்றன. அதாவது, கண்ணகியும் கோவலனும் மதுரை நகரை அடையும் முன்பு மதுரைக்கு அருகில் புறநகர்ப் பகுதியில் ஓரிடத்தில் தங்குகின்றனர். மறுநாள் காலையில் எழுந்து மதுரை நகரை நோக்கிச் செல்கின்றனர். நகருக்குச் செல்லும் வழிதெரியாமல் பாணர்களிடம் வழி கேட்கின்றனர். பாணர்கள் கோவலனிடம் நான்கு வேதங்களை அறிந்த பார்ப்பனர்கள் - அந்தணர்கள் வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் ஒலியும், முனிவர்களின் ஒலியும், யானை, குதிரைகளின் ஓசையும் கேட்கும். அத்திசை செல்க என வழிகாட்டும் வண்ணம் பாடுவது போல உள்ள ஒரு பாடலின் வரிகள் இவை. அந்தணர்கள் என்போர் நான்கு வேதங்களை அறிந்த பார்ப்பனர்களே என்பதற்கு  சிலப்பதிகாரம் காட்டும் மேலும் ஒரு சான்று  அடைக்கல காதையில் வருகிறது.

மாமறை முதல்வன் மாடலன் என்போன்
மாதவ முனிவன் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து.....
......கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக்
கோவலன் சென்று சேவடி வணங்க
நாவ லந்தணன் தானவின் றுரைப்போன்......
.......நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு
ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில்
தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்

மதுரையின் சிறப்பைப்பற்றி கவுந்தியிடம் கோவலன் விளக்குகிறான். அப்போது மாடலன் என்ற பார்ப்பான் அங்கு வருகிறான். கோவலனின் பார்ப்பன அடிமைத்தன்மையை பெருமையாக விளக்குகிறான். மாதவிக்கு மணிமேகலை பிறந்த போது பெயர்சூட்டுவிழா நடந்ததாம். அவ்விழாவில் பங்கேற்று பொன்னும் பொருளும் பிடுங்கிச் செல்ல வந்த ஒரு பார்ப்பானை யானை ஒன்று தாக்கியதாம். அப்போது அந்த யானையை அடக்கி பார்ப்பானைக் காப்பாற்றியதால், கருணை மறவனே எனப்பாடுகிறான் மாடலப் பார்ப்பான். பார்ப்பனத்தி ஒருத்திக்கு அள்ளிக்கொடுத்த செல்லாச் செல்வனே என்றும் புகழ்ந்து பாடுகிறான் மாடலன். இப்பாடலில் வேதங்களை அறிந்த - வேதங்களின் தலைவனான - என்று அந்தணர்களைத் தான் சொல்கிறார் இளங்கோ வடிகள்.

அந்தண   ரென்போரறவோர்  மற்றெவ்  வுயிர்க்குஞ்
செந்தண்மை  பூண்டொழுக  லாண்

என்ற ஒரு திருக்குறளை வைத்துக் கொண்டு அந்த அந்தணர்கள் என்போர் அறவோர்; அந்த அறவோர்கள்  தமிழர்களே எனச் சாதிப்பவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,  சிலப்பதிகாரத்தின் கொலைக் களக்காதையில்,

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

என்ற வரிகளில் மிகத் தெளிவாக அறவோர் வேறு;  அந்தணர் வேறு என விளக்கிவிடுகிறார் இளங்கோ. சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் தமது உரையில் மேற்கண்ட வரிகளுக்கு,

அறவேர்க்கு அளித்தலும்  - சாவகர்க்கு அளித்தலும்,
அந்தணரோம்பலும்  - பார்ப்பனரைப் பேணுதலும்
துறவோர்க் கெதிர்தலும்  - துறவிகளை எதிர்கொள்ளுதலும்

அறவோர் என்றால் சாவகர்கள், அந்தணர் என்றால் பார்ப்பனர்கள், துறவோர் என்றால் துறவிகள் என விளக்கமாக நாவலர் வேங்கடசாமி அவர்கள் பொருள்கூறி உள்ளார்.

அதே போல வஞ்சினமாலையில் கண்ணகி தன் இடது மார்பை கையால் திருகி எடுத்து மதுரைநகரின் மேல் வீசப்போகிறாள். அப்போது அக்கினிக் கடவுள் பார்ப்பன உருவங்கொண்டு தோன்றினானாம்.  அப்போது  தீக்கிரையாவதிலிருந்து யார் யாருக்கு விதிவிலக்கு என கண்ணகி அப்பார்ப்பானிடம் கூறுகிறாள். 

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து....
....பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்ற....
.....பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய

இப்பாடலிலும் பார்ப்பனர் வேறு; அறவோர் வேறு என இளங்கோ உரைக்கிறார். உரையாசிரியர் வேங்கடசாமி நாட்டாரும்  அந்தணர் மற்றும் அறவோர் மற்றும் பசு, பத்தினிப் பெண்கள் என அந்தணரையும் அறவோரையும் தனித்தனியேதான் கூறுகின்றார்.
இவ்வாறு அந்தணர் என்போர் ஆரியர்களே என்பதற்கும் அந்நியரே என்பதற்கும் சங்க இலக்கியங்களில் எண்ணற்ற சான்றுகள் பரவிக்கிடக்கின்றன.  ஒருசிலவற்றை மட்டும் பட்டியலிட்டுள்ளேன். அந்தணர் என்போர் தமிழர்களே என்று நிறுவுவதற்கு வலிமையான, அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் எதையும் தமிழ்த்தேசிய தமிழர்கண்ணோட்டம்  வைக்கவில்லை. இலக்கியங்களையே சான்றாகக் காட்டியதால் நாமும் அதேவகையான இலக்கியங்களையே சான்றுகளாகக் காட்டவேண்டி வந்தது. உண்மையாக வரலாறு, அறிவியல், அரசியல், சமூகவியல், இனவியல் ஆகியவற்றை உள்ளடக்கி பரந்துபட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் தான் உண்மைகளை அறியமுடியும். 

ஆரியப் பார்ப்பனர்களைத் தமிழர்கள் எனத் திரித்துக் கூறும் முயற்சியையும் அதற்குப் பின்னால் இருக்கும் பார்ப்பன நலன்களையும் தமிழர் விரோதச் சிந்தனைகளையும் இதுவரை பார்த்தோம். ஆரியர்களைத் தமிழர்கள் என்று சொல்லத்தொடங்கினால், பிறகு திராவிடர்களைப் பார்ப்பனர்கள் என்று சொல்வதில்தானே முடியவேண்டும். முதல்பாதிக்கு செந்தமிழன் பணியாற்றினார். மறுபாதிக்கு பேராசிரியர் ஜெயராமன் கடமையாற்றுகிறார். அதே தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் கடந்த  ஓராண்டாக இன்னும் நிறைவடையாமல் வந்துகொண்டிருக்கிறது பேராசிரியர் ஜெயராமனின் இனவியல் என்னும் பெயரிலான பார்ப்பன மனவியல்.

“மனு தர்மத்தை இயற்றியவன் திராவிட தேசத்து அரசன் சத்யவிரதன், திராவிடன்”.
“திராவிடர் என்றால் தென்னிந்தியப் பார்ப்பனர் என்று பொருள்.”

இவைகளை வரலாற்றைக் கற்று, ஆய்ந்து,  அறிந்த, முனைவர் பட்டம் பெற்ற  ஒரு பேராசிரியர் எழுதியிருக்கிறார். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

“மனு தர்மத்தை இயற்றியவன் திராவிட தேசத்து அரசன் சத்யவிரதன், திராவிடன்”

மனுவை இயற்றியவன் திராவிடன் என்பதற்கு இவர் தரும் ஆதாரங்கள் என்ன தெரியுமா? ஸ்ரீமத் பாகவதம். கடலங்குடி நடேச சாஸ்திரிகள் என்ற பார்ப்பான் 1935 இல் தொகுத்து வெளியிட்ட ஸ்ரீமத் பாகவதம் தான் முக்கிய ஆதாரம். பாகவதம் என்பது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படும் புராணமாகும். விஷ்ணு அவதாரத்தைப் பற்றியும், கிருஷ்ண அவதாரத்தைப் பற்றியும் போற்றிப்பாடும் புராணமாகும்.                                           

‘புராணங்களிலும் வரலாற்றுச் செய்திகள் ஒளிந்து கிடக்கின்றன’ என்று ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளார் பேராசிரியர் ஜெயராமன். இது ஏதோ இன்றுதான் முதன்முதலில் தொடங்கும் விவாதம் என்றோ, அல்லது இது போராசிரியர் ஜெயராமன் அவர்களின் கருத்து என்றோ முடிவுசெய்திட வேண்டாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூர் குணா என்பவர் கக்கிய நச்சை தன் பேனாவில் ஊற்றி தன் பெயரில் எழுதுகிறார் பேராசிரியர். அந்த பெங்களூர் குணாவுக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் 1995 லேயே விளக்கமாக விரிவாக பதிலை எழுதி, “பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகளுக்கு மறுப்பு” என்ற பெயரில் நூலாகவும் வந்துள்ளது.  அந்நூலில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வரிகளை மேற்கோள் காட்டி மனுவை இயற்றியது திராவிட தேசத்து சாளுக்கியர்கள் அல்ல என்பதை நிறுவியுள்ளார் விடுதலை இராசேந்திரன்.

மனு சாஸ்திரம் கி.மு. 4 நூற்றாண்டில் சுமதி பார்கவா என்பவர் எழுதியது. கி.பி. 170 - 200 ஆம் ஆண்டுகளில் இவை தொகுக்கப்பட்டன. மகத நாட்டில் ஆட்சிபுரிந்த சுங்க குலத்தைச் சேர்ந்த பார்ப்பனரான புஷ்யமித்திர சுங்கன் ஆட்சிக்காலத்தில் தான் மனு ஸ்மிருதி முதன்முதலாகச் சட்டமாக்கப்பட்டது.  இதுபற்றி அம்பேத்கர் கூறுகிறார்.

“புஷ்ய மித்ரா ஆட்சியின்கீழ் தான் முதன்முறையாக மனுஸ்மிருதி சட்ட விதியாக அறிவிக்கப்படுகிறது.... பவுத்தத்தை வீழ்த்தி பார்ப்பனியத்தை நிலை நாட்டுவதுதான் மனுஸ்மிருதியின் நோக்கம் என்பதை மனுஸ்மிருதியில் பார்ப்பனர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கிய இடத்திலிருந்தே அறியலாம்..... பார்ப்பனரை தெய்வீகமாக்குது, அரசர்களுக்கு மேலான இடத்தில் பார்ப்பனர்களை வைப்பது ஆகியவை அரசன் பார்ப்பனராக இல்லாத பட்சத்திலும் - அரசன் மனுவின் கருத்துக்களோடு ஒன்றிணையாதபட்சத்திலும் சாத்தய மில்லை. புஷ்ய மித்ராவும் அவரின் வழித்தோன்றல்களும் பார்ப்பனர்கள் என்பதாலும் பார்ப்பனியத்தை நிறுவும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாலும், பார்ப்பனர்கள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட இக்கூற்றுகளை ஏற்றுக்கொண்டார்கள். ஆகவேதான் மனுஸ்மிருதி என்பது; புஷ்யமித்ரரின் அதிகாரத்தின்கீழ் தொகுக்கப்பட்ட பார்ப்பனியத் தத்துவ நூல் எனச் சொல்வது நியாயமான ஒன்றே. இந்த அனைத்து உண்மைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பவுத்தத்தை அழிப்பதும் பார்ப்பனியத்தை மறுநிர்மாணம் செய்வதுமே புஷ்ய மித்ரரின் ஒரே நோக்கம் என்பதில் எச் சந்தேகமுமில்லை”.
- டாக்டர் அம்பேத்கர் அவர்களின் எழுத்தும் பேச்சும் தொகுதி 3

அண்ணல் அம்பேத்கர் மனுவின் தோற்றம் குறித்து பேசிய விரிவான செய்திகள் “பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்” நூலில் இடம்பெற்றுள்ளன. அண்ணல் அம்பேத்கர் போன்ற ஆழ்ந்த சிந்தனையாளர், சமூக, வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள் இவர்களுக்கு ஒவ்வாது. இலக்கியங்களும் புராணங்களும்தானே இவர்களின் புகலிடங்கள். எனவே இவர்கள் பாணியிலேயே ஒரு சான்றை முன்வைக்கிறேன்.

தமிழீழத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா அவர்களின் “தமிழர் சரித்திரம்” என்னும் நூலில் மனுவின் தோற்றம் குறித்து சில செய்திகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 1940 இல் அச்சிடப்பட்டதாகும். அந்நூலில் மனு என்பவன் சத்தியவிரதன் என்னும் திராவிட வேந்தன் என்ற குறிப்பும் வருகிறது. அப்படி ஒரு குறிப்பு பாகவதத்தில் வருகிறது எனவும் ந.சி. கந்தையா அவர்கள் கூறுகிறார். அதே சமயம் அக்குறிப்பை அவர் உறுதிசெய்யவில்லை. மனு என்பவன் பாண்டிய நாட்டை ஆண்ட ஒரு தமிழ் மன்னன் என்றே உறுதி செய்கிறார்.

தமிழ்நாடும் தமிழ்ஈழமும் கடல் கோளால் பிரிக்கப்பட்டது என்ற செய்திகளை படித்திருப்போம். அப்படி நடந்ததாகச் சொல்லப்படும் கடல்கோளுக்கு முன்பு இப்போதுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை வடமலை என்று புராணங்களிலும் இலக்கியங்களிலும் அழைக்கப்பட்டிருக்கிறது. அந்த வடமலையில் தான் மனுவின் பேழை இருந்ததென  சதபத பிராமணம் என்ற வடமொழிநூல் கூறுகிறது. வடமலை எனக் குறிப்பிடப்படும் பொதிகை மலையில் தான் மனு தவம் செய்தான். அதாவது குற்றாலத்திற்கு மேல் உள்ள பொதிகை மலையில்தான் மனு தவம் செய்தானாம். அப்போது வைகை ஆற்றில் இருந்து ஒரு தெய்வீகமீன் வடிவம் தோன்றியதாகவும் மச்சபுராணம் கூறுகிறது. வைகை ஆற்றின் கரையில் தான் மனு தவம் செய்தான் என அக்கினிபுராணம் கூறுகிறது. மனுவானவன் பாலாற்றின் கரையில் தவம் செய்தான் என்று மகாபாரதத்தின் வனபர்வம் கூறுகிறது. பாலாறு ஒரு காலத்தில் பாண்டிய நாட்டின் எல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.  மனுவின் முன்னோர்கள் இலங்கையை ஆண்டவர்கள். இலங்கைதான் மனுவின் பூர்வீகம் என்றும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மனு என்பவன் பாபிலோனியா பகுதியைச் சேர்ந்தவன் என்றும்கூட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.  மேற்கண்ட எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டு ந.சி.கந்தையா அவர்கள் இறுதியாக, உறுதியாக  முன்வைக்கும் கருத்தை அவரது வரிகளையே பாருங்கள்.

“மனு தமிழ் உலகத்தில் தோன்றியவராதலாலும், சூரிய குமாரனனான அம் மனு மலைய ளமலையில் தவஞ்செய்தமையாலும், சத்திய விரதன் என்னும் அவர் கிருத மாலை என்னும் வையை ஆற்றில் பலியிட்டமையாலும்,   பாண்டிய அரசரின் இலட்சினையாக்கப்பட்ட தெய்வீக மீன், பாண்டியரின் தலைநகராக வந்த மதுரையிலே தமிழ் சாதியனரின் முன்னோராகிய மனுவின் முன் தோன்றினமையாலும், மனுவும் அவர் வழி வந்தோரும் தமிழரேயாவர்”

பேராசிரியர் ஜெயராமன் மேற்கோள் காட்டிய மச்சபுராணத்திலும், பாகவதத்திலும், மகாபாரதத்திலும்  மேற்கண்ட மாறுபட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளன. இனவியல் என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொள்பவர் அது உண்மையிலேயே ஒரு ‘சார்பற்ற ஆய்வாக’ உண்மையான ஆய்வாக இருக்குமானால் அனைத்து வகையான கோணங்களையும் கணக்கில் காட்டியிருக்க வேண்டும். எழுத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும். திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப் படுத்த வேண்டும் என்பதையே ஒற்றை இலக்காகக் கொண்டு எழுதத் தொடங்கியதால் மனு என்பவன் தமிழனே என்ற, மனு என்பவன் இலங்கைக் காரனே என்பது போன்ற தகவல்களை மறைத்து தன் பார்ப்பன மனவியலை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார் இந்த மாயவரத்து குணா.

புராணங்களை ஆதாரமாகக் கொண்டு ‘திராவிடர் என்றால் தென்னாட்டுப் பார்ப்பனர் என்று பொருள்’ என்பது போன்ற அரிய தகவல்களைக் கட்டுரைகளாக எழுதிவரும் அறிஞர்களே, உங்களுக்குப் புரியும்படி ஒரு தகவலை வரலாற்றில் இருந்து தருகிறேன். படியுங்கள். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் “பழந்தமிழர் பரவிய நாடுகள்” என்ற தலைப்பில் அவரது பொடாக்காலத்தில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதில்,

“கிபி. 1284 ஆம் ஆண்டில் முதலாம் மாறவர்மன் குலசேகரப்பாண்டியன் இலங்கையின் மீது படையெடுத்தான். ஆரியச் சக்கரவர்த்தி என்னும் தளபதி தலைமையில் அந்தப் படை பராக்கிரமபாகு என்ற இலங்கை மன்னனை எதிர்த்துப் போரிட்டு வென்றது. கோட்டையைக் கைப்பற்றிய ஆரியச் சக்கரவர்த்தி அங்கு புனிதச் சின்னமாக வைக்கப்பட்டிருந்த புத்தரின் புனிதப் பல்லை பாண்டிய நாட்டுக்கு எடுத்துவந்தான்......அந்தக் காலத்தில் இலங்கைத் தீவில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்ப்பாண மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற விருதுப் பெயர் பெற்றுவிளங்கினர். பாண்டியர்களின் படைத்தலைவர்களாக இருந்து படை யெடுப்பின் போது ஈழம் வந்த ஆரியச்சக்கரவர்த்தி என்பவரின் வழித்தோன்றல்களே இவர்கள்”.

மேற்கண்ட செய்தி புராணப்புளுகு அல்ல. வரலாற்றில் உள்ள செய்தி. இதில் குறிப்பிடப்படும் ஆரியச்சக்கரவர்த்தி தமிழனா?  பார்ப்பானா? அந்தணனா? திராவிடனா? அல்லது வேறு யார்? தமிழ்நாட்டுத் தளபதிக்கு - பாண்டிய நாட்டானுக்கு ஆரியன் என்ற பெயர் சொல்லப்பட்டிருக்கிறதே எப்படி? யாழ்ப்பாண மன்னர்கள் தம்மை ஆரியச் சக்கரவர்த்தி எனப் பெருமையாகப் பேசிக் கொண்டனரே, இதை வைத்து யாழ்ப்பாண மன்னர்கள் அனைவரும் ஆரியர்களே, அல்லது பாண்டிய மன்னர்கள் அனைவரும் ஆரியரே என்ற முடிவுக்கு வந்திடலாமா? 

ஐயர் என்றும் பாப்பாத்தி என்றும் இன்றைய காலகட்டங்களில்கூட கிராமங்களில் தமிழர்கள், திராவிடர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர்சூட்டுவதைப் பார்க்கலாம். வன்னியகுல ஷத்திரியர், அக்கினி குல ஷத்திரியர், தேவேந்திரகுல வேளாளர் என்றெல்லாம் பெயர் வைத்திருப்பவர்களுக்கும் வட நாட்டினருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லது ஏதோ ஒரு வீண்பெருமைக்காக ஆரியச்சக்கரவர்த்தி என்ற பெயரை தமிழர்கள் பயன்படுத்தியிருக்கலாம். அதை வைத்து ஆரியன் என்றால் பாண்டியன் என்று பொருள்; ஆரியன் என்றால் தமிழன் என்று பொருள்; ஆரியன் என்றால் யாழ்ப்பாணத் தமிழன் என்று பொருள் என இவற்றில் ஏதோ ஒன்றைச் சொல்லாமா? அப்படிச் சொல்பவரை நாம் எப்படிப் பார்ப்போமோ அப்படித்தான் திராவிடன் என்ற சொல்லுக்கு பார்ப்பனர் என்ற பொருளைச் சொல்பவரையும் பார்க்கமுடியும்.

ஒரு இனத்தின் அடையாளத்தை அதற்கு நேர் எதிரான மற்றொரு இனத்தின் அடையாளமாக பார்க்கும் போக்கு வரலாற்றில் காணப்படுகிறது.  ஒரு மக்கள்திரளின் அடையாளம் அதற்கு எதிரான சிந்தனை களையுடைய மற்றொரு மக்கள் திரளின் அடையாளமாக மாறியநிலை வரலாறெங்கும் நிரம்பிக் கிடக்கின்றது.  அவை குறித்து விரிவாகப் பார்ப்போம். ( தொடரும்)

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It