தொழிலாளர் ஒற்றுமைக் குரலுக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, அரசு பள்ளிகளின் மோசமான நிலைமைகளுக்கு எதிராகவும், கல்வி தனியார்மயப்படுத்தப்பட்டு வருவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் உத்திராகண்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயல் வீரர்களும், மற்றும் பிற அமைப்புக்களும் நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

உத்திரப் பிரதேசத்தில் உள்ள 40 இலட்சம் அரசுப் பணியாளர்களும், அதிகாரிகளும் தங்களுடைய குழந்தைகளைக் கட்டாயமாக அரசாங்கப் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டுமென அலகாபாத் உயர் நீதி மன்றம் ஆகஸ்டு 19, 2015 அன்று கொடுத்திருக்கும் தீர்ப்பு இந்தப் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுத்திருக்கிறது. அரசாங்கத்திலிருந்து ஊதியமோ, சம்பளமோ பெறுகின்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும், மற்றவர்களும் இதில் அடங்குவர்.

நமது நாட்டின் கல்விக் கொள்கையைப் பொறுத்த மட்டிலும் இருவகையான தரம் இருப்பதை போராட்டத்தில் இருப்பவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அரசாங்க உயர் அதிகாரிகள், பணக்காரர்களுடைய குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் ஏழை மக்களுடைய குழந்தைகள் அரசாங்கப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்கின்றனர்.

அரசாங்க கல்வி நிறுவனங்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும், அங்குள்ள கட்டிடங்கள், வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறைகள் ஆகியவற்றின் நிலைமை குறித்தும், ஆசிரியர்கள் தட்டுப்பாடு குறித்தும் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் எண்ணெற்ற முறை மனுக்களைக் கொடுத்திருக்கிறார்கள், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டங்களையும் நடத்தியிருக்கின்றனர்.

அரசாங்கப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் புறக்கணிப்பதென்பது, கல்வியைக் கொடுப்பது என்ற பெயரில் தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தின் திட்டமிட்ட கொள்கையாகுமென அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கொள்கையானது தனியார் கல்வி நிறுவனங்களுடைய உடமையாளர்களுக்கு கொள்ளை இலாபம் கிடைப்பதையும், ஏழைக் குடும்பங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணம் கொள்ளையடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது.

எல்லா அரசாங்க அதிகாரிகள்  மற்றும் அரசியல் வாதிகளுடைய குழந்தைகள் அரசாங்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்க்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டாலன்றி அரசாங்க கல்வி நிறுவனங்களுடைய நிலைமையை சீரமைக்க முடியாதென அவர்கள் கூறுகின்றனர்.

கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்ப்பவர்களும், அரசாங்கப் பள்ளிகளின் நிலைமைகளில் உண்மையான மாற்றங்களை விரும்புபவர்களும் பின்வரும் கோரிக்கைகளை உத்திராகண்ட் அரசாங்கத்திடம் வைத்திருக்கின்றனர் :

அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர் வரை அரசாங்கத்திடமிருந்து சம்பளம் பெறும் அனைவரும் அவர்களுடைய குழந்தைகளை கட்டாயமாக அரசாங்கப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். இது கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

  • தனியார் பள்ளிகள் கட்டணங்களை உயர்த்துவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் உடனடி ஆணைகள் மூலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  • தனியார் கல்வி நிறுவனங்கள் நன்கொடைகள் (டொனேசன்) வாங்குவதை பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும்.
  • பல்வேறு பெயர்களில் இந்தப் பள்ளிகளில் கட்டணங்கள் வசூலிப்பதற்கு முடிவு கட்ட வேண்டும்.
  • கல்வியில் நிலவும் இருவகையான தரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும்.

கல்விக் கூடங்களில் கட்டிடங்கள், வகுப்பறைகள், நூலகம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் தரமானவையாக ஆக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தற்போது நிலவும் தட்டுப்பாடு உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

Pin It