"முதலாளி வர்க்கத்தின் தனியார்மயம் தாராளமயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தின் பதில் என்னவாக இருக்க வேண்டும்?" என்ற கருத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் (காம்கார் ஏக்தா சள்வள்) ஒரு முக்கியமான கூட்டத்தை ஜனவரி 31, 2013 அன்று மும்பையில் ஏற்பாடு செய்திருந்தது. பிப்ரவரி 20 - 21 அனைத்திந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் எல்லா அங்கத்தினர்களும் தீவிரமாக ஏற்பாடு செய்து வந்த பின்னணியில் இந்த மாநாடு நடைபெற்றது.

அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாப் அசோசியேசன், அகில இந்திய கார்ட்ஸ் கவுன்சில், வோல்டாஸ் ஊழியர் சங்கம், இந்துஸ்தான் லிவர் ஊழியர் சங்கம், மேற்கு இரயில்வே மோட்டார்மென் அசோசியேசன், மும்பை மாநகர ஊழியர் மகாசங்கம், மும்பை மாநகர முற்போக்கு ஆசிரியர்கள் சங்கம், நேஷ்னல் இரயில்வே மஸ்தூர் யூனியன், மக்களாட்சி இயக்கம், லடாக்கு கார்மெண்ட் தொழிலாளர் யூனியன் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம், தபால் ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏர் இந்தியா சர்வீசு பொறியாளர்கள் சங்கம் ஆகியோரின் பிரதிநிதிகள் பொது வேலை நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருப்பதினால் வர இயலாமையை தெரிவித்தும், நடக்கும் இந்த கூட்டத்திற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தும் செய்திகளை அனுப்பியிருந்தனர்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் ஒரு தலைவரான தோழர் மேத்யூ இக்கூட்டத்தில்முக்கிய உரையாற்றினார். தாராளமயமாக்கலும் தனியார்மயமாக்கலும் செயல்படுத்தப்படும் கடந்த 20 ஆண்டுகளில், பணி நேரத்தை அதிகப்படுத்தியும் பெரிய அளவில் ஒப்பந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியும் மக்களின் சொத்துக்களை தனியார்படுத்தியும் ஏராளமான முறைகேடுகள் மூலம் கொள்ளையடித்தும் மற்றும் பல்வேறு வகைகளிலும் முதலாளிகள் தங்கள் செல்வத்தை பல மடங்கு பெருக்கியுள்ளனர் என்பதற்கு பல உண்மைகளை எடுத்துக்காட்டி நிரூபித்தார். டாடாக்கள், அம்பானிகள், பிர்லாக்கள் என்ற மூன்று பெரிய இந்திய நிறுவன குடும்பங்களின் ஒருங்கிணைந்த செல்வம் இன்று ரூ.10 லட்சம் கோடியாகும். இது முழு இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 10 சதவிகிதமாகும். இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்து வருகின்றனர். அவர்கள் அமெரிக்கா, சீனா போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் வரிசையில் அடியெடுத்து வைக்க திட்டம் வகுத்துள்ளனர்.

மறுபுறம், உழைக்கும் மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. முதலாளி வர்க்கம் தங்களுடைய சிஐஐ (CII), அசோசெம் (ASSOCHAM), ஃபிக்கி (FICCI) போன்ற அமைப்புக்களில் ஒன்றுபட்டுள்ளது. தங்களுடைய நம்பிக்கைகள், மதம், பிராந்தியம், சாதி அல்லது மொழி எதுவாக இருந்தாலும் தங்கள் ஆட்சியை பாதுகாப்பது, மக்களைச் சுரண்டுவதை தீவிரப்படுத்துவது ஆகிய தங்களுடைய வர்க்க நோக்கத்தையொட்டி அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். இந்த நோக்கத்திற்காக அது தொழிலாளர்களிடையே மதம், மொழி, சாதி, கட்சி சார்பு போன்ற பல அடிப்படையில் அனைத்து வகையான பிளவுகளையும் ஊக்குவிக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் தலைவர்களாக, முதலாளிகளின் திட்டத்தை முறியடித்து நம் ஒற்றுமையைக் கட்ட வேண்டியது நமது கடமையாகும். நமது உழைப்பினால் உருவாகும் செல்வத்தில் நமது நியாயமான பங்கைக் கோரிப் போராடுவதே நமது ஒற்றுமையை கட்டியமைக்கும் அடிப்படையாகும்.

"ஒருவர் மீது தாக்குதல் அனைவரின் மீதான தாக்குதல்" என்ற கொள்கை அடிப்படையில், ஒற்றுமையைக் கட்ட உறுதி கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் சங்கங்களையும் செயல்வீரர்களையும் கொண்ட பரந்த குழுவே தொழிலாளர் ஒற்றுமை இயக்கமென்று தோழர் மேத்யூ கூறினார். தொடர்ந்து நடந்துவரும் வோல்டாஸ் ஊழியர் போராட்டத்திற்கும், இந்திய ரயில்வே என்ஜின் ஓட்டுனர்களுடைய போராட்டத்திற்கும், மேற்கு ரயில்வேயின் இஞ்சின் ஓட்டுனர்களுடைய ஊழியர்களின் போராட்டத்திற்கும், அஞ்சல்துறை பணியாளர்கள், பயிற்சி மருத்துவர்கள் (ரெசிடென்ட் டாக்டர்கள்), ஏர்-இந்தியா பைலட்டுகள், இந்தியன் ஏர்லைன்ஸ் பைலட்டுகள் ஆகியோருடைய தொடர் போராட்டங்களுக்கும், ஏர்-இந்தியாவின் இஞ்சினிரிங் சேவைகளை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்த போராட்டத்திற்கும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் பல்வேறு பிரிவு தொழிற் சங்கங்களின் ஆதரவை திரட்டியிருக்கிறது.

தாராளமயம் மற்றும் தனியார்மய திட்டத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது சொந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார், தோழர் மேத்யூ. உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் ஒரு மாற்று திட்டத்தை அது முன் வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக அது, வேலை நாள்  வரம்புகளைக் கடுமையாக அமலாக்குதல், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்தல், பெண் தொழிலாளியின் சம வேலைக்கு சம ஊதியம், ஒரு தாயாக தனது சிறப்பு தேவைகளை கவனித்து கொள்ள பிற பயன்கள், வேலைநிறுத்த உரிமைக்கு உத்தரவாதம், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் போன்ற அனைத்து கருப்பு சட்டங்களையும் ஒழித்தல், அனைத்து பொருட்களையும் கொண்ட விரிவான பொது வினியோக அமைப்பை நிறுவுதல், கடனடைப்பை நிறுத்தி வைப்பது, இராணுவ மயமாக்கப்படுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், அனைத்து கருப்பு பணத்தையும் கைப்பற்றுவது போன்றவற்றைக் கோர வேண்டும். தொழிலாளி வர்க்க அமைப்புக்களின் கூட்டு முயற்சியாக இந்தத் திட்டம் வெளிப்பட வேண்டும். இரண்டு நாள் வேலை நிறுத்த வெற்றிக்கு கடுமையாக உழைக்கும் அதே நேரத்தில், நாம் ஒரு நீண்ட கால கண்ணோட்டத்தில் நம் வேலைகளைச் செய்ய வேண்டும்.

அரசாங்கமும், நீதித்துறையும், அரசின் மற்ற கருவிகளும் தொழிலாளர்களையும் அவர்களின் போராட்டங்களையும் நசுக்க முயற்சிக்கிறது என்று வோல்டாஸ் ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர், தோழர் ரமேஷ் நாயர் கூறினார். வர்க்கத்தின் ஒற்றுமைக்கு அவசியம் உள்ளது என்றும் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை கட்டும் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் முயற்சிக்கு வோல்டாஸ் ஊழியர் சங்கம் முழுமையாக ஆதரவளிக்கிறது என்றார். இந்த ஒற்றுமையை கட்டியப்பதற்கு தேவையான தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது சங்கத்தின் ஆதரவு உறுதி என்றார். இரண்டு நாள் அனைத்திந்திய பொது வெற்றி வேலைநிறுத்தத்தை வெற்றி பெற செய்யுமாறு அனைவரையும் அவர் அறிவுறுத்தினார். தொழிலாளர்களை இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக ஆக வேண்டும் என்று அறிவித்த அவர், அவர்கள் தொழிற்சாலைகளிலோ அலுவலகங்களிலோ கடைகளிலோ அல்லது வயல்வெளிகளிலோ எங்கு வேலை செய்தாலும் தங்கள் உழைப்பை முதலாளிக்கு விற்று வாழ்க்கையை வாழ வேண்டிய எல்லோரும்  தொழிலாளர்களே என்று வலியுறுத்தினார். நாம் அவர்களை ஒன்றுபடுத்தி விழிப்படைய வைக்க வேண்டும்.

ஓட்டல், தேயிலை தோட்டம், சர்க்கரை கூட்டுறவு, தலையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பால் பண்ணைத் தொழிலாளர்கள் போன்ற துறைகளின் மூத்த தொழிற்சங்க தலைவரும் ஆலோசகருமான தோழர் பிராங்க்ளின் டி சோசா, ஒரு சிலருக்கு மட்டுமே வளர்ச்சியளிக்க காரணமான அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக தாக்கினார். வளர்ச்சி எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் கோரினார். பல நிகழ்வுகளை மேற்கோள் காட்டி அரசாங்கங்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளுடைய தொழிலாளர் விரோதத் தன்மையை அவர் தோலுரித்துக் காட்டினார். இந்தச் சுதந்திரம் பொய்யானது என்றும் அனைந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று தொழிலாளி வர்க்கம் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றார்.

மேற்கு ரயில்வே மோட்டர்மென் அசோசியேசனுடைய தலைவர், தோழர் பி.எஸ்.ரத் அறிவு மற்றும் உடல் ரீதியிலான உழைப்பை விற்கும் யாவருமே தொழிலாளர் தான் என்று வலியுறுத்தினார், முழு பாராளுமன்ற அமைப்பும், அரசியல் சாசனமும், அரசு இயந்திரமும் எப்படி தொழிலாளருக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு பல உதாரணங்களை காட்டிய அவர், உழைக்கும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இவை எல்லாமும் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஆளும் முதலாளி வர்க்கத்தை வீழ்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய லோகோ ரன்னிங் ஊழியர் சங்கத்தின் தேசிய துணை தலைவர், தோழர் பரத்வாஜ் கூறினார்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அனைத்து உறுப்பு சங்கங்களையும் மக்களாட்சி இயக்கத்தின் துணை தலைவர் டாக்டர் சஞ்சீவினி பாராட்டினார். மக்களையும், மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளி வர்க்கத்தையும் - நாட்டின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆக்கும் நோக்கோடு நாம் வேலை செய்ய வேண்டும் என்று விளக்கினார். எதிர்காலத்தின் மக்கள் சக்தியின் விதைகளாக, நாம் வேலை செய்யும் இடங்களிலும் வாழும் இடங்களிலும் கட்சி சார்பற்ற குழுக்களை அமைத்து மக்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்றார் அவர்.

நாட்டின் அனைத்து செல்வத்தையும் உருவாக்கும் உழைக்கும் மக்களுக்கு தாங்கள் உருவாக்கும் செல்வத்தில் மிகச் சிறிய அளவே வழங்கப்படுகிறது என்று லடாக்கு கார்மெண்ட் மஸ்தூர் சங்கத்தின் தலைவர், தோழர் எஸ். காபுரே கூறினார். நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதை பெற நாம் ஒன்றுபட வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கும் உழைக்கும் அனைவருக்கும் வளமையை உறுதி செய்யும் நோக்குடைய அதன் மாற்று திட்டத்தின் வெற்றிக்கும் பாடுபடுவோம் என்ற புத்துணர்வோடு கூட்டம் முடிவடைந்தது.

Pin It