இலங்கை மீது ஐ.நா தீர்மானம்

மார்ச் 21, 2013 இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 22 ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (UNHRC) ல்,  25 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 13 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்தனர். 8 பேர் வாக்களிக்கவில்லை. இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. 

இந்தத் தீர்மானமானது, இது போலவே 2012-இல் கொண்டுவரப்பட்டதைக் காட்டிலும் கடுமையானதாக இருந்தது. இது மனித உரிமை மீறல்களைப் பற்றி ஒரு "நம்பகத்தகுந்த பாரபட்சமற்ற" விசாரணையைக் கோரி இருக்கிறது. இலங்கைக்கான மனித உரிமைகள் ஆணையருடைய அறிக்கையையும், அங்கு சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுவதை விசாரிக்க வேண்டுமென்ற பரிந்துரைகளையும் இத்தீர்மானம் அங்கீகரிக்கிறது. 2014-இல் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தத் தீர்மானம் மீண்டும் மீள்பார்வைக்கு வரும்போது, இலங்கைக்கு எதிராக ஒரு வலுவான நடவடிக்கை எடுக்க நிலைமைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவதற்கு சில வாரங்கள் முன்பிருந்தே, 2009 இல் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கை இராணுவம் தமிழ் மக்களைப் படுகொலை செய்ததற்கு எதிராக பெரிய அளவில் பொது மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். இது, பிரபாகரனுடைய இளம் மகன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுவதாகக் சொல்லப்படும் படங்களை வெளியிடப்பட்டதுடன் துவங்கியது. ஒரு பிரிட்டிஷ் தொலைக் காட்சியில் அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டதும், தமிழ் தொலைக் காட்சிகள் அவற்றை மீண்டும் மீண்டும் காட்டியதும், எதிர்பார்த்தவாறு பெரிய அளவில் மக்கள் கோபத்தை வெளிக் கொண்டுவந்தது. இராஜபக்சே அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரமாக்க வேண்டுமென்றும், இராஜபக்சேவை சர்வதேச நீதி மன்றத்தில் விசாரிக்க வேண்டுமென்றும், இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவர வேண்டுமென்றும், இலங்கைத் தமிழர்களுக்கென ஒரு தனி நாடு - தமிழ் ஈழம் உருவாக்குவது பற்றி ஐநா ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. 

என்ன நடக்கிறது என்பது பற்றி நமது நாட்டு தொழிலாளி வர்க்கமும் மக்களும், குறிப்பாக தமிழ் நாட்டுத் தொழிலாளி வர்க்கமும், மக்களும் அமைதியான முறையில் ஆராய வேண்டும். இலங்கைத் தமிழர்கள் பற்றிய தீர்மானத்தை இந்த நேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசாங்கங்கள் ஏன் கொண்டுவர வேண்டும்? அவர்களுடைய நோக்கம் என்ன? ஏகாதிபத்தியமும் பிற்போக்கு சக்திகளும் வைத்திருக்கும் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் முன்னேற இந்தக் கேள்வியில் ஒரு நிதானமான மதிப்பீடு அவசியமாகும். 

இலங்கைத் தமிழர்களின் படுகொலையில் ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் என்ன பங்கு வகித்தனர்? 

மே 2009-இல் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை கடுமையாக வீழ்த்தினர். இது 2006-இல் கொண்டுவந்த திருப்தியற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது. 

1999க்கும், 2008க்கும் இடையில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஒன்பது ஐரோப்பிய நாடுகள், சீனா, இரசியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் பெரிய அளவில் இராணுவத் தளவாடங்களை வழங்கியிருக்கின்றனர். பீரங்கிகள், டாங்கிகள், போர் மற்றும் பயிற்சி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், வேகமான கடற்படகுகள், கண்ணிவெடிகள்,  ரேடார், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள், கவச பால அடுக்குகள், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டனவற்றை இந்த நாடுகள் வழங்கியிருக்கின்றன. 

சனவரி 2006இல் மாகிந்தா இராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சில வாரங்களிலேயே, அப்போதிருந்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜெப்ரி லுன்ஸ்டெட், கொழும்பு கூறும் நிபந்தனைகளை உட்பட்ட ஒரு உடன்பாட்டிற்கு விடுதலைப் புலிகள் வர மறுத்தால், அது "ஒரு வலுவான மிகவும் திறனுடைய உறுதியான இலங்கை இராணுவத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று விடுதலைப் புலிகளை எச்சரித்திருந்தார். 

லுன்ஸ்டெட் மேலும், "எங்களுடைய இராணுவப் பயிற்சி மற்றும் உதவித் திட்டங்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான செயலூக்கங்களுக்கு உதவும் முயற்சிகள், சட்ட விரோதமான நிதியாதார பரிவர்த்தனைகளைத் தடுத்தல் முலம் இலங்கை அரசாங்கம் தன்னுடைய மக்களையும், தன் நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்கு அதன் திறமையை வடிவமைக்க நாங்கள் உதவி வருகிறோம்" என்று கூறியிருக்கிறார். 

அப்படிப்பட்ட ஆதரவிற்காக, இலங்கை மார்ச் 2007-இல் அமெரிக்காவுடன் "நுழைவு மற்றும் குறுக்குச் சேவைகள் ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டது. இது, அமெரிக்க போர்க் கப்பல்களும், விமானங்களும் இலங்கையின் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் அளித்த ஆதரவும், சீனா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் பிற நாடுகள் அளித்த இராணுவத் தளவாடங்களும், விடுதலைப் புலிகள் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் திறனை பலவீனப்படுத்தின. 

சனவரி 7, 2009-இல் கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அது உள்நாட்டுப் போரில் இலங்கை அண்மையில் பெற்ற வெற்றிகளை அது வரவேற்றது. விடுதலைப் புலிகளை கொன்று குவிப்பதை மேற்கொண்டு எடுத்துச் செல்லுமாறு இலங்கை அரசாங்கத்தை அது கேட்டிருந்தது. அந்த அறிக்கையின் முக்கிய பகுதி "1997-இலிருந்தே விடுதலைப் புலிகளை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா கருதிவருகிறது. விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை" என்று கூறப்பட்டிருக்கிறது. 

விடுதலைப் புலிகளையும், அதனுடைய நிதி திரட்டும் பாதைகளையும் மூடுவதற்கு அமெரிக்கா தன்னுடைய கூட்டாளிகளான கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைப் பயன்படுத்திக் கொண்டது. இந்தத் தடைகள், வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் குடியேறி வாழும் தமிழ் மக்களிடமிருந்து விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடை செய்தன. 

உள்நாட்டுப் போரின் இறுதி கட்டம் வரை இராணுவ மற்றும் உளவுத்துறை ஆதரவை இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, மற்றும் பிற நாடுகள் வழங்கி வந்தனர். 

இன்று என்ன மாறி விட்டது? அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் இராஜபக்சே அரசாங்கம் இலங்கையில் நடத்திய மனித உரிமை மீறல்களைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? 

தமிழர்களின் நிலை குறித்து பொய்யான கவலைகள் 

காட்டுமிராண்டித்தனமான தேசிய ஒடுக்குமுறைக்கு ஆளாகி, ஒரு இரத்தக்களரியான உள்நாட்டுப் போரில் மிகவும் கடுமையாக துயருற்ற இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமை குறித்து அமெரிக்கா, பிரிட்டென், ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்திய அரசுக்கும் எள்ளளவும் கவலை இல்லை. 

இந்திய குடியரசின் தலைவரும், இலங்கையின் தலைவர் இராஜபக்சேவும் ஆகஸ்டு 2012 இல் பிரிட்டிஷ் பிரதமருடைய முக்கிய விருந்தினராக மதிப்பளிக்கப்பட்டனர். சிங்கப்பூரில் 2012 இல் அமெரிக்காவின் உயர் இராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர், இந்திய பாதுகாப்பு அமைச்சரோடு இரகசியமாக சந்தித்துப் பேசினர். அக் கூட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா இராணுவ ஆதரவளிக்குமென உத்திரவாதமளிக்கப்பட்டது. இது, இலங்கை உட்பட ஆசியாவிலுள்ள பல்வேறு நாடுகளையும், "கிழக்கே பார்க்க வைக்கும்" அதாவது சீனாவை எதிர்க்க வைக்கும் ஆங்கில-அமெரிக்க ஏகாதிபத்தியர்களுடைய முயற்சியின் ஒரு அங்கமாகும்.

எண்பதுகளில் இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இலங்கை அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக இலங்கையில் இருந்த பல்வேறு தமிழ் போராளி குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தனர். "அமைதி காக்கும் படை" என்ற பெயரில் இந்திய இராணுவத்தை, இலங்கை அரசாங்கம் அங்கு அழைப்பதற்காக, இந்தியா தமிழர்களைப் பயன்படுத்தியது. எனினும் இலங்கை மக்கள் தங்களுடைய இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடி, இந்திய இராணுவப் படைகளை இலங்கையை விட்டு வெளியேறுமாறு செய்தனர். இந்திய அரசு தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களைப் அக்கறை கொண்டுள்ளதே ஒழிய, அதற்கு இலங்கைத் தமிழ் மக்களுடைய நலன்களைப் பாதுகாப்பதில் எவ்வித ஆர்வமும் இல்லை என்பதை மக்களுக்கு நன்கு தெளிவாகியது. 

பனிப்போர் முடிவுற்றதிலிருந்து, இலங்கையை தன்னுடைய செல்வாக்கின் கீழ் வைத்திருக்க வேண்டுமென அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களை ஈர்க்கும் கொள்கையை இந்தியா கடைபிடித்து வந்திருக்கிறது. 

பயங்கரமான ஏகாதிபத்திய புவியியல் அரசியல் 

ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடுமென ஒபாமா நிர்வாகமானது அண்மைக்காலங்களில் பலமுறையும் அறிவித்து வந்திருக்கிறது. எளிய மொழியில் இதை மொழி பெயர்த்தால், சீனாவை எதிர்ப்பதற்காக அமெரிக்கா இந்த ஆசியா பசிபிக் பகுதியில் ஒரு இராணுவ கூட்டணியை தீவிரமாகக் கட்டும் என்பதாகும். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தக் கோணத்தில் நாம் காண வேண்டும். 

ஐரோப்பா, மேற்கு ஆசியாவிலிருந்து கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா செல்லும் மிக முக்கிய கடல் வழிப்பாதையில் இலங்கை அமைந்திருக்கிறது. இலங்கை அரசாங்கம், சீனாவோடு நெருங்கிய இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்து வருகிறது. இலங்கையின் தென்முனையில் சீனா ஒரு துறைமுகத்தையும், விமான நிலையத்தையும் கட்டியிருக்கிறது. மேலும் அது நெடுஞ்சாலைகள் உட்பட பிற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்திருக்கிறது. இலங்கையின் செயற்கைக் கோள்களை விண்ணில் நிறுவுவதற்கு உதவ சீனா முன்வந்திருக்கிறது. 

சீனாவிற்குப் போட்டியாக, இந்திய அரசும் இலங்கையோடு உறவுகளை வளர்த்து வருகிறது. இந்தியா இரயில் இருப்புப் பாதையை அங்கு கட்டிவருகிறது. போரால் சீரழிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய பகுதியில் புனரமைப்புத் திட்டங்களில் அது முதலீடு செய்து வருகிறது. இலங்கையில் இந்திய முதலாளித்தவ குழுக்களின் முதலீடுகளும் அதிகரித்து வருகின்றன. 

மனித உரிமை மீறல்கள் பற்றி கவலை என்ற பெயரில் இலங்கைக்கு எதிரான தற்போதைய பிரச்சாரத்தை அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் வேண்டுமென்றே தூண்டிவிட்டு வருகின்றன. சீனாவை நெருங்கி வருவதை நிறுத்திவிட்டு இலங்கை தங்களுடைய முகாமில் முழுமையாக சேரவில்லையென்றால் இலங்கையில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவருவோமென அவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் இலங்கையைக் கொடூரமாக சித்தரிக்கும் பிரச்சாரத்திற்கு இந்திய அரசு ஆதரவளிக்குமாறு அதற்கு நெருக்குதல் கொடுக்க தமிழ் உணர்வை அவர்கள் சூழ்ச்சியாகக் கையாண்டு வருகிறார்கள். 

2011-இல் ஹில்லரி கிளின்டன் இந்தியாவிற்கு வந்த போது, அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முதலமைச்சர் செயலலிதாவுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையை விவாதிப்பதற்காக அவர் சென்னைக்கும் சென்றிருந்தார். ஆசியாவிலும், பசிபிக் பகுதியிலும் அமெரிக்காவின் ஏகாதிபத்திய திட்டத்தோடு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருங்கிணைந்துச் செல்லவில்லையானால், ஐமுகூ அரசாங்கத்திற்கு இந்தியாவில் பிரச்சனையை உருவாக்குவோமென அமெரிக்க ஏகாதிபத்தியம் சமிக்ஞை கொடுத்து வருகிறது. 

மொத்தத்தில், ஆசிய பசிபிக் பகுதியிலும், உலக அளவிலும் எதிர்ப்பற்ற ஆட்சியாளர்களாக மாறுவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் தங்களுடைய போர் வெறி திட்டத்தில் விடாப்பிடியாக இருப்பதோடு அதைத் தீவிரப்படுத்தியும் வருகிறார்கள். ஏகாதிபத்திய தலையீடுகளையும், ஆக்கிரமிப்புகளையும் நியாயப்படுத்துவதற்கும், தங்களுடைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு பல்வேறு நாடுகள் மீது அழுத்தத்தைக் கொண்டு வருவதற்கும், அவர்கள் "மனித உரிமைகள்" மற்றும் "மனிதாபிமான தலையீடுகள்" என்ற போலியான தட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். 

முடிவுரை 

பனிப்போர் முடிவற்ற காலத்திலிருந்தே, "சனநாயகம்", "மனித உரிமைகளைப் பாதுகாப்பது", போன்ற பெயர்களில், நாடுகள் மற்றும் தேசங்களின் இறையாண்மைக்கு எதிரான தாக்குல்களை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்கள். 

உலகின் பல்வேறு நாடுகளில், இராணுவத் தலையீடுகளுக்கும், ஆட்சி மாற்றங்களுக்கும் ஒரு முன்னோடியாக உள்நாட்டுப் போர்களை அவர்கள் திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள். இது, யூகோஸ்லாவிய கூட்டரசிலும், லிபியாவிலும் மிகவும் அண்மையில் சிரியாவிலும் நடைபெற்றது. கியூபா மட்டுமின்றி, இரான் மீதும், வடகொரியா மீதும் அவர்கள் பெரும் அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார்கள். 

இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு, சர்வதேச நீதி மன்றம் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த மிகப் பெரிய போர்க் குற்றங்களை நடத்தி வந்திருக்கும் குற்றவாளிகளான அமெரிக்காவையும் பிற ஏகாதிபத்திய சக்திகளையும் இந்த நேரத்தில் எந்த சர்வதேச நீதி மன்றமும் தண்டிக்கப்போவதில்லை. சுய நிர்ணய உரிமைக்காகப் போராடும் எந்த மக்களும் இந்த ஏகாதிபத்திய சக்திகளை சார்ந்து நின்று, சுயநிர்ணயத்தைப் பெறப் போவதில்லை. 

இலங்கை மக்களான சிங்கள மக்களும், தமிழ் மக்களும் உள்நாட்டு போர் பாரம்பரியத்தைக் கடந்து வர வேண்டும். இலங்கையின் எல்லா மக்களுக்கும் மனித, சனநாயக மற்றும் தேசிய உரிமைகளை உத்திரவாதமளிக்கும், அவற்றிற்கு வழிவகை செய்யும் சட்டங்களையும், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளையும் கொண்டதாக ஒரு புதிய இலங்கையை அவர்கள் உருவாக்க வேண்டும். 

கம்யூனிஸ்டுகள் நாம், எல்லா நாடுகள் மற்றும் மக்களுடைய இறையாண்மையை கட்டிக் காக்கிறோம். எக்காரணத்தைக் கொண்டும், இன்னொரு நாட்டினுடைய உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட எந்த வெளிநாட்டு சக்திக்கும் எந்த உரிமையும் இல்லை. இந்தியாவின் பங்கேற்புடனோ அல்லது இல்லாமலோ ஆங்கில - அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் இலங்கையில் உருவாக்கும் ஆட்சி மாற்றம் நம்முடைய நலனில் இருக்காது. தெற்காசியாவை பிற்போக்கான போர்களில் மூழ்கடிக்க அச்சுறுத்தும் ஒரு ஆபத்தான விளையாட்டாகும் இது. 

உண்மையிலேயே தன்னார்வ அடிப்படையில் ஒன்றுபட ஒப்புக்கொள்ளும் தொழிலாளர்கள், விவசாயிகளுடைய குடியரசை உருவாக்குவதற்காக, இந்தியாவின் மறுமலர்ச்சிக்காக தொழிலாளி வர்க்கத்தையும், மக்களையும் நமது கட்சி அணிதிரட்டி வருகிறது. அனைவருக்கும் மனித உரிமைகளுக்கும், சனநாயக உரிமைகளுக்கும், தேசிய உரிமைகளுக்கும் உத்திரவாதமளிப்பதற்கு நிபந்தனையாக காலனிய அடிமைத்தன பாரம்பரியத்தையும், முதலாளித்துவ ஏகாதிபத்திய கொள்ளையையும் தூக்கி எறிவதற்காக நாம் அணிதிரட்டி வருகிறோம். இதே போராட்டத்தை மேற்கொள்ளும் இலங்கை மற்றும் பிற நாட்டு மக்களை நாங்கள் ஆதரிக்கிறோம். 

இந்திய, குறிப்பாக தமிழ்நாட்டுத் தொழிலாளர்களும் மக்களும் விழிப்போடு இருக்க வேண்டுமென்றும், அறியாமல் அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதனுடைய கூட்டாளிகளுடைய ஆபத்தான சதித் திட்டங்களில் பகடைக்காய்களாக ஆகிவிடக் கூடாதெனவும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அறைகூவல் விடுகிறது.

Pin It