அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் ஒரு புதிய அரசை நோக்கிச் செல்லுவோம்!

தில்லி, கான்பூர், பொகாரோ மற்றும் பிற இடங்களில் 10,000 சீக்கிய மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு 30 ஆண்டுகள் கடந்த பிறகும், படுகொலை பற்றிய உண்மைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அப்படிப்பட்ட குற்றங்களை நடத்த ஆட்சியாளர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

இந்திய அரசாங்கம் தன்னுடைய சொந்த குடிமக்களுக்கு எதிராக நடத்திய இந்த கொடூரமான குற்றத்திற்கு நவம்பர் 1-ஆம் தேதி, முப்பதாவது ஆண்டு நினைவு நாளாகும். அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்திய தில்லியில் பேரணியாக திரண்டு, நியாயம் கேட்பார்கள். பலியானவர்களுடைய பிரதிநிதிகளோடு, கம்யூனிஸ்டு கெதர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகளும், மனித உரிமைகளுக்காகவும், மக்களுடைய அதிகாரத்திற்காகவும் போராடுகின்ற எண்ணெற்ற பிற அரசியல் அமைப்புக்களும், நீதியை விரும்பும் மக்களும் உடன் சேர்ந்து கொள்வார்கள்.

உண்மையையும் நியாயமும் கோரப்படுவதற்கு அதிகாரபூர்வ பதில் நாம் அவற்றை "மன்னித்து மறந்துவிட வேண்டும்" என்பதாகும். சிலர் "உண்மை மற்றும் சமரசம்" என குரலெழுப்புகிறார்கள். சமரசம் என்றால், உண்மை உறுதியானவுடன் நாம் நியாயத்திற்கான கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்று பொருள்.  

குற்றவாளி யார் என்பது உறுதியானவுடன் குற்றவாளியை மன்னிக்க வேண்டும் என்பதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்ள முடியும்? எல்லா குடிமக்களையும் பாதுகாக்க வேண்டிய அரசே அவர்களை கொல்வதைச் சரியென எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்? முடியாது, அப்படிப்பட்ட சிந்தனை ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பாதுகாப்பதற்குப் பதிலாக, தங்களுடைய குடிமக்களையே கொல்லும் அரசின் அதர்மத்துடன் சமரசம் கொள்ள முடியாது. 

நவம்பர் 1984-இல் நடத்தப்பட்ட சீக்கியர்களின் படுகொலைகளைப் பற்றிய நிகழ்வுகளையும் இந்த படுகொலைகளை தூண்டிவிட்டதாக கூறப்படும் இந்திரா காந்தியின் படுகொலையைப் பற்றிய நிகழ்வுகளையும் பற்றிய அதிகாரபூர்வ குறிப்புகளில் வேண்டுமென்றே உண்மைகள் திரித்து வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மக்களிடம் பொய்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எல்லா அதிகாரபூர்வ குறிப்புகளும் "சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்" 1984 என்றே இதை தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றன. கலவரம் என்ற வார்த்தைக்கு பொருள், ஒரு பெரிய பகுதி மக்களின் தன்னிச்சையான இயல்பான கோபத்தின் வன்முறை வெளிப்பாடு என்பதாகும். தன் தாயார் படுகொலை செய்யப்பட்ட பிறகு, தற்காலிக பிரதமராக பதவி ஏற்ற ராஜிவ் காந்தி இந்த பொய்யை ஆதரித்து "ஒரு பெரிய மரம் விழும்போது, பூமியில் அதிர்வு ஏற்படத்தான் செய்யும்!" என்று வெளிப்படையாகவே கூறினார்.

சீக்கியர்கள் மீதான தாக்குதல் தன்னிச்சையானதல்ல என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. நம்முடைய கட்சித் தொண்டர்களும் ஆதரவாளர்கள் உட்பட்ட பலர் தங்கள் கண்களால் பார்த்ததும், மீட்பு முகாம்களிலும் தில்லியின் குருத்துவாராக்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்கள் கூறிக் கேட்டதும் இதை உறுதி செய்கின்றது. ராஜிவ் காந்தி குறிப்பட்டதைப் போல பிரதமர் கொலை செய்யப்பட்டதன் காரணமாக எழுந்த மக்களுடைய எதிர்வினைச் செயல் அல்ல இது. இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஆளும் கட்சியின் மேற்பார்வையில் பாதுகாப்பு சக்திகளின் முழு ஒத்துழைப்போடு நடத்தப்பட்டதாகும். இது, எந்தவொரு நியாயமும் இல்லாமல், குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த மக்களைக் குறிவைத்து செய்யப்பட்ட வெளிப்படையான அரசு பயங்கரவாத செயலாகும். மனிதாபமற்ற கொடுமைகளை தங்கள் குடும்பம் அனுபவித்த எந்தவொரு சீக்கியரும் இந்துக்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அவர்களுடைய எல்லா கோபங்களும் அதிகாரத்திலுள்ள அரசின் மீது இருந்தது.

சீக்கியர்களின் வீடுகளையும் கடைகளையும் கண்டுபிடிப்பதற்காக, தில்லியில் தாக்குதல் தொடுத்த அனைவருக்கும் வாக்காளர் பட்டியல்களும் பள்ளிப் பதிவுப் படிவங்களும், குடும்ப அட்டைப் பட்டியல்களும் தரப்பட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலைநாட்டப்பட்ட உண்மையாகும். பாதுகாப்பு சக்திகள் இந்த கொலைகளையும் கொள்ளைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதும், சில சந்தர்ப்பங்களில் சீக்கியர்கள் தாக்கப்படுவதற்கு முன்பு தற்காப்பிற்காக அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதிலும் பாதுகாப்பு சக்திகள் ஈடுபட்டனர் என்பதும் நிலைநாட்டப்பட்ட உண்மைகளாகும்.

இது ஒரு கலவரம் அல்ல என்று கம்யூனிஸ்டு கெதர் கட்சியும் நாட்டின் மற்ற முற்போக்கான சக்திகளும் கடந்த 30 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளன. இதைக் கலவரம் என்று கூறுவது உண்மையைத் தலை கீழாக மாற்றுவதாகும். வீதிகளிலிருக்கும் மக்கள் தான் பழிசுமத்த வேண்டியவர்கள் என்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள் இதற்குப் பொறுப்பல்ல என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மை இதற்கு நேரெதிரானது. அரசே இந்தப் படுகொலைகளை ஏற்பாடு செய்தது. தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து தங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைப் பாதுகாக்க தங்களால் இயன்ற வரை மக்கள் முயன்றனர். அரசு தான் குடிமக்களின் உரிமைகளை மீறியது, அப்பாவி மக்களுக்கு எதிராக பயங்கரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.  

"இந்திரா காந்தியை சீக்கியர்கள் கொலை செய்து விட்டனர்" என்ற பொய்யைப் பரப்பி, ஆளும் கட்சியின் அரசியல் தலைவர்கள், 1984 நவம்பர் 1-ஆம் தேதி அன்று எல்லா சீக்கியர்களையும் தாக்குவதற்கான அறைகூவலை எழுப்பினர். இது ஆதாரமே இல்லாமல், வசதியாக சோடிக்கப்பட்டதாகும்.

பிரதமர் அவருடைய வீட்டிற்கு முன் தன்னுடைய சொந்த மெய்க் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டு சொந்த மெய்க் காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பிறகு அதில் ஒருவர் சிறையில் இருக்கும் போதே கொல்லப்பட்டார். சந்தேகப்படும்படியான இந்த நடப்பு இன்றுவரை புதிராகவே உள்ளது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கான உள்நோக்கம் உண்மையை மறைப்பதற்காகவே என்பது தெளிவாகவே புலப்படும்.

இந்திரா காந்தியை கொன்ற குண்டு அவரது உடலைப் பின்னாலிருந்து துளைத்துள்ளதாகவும் அந்த இரண்டு காவலர்கள் நின்றிருந்த முன்னிருந்து அல்ல என்று அதிகாரபூர்வமல்லாத அறிக்கைகள் கூறுகின்றன. யார் அவரை கொன்றார் என்பதைக் காவலர் ஒருவர் பார்த்திருக்க வாய்ப்புள்ளதா? கைதான பிறகு அவர் கொல்லப்பட அதுதான் காரணமா? இந்த கேள்விகளுக்கு எந்தவித பதிலும் இல்லை. கைதான காவலர் கொல்லப்பட்டது போல, இந்திரா காந்தியின் படுகொலையும் மர்மத்தில் முழ்கியுள்ளது.

ஒரு பிரதமர் அவருடைய காவலாளியால் கொல்லப்படுவது என்பது அரசு இயந்திரத்தில் உள்ள கடுமையான நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. அது, சில சக்திவாய்ந்தவர்களுக்கு படுகொலையில் பங்கு இருப்பதைக் காண்பிக்கின்றது. எந்த உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சக்திகள் இந்தப் படுகொலையைத் திட்டமிட்டு நடத்தினர் என்றும், எந்த அரசியல் நோக்கத்திற்காக இதைச் செய்தனர் என்றும் தீவிர விசாரணைக்கு இது தூண்டு கோலாக இருந்திருக்க வேண்டும்.

யார் உண்மையாகவே இந்திரா காந்தியை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என்று விசாரணை செய்யாமலேயே, அதிகாரத்தில் உள்ளவர்கள் "சீக்கியர்கள் இந்திரா காந்தியைக் கொன்று விட்டனர்" என்று கருத்தைப் பரப்பத் தொடங்கினர். அவர்கள் வெளிப்படையாகவே இரத்தத்திற்கு இரத்தம் என முழு சீக்கிய சமூகத்தினரையும் பழிவாங்கத் துடித்தனர்.

அரசு நிர்வாகத்திலுள்ள நெருக்கடியை வேண்டுமென்றே வகுப்புவாத நிறத்தில் காட்டப்பட்டது. இரண்டு காவலர்கள் சீக்கியர்களாக இருந்த உண்மையைப் பயன்படுத்தி ஒரு முழு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பழிகூறப்பட்டு, திட்டமிட்ட முறையில் அவர்கள் படுகொலைக்கு இலக்காக ஆக்கப்பட்டனர்.  

30 வருடங்களுக்குப் பிறகும் உண்மை புதைந்து கிடப்பது, ஆளும் வர்க்கங்கள் உண்மையை வெளியிட விரும்பவில்லை என்பதைக் காண்பிக்கின்றது. நம் நாட்டில் இன்றுள்ள அரசியல் அமைப்பு மக்களை முட்டாளாக்கியும் உண்மையை மறைத்தும் வைப்பதன் அடிப்படையிலானது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

மக்களுடைய நியாயத்திற்கான தொடர் போராட்டங்களின் விளைவாக பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் பங்கை வெளிப்படுத்தினாலும் இந்த அதிகாரபூர்வ விசாரணைகள் உயர்மட்ட அமைச்சர் குழு மற்றும் உள்துறை அமைச்சகங்கள் போன்ற மேலிடங்களில் 1-இலிருந்து 3-நவம்பர் வரையிலான அந்த இருட்டு நாட்களில் என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டுவர தவறிவிட்டன. படுகொலையை கலவரம் என கருதப்பட்டும் அதிகாரத்திலிருந்த கட்சியும் முழு அரசு இயந்திரமும் குற்றத்தில் முழு பங்கேற்று அரசியல் நோக்கத்தோடு நடத்தப்பட்ட குற்றமாக கருதப்படாமலும் இந்த அதிகாரபூர்வ விசாரணைகள் அடிப்படையிலேயே தவறாகி விட்டது.

1984-இலிருந்து காங்கிரசு கட்சியை மாற்றி, பாஜக தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி உட்பட பல வகைப்பட்ட கூட்டணிகளும் ஆட்சிக்கு வந்துள்ளன. கட்சிகள் ஒன்றை மாற்றி மற்றொன்று ஆட்சிக்கு வந்திருந்தாலும், 1984-இல் செய்த குற்றத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை. மாறாக, நாட்டின் பல பகுதிகளில், அரசு பாதுகாப்பு சக்திகளால் இன்னும் பல குறிவைக்கப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இது எதை காட்டுகிறது? அவ்வப்போது அதிகாரத்திலுள்ள கட்சியை மாற்றுவதனால் நியாயத்திற்கான கோரிக்கை நிறைவேறப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது. பிரச்சனை, எந்தக் கட்சி ஆளுகிறது என்பதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது.

ஆங்கிலேய காலனிய ஆட்சி முடிவுக்கு வந்ததிலிருந்து கடந்த 67 ஆண்டு காலத்தின் முழு அனுபவத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த அமைப்பில் எத்தனை முறை கட்சிகள் மாற்றப்பட்டாலும் தங்கள் குடிமக்கள் மீதான அரசின் வன்முறை மோசத்திலிருந்து படுமோசமாகவே ஆகியுள்ளது. பிரிவினையின் போது பஞ்சாப், வங்காளம், காஷ்மீரின் இந்து மற்றும் முஸ்லீம் மக்களின் மீதும், அதற்குப் பிறகு பல பத்தாண்டுகளாக நாகாலந்து, மணிப்பூர், மிசோராம் மற்றும் காஷ்மீர மக்களின் மீதும் எனஅரசு பயங்கரவாத்தின் பட்டியல் விரிந்து கொண்டே வந்து, இப்பொழுது, பஞ்சாப், தில்லி மற்ற இடங்களின் சீக்கியர்களையும், குஜராத், உத்திரபிரதேசம் மற்ற இடங்களின் முஸ்லீம்களையும், பல பகுதிகளிலுள்ள கிருத்துவர்களையும் ஆதிவாசிகளையும் உள்ளடக்கியுள்ளது. பிரச்சனையின் ஆணிவேர் 1947-இல் தத்தெடுத்த அரசின் அடித்தளங்களிலேயே உள்ளது.

இன்றுள்ள அரசு காலனிய அரசின் தொடர்ச்சியும் அதன் பரிணாம வளர்ச்சியும் ஆகும். அது ஒரு பிரித்தாளும் கருவி, அடக்குமுறையையும் பயங்கரத்தையும் உள்ளடக்கிய உறுப்பு, ஒட்டுகளையும் குண்டுகளையும் வைத்தும் திசைதிருப்பல்களையும் அவ்வப்போது எந்தவொரு பகுதி மக்களின் மீது படுகொலைகளை ஏவிவிடும் சுரண்டும் சிறுபான்மை வர்க்கத்தின் ஆட்சி.

பிரஜை-களின் அதாவது குடி மக்களின் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது ராஜா-வின்  - அரசின் கடமை என்ற அரசியல் கொள்கையை பழங்காலத் தொட்டு இந்த கண்டத்தின் மக்கள் உயர்த்திப் படித்து வருகின்றனர். பாதுகாப்பு இல்லாமல் வளமை சாத்தியமில்லை. ராஜா தன்னுடைய கடமையிலிருந்து தவறிவிட்டால், அதாவது அவர் மக்களுக்குப் பாதுகாப்பை கொடுப்பதற்கு பதிலாக அவர்களை ஒடுக்கினால், அப்படிப்பட்ட ராஜா-வை தூக்கி எறிவது பிரஜைகளின் (மக்களின்) கடமையாகவும் உரிமையாகவும் கருதப்பட்டது.

வாழ்க்கை அனுபவம் இன்றுள்ள அரசு ஒரு அடக்குமுறை மற்றும் பயங்கரவாத கருவி என்று காட்டுகிறது. எல்லா குடிமக்களின் பாதுகாப்பை இது என்றுமே உறுதி செய்யாது. ஆகையினால், இந்த அரசைத் தூக்கி எறிந்துவிட்டு, அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் ஒரு புதிய அரசால் அதை மாற்ற வேண்டிய கடமையும் உரிமையும் நமக்கு உண்டு.

ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட காலனிய மற்றும் ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்தும் கோட்பாடுகளிலிருந்தும் நாம் முழுவதுமாக விடுபட்டு வர வேண்டும். இந்திய அரசியல் கோட்பாடுகளிலிருந்தும் உலக அளவிலான மிக முன்னேறிய அறிவியல் சிந்தனைகளிலிருந்தும் சிறந்தனவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியக் குடியரசால் சீக்கிய மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 30-ஆவது ஆண்டு நினைவு நாளின்  சந்தர்ப்பத்தில்,  அனைவருக்கும் வளமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அர்ப்பணிப்புடைய நாகரிகமான இந்திய அரசை நிறுவுவதற்கான கண்ணோட்டத்தில், உண்மைக்கும் நியாயத்திற்குமான போராட்டத்தை தீவிரப்படுத்த நாம் உறுதியெடுப்போம். 

(இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, 28 அக்டோபர், 2014)

Pin It