மக்களுக்கும் நாட்டிற்கும் அச்சுறுத்தும் நிலைமைகளையே "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்பது கொண்டுவரும் என்பதற்கான முன்னறிவிப்பு

சென்னைக்கு அருகில் இருக்கும் சிரிபெரும்புதூரில் உள்ள நோக்கியாவின் மிகப் பெரிய கைபேசி உற்பத்தி ஆலை 2014 நவம்பர் 1-ஆம் தேதி மூடப்பட்டது. இதனால் நேரடியாக 8,000 தொழிலாளர்களுக்கும் மறைமுகமாக 25,000 தொழிலாளர்களுக்கும், மொத்தமாக 30,000-க்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். எட்டே வருடங்களுக்கு முன்னால் தான் 2006-இல், 210-ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் மத்திய மாநில அரசாங்கங்களால் வெகுவாக வேண்டிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த ஆலை அமைக்கப்பட்டது. மலிவான நிலம், முத்திரை வரி, மதிப்பு கூட்டு வரி, மத்திய விற்பனை வரி, சுங்க வரி மற்றும் இதர வரிகளைத் தள்ளுபடி செய்து பல வரிசையான சலுகைகள் கொடுக்கப்பட்டது. மறுபுறம், "பொது பயன்பாட்டு"க்காக என்று நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை அறிவித்து தொழிலாளிகளை கூடியவரை சுரண்டவும், மிகவும் குறைந்த கூலியில் பெரும் எண்ணிக்கையில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதற்கும் நிர்வாகம் அனுமதிக்கப்பட்டது.

வளர்ச்சிக்காக என்றும் முன்னேற்றத்திற்காக என்றும் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளுக்கும் அதிகாரங்களுக்கும் அதிகாரிகளால் வண்ணம் பூசி, நியாயப்படுத்தப்பட்டு நம்பிக்கை ஊட்டப்பட்டாலும், மிகக் குறுகிய காலகட்டத்திலேயே நோக்கியா கைபேசிகளுக்கு பாகங்களை ஒருங்கிணைக்கும் மிகப் பெரிய ஆலையாகஇது ஆகியிருந்தாலும், சில வருடங்களிலேயே தாங்கள் போட்ட குறைந்த முதலீட்டை நிர்வாக மேலாண்மை பல மடங்கு மீட்டு விட்டு, இந்த ஆலையை குறுகிய எட்டு வருடங்களில் மூடிவிட்டனர். இதற்கு மாறிவரும் சந்தை நிலவரங்கள், சாம்சங் போன்ற போட்டி நிறுவனங்களின் அதிகரித்து வரும் சந்தைப் பங்கு, அன்னிய நாணய மாற்று விகித மாற்றங்கள், மேலாண்மை வேறு கைகளில் மாற்றப்பட்டது போன்ற நியாயங்களை முதலாளித்துவ ஊடகங்கள் முன்வைத்து வருகின்றன. ஆனால் தொழிலாளி வர்க்கமும் நாட்டின் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் இந்த உதாரணத்தை ஆராய்ந்து முக்கியமான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.  

உலகளாவிய வழங்கு சங்கிலி அமைப்பில் இந்திய தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது

தொழிற்சாலை செயல்பட்ட 8 ஆண்டுகளில் ஆலையின் ஒட்டுமொத்த உற்பத்தி மகத்தான 8000 லட்ச கைபேசிகள் ஆகும். சிரிபெரும்புதூரின் ஆலையே நோக்கியாவிற்கு உலகளவில் மிக அதிக உற்பத்தியை கொடுத்தது. இந்த ஆலை ஒரு வருடத்திற்கு 30,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள கைபேசிகளை உற்பத்தி செய்தது. அதன் உச்சத்தில், 8,000 நிரந்தர தொழிலாளிகளைக் கொண்டு மூன்று சுழற்சியில் மாதத்திற்கு 150 லட்சம் கைபேசிகளை தயாரித்து, உலகத்திலுள்ள மிகப் பெரிய கைபேசி ஆலையாகத் திகழ்ந்தது. தொழில்நுட்ப துறையில் ஒரு வருடத்திற்கு 200 கோடி ரூபாய் பெருமானமுள்ள கைபேசிகளை ஏற்றுமதி செய்து அது நாட்டிலேயே மிகப் பெரிய அந்நிய செலாவணி வருவாயை ஈட்டியது. 2005-06-க்கும் 2011-12-க்கும் இடையில் நோக்கியா சிரிபெரும்புதூரின் மொத்த வருவாய் 151,000 கோடி ரூபாயாகும். "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்ற முழக்கத்தை ஆதரிப்பவர்கள் நாட்டிற்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் பலன்கள் கிடைக்கும் என்று வாதிடுகிறார்கள். ஆனால், நோக்கியாவின் சம்பவம் "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" என்ற முழக்கத்தின் எந்த அம்சங்கள் உலக முதலீட்டாளர்களையும் மிகப் பெரிய உலக முதலாளித்துவ ஏகபோகங்களையும் கவர்ந்துள்ளன என்று காட்டுகிறது.

  • மிகக் கடுமையான வேலைக்கு மிகக் குறைவான சம்பளம் – நோக்கியாவில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு அவர்கள் செய்த கூடுதல் நேர பணிக்கான ஊதியமும் மற்ற எல்லாமும் சேர்ந்து ரூ. 5,000 த்திலிருந்து ரூ. 8,000 வரை கிடைத்தது. சிரிபெரும்புதூர் பகுதியில் வாழ்க்கைக்கான ஊதியத்திற்கு இது மிகவும் குறைவானதாகும். மற்ற நாடுகளில் வேலை பார்க்கின்ற நோக்கியா தொழிலாளிகளை ஒப்பிட்டால், சிரிபெரும்புதூரிலுள்ள தொழிலாளிகளுடைய ஊதியம் 45 மடங்கு குறைவாக உள்ளது. குறைவான வாழ்க்கை செலவினங்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கூட அது 10 மடங்கு குறைவாகவே உள்ளது.
  • இந்தியாவின் இளம் தொழிலாளர் சக்தி – இந்த முழு தொழிலாளர்களின் சராசரி வயது 25 ஆண்டுகள் மட்டுமே. இதில் சுமார் 72 சதவிகிதம் பெண்கள். இந்திய மக்கள் தொகையின் இளமையான மற்றும் துடிப்பான உழைக்கும் சக்தி, ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் அதிகப்படியாக வேலை பார்க்கவும் தயாராக இருப்பதனால், முதலாளிகள் உழைப்பின் பலனை அனுபவிக்க முடியும்.
  •  “முதலீட்டாளருக்கு நட்பான” தொழிலாளர் சட்டங்களும் விதிமுறைகளும் - "பொது பயன்பாட்டு"க்காக என்று நோக்கியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை அறிவித்து எந்தவொரு எதிர்ப்பையும் தொழிலாளிகளின் ஒன்றுபட்ட செயல்பாடுகளையும் ஈவிரக்கமின்றி ஒடுக்க அரசு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. நிர்வாகத்தின் குண்டர்களும் ஆளும் கட்சியினால் வழங்கப்பட்ட குண்டர்களும் சேர்ந்து இதற்குத் துணைபுரிந்தனர்.

மென்பொருளுக்காக கட்டணம் என்று நோக்கியா தனது தாய் நிறுவனத்திற்கு 25,000 கோடி ரூபாயை அது அனுப்பியிருக்கிறது. 2011-12-இல் மட்டும் அது நோக்கியா பின்லாந்துக்கு 3,500 கோடி ரூபாயை வருமானத்தில் இலாபப் பங்காக அளித்தது. இளம் உழைப்பு சக்தியை ஈவு இரக்கமற்று சுரண்டியதாலும் மத்திய மாநில அரசாங்கங்கள் பற்பல சலுகைகளையும் வரி தள்ளுபடிகளையும் நோக்கியாவிற்கு கொடுத்ததனாலும், இங்கு கிடைத்த இலாபம் பெருமளவில் இருந்தது.

நோக்கியாவின் சிரிபெரும்புதூர் தொழிற்சாலையில் அது தன்னுடைய பிற தொழிற்சாலைகளில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட கைபேசி பாகங்களை இணைத்து கைபேசியை உற்பத்தி செய்ய, மலிவான ஊதிய இந்தியத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறது. கைபேசியின் பாகங்களான, ஜிஜிட்கள், விட்கெட்கள், டிஸ்பிளே, புராசஸ், மெமரி சிப்ஸ் என கைபேசியின் எல்லா முக்கிய பாகங்களும் சீனாவின் ஷென்ஸான், டோன்குவான் போன்ற இடங்களிலிருந்து பிரம்மாண்டமான ஜெட் விமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டன. கைபேசியின் வெளிப்புற உறையும், கார்ட்போர்ட் பெட்டியும், மொத்த விலையில் 5%-த்திற்கும் குறைவான மதிப்புடைய பாகங்கள் மட்டுமே இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. மிகவும் தொழில் நுட்பம் குறைவான பாகங்களான கீபோர்டு, சார்ஜர் போன்றவற்றைக் கூட சிரிபெரும்புதூரில் உற்பத்தி செய்ய முடியவில்லை. இது, “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்ற திட்டத்தில், தங்களுக்கு மிகவும் இலாபகரமானவற்றில் மட்டுமே உலக முதலாளிகள் ஆர்வம் கொண்டிருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.

சந்தையின் போக்கும், தனிப்பட்ட ஏகபோகங்களுடைய தற்காலிக பேராற்றலும்

சில ஆண்டுகளுக்கு முன்னர், உலக கைபேசிகள் சந்தையிலே நோக்கியா ஆதிக்கம் செலுத்தி வந்ததை இதைப் படிப்பவர்கள் நினைவு கூறலாம். ஆனால், 2008-இல் ஐ-போன் 3ஜி சந்தைக்கு வந்த பின்னர் ஆப்பிளுடைய சந்தை பங்கு இருமடங்காகியது. 2008-இல் 40.8% சந்தையைப் பெற்றிருந்த நோக்கியா, 2007-இல் 10%-த்தை இழந்தது. நோக்கியா நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தும், அதனுடைய ஸ்மார்ட் கைபேசியினுடைய சந்தை வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. முன்னர் சிம்பியான் இயக்க அமைப்பைப் பயன்படுத்தி வந்த சாம்சங்கும், சோனி எரிக்சனும் ஆண்டிராய்ட் இயக்க அமைப்பை அவர்களுடைய ஸ்மார்ட் கைபேசிகளில் பயன்படுத்தத் துவங்கினர். 2011-இல் நோக்கியா, மைக்கிரோ சாப்ட் நிறுவனத்துடன் கூட்டாக, வின்டோஸ் கைபேசிகளைப் பயன்படுத்த முன்வந்தது. ஆனால் நோக்கியாவின் ஸ்மார்ட் கைபேசியின் விற்பனை 2011 இலிருந்து துவங்கி 2013 வரை சரியத் தொடங்கியது. ஸ்மார்ட் கைபேசி விற்பனையில் முதலிடத்திலிருந்த நோக்கியா 10-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

நோக்கியாவிற்கு நிகழ்ந்தது முன்னர் பிற நிறுவனங்களுக்கும் நடந்திருக்கிறது. ஒரு நேரத்தில் சந்தையை ஆக்கிரமித்து வரும் முதலாளித்துவ நிறுவனங்களும், ஏகபோகங்களும், பிற முதலாளித்துவ நிறுவனங்களால் பின்னுக்குத் தள்ளப்படுகின்றனர். இது முதலாளித்துவத்தில் உற்பத்தியும், போட்டியும் நடைபெறும் முறையின் காரணமாக ஏற்படும் இயற்கையான விளைவாகும். சந்தையின் முன்னணியில் இருந்த நேரத்தில், “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்களென” நோக்கியாவிற்கு இரத்தினக் கம்பளம் விரித்தார்கள். ஆனால் ஒரு சில ஆண்டுகளிலேயே, நோக்கியா வீழ்ச்சியடைந்து விட்டது.

மாறிவரும் பொருளாதாரக் காரணிகளும், முலதனத்தின் ஓட்டமும்

தமிழ்நாட்டிலுள்ள நோக்கியா தொழிற்சாலையின் இலாபம் குறைந்ததற்கு இன்னொரு காரணம், அன்னிய நாணய பரிமாற்ற விகிதமாகும். தொழிற்சாலை துவங்கப்பட்டபோது 2006-இல் அமெரிக்க டாலர் – இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பு 45 ஆக இருந்தது, 2012-இல் 60 ஆக மாறியது. இந்த மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் கைபேசியினுடைய பாகங்களுடைய விலைகள் அதிகரித்தன. இறக்குமதியை முழுவதுமாக நம்பியிருந்ததால், அன்னிய நாணய பரிமாற்ற விகிதத்தின் சரிவு தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் மலிவான உழைப்பின் பயன்களைக் கணிசமாகக் குறைத்துவிட்டது. இதற்கு, அடிப்படையில் பாகங்களை இணைத்துப் பொருத்தி கைபேசியை உற்பத்தி செய்வதாக தொழிற்சாலை இருந்தது முக்கிய காரணமாகும்.

முதலாளிகளுடைய இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நோக்கியா, தொழிலாளர்களைப் பெரும் எண்ணிக்கையில் வேலை நீக்கம் செய்தது. 2012-இல் தொடங்கி உலகெங்கிலும் நோக்கியாவில் வேலை செய்த 10,000 தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ருமேனியாவில் குலுஜ் நாபோனா-வில் இருந்த நோக்கியா தொழிற்சாலை கடந்த ஆண்டு மூடப்பட்டது. 1979-இல் நிறுவப்பட்ட, நோக்கியா முதல் தொலைபேசியை உற்பத்தி செய்த பின்லாந்தில் உள்ள அதனுடைய சாலோ தொழிற்சாலையும் மூடப்பட உள்ளது.

வியத்நாமின் வடக்கிலுள்ள ஹொனாய் நகரத்தில் பாக் நின்-னிலுள்ள வியத்நாம்-சிங்கபூர் தொழிற் பூங்காவில், நோக்கியா தன்னுடைய புதிய தொழிற்சாலையை ஏப்ரல் 2014-இல் துவக்கியது. மலிவான ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைப்பதும், ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்திருப்பதும் நோக்கியாவிற்கு ஒரு மதிப்புள்ள இடமாக அமைந்துவிட்டது. 275 தொழிலாளர்களில் துவங்கி, 10,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தொழிலாளர்கள் 2014-இன் இடையில் சேர்க்கப்பட்டனர். சிரிபெரும்புதூரிலும், மற்ற இடங்களிலும் தொழிற்சாலைகளை நோக்கியா மூடிய அதே நேரத்தில், அது வியத்நாமில் தொழிற்சாலையைத் துவக்கியிருக்கிறது என்பது தெளிவு. முன்னாள் ஏகபோகமான நோக்கியாவிற்கு அளவற்ற ஊக்கத் தொகைகளும், கொடைகளும் தந்திருந்துங்கூட நோக்கியாவை இந்தியாவிற்கு “விசுவாசியாக” மாற்றவில்லை. அவர்களுடைய “சொந்த” பின்லாந்திற்கே கூட அவர்கள் “விசுவாசி”யாக இருக்கவில்லை. எல்லா நல்ல முதலாளித்துவ நிறுவனங்களைப் போலவே, அது தன்னுடைய முதலாளிகளுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காக முயற்சி செய்கிறது. தொழிற்சாலையை வேறிடத்திற்கு அது மாற்றியிருக்கிறது. “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என சர்வதேச முதலாளிகளை எப்படி முயற்சி செய்து கவர்ந்தாலும், அவர்களுடைய இலாபம் அதிகரித்துக் கொண்டிருக்கும் வரையில் தான் அவர்கள் இருப்பார்கள்.

இந்தப் படிப்பினைகளைத் தான் நோக்கியாவின் சோகமான கதையிலிருந்து, இந்தியத் தொழிலாளர்களும், நாட்டுப்பற்றாளர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய மற்றும் அன்னிய முதலாளிகளுடைய இலாபத்தைப் பெருக்கும் முயற்சியில் இந்திய ஆட்சியாளர்கள், இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் என்பதை, நாட்டிற்கு மிகப் பெரிய நன்மை என்று தொடர்ந்து கூவிக் கூவி விற்று வருகிறார்கள். ஆனால் உண்மையோ, தொழிலாளர்களுக்கோ, நமது நாட்டிற்கோ எந்த நன்மையும் இதனால் விளையப் போவதில்லை.

நமது நாட்டினுடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது என்றும், நாட்டை செல்வ வளமாக்குவது என்றும் கூறி, “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்ற பெயரில், திரு.மோடி இந்தத் திட்டத்தை மேலும் பெருமளவில் விரிவு படுத்த விரும்புகிறார். உலகின் எந்த மூலையிலும் முதலாளிகள் ஒரு தொழிற்சாலையை நிறுவினால், அதை அவர்கள் மக்களுக்கு வேலை கொடுப்பதற்காகச் செய்வதில்லை. அதிகபட்ச இலாபத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடுதான் அவர்கள் தொழிற்சாலைகளை நிறுவுகின்றனர். நோக்கியா இந்தியாவில் தங்களுடைய தொழிற்சாலையை நிறுவியபோது, இந்திய ஆட்சியாளர்கள் கொடுத்த மிகப் பெரிய ஊக்கத் தொகைகள், மலிவான உழைப்பு ஆகிய எல்லா காரணிகளும், அதிகபட்ச இலாபத்தைச் சம்பாதிக்க மிகப் பொருத்தமானவைகளாக அப்போது இருந்தன. ஆனால், சூழ்நிலைகளும், சந்தை நிலைமையும் மாறிய நிலையில் இன்று, தன்னுடைய தொழிற்சாலையை வியத்நாமிற்கு மாற்றுவது நோக்கியாவிற்கு பொருத்தமானதாகத் தெரிகிறது. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும், ஒரு தொழில் துறையிலிருந்து மற்றொன்றிற்கும் என, எங்கு அதிகபட்ச இலாபத்தைச் சம்பாதிக்க முடியுமோ அங்கு மூலதனத்தை முதலாளித்துவம் மாற்றிக் கொண்டே இருக்கும். இதில், வேலை வாய்ப்பை உருவாக்குவதென்பது அவர்களுடைய நோக்கமல்ல, தற்செயலானதாகும்.

தங்களுடைய பரப்பை பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு இந்தியப் பெரு முதலாளிகள், பிற நாட்டிலுள்ள ஏகாதிபத்தியர்களுக்கு நம்முடைய நாட்டின் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டுமென விரும்புகின்றனர். ஆனால் அதில், தொழிலாளர்களும், மக்களும் தான் இழப்பாளிகளாக ஆகிறார்கள் என்பதை நோக்கியா மூடல் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது. இந்தியப் பெரு முதலாளிகளும், அவர்களுடைய அரசியல்வாதிகளும், நமது நாட்டுத் தொழிலாளர்களையும், மக்களையும் விலையாகக் கொடுத்து, ஈவுஇரக்கமற்ற, விலைபோன திட்டங்களையும், கொள்கைகளையும் வீராதி வீரர்களைப் போல நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் நாம் நம்முடைய ஒற்றுமையாலும், விழிப்புணர்வாலும், இந்த “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்ற தொழிலாளர் விரோத, தேச விரோதத் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும். 

Pin It