ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள சேசாசைலம் வனப் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பழங்குடி மக்களை செம்மரம் கடத்தியதாகக் கூறி, காவல்துறையினர் ஏப்ரல் 7 அன்று, அவர்கள் அனைவரையும் சுட்டுக் கொன்றிருப்பது எல்லா மக்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 7 பேர் தர்மபுரியையும், ஒருவர் சேலத்தையும் சேர்ந்த அப்பாவி கூலித் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் செம்மரங்களை வெட்டி, கடத்திக் கொண்டிருந்ததாகவும், அதை வனக் காவலர்களும், அதிரடிப் படையினரும் தடுக்க முயன்ற போது இந்தத் தொழிலாளர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியதாகவும், தற்காப்பிற்காக 20 பேரையும் சுட்டுக் கொன்றதாக காவல் துறை கூறியிருக்கிறது.

ஆனால் இவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முந்தைய நாளே இவர்களில் பலரும் காவல் துறையினரால் திருப்பதி சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து கீழே இறக்கி காவல் துறையால் கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆவர். அப்பாவி கூலித் தொழிலாளர்களைக் சிறை பிடித்து, அவர்களுடைய கண்களைப் பிடுங்கி, சித்திரவதை செய்து, அவர்களை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று போலீஸ்காரர்கள் கொடூரமாக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். பேருந்தில் உடன் பயணம் செய்தவர்களும், காவல் துறையிடமிருந்து தப்பியவர்களும் இந்த உண்மைகளை மனித உரிமைக் குழுக்களிடம் பதிவு செய்திருக்கின்றனர். படுகொலை நடந்த இடத்தைப் பார்வையிட்ட மனித உரிமை செயல் வீரர்களும், அரசியல் கட்சியினரும், அங்கு ஆயுதங்களற்ற கூலித் தொழிலாளர்களை காவல் துறையினர் படுகொலை செய்திருப்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்திருக்கின்றனர்.

உண்மையான கடத்தல்காரர்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடும், அப்பாவி கூலித் தொழிலாளர்களை மேலும் ஒடுக்கும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்தப் படுகொலை, தெள்ளத் தெளிவாக அரசு பயங்கரவாதச் செயலாகும்.

கோடிக்கணக்கான ரூபாய் பொறுமானமுள்ள செம்மரக் கடத்தலை அன்றாடங் காய்ச்சியாக இருக்கும் இந்த தினக்கூலித் தொழிலாளர்கள் தான் செய்கிறார்களா? உண்மையில் செம்மரங்களைக் கடத்தி கொள்ளையடித்து வரும் முதலாளிகள், அரசாங்க அதிகாரிகளோடும், காவல்துறை - வனத்துறை அதிகாரிகளோடும், அமைச்சர்கள் – அரசியல்வாதிகளோடும் கைகோர்த்துக் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர். அவர்களைப் பிடிக்காமல், அப்பாவி கூலித் தொழிலாளர்களைப் பயங்கரவாத முறையில் படுகொலை செய்தவர்களையும், அதற்கு ஆணையிட்ட உயர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் உடனடியாக சிறையிலடைக்க வேண்டும், உரிய முறையில் விசாரித்து இந்தக் குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென்பது அனைவருடைய விருப்பமாகும். இந்திய அரசு பல்வேறு பயங்கரவாதச் சட்டங்களை உருவாக்கி தொழிலாளர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும் எவ்வித நியாயமும் இன்றி ஏவி வருகிறது. ஆனால் ஆந்திரப் பிரதேசத்தில் 20 பேரை பயங்கரவாத முறையில் வெட்ட வெளிச்சமாகவே படுகொலை செய்துள்ள அதிரடிப்படையினரையும், காவல் துறையின் பிற உயர் அதிகாரிகளையும் இந்த பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் ஏன் உடனடியாகக் கைது செய்யவில்லையென மக்கள் பலரும் கேட்கிறார்கள்.

இந்த அரசின் கொடிய பயங்கரவாதத்தை எதிர்த்து தமிழ்நாடெங்கிலும், ஆந்திரப் பிரதேசத்திலும், நாட்டின் பல நகரங்களிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும், மனித உரிமை குழுக்களும் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 6000-க்கும் மேற்பட்டவர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். நெல்லூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 440 கூலித் தொழிலாளர்கள் செம்மரக் கடத்தல் என்று கூறி, நெல்லூர் மாவட்ட சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே வரக் கூடாது என்ற நோக்கத்தோடு, 236 பேர் மீது கொலை வழக்குகளும் மற்றவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் ஓராண்டிற்கும் மேல் சிறையில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் கடத்தலை நடத்திவரும் உண்மையான குற்றவாளிகள் எவரையும் காவல்துறையினரும், அதிரடிப் படையினரும் இதுவரை பிடிக்கப்பட வில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வீரப்பனைப் பிடிக்கிறோம் என்று கூறி பல அப்பாவி பழங்குடி மலைவாழ் மக்களையும், வீரப்பனையும் பலரையும் படுகொலை செய்தது தமிழக அரசு. எதிர் மோதல்கள் என்ற பெயரிலும் அமைதியை நிலைநாட்டுவது என்ற பெயரிலும் பலரையும் வழக்கமாகவே தமிழக அரசின் காவல் துறை சுட்டுக் கொன்று வருவது அனைவரும் அறிந்ததாகும். எனவே, ஆந்திராவில் நடைபெற்ற இந்தக் கூலித் தொழிலாளர்களுடைய படுகொலையைப் பற்றி தமிழக அரசு, கண்துடைப்பாக சில வார்த்தைகளைக் கூறிவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் நமக்கு வியப்பளிக்கவில்லை.

கோடிக் கணக்கில் பொது மக்களுடைய வரிப் பணத்தையும், பொதுச் செல்வங்களையும் கொள்ளையடிக்கும் உண்மையான குற்றவாளிகளான பெரு முதலாளிகளும், அரசியல்வாதிகளும், உயர்மட்ட அதிகாரிகளும் வெளியே உலவி வர, ஏழைத் தொழிலாளர்களும், மக்களும் அரசு பயங்கவாதத்தால் படுகொலை செய்யப்படுவது இந்திய இந்திய அரசு மற்றும் நீதித் துறையின் திட்டமிட்ட போக்காக இருப்பதை நாம் காணலாம். அரசு பயங்கரவாதத்தை மனித உரிமைகளையும், நியாயத்தையும் விரும்பும் எல்லா மக்களும் வன்மையாகக் கண்டித்து அதற்கு எதிராகப் போராட வேண்டும். இந்தக் காட்டுமிராண்டித்தனமான அரசு பயங்கரவாதத்தை, தொழிலாளர் ஒற்றுமைக் குரல் வன்மையாகக் கண்டிக்கிறது.

Pin It