19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலக முதலாளித்துவம் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்திருக்கிறதென்பதை 1916-இல் தோழர் லெனின் எழுதிய "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" என்ற தன்னுடைய மிளிரும் நூலில் நிறுவியிருக்கிறார். முதலாளித்துவத்தின் உச்ச கட்டமாகிய ஏகாதிபத்திய நிலையில் அதனுடைய ஐந்து முக்கிய தன்மைகளைப் பற்றி அவர் அதில் விளக்கியிருக்கிறார். அவை, 1. உற்பத்தியும், மூலதனமும் ஒன்று குவிக்கப்பட்டு, ஏகபோகங்களுடைய மேலாதிக்கத்திற்கு வழி வகுத்தல், 2. நிதி மூலதனம் மற்றும் இரத்தத்தை உறிஞ்சும் நிதிக் கூட்டின் வளர்ச்சி, 3. பொருட்களின் ஏற்றுமதியிலிருந்து வேறுபட்டதாகவும், அதைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகவும் மூலதனத்தின் ஏற்றுமதி இருத்தல், 4. உலகச் சந்தையை பங்கிட்டுக் கொள்ளும் சர்வதேச ஏகபோக முதலாளித்துவ மன்றங்கள் உருவாதல். அவை, கச்சாப் பொருட்களின் ஆதாரங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகப் சண்டையிட்டுக் கொள்ளுதல் 5. மிகப் பெரிய காலனிய சக்திகளிடையே முழு உலகையையும் பிராந்திய அடிப்படையில் பிரித்துக் கொள்வது முடிவடைந்து விட்டதால், உலகை மறுபங்கீடு செய்வதற்காக ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல்களுக்கு வழி வகுத்தல் (மேலும் விவரங்களுக்கு ஏகாதிபத்தியத்தின் முக்கிய தன்மைகள் குறித்த பெட்டியைப் பார்க்கவும்)

(இக்கட்டுரையின் முதல் பாகம் மே மாத இதழில் வெளியிடப்பட்டது)

ஏகாதிபத்தியத்தின் முக்கிய தன்மைகள்

குவிப்பும் ஏகபோகமும். ஆரம்பக் கட்டத்தில், எண்ணெற்ற முதலாளிகள் ஒவ்வொருவரிடமும் சந்தையின் ஒரு சிறு பங்கே இருந்தது. அப்போது அவர்களிடையே நிலவிய போட்டி முதலாளித்துவத்தின் தன்மையாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், மிகச் சிறுபான்மையானவர்களுடைய கைகளில் மூலதனம் சேர்ந்து குவிந்துவர, பெரும்பான்மையான பொருட்களுக்கு சந்தையில் மிகப் பெரிய பங்கை தம் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் மிகச் சில, பெரு முதலாளிகள் தோன்ற வழி வகுத்தது. பெரும்பான்மையான சிறிய உற்பத்தியாளர்கள் அவர்களுடைய கருணையை நம்பியிருக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவப் போட்டி, ஏகபோகங்களின் மேலாதிக்கமாகவும், அவர்களுடைய கட்டுப்பாடாகவும் வளர்ச்சி பெற்றது.

நிதி மூலதனத்தின் மேலாதிக்கம். தொழில் நிறுவனங்களுக்கிடையே போட்டியின் மூலம் தொழில் ஏகபோகங்கள் உருவானதைப் போலவே, வங்கிகளுக்கு இடையிலான போட்டியின் மூலம் வங்கி ஏகபோகங்கள் உருவாகின. வங்கி மூலதனக் குவிப்பின் உயர்வு காரணமாக, தொழிற்சாலைகள் மிகச் சில வங்கிகளைச் சார்ந்து இருப்பது அதிகரித்திருக்கிறது. இந்த வங்கிகள், இடையீட்டாளர் பங்கு மட்டும் வகிக்காமல், தாங்கள் கடன் கொடுத்திருக்கும் நிறுவனங்களில் தலையிட்டு இயக்குவதிலும் ஈடுபடத் தொடங்கினர். இது பெரும் வங்கிகளும், தொழிற்சாலை ஏகபோகங்களும் ஒன்றாக இணைவதற்கு வழி வகுத்தது. இதன் காரணமாக நிதி மூலதனம் தலைதூக்கியது. இது, நிதியை கட்டுப்படுத்தி, தங்களுடைய ஆணைகளை சமுதாயத்தின் மீது திணிக்கும் ஒரு ஒட்டுண்ணியான, இரத்தம் உறிஞ்சும் ஒரு பிரிவு முதலாளிகள் ஒரு நிதிக் கூட்டாகத் தோன்ற வழி வகுத்தது.

மூலதன ஏற்றுமதி. முந்தைய கட்டத்தில், முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் தொழில் ரீதியாக முன்னேறிய பொருளாதாரங்களிலிருந்து வளர்ச்சி குறைந்த மற்றும் காலனிய நாடுகளுக்கு பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. முதலாளித்துவத்தின் உச்ச மற்றும் இறுதி கட்டமாகிய ஏகாதிபத்தியத்தில், எங்கெல்லாம் கச்சாப் பொருட்களும், உழைப்பு சக்தியும் மலிவான விலைக்கு வாங்க முடியுமோ அங்கெல்லாம் மூலதனம் ஏற்றுமதி செய்வது அதன் தன்மையாக ஆகிவிட்டது.

ஏகபோகங்களுக்கு இடையில் பகைமை - உலக அளவில் அதிகபட்ச இலாப விகிதத்தை அதிகபட்ச சுரண்டலின் மூலமும், கொள்ளையின் மூலமும் அடைய வேண்டுமென்ற ஏகபோக முதலாளிகளுடைய முயற்சி, அவர்களிடையே கடுமையான பகைமைக்கு வழி வகுக்கிறது. அவர்கள் மலிவான கச்சா பொருள்களுடைய ஆதாரங்களைக் கைப்பற்றவும், மிகவும் இலாபகரமான சந்தைகளை மேலாதிக்கம் செய்வதற்காகவும், ஏகபோகங்களுடைய கூட்டமைப்புகளையும், பல்வேறு கூட்டணிகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள்.

பிராந்தியங்களை மறு பங்கீடு செய்வதற்கான போராட்டம். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், உலகின் முன்னணி முதலாளித்துவ சக்திகள் ஏற்கெனவே எல்லா பிராந்தியங்களையும் கைப்பற்றி காலனியப்படுத்தி விட்டனர். மேற்கொண்டு விரிவு படுத்த வேண்டுமானால், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்கள் மூலம் ஒருவர் மற்றொருவரிடமிருந்து பிராந்தியங்களைக் கைப்பற்ற வேண்டும்.

ஆதாரம் - ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்ச கட்டம். வி.ஐ.லெனின்

ஏகாதிபத்திய காலக்கட்டத்தில், முதலாளித்துவம் ஏற்றத்தாழ்வான பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சி பெருகிறது என்ற விதியை லெனின் கண்டுபிடித்தார். நிறுவனங்கள், வணிக கூட்டுக் குழுக்கள், தொழில்துறைகள் மற்றும் தனிப்பட்ட நாடுகளுடைய வளர்ச்சி ஒரே சீராக, சமமாக இருப்பதில்லை, அவை ஒரு முறைப்படி வளர்ச்சி பெறுவதில்லை, ஒரு வணிக கூட்டுக் குழு அல்லது தொழிலில் ஒரு துறை அல்லது ஒரு நாடு மற்றவர்களைக் காட்டிலும் எப்போதும் முந்தியும் பிற வணிக கூட்டுக் குழுக்கள் அல்லது நாடுகள் மற்றவற்றிக்கு பிந்தியும் எப்போதும் இருப்பதில்லையென புள்ளி விவரங்களோடு அவர் காட்டினார். வளர்ச்சியானது ஏற்றத் தாழ்வானதாகவும், சமனில்லாமலும், சில நாடுகளுடைய வளர்ச்சி இடையூறுகள் நிறைந்ததாகவும், பிறவற்றினுடைய வளர்ச்சி பாய்ந்து முன் செல்வதாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், வளர்ச்சி மந்தமடைந்த நாடுகள் தங்களுடைய பழைய நிலைகளைக் காத்துக் கொள்வதற்கான "நியாயமான" முயற்சியும், புதிய நிலைகளைக் கைப்பற்றுவதற்காக பாய்ந்து முன் செல்லும் நாடுகளுடைய "நியாயமான" முயற்சியும், ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே ஆயுத மோதல்கள் எழுவதற்கான ஒரு சூழ்நிலைக்கு தவிர்க முடியாமல் வழி வகுக்கிறது.

முதலாளித்துவத்தின் உச்ச கட்டமாக இருக்கும் ஏகாதிபத்தியத்தில், முதலாளித்துவ நாடுகளில் உள்ள சுரண்டல்காரர்களுக்கும், சுரண்டப்படுவோருக்கும் இடையிலும், ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்பட்ட நாடுகள் மற்றும் மக்களுக்கு இடையிலும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலும் என அமைப்பிலுள்ள எல்லா முரண்பாடுகளும் கூர்மையடைந்து முன்னிலைக்கு வருகின்றன என லெனின் சுட்டிக்காட்டினார். ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தருவாயில் இருக்கிறதென்ற முடிவுக்கு அவர் வந்தார்.

நிதி ஒடுக்குமுறையான உலக அமைப்பில் முரண்பாடுகளின் வளர்ச்சியும், தவிர்க முடியாத இராணுவ மோதல்களும், புரட்சி எழக் கூடிய சூழ்நிலைக்கு உலக ஏகாதிபத்திய முன்னணியைக் கொண்டு செல்கிறது என்றும், இந்த முன்னணியில் ஒரு உடைப்பு ஏற்படக்கூடியது சாத்தியமே என லெனின் விவாதித்தார். இந்த உடைப்பு, எங்கு ஏகாதிபத்திய முன்னணி சங்கிலி மிகவும் பலவீனமாக இருக்கிறதோ, அதாவது எங்கு ஏகாதிபத்தியம் மிகவும் குறைவாக வலுப்படுத்தப்பட்டிருக்கிறதோ, எங்கு ஒரு புரட்சி வெடிப்பதற்கு எளிதாக முடியுமோ அந்த நாடுகளிலும் அந்த இடங்களிலும் நிகழ வாய்ப்பு இருக்கும்.

ஏகாதிபத்திய சங்கிலி அதனுடைய மிகவும் பலவீனமான இடத்தில்,சாரிச இரசியாவில் 1917-இல் உடைந்தது. சோவியத் யூனியனில் சோசலிசம் வெற்றிகரமாக கட்டப்பட்டது, ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய லெனினுடைய கருத்தியலை சக்திவாய்ந்த முறையில் நிறுவியது.

இன்றைய பொருத்தம்

லெனினுடைய ஆய்வின் பொருத்தத்தை ஏகாதிபத்திய அமைப்பின் இன்றைய அபாயகரமான போக்கு மீண்டும் நிரூபிக்கிறது. பொருளாதார வலிமை சரிந்துவரும் நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தக் காலக் கட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நியாயமற்ற போர்களை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான், இராக், லிபியா போன்ற தனிப்பட்ட நாடுகள் மீது போர் தொடுத்து ஆக்கிரமிப்பதையும், சிரியா, உக்ரேன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் இராணுவத் தலையீட்டையும், பாகிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதையும் நியாயப்படுத்த கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்தப் போர்களுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கமானது, உலக விவகாரங்களில் அமெரிக்காவின் மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்வதும், சர்வதேச வாணிகத்தில் டாலரின் ஆதிக்கத்தைத் தொடர்வதும், சீனா, இரசியா உட்பட அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு எழும் அச்சுறுத்தல்களை பலவீனப்படுத்துவதும் ஆகும். ஐரோப்பிய பொருளாதாரங்களைக் காட்டிலும் அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறும் வகையில் வைத்திருக்கவும், போர்கள் அவசியமாக ஆகி இருக்கின்றன.

உழைப்பிற்கும், மனித உரிமைகளுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் எதிரான முதலாளித்துவ தாக்குதலுக்கும், ஏகாதிபத்தியப் போர்களுக்கும் எதிர்ப்பு உலகெங்கிலும் வலுத்து வருகிறது. தங்களுடைய பொருளாதாரம் ஏகாதிபத்தியத்தால் சூறையாடப்பட்டு வருவதையும், ஏகாதிபத்தியத்திற்கு சார்பான ஆட்சியாளர்கள் பாசிச முறையில் தங்களை ஒடுக்கி வருவதையும் எதிர்த்து உலகெங்கிலும் உள்ள நாடுகளும், மக்களும் கோபத்தில் பொங்கியெழுந்து போராடி வருகின்றனர். உத்திரவாதமான வாழ்வாதாரத்திற்கும், மதிப்புள்ள ஒரு வாழ்க்கை நடத்துவதற்கும் உள்ள அவர்களுடைய அடிப்படை உரிமை காலடியில் போட்டு நசுக்கப்பட்டு வருவதை பெரும் திரளான உழைக்கும் மக்கள் எதிர்த்து வருகின்றனர். உழைக்கும் பெரும்பான்மையான மக்களிடமிருந்து திருடுவதன் மூலமும், சுரண்டுவதன் மூலமும், முழு சமுதாயத்தையும் கடுமையான நெருக்கடியில் அடிக்கடி மூழ்கடிப்பதன் மூலமும் தன்னுடைய செல்வத்தைப் பெருக்கி வரும் ஒரு நிதி கூட்டுக்களைக் கொண்ட ஒரு அமைப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

முதலாளித்துவ நாடுகளில் சுண்டல் அதிபர்களுக்கும் சுரண்டப்படும் மக்களுக்கும் இடையிலும், ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் மக்களுக்கு இடையிலும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலும் என லெனின் கண்டுபிடித்த ஏகாதிபத்திய அமைப்பின் மூன்று முக்கிய முரண்பாடுகளும் மேலும் கூர்மையடைந்து வருகின்றன என்பதை உலக நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. இரண்டாவது சுற்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான நிலைமைகள் முதிர்ச்சியடைந்து வருகின்றன என்பது இதற்குப் பொருளாகும். புரட்சி வெடித்து தங்களுடைய சொர்க்கலோகத்திற்கு முடிவு கட்டப்பட்டு விடுமோ என்ற அச்சம் தான், காட்டுமிராண்டித் தனமான வன்முறையைப் பயன்படுத்தவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களைப் பற்றி பொய்களைப் பரப்புவதற்கும், கருத்தியல் அடிப்படையில் சீரழிக்கவும் ஏகாதிபத்தியத்தையும் பிற்போக்கான முதலாளி வர்க்கத்தையும் உந்துகிறது.

ஒரு கட்டம். ஒரு கோட்பாடல்ல.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும், போர்களும் குறிப்பிட்ட அரசாங்கங்களுக்கு மிகவும் பிடித்தமான கொள்கை என்ற தவறான கருத்தை லெனின் வெட்ட வெளிச்சமாக்கினார். ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் ஒரு கட்டம் என்பதை அவர் வலியுறுத்தினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தக் கட்டத்தில், உள்நாட்டில் பிற்போக்கும், வெளிநாடுகளில் ஆக்கிரமிப்புக்களும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தன்மையாகும். ஒரு ஏகாதிபத்திய சக்தி, ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடாமலும், குறைவான கேடான கொள்கையும் கொண்டதாக இருக்க முடியுமென்ற எண்ணம் ஒரு மாயையாகும்.

இது போன்ற மாயைகள் இன்றும் கூட தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. எடுத்துக் காட்டாக, ஆப்கானிஸ்தான் மீதும், இராக் மீதும் நடத்தப்பட்ட அநியாயமான போர்களுக்கு புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளே காரணமென்றும், ஒபாமா-வையும், சனநாயகக் கட்சியையும் தேர்ந்தெடுப்பது இதற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமென்றும் ஒரு மாயையானது 2008-இல் பரப்பப்பட்டது. ஆனால், ஒரு கட்சியின் மாற்றமும், தலைவரின் மாற்றமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு, போர் வெறி முயற்சிகளில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லையென உண்மைகள் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிற்போக்கான, பயங்கரமான தன்மையானது அதனுடைய இயற்கையான அடிப்படையிலிருந்தே வெளிவருகிறது. ஒரு நிதி கூட்டின் மேலாதிக்கம் கொண்ட மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் விளைவாகும் இது. இந்த நிதிக் கூட்டு போர்களால் செழிப்படைவதோடு, உலகை மேலாதிக்கம் செய்வதற்கு போர்களைச் சார்ந்து நிற்கிறது.

ஏகாதிபத்திய அமைப்பிற்குள் இந்தியா

இந்தியா ஒரு முதலாளித்துவ நாடாகும். அது உலகிலுள்ள பெரும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைக் காட்டிலும் வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது. ரிலையன்சு, டாட்டா மற்றும் பிற ஏகபோக குடும்பங்களின் தலைமையில் இயங்கும் நமது நாட்டு முதலாளி வர்க்கம், ஏகாதிபத்திய போட்டியில் முன்னணிக்குச் செல்ல வேண்டுமென்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அது உலகில் மேலாதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய நாடுகளின் கோமான்கள் குழுவின் ஒரு அங்கமாக ஆக வேண்டுமென விரும்புகிறது. அது ஒரு பயங்கரமான விளையாட்டை ஆடி வருகிறது. தன்னுடைய மூர்க்கத்தனமான ஏகாதிபத்திய முயற்சியில், உழைக்கும் கோடிக்கணக்கான மக்களின் விதியையும், நாட்டின் எதிர்காலத்தையும் ஆபத்துக்கு ஆளாக்குகிறது.

எல்லா நாடுகளுடைய இறையாண்மைக்குப் பாதுகாப்பாகவும், தேசிய மற்றும் மனித உரிமைகளை மீறும் ஏகாதிபத்திய நாடுகளைக் கண்டனம் செய்தும் செயல்படுவதற்கு மாறாக, நமது நாட்டினுடைய ஆளும் வர்க்கம் மிகவும் சந்தர்ப்பவாத முறையில் செயல்பட்டு வருகிறது. முன்பிருந்த மன்மோகன் சிங் அரசாங்கமும், தற்போதைய மோடி அரசாங்கமும் அமெரிக்காவுடன் இராணுவ, பொருளாதார, உளவுத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். இது இந்தியாவின் ஏகாதிபத்திய நோக்கங்களை அடைவதற்கு உதவுமென அவர்கள் நம்புகின்றனர். ஆயுதங்களையும், ஆயுதத் தளவாடங்களையும் கூட்டாக உற்பத்தி செய்வதும் அவர்களுடைய திட்டத்தில் இருக்கிறது. இது, இந்தியாவை அநியாயமான ஏகாதிபத்தியப் போர்களில் சிக்க வைக்கும். உண்மைகளும் நிகழ்வுகளும் இந்திய முதலாளி வர்க்கம் மிகவும் ஆபத்தான ஒரு ஏகாதிபத்தியப் போக்கில் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

முடிவுரை

வளர்ந்து வரும் பாசிச முதலாளித்துவ தாக்குதல்களையும், அநியாயமான ஏகாதிபத்தியப் போர்களையும் எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பு, இன்றைய ஆபத்தான போக்கிற்கு பலியாகி வரும் தொழிலாளி வர்க்கத்தின் மீதும், பரந்துபட்ட மக்கள் மீதும் விழுந்திருக்கிறது. இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு கருத்தியல் மற்றும் அரசியல் தலைமை அளிக்கும் கடமையை, கம்யூனிஸ்டுகள் நாம் மேற்கொள்ள வேண்டும். இந்திய முதலாளி வர்க்கம் அமைதிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் ஒரு காரணியாக இல்லாமல், ஏகாதிபத்தியத்திற்கும் போருக்கும் ஆதரவான ஒரு காரணியாக இருப்பதை வெட்ட வெளிச்சமாக்கும் நம்முடைய சர்வதேசிய கடமையை குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுகள் நாம் மேற்கொள்ள வேண்டும். "பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது" என்றோ, "தேசிய ஒற்றுமையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது" என்ற பெயரிலோ அல்லது வேறு எந்த சாக்கு போக்கிலோ, இந்தியாவை ஒரு ஏகாதிபத்திய போரில் கூட்டு சேர்ப்பதற்குக் கொடுக்கப்படும் அதிகார பூர்வமான நியாயங்களை நாம் புறக்கணித்து, அதனுடன் சமரத்தை எந்த வடிவிலும் நாம் எதிர்க்க வேண்டும்.

இந்த நேரத்தில் மனித இனத்திற்கு உள்ள மிகப் பெரிய அபாயமானது, அரசு அல்லாத செயல்பாட்டாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வரவில்லை. அது ஏகாதிபத்திய அமைப்பிலிருந்தும், இந்த அமைப்பைப் பாதுகாக்கும் முன்னணி சக்திகளிடமிருந்தும் வருகிறது. பயங்கரவாதம், பாசிசம் மற்றும் போருக்கு அடிப்படையாக இருப்பது ஏகாதிபத்தியமாகும். முதலாளித்துவ - ஏகாதிபத்திய அமைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பாட்டாளி வர்க்க, உழைக்கும் பெரும்பான்மையான மக்களுடைய போராட்டம் மட்டுமே நிரந்தரமான அமைதியைக் கொண்டுவர முடியும்.

தொழிலாளி வர்க்கம் மற்ற எல்லா ஒடுக்கப்பட்ட பிரிவு மக்களுடன் கூட்டாக ஒரு சமூகப் புரட்சிக்கு தலைமையளிப்பதற்கு தொழிலாளி வர்க்கத்தைத் தயாரிப்பதற்கு, பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய லெனினுடைய கருத்தியலால் வழிநடத்தப்படும் எல்லா நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சிகளுடைய பணியாக இருக்கிறது. வளர்ந்து வரும் பாசிசத்தையும், ஏகாதிபத்தியப் போர்களையும் எதிர்த்துப் போரிட பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான நிலைமைகளைத் தயாரிப்பதே ஒரே வழியாகும். ஏகாதிபத்திய சங்கிலி மீண்டும் உடைந்தே தீரும். அது சோசலிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் ஆன இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை திறக்கும்.

Pin It