தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர்களும், ஆதரவாளர்களும் மேதினப் பொதுக் கூட்டத்தை மறைமலைநகரில் மே 2 அன்று நடத்தினர். பல்வேறு தொழிற் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களும், செயல் வீரர்களும் தொழிற் பேட்டையைச் சேர்ந்த தொழிலாளர்களும் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதலாளிகளுடைய தாக்குதல்களை எதிர்த்து அவற்றைத் தோற்கடிக்க தொழில் துறை, சங்கம், கட்சி மற்றும் பிறவற்றைக் கடந்த அளவில் தொழிலாளர்கள் உடனடியாக ஒன்றுபட வேண்டியத் தேவையை எல்லா பேச்சாளர்களும் வலியுறுத்தினர்.

மேதினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் மேதின அறிக்கையை, மறைமலைநகர், தாம்பரம், தரமணி போன்ற இடங்களில் தொழிலாளர்களிடையே வினியோகிக்கப்பட்டது. முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை குறித்து பல்வேறு தொழிற் சங்க செயல்வீரர்களிடையே விவாதிக்கப்பட்டது. குறிப்பாக டாபே, ஸ்பெல், யுகேல் பியூல் சிஸ்டம்ஸ், யுகேல் ஆடோ, செக்பாயின்ட் ஏஎல்எஸ், தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ், இந்தியா பிஸ்டன்ஸ், பிஸ்டன் ரிங்ஸ், யுகேல் மெஷன் டூல்ஸ், காட்ரேஜ் கன்சியூமர் புராடக்ட்ஸ், யூனிவர்சல் கார்பொரன்டம் போன்ற தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழிற் சங்க செயல் வீரர்களைச் சந்தித்து விவாதித்தனர். பெரும்பாலான செயல்வீரர்கள் தொழிலாளர்களுடைய பரந்துபட்ட ஒற்றுமைக் கட்ட வேண்டுமென்ற கருத்தை மனந்திறந்து வரவேற்றனர். மேதினக் கூட்டத்தை அறிவிக்கும் நூற்றுக் கணக்கான சுவரொட்டிகளும் அந்தப் பகுதியெங்கும் ஒட்டப்பட்டன.

மேதினக் கூட்டத்தில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர் கபிலன், உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் துணைத் தலைவர் தோழர் ஆர்.சம்பத், ஏஐடியுசி காஞ்சி மாவட்டத்தின் பொதுச் செயலாளர் தோழர் ஜகாங்கீர், தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் தோழர்கள் எஸ்.மணிதாசன் மற்றும் தோழர் க.ஹமீத், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவத்தின் தோழர் ரூபன், புரட்சிகர தொழிலாளர் முன்னணியின் தோழர் சீவாநந்தம், ஏஐஎல்ஆர்எஸ்ஏ-வின் தோழர் பியு.வெங்கடேசன் மற்றும் பலர் உரையாற்றினர்.

தொழிலாளர்களுடைய இன்றைய நிலை குறித்து பேச்சாளர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். எல்லா வகையான தொழில் துறைகளிலும் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இன்றுள்ள மோசமான விலைவாசியின் காரணமாக நம்முடைய வாழ்க்கைத் தரம் சீரழிந்து கொண்டே வருகிறது. கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசியத் தேவைகளின் கட்டணங்களை அரசாங்கமும், முதலாளிகளும் உயர்த்திக் கொண்டே வருவதால் குடும்பத்தை நடத்த முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கிறார்கள். வேலை பளுவையும், வேலை நேரத்தையும் அதிகரிப்பதோடு, முதலாளிகள் பல்வேறு வழிகளில் நம்முடைய உண்மை ஊதியத்தையும் வெட்டிக் குறைத்துக் கொண்டே வருகின்றனர்.

வேலை நிரந்தரமும், வேலைப் பாதுகாப்பும் பகற்கனவாக மாறிவிட்டன. நிரந்தரத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டு அந்த இடத்தில் எவ்வித உரிமைகளும் இல்லாத தற்காலிக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மிகக் கேவலமான ஊதியத்திற்கு வேலையில் வைக்கப்படுகின்றனர். நம்முடைய ஓவர்டயம் ஊதியம், மற்ற படிகள், பி.எப், ஒய்வூதியம் ஆகிய அனைத்தும் வெட்டிக் குறைக்கப்படுகின்றன அல்லது அறவே நீக்கப்படுகின்றன. அண்மையில் 20 அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள், அரசு பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்டனர். தகவல் தொழில் நுட்பத் துறையிலும் பல்வேறு துறைகளிலும் பணிபுரிபவர்கள், தொழிலாளர்களாகக் கூடக் கருத்தப்படுவதில்லை. மறைமலை நகரில் உள்ள ஸ்பெல் (SPEL) நிறுவனத் தொழிலாளர்கள், தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும், ஊதிய உயர்வு, போனசு மற்றும் பிற பயன்களைக் கேட்டும், தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.

முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்கவும், சுரண்டலைத் தீவிரப்படுத்தவும், நம்முடைய உரிமைகளை நசுக்கவும் மத்திய அரசாங்கம், தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி வருகின்றனர். இருக்கின்ற சில சட்டங்களையும் கூட மத்திய மாநில அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. இந்திய முதலாளிகள் உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர்களாக ஆவதற்காகப் பொருளாதாரத்தைத் தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கி வருகிறார்கள். இதனால் நம்முடைய பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவதோடு, நம்முடைய உரிமைகளும் நசுக்கப்படுகின்றன, சுரண்டல் தீவிரமாக்கப்படுகிறது.

மக்களுக்கு வேலை வாய்ப்பைக் கொண்டு வருவதற்காகவே “இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்” என்று ஏகபோக முதலாளிகளுக்கு இரத்தினக் கம்பளம் விரிப்பதாகக் கூறும் மோடி, ஏற்கெனவே நடந்து கொண்டிருந்த நோக்கியா, பாக்ஸ்கான் போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வீதிகளில் எறியப்படுவதையும், டிசிஎஸ், ஐபிஎம் போன்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான வல்லுனர்களை அன்றாடம் வேலை நீக்கம் செய்வதையும் எந்தவகையிலும் தடுக்கவில்லை. மாறாக, பெருமுதலாளிகள் எவ்வித வேலைப் பாதுகாப்பும் இன்றித் தொழிலாளர்களை தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் வேலைக்கு வைக்கவும், விருப்பம் போல அவர்களை தூக்கித் தெருவில் எறியவும், மத்திய மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து கொடுக்கிறார்கள்.

இக் கொடூரமான நிலைமைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூட்டத்தில் உரையாற்றிவர்கள் கூறினர். நம்முடைய உரிமைகளுக்காகவும், நல்ல ஊதியத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் நாம் போராட வேண்டும். எல்லாத் தொழிலாளர்களுக்கும் பணி நிரந்தரமும், வேலைப் பாதுகாப்பும், போதுமான சமூகப் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும். நம்முடைய ஊதியம் விலைவாசி உயர்வுக்கு ஏற்பவும், பணவீக்கத்திற்கு ஈடுகட்டும் வகையிலும், பெருகி வரும் குடும்பத் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும் உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை நாமும் நம் குடும்பமும் வாழ்வதே கேள்விக் குறியாகிவிடும்.

பேச்சாளர்கள், நம்முடைய தொழிற் சங்கங்களைப் போராட்ட இயக்கமாகவும், வலிமை கொண்டதாகவும் மாற்ற வேண்டுமென வலியுறுத்தினர். நாம் தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு, நம்முடைய உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் கோரிப் போராட வேண்டும். நாம், தொழில் துறை, சங்கம், கட்சி, மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஒன்றுபட்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிராக எஃகு போன்ற ஒற்றுமையைக் கட்ட வேண்டும். நம்முடைய தொழிற்சாலையில் மட்டுமின்றி, ஒவ்வொரு தொழிற் பேட்டையிலும், நகரங்களிலும், நாடெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். நம்முடைய விழிப்புணர்வை உயர்த்திக் கொள்வதற்காக, கருத்தரங்குகளையும், பொதுக் கூட்டங்களையும் தொடர்ந்து நடத்த வேண்டும்.

மத்தியிலும் மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள் மாறி மாறி ஆட்சி நடத்தியிருக்கின்றன. ஆனால் தொழிலாளர்களுடைய நிலைமை தொடர்ந்து மோசமடைந்து தான் வந்திருக்கிறது. நாட்டின் எல்லாச் செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர் நாமே, உழவர்களோடு சேர்ந்து கூட்டாக ஆட்சி நடத்த உரிமையும், தகுதியும் உடையவர்கள், முதலாளிகள் அல்ல. நம் அனைவருடைய விழிப்புணர்வை உயர்த்துவதன் மூலமும், நம்முடைய ஐக்கியத்தை வலுப்படுத்துவதன் மூலமும், வலுவான இயக்கத்தைக் கட்டியமைப்பதன் மூலமும், தொழிலாளர்கள் நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வர வழிவகை செய்வோமென இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம் என்ற மையக் கருத்து அனைவராலும் வலியுறுத்தப்பட்டது.

இந்த செய்திகளை பேசிய பேச்சாளர்கள் தங்கள் காரணங்களையும் கூறி உதாரணங்களையும் எடுத்துக்காட்டி அங்கு கூடியிருந்த தொழிலாளர்களையும் மக்களையும் உணர்ச்சியூட்டினர். மேலும் அவர்கள் மே தின வாழ்த்துக்களை கூறிக் கொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர் மணிதாசன், தொழிலாளர்களும் உழவர்களும் உழைப்பாளிகளும் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற உரிமைகள் இன்று நமது நாட்டை நடத்தும் அதிகார வர்க்த்தால் காலால் மிதிக்கப்படுகிறது என்றும் உழைக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் அமைப்பிலிருந்தோ தொழிலாளர் சட்டங்களினாலோ எந்தவித ஞாயமும் கிடைக்கவில்லை. தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டால் மட்டுமே விடிவு காலத்தை எதிர்பார்க்க முடியும் என்றார்.

தோழர் சம்பத், பேசுகையில், “இந்த மே தினம் வெகு ஒற்றுமையாக சென்னையும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள தொழிலாளர்கள் பத்தாயிரக்கணக்கில் கூடி சுரண்டலுக்கு எதிராக சூளுரை எடுத்த காலங்கள் எண்பதுகளில் இருந்தன. ஆனால் முதலாளிகளின் தூண்டுதல் காரணமாக, சில தொழிலாளர் விரோத சக்திகள் இந்த ஒற்றுமையை உடைத்தன. ஆனால் இந்த நிலையை நாம் மாற்றியே ஆக வேண்டும். தொழிலாளர்களின் ஒற்றுமை ஒன்றே தொழிலாளி வர்க்கத்திற்கு மூலதனம். தொழிலாளி வர்க்கத்தின் நிலையை உண்மையிலேயே மாற்ற வேண்டுமென எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென" அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தோழர் ரூபன், பேசுகையில், "அரசு பயங்கரவாதம் உழைக்கும் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுவதால் தொழிலாளர்கள் பிளவுபடுத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருகின்றனர். இன்று சமுதாயத்திலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது" என்றார்.

தோழர் ஜகாங்கீர், பேசுகையில், "தகவல் தொழில்நுட்ப தொழிலாளிகள் இன்று 12-14 மணி நேரம் வேலை செய்யும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. தொழிலாளர்கள் இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்த்துக் கொதித்தெழ வேண்டும். எப்பொழுது நாம் தீவிரமான போராட்டங்களில் இறங்குகிறோமோ அன்று தான் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். தொழிலாளி வர்க்கத்தின் குரல் என்று ஒன்றாக ஒலிக்கின்றதோ, அப்படிப்பட்ட நிலையை நாம் என்று உருவாக்குகிறோமோ அன்று தான் முதலாளி வர்க்கத்திற்கு சாவு மணி அடிக்கமுடியும். அப்படிப்பட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக தாம் எதையும் செய்ய தயாராக இருப்பதாக" உறுதியளித்தார்.

தோழர் பி.யூ.வெங்கடேசன், "இரயில்வே துறையில் தொழிலாளர்களுக்கு பல்வேறு அநீதிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் கடுமையாகச் சுரண்டப்படுகின்றனர். இப்படிப்பட்ட அநீதிகளை நீதித் துறைக்கு எடுத்துச் சென்றால் அங்கும் நீதி கிடைப்பதில்லை. இவற்றை சரி செய்ய தொழிலாளிகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே வழி உள்ளது" என்று ஆணித்தரமாக கூறினார்.

தோழர் சீவாநந்தம் பேசுகையில், "மேதினத்தில் சிக்காகோ நகரில் சிந்திய ரத்தம், உலகின் எல்லா மக்களாலும் தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் வரை பேசப்பட்டு நமக்கு உந்து சக்தியாக இருக்கும். இது தொழிலாளி வர்க்கம் சுரண்டலை ஒழித்துக் கட்டுவதற்காக சூளுரைக்கும் நாள். மேலும் "வளர்ச்சி" என்று பாஜக, காங்கிரசு, திமுக, அதிமுக போன்ற முதலாளி வர்க்க கட்சிகள் கூறுவது "யாருடைய வளர்ச்சி" என்ற கேள்வியை எழுப்பினார். நாம் நம்நாட்டு ஒவ்வொரு தொழிலாளர்களுடைய அனைத்து உரிமைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இதுவே உண்மையான வளர்ச்சி என்றார். மேலும் இந்த வளர்ச்சியை வென்றெடுப்பதற்கு தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட்டத்தை மேற்கொள்வோம்" என்று சூளுரைத்தார்.  

தோழர் கபிலன், தொழிலாளர்களின் ஒற்றுமையை மையப்படுத்தி, இக் கூட்டத்தில் முன்வந்து பங்கேற்ற அனைவருக்கும் நன்றியையும், மேதின வாழ்த்துக்களையும் கூறினார். இன்று நடைபெறும் கடுமையான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். இன்றுள்ள சனநாயகம் முதலாளி வர்க்கத்திற்கான சனநாயகமாக இருக்கிறது. இதை மாற்றி தொழிலாளி வர்க்க சனநாயகத்தை நாம் நிறுவ வேண்டும். இந்திய சமுதாயத்தின் அமைப்பை மாற்றாமல், ஆட்சி செய்யும் கட்சிகளை மட்டும் மாற்றிப் பயனில்லை. தொழிலாளர்கள் - உழவர்களுடைய அமைப்பை நிறுவுவதை மிக முக்கிய கடமையாக தொழிலாளர்களும், செயல்வீரர்களும் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்காக, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் முழு முயற்சியோடு செயல்படும் என்று கூறினார்.

தோழர் க.ஹமீத், "தொழிலாளி வர்க்கம் கடந்த காலத்தில் மேற்கொண்ட தியாகத்தையும், போராட்டங்களையும் நினைவு கூர்வதற்கான நாளாகிய மேதினத்தில் நாம் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான நம்முடைய ஐக்கியத்தைக் கட்டுவதற்கும், நம்முடைய கோரிக்கைகளுக்காகப் போராடவும் முன்வருவோமென சூளுரைப்போம்" என்று கூறினார். குறுங்குழுவாத சிந்தனைகளைப் புறக்கணித்து, இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரைக்கும் அவர் நன்றி கூறி, தொழிலாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக ஆக்குவோமென்ற உறுதியோடு கூட்டம் நிறைவுற்றது.

Pin It